கடவுளைக் கண்டவர் – 2

இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். வேண்டுதல் வேண்டாமை இலான். அவனுக்கு அர்ச்சிப்பவரும் ஒன்றுதான். தூஷிப்பவரும் ஒன்றுதான். அவனை வணங்கும் ஆத்திகர்களும் அவனது குழந்தைகள் தான். அவனை இல்லை என்று தூற்றும் நாத்திகர்களும் அவன் குழந்தைகள்தான். ஆத்திகர்களுக்குச் சமமாக, சொல்லப்போனால் சமயங்களில் அதைவிட அதிகமாக தன்னை நம்பாதவர்கள் மீது அன்பைப் பொழிவது இறைவனின் குணம். அதைப் பற்றி கடந்த கடவுளைக் கண்டவர் – 1 ல் பார்த்தோம். இனி, இறைவன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதைக் காட்டும் சம்பவத்தை இப்போது பார்க்கலாம்.

அது பிரிட்டிஷார் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம். ரஸ் பீட்டர் என்பவர் மதுரையின் கவர்னர் பொறுப்பில் இருந்தார். அவர் மிகவும் நல்லவர். நேர்மையாக ஆட்சி நடத்தி வந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் மக்கள் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற அச்சங்கள் நீங்கி நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அதனால் மக்கள் அவரை அன்போடு “பீட்டர் பாண்டியன்” என்று அழைத்தனர்.

ஒருநாள்… இரவு நேரம்…. இடி, மின்னலுடன் பெரு மழை பெய்து கொண்டிருந்தது. தனது பங்களாவில் அமர்ந்தபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார் ரஸ் பீட்டர். அப்போது மழையில் தொப்பலாக நனைந்தபடியே ஓட்டமும், நடையுமாக ஒரு சிறுமி அவரது பங்களாவுக்கு நுழைந்தாள். அவள் முகம் பளபளத்தது. கண்கள் சுடர் விட்டது. மூக்கில் அழகான ஒரு சிறு மூக்குத்தி மின்னிக் கொண்டிருந்தது.

ரஸ் பீட்டருக்கு ஒரே ஆச்சரியம். இவளுக்கு ஏதோ பிரச்சனை போலும். அதனால்தான் இந்த இரவில் நம்மை நாடி வந்திருக்கிறாள் என்று நினைத்தார். அவளிடம், ‘என்ன உதவி வேண்டும்?’ என்று கேட்டார். ஆனால் அந்தச் சிறுமி பதில் பேசவில்லை. அவரது கையைப் பிடித்து வெளியே இழுத்தாள்.

’சரி, வெளியே ஏதோ பிரச்னை போலும். அதனால் அந்த இடத்துக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறாள்’ என்று நினைத்த ரஸ் பீட்டர், அவள் பின்னாடியே சென்றார்.

பங்களாவின் வாயிலைக் கூடத் தாண்டியிருக்க மாட்டார். அப்போது மிகப் பெரும் ஒளியுடன் ஒரு பெரிய மின்னல் வெட்டியது. தொடர்ந்து ”டமார்” என்ற சத்தம் கேட்டது. திடுக்கிட்டு சத்தம் வந்த திசையைத் திரும்பிப் பார்த்த ரஸ் பீட்டர், அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்று விட்டார். காரணம், பெரும் மின்னலும் இடியும் தாக்கி அவர் இருந்த பங்களா தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. பின் அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடிந்து கீழே விழுந்தது.

சிறிது நேரம் எந்தவித உணர்வுமில்லாமல் அப்படியே அந்த எரியும் பங்களாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர், பின் சுய உணர்வு பெற்றுத் திரும்பிப் பார்த்த போது அந்தச் சிறுமி அங்கே இல்லை.

அவர் அங்கும் இங்கும் தேடிப் பார்த்தபோது அவள் வெகு தொலைவில் முன்னால் சென்று கொண்டிருந்தைப் பார்த்தார். இவரும் அவளை வேக வேகமாகப் பின் தொடர்ந்தார். ஆனால் அந்தச் சிறுமியோ ரஸ் பீட்டர் எவ்வளவு விரைவாக நடந்தாலும், தன்னை எட்டிப் பிடிக்க முடியாதபடி வேகமாகவே சென்று கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் மதுரை மீனாட்சியம்மனின் மேலைக் கோபுர வாயிலை அடைந்த அந்தச் சிறுமி, அங்கிருந்து ரஸ் பீட்டரை சற்றே திரும்பிப் பார்த்தாள். லேசாகப் புன்னகைத்தாள். பின் கோயிலுக்குள் நுழைந்தாள். காணாமல் போனாள். பின் தொடர்ந்து கோயிலுக்குள் நுழைந்த ரஸ் பீட்டர், அந்தச் சிறுமியை அங்கும் இங்கும் தேடினார். கத்திக் கூப்பிட்டார். அவள் வரவில்லை.  அவள் உருவம் எங்குமே தென்படவில்லை. எங்கோ மாயமாகி விட்டிருந்தாள் அவள்.

வெகுநேரம் ஆலயத்தில் அமர்ந்தவாறே யோசித்த ரஸ்பீட்டர் பின்னர்தான் உணர்ந்தார், சிறுமியாக வந்து தன் உயிரைக் காத்தது அந்த மீனாட்சியம்மைதான் என்பதை. அதுமுதல் அன்னை மீனாட்சியின் அத்யந்த பக்தரானார். அந்த நன்றி உணர்வால் மீனாட்சி அம்மனுக்கு பல ஆபரணங்களைக் காணிக்கையாக்கினார். புதிதாக நகைகள் பல செய்து, அன்னைக்கு அணிவிக்கச் செய்து அழகு பார்த்தார்.

அதுமட்டுமல்ல; தான் இறக்கும் போது கூட தன் கண்களும் முகமும் அன்னையின் ஆலயத்தை நோக்கியவாறே இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் ரஸ்பீட்டர். அது பலித்தது. ரஸ் பீட்டர் இறந்த பின்பு அவரது வேண்டுகோளின்படி அவரது உடல் செயிண்ட் பீட்டர் சர்ச் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது முகமும் அன்னை ஆலயத்தை நோக்கியே இருக்குமாறு அடக்கம் செய்யப்பட்டது.


Saint George Church, Madurai


இன்றும் மதுரையில் ரஸ் பீட்டரின் சமாதியை செயிண்ட் ஜார்ஜ் சர்ச்சில்  பார்க்கலாம். அன்னைக்கு அணிவிக்கப்பெற்று அலங்கரிக்கப்படும் அவரது நகைகளையும் கண்டு தரிசிக்கலாம்.

இறைவன் மதம் கடந்தவன். மதங்களை அல்ல; நல்ல மனிதர்களையே அவன் நேசிக்கிறான் என்பதையும், தகுதி உடையவருக்கு நிச்சயம் அவன் அருள் கிட்டும் என்பதையும் இதன் மூலம் நாம் உணர முடிகிறதல்லவா?

Sri Meenakshi Amman

மதுரை அரசாளும் ஸ்ரீ மீனாட்சியே சரணம்!

Advertisements

14 thoughts on “கடவுளைக் கண்டவர் – 2

  1. கடவுளைக் காண முயற்சி செய்ய வேண்டும். அதற்கு ஏதும் குறுக்கு வழி கிடையாது. நீங்களாகவே தான் உணர்ந்து அடைய வேண்டும். வெறுமனே “கடவுள்”, “கடவுள்” என்று கூவிக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் விளையாது. “கடவுள்” என்பதன் பொருள் உணர வேண்டும். அகத்து உள்ளே கடந்து பார்த்தால் கடவுளைக் காணலாம். தற்காலத்திலும் கடவுளைக் கண்டவர்கள் உண்டு. அவர்கள் வெளியே சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. தானாகவே உய்த்துணர வேண்டிய ஒன்றிற்கு அடுத்தவன் ஏன் உதவ வேண்டும். உங்களுக்குப் பசித்தால் நீங்கள் தான் சாப்பிட வேண்டும்.

   உங்களுக்கு உண்மையிலேயே கடவுளைக் காண வேண்டும் என்ற எண்ணம்-ஆர்வம் இருந்தால் கண்டிப்பாகக் கடவுளைக் காணலாம். முயற்சி செய்து பாருங்கள்! நிச்சயமாக உங்களுக்குத் தகுதி இருந்தால் கடவுளை உணர முடியும்/ காண முடியும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு முன் கடவுள் என்றால் யார் அல்லது என்ன என்பதைத் தெளிவாக உணர வேண்டியது அவசியம்.

  1. நிச்சயம் ராஜேஷ். அது நான் எனது இருபதில் படித்தது. என் இளமைக் காலத்தை நினைக்க வைத்து விட்டீர்கள். நன்றி.

 1. //இறைவன் மதம் கடந்தவன். மதங்களை அல்ல; நல்ல மனிதர்களையே அவன் நேசிக்கிறான். தகுதி உடையவருக்கு நிச்சயம் அவன் அருள் கிட்டும்//

  ஞானம் பொருந்திய வார்த்தைகள். மகன் எதேச்சையாக அழுத்திவிட இங்கு வந்தேன். வந்த இடம் வரவேண்டிய இடம். நேரம் அமைகையில் மீண்டும் வருகிறேன். நன்றியும் வாழ்த்துக்களும் வணக்கமும்!!

  வித்யாசாகர்

  1. நன்றி வித்யா சாகர். உங்கள் கவிதைகள் எல்லாம் படித்திருக்கிறேன். கட்டுரைகளையும் வாசித்து வருகிறேன். ஆழ்மனத்திலிருந்து சோகக் குரலாய் வெளிப்படும் அவற்றைப் பற்றி நான் என்ன பின்னூட்டமிட்டாலும் அது வெற்று ஆறுதல் வார்த்தைகளாய் இருக்கும் என்றே மௌனம் காத்து விடுதல் உண்டு.

   இப்படியே நிலைமை போய் விடாது நண்பரே. இன்றில்லாவிட்டாலும், வருங்காலத்தில், எதிர்காலத் தலைமுறைகளில் நிச்சயம் மாற்றம் வரும். அவை நன்மையைத் தருவதாய் அமைய எப்போதும் சாந்தியும், சமாதனத்தையுமே போதித்த புத்தனை வணங்குவோம். அவன் அருள் அல்லோர் மனத்தில் புகுந்து நல்லோராக மாற்ற வழிவகுக்கட்டும். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s