கலைஞரின் தர்ம சங்கடம்

பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் சமீபத்தில் பரபரப்பாக பேசியும், எழுதியும் வந்த, வரப்பட்ட, வரப்படுகின்ற ஒரு விஷயம், தமிழக முதல்வர் குறிப்பிட்ட தர்மருக்கு நேர்ந்த தர்ம சங்கடம் எது என்பதுதான். ஒவ்வொருவரும் தாங்கள் அறிந்ததை, தங்களுக்குத் தெரிந்ததை (சிலர் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம்) எழுதித் தங்கள் கருத்தை நிலைநாட்டி வருகின்றனர்.

சரி, உண்மையிலேயே தர்மருக்கு நேர்ந்த தர்ம சங்கடம் எது என்று பார்த்தால் மகாபாரதத்தில் பல இடங்களில் தர்மருக்கு பல வகைகளில் சங்கடம் நேர்ந்துள்ளது, அதில் எதை முதல்வர் குறிக்கிறார்? முதல்வரின் நிலை தெரியும். அதே மாதிரி நிலைமை தர்மருக்கு ஏதும் நேர்ந்திருக்கிறதா என்று நுணுகிப் பார்க்க, மகாபாரத்தில் நடந்த இந்தச் சம்பவம் சாட்சியாகிறது.

பாண்டவர்கள் வனத்தில் வசித்து வந்த காலம். முனிவர்களுக்கு உதவியாக பாண்டவர்கள் தொண்டு புரிந்து வந்தனர். ஒருநாள் யாகம் செய்ய அக்னியை உண்டாக்கும் அரணிக் கட்டை ஒன்று, ஒரு மானின் கொம்பில் சிக்கிக் கொண்டு விட்டது. அது இல்லாவிட்டால் அக்னி உண்டாக்க முடியாது. அக்னி இல்லாவிடில் வேள்வி செய்ய இயலாது. ஆகவே அதனை மீட்க பாண்டவர்கள் முயன்றனர். ஆனால் அந்த மான் அவர்களுக்குச் சிக்காமல் அங்கும், இங்குமாய் ஓடி எங்கோ ஒளிந்து விட்டது.

காட்டுக்குள் ஓடி அலைந்து திரிந்ததால் அனைவருக்கும் நல்ல தாகம். அதனால் நீர் நிலையைத் தேடினர். நகுலன் ஒரு மரத்தின் மீதேறிப் பார்க்கும் போது ஒரு நீர் நிலை தெரிந்தது. உடனே அவன் தண்ணீர் எடுத்து வரப் புறப்பட்டான். ஆனால் அவன் சென்று வெகு நேரமாகியும் வரவில்லை. அடுத்து சகாதேவன் சென்றான். அவனும் வரவில்லை. தொடர்ந்து அர்ஜூனன் சென்றான். அவனும் திரும்பவில்லை. கவலைப்பட்ட தர்மரைத் தேற்றிய பீமன் தான் சென்று தம்பியரோடும், தண்ணீரோடும் வருவதாகக் கூறிச் சென்றான். ஆனால் அவனும் திரும்பி வரவில்லை.

நேரம் ஆக ஆக மிகவும் பதட்டம் கொண்ட தர்மர் தானும் அவர்களைத் தேடிக் கொண்டு கிளம்புகிறார். கடைசியில் நீர் நிறைந்த ஒரு நச்சுப் பொய்கையை அடைகிறார். அங்கே, ஆங்காங்கே தனது தம்பிகள் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்த அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. இது ஒருவேளை துரியோதனின் சூழ்ச்சியாக இருக்கலாம் எனக் கருதியவர், மிகுந்த நாவறட்சியால் நீர் அருந்த பொய்கைக்குள் இறங்குகிறார்.

அப்போது ஒரு அசரீரி ஒலிக்கிறது. ”குந்தி புத்திரனே! இது என் பொறுப்பில் உள்ள குளம்; என் கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு நீ நீர் அருந்தலாம். உன் சகோதரர்கள் என் கேள்வியை அலட்சியப்படுத்தியதால்தான் இந்த நீரை அருந்தி இறந்து விட்டார்கள்.” என்கிறது அசரீரி.

திகைத்த தர்மர், ”என் சகோதரர்கள் இறப்பிற்குக் காரணமான உன் நோக்கம் என்ன, நீ யார் என்பதை அறிய விழைகிறேன். அது தெரிந்த பிறகுதான் உன் கேள்விகளுக்கு பதில் சொல்வேன் ” என்கிறார்.

உடனே அவர் முன் உடனே பயங்கர உருவத்துடன் ஒரு யக்ஷன் தோன்றுகிறான். அவன் கேள்விகளைக் கேட்கக் கேட்க தர்மரும் பதில் சொல்கிறார். (மஹாபாரதத்தில் இப்பகுதி யஷப் பிரச்னம் என அழைக்கப்படுகிறது. மிக விரிவான பல்வேறு உட்பொருள்களை உடையது. சாம்பிளுக்கு சில கேள்விகள் மட்டும் இங்கே)

கே: மனிதனுக்கு எப்போதும் துணை எது?

ப: தைரியம்.

கே: பூமியை விடத் தாங்கும் திறன் கொண்டது எது ?

 ப: ஒரு தாயின் மனது.

கே: ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது எது ?

ப: தந்தை.

கே: மனிதன் அலட்சியம் செய்ய வேண்டியது ?

ப: கவலை

கே: மிகவும் வேகமானது ?

ப: மனித மனம்

கே: இறக்கும் நிலையில் உள்ளவனின் துணை ?

ப: அவன் செய்த தர்மம்.

இப்படிப் பல கேள்விகள் கேட்கும் யக்ஷன் இறுதியாக ஒரு கேள்வி கேட்கிறான். – இந்த உலகில் ஆச்சரியம் எது? என்ற அவனது கேள்விக்கு தர்மர், இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் மரணம் நிச்சயம் என்பது தெரிந்தும், அது என்னவோ தனக்கு மட்டும் வராது என்பது போல் மனிதன் ஆணவத்துடன் செயல்படுவதே இந்த உலகின் மாறாத ஆச்சரியம் என்கிறார்.

அதைக் கேட்ட யக்ஷன் மிக மகிழ்ந்து, ”நீ தாராளமாக இந்தக் குளத்தில் நீர் அருந்தலாம். இந்த விஷம் உன்னை ஒன்றும் செய்யாது. அது மட்டுமல்ல. உன் சகோதர்களில் ஒருவரை உயிர்ப்பித்துத் தருகிறேன் யார் வேண்டும் கேள்” என்கிறான்.

இந்த இடத்தில் சற்றுநேரம் யோசிக்கிறார் தர்மர்.

பீமன் மிகப் பெரும் வீரன், அவனைக் காப்பாற்றுவதா? அர்ஜூனன் மாபெரும் ஆற்றல் உள்ளவன் அவனை உயிர்ப்பிப்பதா? சகாதேவன் சகல சாஸ்திரங்களும் அறிந்த பண்டிதன், அவனைக் காப்பதா? இல்லை, எப்போதும் துணையாக வரும் இளவல் நகுலனைக் காப்பதா? – இவர்களில் யாரைக் காப்பாற்றுவது என்று புரியாமல் தர்ம சங்கடத்தில் ஆழ்கிறார் தர்மர்.

பின்னர் தெளிந்து, “ யக்ஷனே, நகுலனை உயிர்ப்பித்துத் தா! அதுபோதும்” என்கிறார்.

யக்ஷனுக்கு ஒரே ஆச்சரியம்! ”பீமன், அர்ஜூனன் என்ற வீரர்களை விடுத்து, சாஸ்திரங்களில் தேர்ந்த சகாதேவனை விடுத்து நகுலனை உயிர்ப்பிக்கக் கேட்கிறாயே, தர்மா! அதன் காரணத்தை நான் அறியலாமா?” என்கிறான்.

உடனே தர்மர், “ என் தந்தைக்கு குந்தி, மாத்ரி என்று இருமனைவியர். நானும் அர்ஜுனனும் பீமனும் குந்திக்குப் பிறந்தவர்கள். நகுலனும் சகாதேவனும் மாத்ரிக்கு பிறந்தவர்கள். குந்தி புத்திரர்களில் மூத்தவனாகிய நான் உயிரோடு இருக்கிறேன். அதுபோல மாத்ரி மைந்தர்களில் மூத்தவனாகிய நகுலன் உயிரோடு இருக்கட்டும். அதுதான் நியாயம். அதனாலேயே அவனை உயிர்ப்பிக்குமாறு கேட்டேன்” என்றார்.

எந்த நிலை வந்தாலும் தர்மம் பிறழாத ஒருவனைக் கண்டால் தன் சாபம் நீங்கும் என்பது அந்த யக்ஷனுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி தர்மம் வழுவாத தர்மர் மூலம் சாபம் நீங்கிய யக்ஷன், சகோதர்கள் நால்வரையுமே உயிர்ப்பித்துத் தந்தான்.

–        இதுதான் மகாபாரதம் கூறும் கதை.

தர்மருக்கு தன் தாய் வயிற்றில் தன்னுடன் பிறந்த அர்ஜூனன், பீமனைக் காப்பாற்றுவதா அல்லது மாற்றாந் தாய் வயிற்றில் பிறந்த நகுல, சகாதேவனைக் காப்பாற்றுவதா? இதில் யார் முக்கியம், யாரை உயிர்ப்பிக்கச் செய்தால் அது தர்மப்படி சரியாக இருக்கும் என்ற பெரிய கேள்வியும் அதனால் உயிர் பிழைக்காதவர்கள் சார்பாக மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற சங்கடமும் ஆரம்பத்தில் ஏற்பட்டது. இதுதான் தர்ம சங்கடம்.

இதே நிலைதான் தமிழக முதல்வருக்கும். ஸ்பெக்ட்ரம் வழக்கில் யாரைக் காப்பாற்றுவது, யாரைக் கைவிடுவது என்று முடிவெடுக்க இயலாத ஒரு சங்கடமான சூழலில் தான் இருப்பதையே அவர் “தர்மருக்கு ஏற்பட்ட சங்கடம்” என்று குறிப்பிட்டார்.

முதல்வருடன் சம்பந்தப்பட்டவர்களில் யார் அர்ஜூனன், யார் பீமன், யார் நகுலன், யார் சகாதேவன் என்பதை இதைப் படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளலாம். அல்லது பின்னூட்டத்திலும் மொழியலாம்.

Advertisements

22 thoughts on “கலைஞரின் தர்ம சங்கடம்

 1. நல்ல கட்டுரை ஐயா. அதுசரி, “கூடா நட்பு கேடாய் முடியும்” என்று ஐயா சொல்லியிருக்கிறாரே! அதைப் பற்றியும் விளக்குவீர்களா? அதாவது யாரை அப்படிச் சொல்கிறார், ஏன் அப்படிச் சொல்கிறார், எதற்கு அப்படிச் சொல்கிறார் என்று?

  1. சரிதான். இந்தக் கட்டுரையைக் கூட சரியான விளக்கம் அளிக்க வேண்டும், யார், யாரோ ’தர்ம சங்கடம்’ என்ற வார்த்தைக்கு அசிங்கமான, ஆபாசமான விளக்கங்கள் அளிக்கிறார்கள், அதனைத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகத்தான் எழுதினேன். இப்போது இதற்கும் விளக்கம் அளிக்க வேண்டுமா? நாளை ’அய்யா’ ஏதாவது தும்மி விட்டு, “தொண்டர்கள் தும்மிய பின்பு ’ஐயா’ என்று சொல்லக் கூடாது, ’அம்மா’ என்றுதான் சொல்ல வேண்டும் என்றூ சொன்னால் கூட, என்னை விளக்கம் எழுதச் சொல்வீர்கள் போலுள்ளதே! போங்க சார், நான் இந்த விளையாட்டுக்கு வரலை.

   ஆனால் ஒரு விஷயம்.

   அவர் ”கூடா நட்பு” என்று சொன்னது காங்கிரஸை அல்ல என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். பின் யாரைச் சொல்லியிருப்பார் என்கிறீர்களா? நீங்களே யோசித்து, ஊகித்து அறிந்து கொள்ளுங்கள். நன்றி!

 2. தர்ம சங்கடம் என்பது ஒரு வார்த்தை இதுக்கும் புராண காலத்து தர்மருக்கும் என்ன சம்பந்தம்?

  1. தர்ம + சங்கடம் = தர்ம சங்கடம். அது ஒரு வார்த்தை அல்ல. இரு வார்த்தை. தர்மருக்கு நேர்ந்த சங்கடம் என்பது பொருள். ’சங்கடம்’ என்பது பொதுவானது. அது தர்மப்படி நடக்கும் தர்மருக்கு நேர்ந்ததால் தர்ம சங்கடம் ஆயிற்று. பதிவில் விரிவாக விளக்கியிருக்கிறேனே ரஞ்சித்.

 3. மன்னிச்சிருங்க சார்,
  பொதுவாவே அரசியல்வாதிகளை பற்றி பேசின பிடிக்காது,அதிலேயும் அந்த ஆள் பெயரை கேட்டாலே, இன்னும் டென்சின் ஆவுது,

  சரி உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கணுமே…..!!!!
  நடந்து முடிந்த இந்த தேர்தலே யாருக்கு சார் ஓட்டு போட்டிங்க….???

  இங்க கேட்க்ககூடாத கேள்வி தான், என்ன பண்றது நீங்கதான் உங்க E-mail ID தரமற்றிங்களே…..!!!!
  எப்புடியும் நீங்க எழுத மாட்டிங்க…. , சரி மெயில் பண்ணுங்க,
  ** giriedit@gmail.com **
  (எனக்கு நம்ப அரசியல் வாதிகளைத்தான் பிடிக்காது, ஆனால் நாட்டின் மீது அக்கறை உண்டு, நாட்டு பற்றும் இருந்தது இப்ப கொஞ்ச நாளா ”சுவிச் ஆப்” பண்ணி வெச்சிருக்கேன் )

  1. புரிகிறது தமிழ்ச்சிங்கம். உங்களைப்போலத்தான் நானும் இருந்தேன். இப்போதும் அடிக்கடி அப்படி ஆகி விடுகிறேன். உணர்ச்சிவசப்படுவது நம் கூடவே பிறந்தது. மேலும் அநியாயமும், அக்கிரமும் நடக்கும்போது நம்மால் பொறுத்துப் போக முடிவதில்லை. அதன் வெளிப்பாடும், ஒருவித ஆற்றாமை, இயலாமை மனோநிலையும் தான் நம் கோபமும், சீற்றமும். மற்றபடி நாம் எந்த ஒரு தனி நபருக்கும் விரோதியா என்ன? ஆனால் பெரும்பாலும் சில ’பக்தர்களாலும்’, ’துதிபாடிகளாலும்’ அவ்வாறே புரிந்து கொள்ளப்படுகிறோம். புறக்கணிக்க, புறந்தள்ளப்படுகிறோம். சரி விடுங்கள், தனி ஒருவராக, சமூகச் சூழல்களுக்குக் கட்டுபட்ட குடிமகனாக நம்மால் என்ன செய்து விட முடியும்?

   //நடந்து முடிந்த இந்த தேர்தலே யாருக்கு சார் ஓட்டு போட்டிங்க….???//

   ம்ம்ம்ம். சொல்லி விடவா? எனக்கு வாக்குரிமை வந்த அந்த நாளிலிருந்து குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு வாக்களித்ததேயில்லை. இப்போதும் அது தொடர்கிறது. இப்போது நான் வாக்களித்தது..

   1) ஒரு ஆணுக்கு. அந்தக் கட்சியின் தலைவருக்கும் சினிமாத் துறைக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு.

   2) அவருக்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு உண்டு.

   3) அவர்களது கட்சியின் பெயரில் “கழகம்” இருக்கும்.

   4) இளம் வயதுமுதலே அவர் அரசியலில் இருக்கிறார்.

   5) அவருக்கு ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உண்டு.

   6) ரகசியமாக யாகம், ஹோமம் போன்றவற்றைச் செய்வார். ரகசியமாக ஜோதிடர்களைச் சந்திப்பார். அவர்களது ஆலோசனைப்படியே நடந்து கொள்வார்.

   7)கட்சி, பொது இடங்களில் நெருக்கமான நட்பு + குடும்ப உறுப்பினர்களுடன் பெரும்பாலும் காட்சி தருவார்.

   8) தமிழ், தமிழ் என்று சொன்னாலும் அவரது தாய்மொழி தமிழல்ல. வேறு ஒரு அண்டை மொழி. இப்போதும் அவர்கள் வீட்டில் மற்ற நெருங்கிய உறவினர்களுடன் பேசும்போது அந்த அண்டை மொழியில் தான் பேசுவார். பூர்வீகம் தமிழ்நாடல்ல.

   9) எம்ஜியார் மீது மதிப்பும், அன்பும் உடையவர். சொல்லப் போனால் எம்ஜியார்தான் இவரது முன்னேற்றத்திற்கு நிறைய உதவியிருக்கிறார்.

   10) இவரது சொந்தப்பெயர் வேறு. சில காரணங்களுக்காக புனைபெயர் சூட்டப்பட்டது அல்லது சூட்டிக் கொண்டார்.

   போதும சிங்கம். யாராக இருக்கும் என்பதை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். நான் பின்னர் சாவகாசமாக(?/) உங்களுக்கு மெய்ல் செய்கிறேன். ஓகேவா?

 4. ஆண்மிகத்துக்குள்ள அரசியல கொண்டு வர்றீங்க, வாங்க வாங்க…!!
  பல பேர் உயிரை *************** (edited) போயி, இவிங்களோட கம்பேர் பண்றீங்களே சார்…!!
  இலங்கியில நம்ம தமிழ் மக்கள் நாசமா போன கதை உங்களுக்கு தெரியாத….???

  இந்த அரசியல் **** (edited) ….. வரலாற்று காலங்களில் வாழ்ந்த ”இராவணன்” கூட கம்பேர் பண்ண தகுதி அற்றவர்கள்

  அதுக்கு அப்புறம் உங்க விருப்பம், உங்க வெப்சைட் நீங்க எழுதிரிங்க…..!!!!

  1. அன்புள்ள தமிழ் சிங்கம்.

   ஆன்மீகத்துக்குள் அரசியலைக் கொண்டு வரவில்லை. சிலர் அதற்கு “வேறுவிதமான” வியாக்யானங்கள் கூறி வருவதைக் கொண்டு பொறுக்காமல்தான் இதை எழுதினேன். வேறு எவ்வித நோக்கமும் இல்லை. யாரையும் யாரோடும் கம்பேர் செய்யவுமில்லை.

   உங்கள் மறுமொழியின் சில வார்த்தைகள் யாரையேனும் புண்படுத்தக் கூடுமோ என்றெண்ணியே அதை எடிட் செய்திருக்கிறேன். தவறாக நினைக்க மாட்டீர்கள், புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.

   உங்கள் கோபமும் ஆற்றாமையும் புரிகிறது. ஆனால் ஏதும் செய்ய இயலாத கையறு நிலையிலேயே நம்மைப் போன்றவர்கள் இருக்கிறோம் என்பதும் உண்மை.

   இறைவன் தான் நம் சகோதரர்களுக்கு சாந்தியையும், சமாதானத்தையும் தந்து, தீயோர் மனதை மாற்றி, அவர்களது இதயத்தில் நல்லெண்ணத்தை விதைக்க வேண்டும்.

   என் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருவதன் மூலம் அது ஆன்மீகமோ அரசியலோ எனது மனநிலை என்ன என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டவர்களுள் நீங்களும் ஒருவர் என்றே நம்புகிறேன். வருகைக்கும், நீண்ட நாளைக்குப் பின்னான கருத்திற்கும் நன்றி.

   (சில நாட்களாக உங்களை நினைத்தேன். ஏதுடா மனுஷன் பின்னூட்டமே காணோம்னு. பாத்தீங்களா அது வாழ்த்தோ வசையோ வந்துட்டீங்க. சுஜாதா சொல்ற மாதிரி ஏதாவது இக்ஷிணி வேலையா இருக்குமோ? இல்லை டெலிபதியா?… எனிவே தாங்க்ஸ் நண்பரே)

 5. ஹிஹி இந்த விளையாட்டுக்கு நான் வரலை. ஆனால் இந்தக் கதையை இங்கு வெளியிட்டதுக்கு நன்றி. ஒரு சிலர் அல்பமாக இதை திரித்து சொல்லிக் கொண்டுள்ளனர்

  1. ஆம். கார்த்திக் சார். அதனால்தான் இந்தப் பதிவையே போட நேர்ந்தது. நன்றி கருத்திற்கும், வருகைக்கும்.

  2. இன்னொரு சங்கடமும் தர்மனுக்கு நேர்ந்ததுண்டு. பாரதப்போரில் ஒருநாள்… இருதரப்பிலும் அபிமன்யூ, ஜயரதன் என மாறி மாறி இறக்கின்றனர். மேலும் வெற்றிகளைக் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் பாண்டவர்கள். எப்படியாவது துரோணரை போரில் வென்றால் நமக்கு வெற்றி நிச்சயம் எனத் திட்டமிடுகிறான் கிருஷ்ண பரமாத்மா. அவன் உத்தரவுப்படி பீமன் அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானையைக் கொல்கிறான். பின்னர் கிருஷ்ணனின் உத்தரவுப்படி உரக்க தர்மனிடம் தெரிவிக்கிறான். அவன் எதிரே நின்றிருந்த துரோணர் அதைக் கேட்டு மனம் கலங்குகிறார், காரணம் ’அஸ்வத்தாமன்’ என்ற பெயர் கொண்ட மகன் அவருக்கு உண்டு. அவன் யாராலும் கொல்லப்பட முடியாதவன் என்றாலும் ஒருவேளை தன் ஆற்றலால் பீமன் கொன்றிருப்பானோ என்ற சந்தேகமும் அவருக்கு எழுகிறது. உடனே தர்மரிடம் அது பற்றிக் கேட்க அவனும் அஸ்வத்தாமா ஹதஹ.. என்று உரக்கச் சொல்லி விட்டு “குஞ்சரஹ” என்பதை மெல்லமாகச் சொல்கிறான். ஆனால் அவன் அந்த இறுதியில் சொன்ன குஞ்சரஹ என்ற வார்த்தை துரோணர் காதில் கேட்காதபடி கிருஷ்ணன் சங்கை எடுத்து ஊத, அஸ்வத்தாமன் இறந்து பட்டான் என்றே நினைத்து தனது வில்லையும், அம்பையும் கீழே போட்டு விட்டு புத்திர சோகத்தில் துரோணர் அமர, உடன் துருபதன் மகனால் கொல்லப்படுகிறார்.

   இங்கே தர்மருக்கு எழுவதும் ஒருவித தர்ம சங்கடம்தான். பொய்யே புகலாத தர்மர் ஏதோ ஒருவிதத்தில் பொய் சொல்ல நேர்கிறது. நடக்காத ஒன்றை நடந்த ஒன்றாகச் சொல்ல நேர்கிறது. ஆனால் அது இங்கே ”அவர்” சொன்ன தர்மசங்கடத்திற்கு பொருத்தமாக இல்லை அல்லவா?

    1. யார், யாரோ தர்ம சங்கடம் என்பதற்கு எதை, எதையோ விளக்கமாகக் கூறித் திரிவதால்தான் – வேறு வழியில்லாமல் – இந்தப் பதிவைப் போட்டேன் கார்த்திக். இனிப் புரிந்து கொள்வார்கள் இல்லையா, ஐயா சொன்னது என்ன என்று. அவ்ளோதான். நன்றி.

 6. ஏன் பாஞ்சாலி துகிலுரியப்பட்டபோது சபை நடுவே ஏதும் செய்ய முடியாமல் மௌனமாய் அமர்ந்திருந்தையும் கூட இதற்கு உதாரணமாகச் சொல்லலாமே! சரியா?

  1. ராம்ஸ். இல்லை. அதுவும் சங்கடம் தான். ஆனால் அது தர்மருக்கு மட்டுமே ஏற்பட்ட சங்கடம் இல்லை. பாஞ்சாலியின் கணவர்கள் அனைவருக்குமே ஏற்பட்டது. மேலும் அது சூதில் தோற்று அடிமையான பின் நிகழ்ந்த ஒன்று.

   மேலும்…. அதை விரிவாக விளக்கினால் பல்வேறு சிக்கல்கள் எழும். இருந்தாலும் முயற்சிக்கிறேன்.

  2. ராம்ஸ்…

   சகுனியின் மாயச் சூதில் பாண்டவர்கள் அனைவரும் தோற்றதால் பாஞ்சாலியும் அடிமைப்பட நேர்கிறது. அக்கால ராஜ நீதிப்படி அடிமைகள் அரசனுக்குக் கட்டுப்பட்டவர்கள். அரசர்களின் விருப்பம் போல அவர்களைக் கையால முடியும் என்ற சுதந்திரம் இருந்ததால்தான், தன்னை அன்றொருநாள் பழிப்பாகச் சிரித்து அவமானப்படுத்திய பாஞ்சாலியைப் பழிவாங்கத் தகுந்த நேரம் எதிர்பார்த்துக் காத்திருந்த துரியோதனன் அதனைப் பயன்படுத்திக் கொண்டான். துச்சாதனன் மூலம் துகிலுரியச் செய்தான்.

   அதனாலாயே மனித தர்மப்படி அது மிகப் பெரிய தவறாக இருந்தாலும் ராஜ தர்மப்படி அதனை எதிர்க்க இயலாததால் பீஷ்மர், துரோணர் என அனைவரும் ஒன்றும் பேச முடியாமல் சபையில் அமர்ந்திருந்தனர்.

   பாண்டவர்கள் அனைவரும் கையறு நிலையில் தவித்தனர். இதில் சங்கடம் தர்மருக்கு மட்டுமல்ல; பஞ்ச பாண்டவர்கள் எல்லோருக்குமே இருந்தது. ஆனால் தர்மர் மூத்தவர் என்ற நிலையில் அதிகம் பொறுப்பாளியாகிறார் அவ்வளவுதான். இதை அந்த “தர்ம சங்கடத்தோடு” ஒப்பிடக் கூடாது. தர்ம சங்கடம் என்றால் தர்மருக்கு மட்டுமே ஏற்பட்ட சங்கடம் என்பதுதான் பொருள். அது இங்கே பொருந்தாது.

   (இந்த மாதிரி பிற அரசர்களை வெற்றி கொண்டு அவர்கள் மனைவிகளைத் துன்புறுத்துவது, முடிகளைக் கத்தரிப்பது, சேடிப் பெண்களாக்கி வைத்துக் கொள்வது, அவர்களது அரண்மனைகளை இடிப்பது, சிதைப்பது, உழுது எள்ளையும், கொள்ளையும் விதைப்பது, அடிமையாக நடத்துவது போன்றவை எல்லாம் நமது பண்டைத் தமிழக வரலாற்றிலும் உண்டு)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.