ஈ.எஸ்.பி. உண்மையா? – 1

 

அதீத உள்ளுணர்வுத் திறன், கூடுதல் புலனறிவு, என்றெல்லாம் அழைக்கப்படும் E.S.P உலகெங்கிலுமுள்ள மனிதர்கள் பலருக்கும் வியப்பைத் தரும் ஒன்று. சரி,  E.S.P (Extra Sensory Perception) என்பது உண்மைதானா? இல்லை, மனிதர்களின் ஆதீத கற்பனைகளின் விளைவா?

 

பின்னர் வருவதை, அல்லது நடக்கப் போகும் ஒன்றை முன் கூட்டியே அறிவதுதான் ஈ.எஸ்.பி. எனப்படுகிறது. பொதுவாக, ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் எல்லா மனிதருக்குமே ஓரளவு இருக்கிறது. ஆனால் பலரும் அந்த ஆற்றலின் மீது கவனம் செலுத்துவதில்லை. அல்லது அந்தத் திறனை வளர்த்துக் கொள்ளுவதில்லை. அதனால் பலரும் அது பற்றிய உண்மைகளை அறியாமல் உள்ளனர். உதாரணமாக திடீரென நாம் நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றி அடிக்கடி நினைப்போம். அவரைப் பார்க்க வேண்டுமென நினைப்போம். திடீரென அவர் கண் முன்னே வந்து நிற்பார். அல்லது அவரைப் பற்றிய செய்தி நமக்கு வந்து சேரும். அல்லது போன் வரலாம். இதுதான் ஈ.எஸ்.பி. என்பதன் ஒருவித எளிமையான விளக்கம். இந்த ஈ.எஸ்.பியில் பல வகைகள் உள்ளன.

 

பிறருடைய எண்ணங்களை, அவர்கள் மனதில் உள்ள தகவல்களைப் படிக்கும் ஆற்றல் டெலிபதி (Telepathy) எனப்படுகிறது.

 

எதிர்காலத்தை அவதானித்து, மிகச் சரியாக அதை முன்கூட்டியே கூற முடிவதற்கு –  Precognition என்று பெயர். 

 

இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேறு ஒரு இடத்தில் நடக்கும் விஷயங்களை சரியாகக் கணித்துக் கூறுவதற்கு – Clairvoyance  என்று பெயர்.

 

ஒரு நபரது கடந்த காலத்தை, சம்பவங்களை, வாழ்க்கை நிகழ்ச்சிகளை நேரில் பார்த்தது போல் மிகத் துல்லியமாகக் கூறுவதற்கு Retro cognition என்று பெயர்.

 

ஒரு நபருக்குச் சொந்தமான பொருளை தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் உடைமைப் பொருள் ஒன்றைக் கொண்டு அந்த நபர் பற்றி, அவர் இருக்கும் இடம், தன்மை, அவரது செயல்பாடுகள் பற்றிக் கூறும் திறனுக்கு Psychometric என்று பெயர்.

 

இதில் முக்கியமான விஷயம் ஈ.எஸ்.பி என்பது அமானுஷ்ய ஆற்றலோ அல்லது ஆவிகள் போன்றவற்றின் உதவியால் செயல்படுத்தப்படுவதோ இல்லை. முழுக்க முழுக்க மூளை மற்றும் மனத்தில் செயல்பாடுகளால் ஏற்படும் அதீத திறனே ஈ.எஸ்.பி. அதே சமயம் விஞ்ஞானிகளால் இது எப்படிச் செயல்படுகிறது, ஏன் ஒரு சிலருக்கு மட்டும் இந்த ஆற்றல்கள் அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதை அவர்கள் நம்பினாலும் விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் Para-Psychology மற்றும் Para Normal என்ற வகையில் இதனை உள்ளடக்கி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

 

பண்டைய புராணங்களில் ஈ.எஸ்.பி பற்றிய பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. மகாபாரதத்தில், குருஷேத்திரப் போர் நடக்கும் காலத்தில், அரண்மனையில் இருந்து கொண்டே, பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அந்தப் போர் களத்தில் நடக்கும் காட்சிகளை சஞ்சயன் விவரித்தது Clairvoyance  எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலைக் கொண்டுதான்.

 

ஆதிசங்கரர் சன்யாசம் ஏற்கும் தறுவாயில் அன்னை ஆர்யாம்பாள், தனது அந்திமக்காலத்தில் அவர் அருகில் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள், சங்கரரும் அதற்குச் சம்மதிக்க, பல ஆண்டுகள் கழித்து ஆர்யாம்பாள் நோய் வாய்ப்பட்ட போது மகன் சங்கரரை நினைக்க, உடனே பல மைல் தொலைவில் தவம் செய்து கொண்டிருந்த போதும் சங்கரர் அன்னையின் அழைப்பை உணர்ந்து, இறுதித் தறுவாயில் உடன் இருப்பதற்காக விரைந்து வந்தார். இந்தத் தகவல் பரிமாற்றம் தான் ’டெலிபதி’ எனப்படுகிறது.

 

நாஸ்ட்ரடாமஸ் எதிர்காலத்த்தில் இந்த சமயத்தில், இன்னின்ன சம்பவங்கள் நடக்கும் என்பதை கணித்துக் கூறியதும் ஒரு விதத்தில் Precognition எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலின் உதவியோடுதான். ஒரு சில ஜோதிடர்கள் அல்லது ஆரூடம் சொல்பவர்கள், தங்களைக் காண வரும் நபரின் கடந்த காலத்தை மிகத் துல்லியமாகவும், வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தெளிவாகவும் கூறுவது Retrocognition என்ற ஈ.எஸ்.பி. ஆற்றலால் தான்.

 

ஒருமுறை பகவான் ரமணரை கேரளாவின் புகழ் பெற்ற நாராயண குரு சந்திக்க வந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். வெகு நேரம் ஒருவரையொருவர் பார்த்தபடி இருந்தனர். ஆனால் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. பின் இறுதியாக “அங்ஙனே ஆவட்டே…” என்று கூறி நாராயண குரு விடை பெற்றார். ரமணரும் தலைசயைத்தார். அதன் பின்னர்தான் பக்தர்களுக்கு அவர்கள் இருவரும் பேசாமலே பேசிக் கொண்டது – தங்கள் எண்ணங்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொண்டது – புரிந்தது. இதைத் தான் ஆன்மப் பரிமாற்றம் என்பர். இது கூட ஒருவிதத்தில் ஈ.எஸ்.யைச் சேர்ந்ததுதான். இதே போன்ற சம்பவங்கள் சேஷாத்ரி சுவாமிகள், காஞ்சிப் பெரியவர், யோகி ராம்சுரத்குமார், மாயம்மா என பல ஞானிகளது வாழ்வில் நிகழ்ந்துள்ளன.

 

உலகெங்கிலும் ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் மிக்கவர் பலர் உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முன் அவர்கள் தங்கள் ஈ.எஸ்.பி ஆற்றலை நிரூபித்தும் காட்டியுள்ளனர். தமிழகத்திலும் ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் உள்ள பலர் இருந்திருக்கின்றனர். இன்னமும் இருக்கின்றனர்

 

(தொடரும்)

7 thoughts on “ஈ.எஸ்.பி. உண்மையா? – 1

  1. அய்யா வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் படிக்க நேரம் கிடைத்தது, கொஞ்சம் வேலை அதான்,

    இந்த ”ஈ.எஸ்.பி” பற்றி
    எங்கள் தமிழ் மருத்துவர் மற்றும் நண்பர் சங்கர் மூவரும் மூன்று மணிநேரம் விவாதித்தோம், இதைப்பற்றிய விரிவான கருத்தை பிறகு வெளியிடுகிறோம்.

    \\ முழுக்க முழுக்க மூளை மற்றும் மனத்தில் செயல்பாடுகளால் ஏற்படும் அதீத திறனே ஈ.எஸ்.பி.\\

    சுருக்கமாக சொன்னால் இவை மூளை மற்றும் மனம் சார்ந்த விடயம் அல்ல….!!

    ”ஆன்ம சம்மந்தமான சமாச்சாரம்”.

    அப்புறம் இந்த E.S.P (Extra Sensory Perception), (Telepathy), Precognition, Clairvoyance, Retro cognition, Psychometric,
    இவைகளுக்கு தமிழ் விளக்கம் சரிதான், இவற்றை தமிழில் எப்படி அழைப்பது….??

    இவை எல்லாமே ஆங்கில விஞ்ஜானி களுக்கு சொந்தமான வார்த்தைகள் ஆயிற்றே….!!

    தங்களது இந்த எழுத்துக்கள் ஆங்கில விஞ்ஜானிகளிடம் இருந்து தோன்றியதாக தோன்று கிறது.., ( நகல் என்று பொருள் அல்ல )

    விஞ்சான வாசமே வீசுகிறது…
    மெய்ஞ்சான தூண்டுதல் இல்லை,
    சில இடங்களில் நமது புராண கதைகளை உத்தரனப் படுதிருப்பது உத்தமம் .

    நன்றி விரைவில் விரிவான பதிலுடன் சந்திப்போம்

    1. //சுருக்கமாக சொன்னால் இவை மூளை மற்றும் மனம் சார்ந்த விடயம் அல்ல….!!

      ”ஆன்ம சம்மந்தமான சமாச்சாரம்”.//

      ஆன்மீகத்தாலும் இவை சாத்தியமே.

      //அப்புறம் இந்த E.S.P (Extra Sensory Perception), (Telepathy), Precognition, Clairvoyance, Retro cognition, Psychometric,
      இவைகளுக்கு தமிழ் விளக்கம் சரிதான், இவற்றை தமிழில் எப்படி அழைப்பது….??

      இவை எல்லாமே ஆங்கில விஞ்ஜானி களுக்கு சொந்தமான வார்த்தைகள் ஆயிற்றே….!!//

      ஆம். உண்மைதான். இந்தக் கட்டுரையை விஞ்ஞான ரீதியாகவே எழுதினேன். அதனால் ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியுள்ளேன்.

      E.S.P (Extra Sensory Perception) – கூடுதல் புலனறிவு

      Telepathy – தொலை உணர்தல்

      Precognition – வரும் பொருள் உரைத்தல்

      Clairvoyance – அகக்காட்சி

      Retro cognition – தானாக பிறர் விஷயங்களை அறியும் திறன்

      Psychometric – ஆதீத உளவியல் திறன்

      என்று வார்த்தைப்படுத்தலாம்.

      //தங்களது இந்த எழுத்துக்கள் ஆங்கில விஞ்ஜானிகளிடம் இருந்து தோன்றியதாக தோன்று கிறது.., ( நகல் என்று பொருள் அல்ல )//

      நீங்கள் நகல் என்று எடுத்துக் கொண்டால் நான் சென்ன செய்ய முடியும்? எழுத்துத் திறமை இல்லாதவன், சொந்தமாகச் சிந்திக்கும் திறன் இல்லாதவனே நகல் எடுப்பான். காபி – பேஸ்ட் செய்வான். உதாரணமாகச் சுட்டும் ஆங்கில வார்த்தைகளை ’நகல்’ என்று நீங்கள் கருதின் யான் ஒன்றும் செய்வதற்கில்லை.

      //விஞ்சான வாசமே வீசுகிறது…
      மெய்ஞ்சான தூண்டுதல் இல்லை,
      சில இடங்களில் நமது புராண கதைகளை உத்தரனப் படுதிருப்பது உத்தமம்//

      எனது நோக்கம் ஒரே விஷயத்தை விஞ்ஞானம் எப்படி அணுகுகிறது; மெய்ஞ்ஞானம் எப்படி அணுகுகிறது என்பதை விளக்க வேண்டும் என்பதுதான். அது ஒருவேளை பிறழ்ந்து விட்டதோ என்னவோ? அறியேன்.

      ஐயன்மீர், தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. வணக்கம்.

  2. நமஸ்தேஜி!

    உங்களது இந்த வலை அற்புதமாக உள்ளது. நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள்.
    பொதுவாக இந்தமாதிரியான ‘சப்ஜக்களை’ யோசிப்பதற்கும், எழுதுவதற்கும் தைரியமும், ஆழ்ந்த
    விஷய ஞானமும் வேண்டும். உண்மையிலேயே பாராட்டுக்கள். உங்களது ரெஃப்ரன்ஸ் கூட
    நன்றாக இருக்கிறது.

    அடியேன் சொல்லி பிரமாதமாய் ஒன்றும் ஆகிவிடாது. எனினும், என்மாதிரியான சிறியோரின்
    பாராட்டுக்கள் உங்களுக்கு வந்து சேரும் போது, மனம் சோர்வடையும் போதெல்லாம், உங்களுக்கு
    ஒரு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடும்.

    இனி இந்த கட்டுரை சம்பந்தமாக ஒரு சிறிய (தமாஷ்) நிகழ்ச்சி :

    அது ஒரு சனிக்கிழமை இரவு. என் மனைவியோடு, இந்த ஈ.எஸ்.பி பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.
    எப்போதும் போல ‘உங்களுக்கு வேற வேலையே இல்லை… ஏதாவது ஒரு புஸ்த்தகத்தைப் படித்துவிட்டு
    வந்து என் பிராணனை வாங்காதீர்கள்” என உரைத்துவிட்டு, தூங்கிவிட்டார். சரி.. அது அவள் இஷ்டம்,
    நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என மீண்டும் புத்தகத்தை தொடர்ந்தேன்.

    அடுத்த நாள் காலை, நாங்கள் இருவரும் தினசரி தாள்கள் (Daily news papers- The Hindu and Dinamalar)
    படித்துக் கொண்டிருந்தோம். திடீரென உற்சாக மிகுதியில் “நீங்கள் நேத்திக்கு ஈ.எஸ்.பி பற்றி
    சொல்லிக்கிட்டிருந்தீங்க இல்ல…. எனக்கும் இந்த பவர் வந்துடுத்துன்னு நினைக்கிறேன்” என்றார்.

    “இந்த மன மாற்றத்திற்கு என்ன காரணம்.. உனக்கு அந்த பவர் வந்துவிட்டதுன்னு எப்படித் தெரியும்”
    என வினவினேன்.

    “இதோ பாருங்க.. இந்த விபத்து செய்தி, அப்புறம் இந்த ஷேர்மார்க்கட் வீழ்ச்சி எல்லாம் முன்னாடியே எனக்குத்தெரியும்”
    என்றார். எனக்கு சற்று மிரட்சியாய் போய்விட்டது. மனைவி என்ற ஸ்தானத்திலிருந்து ஏதேனும் ‘அம்மன்’ நிலைக்கு
    உயர்ந்துவிட்டாரோ… இனி எனக்கு பிடித்த ‘வத்தகுழம்பு’ கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலையெல்லாம் வந்துவிட்டது.

    “சரி… அந்த போப்பரை கொண்டா..” என வாங்கிப் பார்த்தேன். தேவியாருக்கு ஈ.எஸ்.பி வந்த ரகசியம் புரிந்துவிட்டது.
    அது ‘நேற்றைய பேப்பர்”

    தாங்கள், தங்களுக்கு பிடித்த வலைப்பூ என்ற இடத்தில் எனது பிளாக்ஸ்பாட்டினை போட்டிருக்கிறீகள். தன்யனானேன். மிக்க நன்றி.

    அன்புடன்,
    ஆர். பலராமன்.
    (orbekv.blogspot.com)

    1. மிக்க நன்றி சகோதரி. தங்களைப் போன்றவர்களின் ஊக்கமே சில சங்கடமான சூழ்நிலைகளிலும் என்னை எழுதத் தூண்டுகிறது. நன்றி!

  3. Dear Sir, I congratulate your efforts. My humble request that you should provide articles on yoga and the values of asanas and their steps to do. Even meditating steps need to be provided. It will surely help all the readers of this website. Kindly treat this as my humble request.

Rajarajeswari -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.