ஏயர்கோன் கலிக்காம நாயனார்

அமிழ்தினும் இனிய புராணம் பெரிய புராணம். தொண்டர்தம் பெருமையை, அடியவரால்தான் அந்த ஆண்டவனுக்கே பெருமை என்பதை, அடியார் இல்லாவிட்டால் ஆண்டவன் என்பவன் ஏது என்பதை, தமிழ்ச் சுவையும் பக்திசுவையும் மணக்க மணக்கக் கூறியிருக்கிறார் சேக்கிழார் பெருமான். பெரிய புராணம் சைவத் தொண்டர்களான நாயன்மார்களது வரலாற்றை மட்டுமே கூறும் நூல் அல்ல. வேதத்திற்கும் சைவத்திற்கும் உள்ள தொடர்பு, பற்றியும், பக்தியின் சிறப்பைப் பற்றியும், இறைவனின் கருணை பற்றியும் மிக விரிவாக உரைக்கும் நூல் அது. ஒவ்வொரு சிவ பக்தர், சைவ சமயத்தவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் பெரிய புராணம் என்றால் அது மிகையில்லை.

சேக்கிழார்

இரண்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை, தமிழகத்தைத் தோத்திரப்பாடல்களால் மூழ்கச் செய்தவர்கள் இருபத்தேழு திருமுறை ஆசிரியர்கள். இவர்கள் அனைவருமே, முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகிய சிவ பரம்பொருளால் ஆட்கொள்ளப்பட்டு, அவருடைய கருணை வெள்ளத்தில் மூழ்கித் திளைத்த அருளாளர்கள். தாம் பெற்ற பேரின்பத்தினை நாமும் பெறுதல் வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்துடன் அருளப்பட்டவை தான் தேவாரத் திருமுறைகள். அவற்றைப் பதினொன்றாக வகுத்தவர் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பிகள். அதன் பிறகு சேக்கிழார் சுவாமிகள் பாடிய ‘பெரிய புராணம்’ பன்னிரண்டாவதாகச் சேர்க்கப்பட்டது. அந்த நூல்களையும், திருவாசகத்தையும் பெரிய புராணத்தையும் படித்தால் உருகாத உள்ளமும் உருகும். கலங்காத கண்களும் கலங்கும். அதில் தான் எத்தனை, எத்தனை சம்பவங்கள், அதிசயங்கள், பெருமைகள், வரலாறுகள், சிறப்புகள்…..

இறைவனே சேக்கிழாராக அவதரித்து தன் தொண்டர் பெருமையைத் தன் வாயால் தானே புகழ்ந்துரைத்துக் கொண்டான் போலும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

”உலகெலாம்” என்று தொடங்கும் அதன் முதல் வார்த்தையே போதும், அது உலகச் சிறப்பை உள்ளடக்கிய நூல் என்பதைப் பறை சாற்ற.

அதிலிருந்து ஒரு சிறுதுளி.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்பவர் சிறந்த சிவ பக்தர். இவர் சுந்தரர் காலத்தில் வாழ்ந்தவர். பெரிய புராணத்தின் பாட்டுடைத் தலைவர் சுந்தரர் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுந்தரர் பரவை மீது கொண்ட காதல் ஊடலானது. அதனைத் தவிர்க்க, பரவையின் சினம் தணித்துக் குளிர்விக்க எல்லாம் வல்ல இறைவனான சிவபெருமானை, தியாகேசனை சுந்தரர் தூதாக அனுப்பினார்.

இச்செய்தியை அறிந்தார் கலிக்காமர். அவருக்குச் சொல்லொணாச் சினம் ஏற்பட்டது. ”எல்லோரினும் மிக உயர்ந்தவன் ஈசன். உலகிற்கு முழுமுதற் பொருளும் அவனே. உலக உயிர்களும் பொருட்களும் அவனால் படைக்கப்பட்டனவே.. உயிர்கட்கெல்லாம் தந்தையாக விளங்குபவனாகிய சிவபெருமானுக்கு அடிமை செய்வதே அடியவனின் பணி. அவனைப் பணிந்து பாடுவதும், தொழுதுவதுமே பக்தனின் தலையாய கடமை. அதனை விடுத்து, உலகத் தலைவனான ஈசனை, கேவலம் ஒரு பெண் சேர்க்கைக்காக தூது அனுப்பியமையை எம்மால் பொறுக்க இயலவில்லை. நாம் இறைவனுடைய அடிமைகள். எஜமானை அடிமை வேலை ஏவல் கூடுமா? எஜமான் அன்புடையவனாக இருந்து, அடிமைக்கு எதுவும் செய்யச் சித்தமாக இருக்கலாம். இருந்தாலும் அதற்காக அடிமை, எஜமானை வேலை ஏவலாமா? அவ்வாறு ஏவின சுந்தரனை நான் நேரே கண்டால் அவனை என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியாது” என்று மனம் பொருமினார். கோபத்தில் கலங்கினார். உள்ளம் வருந்தினார்.

இந்நிலையில் ஏயர்கோன் கலிக்காம நாயனாரை ஈசன் சோதிக்க எண்ணினான். (அவனுக்கு வேலையே அதுதானே, கூத்தாடிப் பய! எல்லோரையும் ஒரு ஆட்டு, ஆட்டி வைக்கிறதுல அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம், படவா…)

தீராத வயிற்று வலியைத் தந்தான் ஏயர்கோனுக்கு. மருத்துவர் வந்து மருந்தளித்துத் தீர்க்க முயன்றார். ஆனால் நோய் குணமாகவில்லை. வேதனையைப் பொறுத்து சதா இறைவன் நினைவாகவே இருந்தார் ஏயர்கோன்.

ஒருநாள் அவருடைய கனவில் இறைவன் தோன்றினான். ”அன்பனே! உனக்கு வந்திருக்கும் வயிற்றுவலியைப் போக்க வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. சுந்தரன் வந்து திருநீறளித்து இதனைப் போக்கினால் ஒழிய அது அகலாது. வேறு யாரும் போக்கவும் முடியாது!” என்று கூறி விட்டான்.

ஏயர்கோனைப் பொறுத்தவரை, இறைவனை ஏவல் வேலைக்கு ஏவிய சுந்தரரை தன்னுடைய பகைவனாகக் கருதினார். தன் கைகளால் நையப் புடைக்கக் காத்திருந்தார். ஆனால் இறைவனோ அவர் வந்து நீறளித்தால் தான் குணமாகும் என்கிறான். இப்போது என்ன செய்வது?

சுந்தரரை, இறைவனை ஏவல் வேலைக்கு அனுப்பினவர் என்று கோபித்த கலிக்காமர், அந்த இறைவனே தன் கனவில் வந்து சொல்லும் போது அதைக் கேட்டுத்தானே ஆக வேண்டும்! இறைவன் மீது பெருமதிப்பும் பக்தியும், அன்பும் கொண்ட ஒரு பக்தன் என்ற முறையில் அதுதானே சரியாக இருக்கும், இருக்கவும் வேண்டும்.

ஆனால், ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்ன செய்தார் தெரியுமா? 

“ஐயா! நானும் என் மூதாதையரும் நீரே தலைவர் என்று கருதி வாழ்ந்து விட்டோம். உமது அடியவனாகிய எனக்கு வந்த இந்த வயிற்று வலியை, நேற்று உம்மாலே ஆட்கொள்ளப்பட்டவனாகிய சுந்தரனா வந்து தீர்க்கப் போகிறான்? அப்படி அவன் வந்துதான் என்னுடைய இந்த நோய் தீருமென்றால், அந்நோய் தீர்வதைக் காட்டிலும் தீராமலே போகட்டும். என்னை எவ்வளவு வேண்டுமாயினும் வருத்தட்டும்” என்று கூறிவிட்டார்.

——————————————————————————
வந்துனை வருத்தும் சூலைவன் தொண்டன் தீர்கில் அன்றி

முந்துற ஒழியாது என்று மொழிந்து அருள் செய்யக் கேட்டு

எம்பிரான் எந்தை தந்தை தந்தை எங்கூட்டம் எல்லாம்

தம் பிரான் நீரே என்று வழி வழி சார்ந்து வாழும்

இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை வம்பு

என ஆண்டுக் கொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து

மற்றவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்றால்

பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே

உற்றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்னக்

கற்றைவார் சடையார்தாமும் அவர் முன்பு கரந்தார் அன்

என விளக்குகிறார் சேக்கிழார் இதனை.

என்ன செய்வான் இறைவன்? “வேண்டாம், உம்மை வேலைக்காரன் போல் விரட்டி வேலை வாங்கிய அந்தச் சுந்தரன் மூலம் தான் என் நோய் தீர வேண்டுமென்றால் அந்த நோய் தீரவே வேண்டாம்” என்று கருதும் ஒருவரை யார் தான் என்ன செய்ய முடியும்? பேசாமல் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டான் இறைவன். பின் இருவருக்குள்ளும் மன வேற்றுமை நீங்கி ஒற்றுமை ஏற்பட சுந்தரை நாடி அவரை ஏயர்கோனைக் காணச் செல்லுமாறு பணித்தான்.

சுந்தரர் கலிக்காம நாயனாரைக் காண வந்தது, அவர் வருவதை அறிந்து, அவர் முகத்தில் விழிக்க ஒண்ணாது கலிக்காமர் தம் குறுவாளால் தம் உயிரைப் போக்கிக் கொண்டது, அதை அறிந்த சுந்தரர் உள்ளம் பதறி, தாமும் வாளால் தன் உயிரைப் போக்க நினைந்தது, இறைவன் தடுத்தாண்டு, ஏயர் கோனை எழுப்பி அனைவருக்கும் காட்சி தந்தது என பெரிய புராணம் மேலும் பலவாறாக விரித்துச் சொல்கிறது தொண்டர்களது பெருமையை.


 இது போன்ற அடியவர்கள் இருப்பதால் தானே ஆண்டவனுக்குப் பெருமை?!

தொண்டர்தம் பெருமை சொல்லவும் இனிதே!

*******************

Advertisements

2 thoughts on “ஏயர்கோன் கலிக்காம நாயனார்

 1. வணக்கம் ஐயா,

  எமது சிவயசிவ – – வலைத்தளத்திலும் 63 நாயன்மார் வரலாறுகளை தொடர்ந்து எழுதவேண்டும் என ஆவலாக உள்ளேன்..

  தங்கள் ஆசிர்வாதங்களை எதிர்நோக்கி..

  சிவ. சி.மா.ஜா

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s