நம்பினால் நம்புங்கள் – 16 – தானாக எரியும் குடிசைகள்

 

குடிசை திவால்


பழங்கால ஓலைச்சுவடிகளில் மாந்த்ரீகம் பற்றிய பல சுவாரஸ்யமான செய்திகள் உள்ளன. இவையெல்லாம் சுவடிகள் ஆய்வு மையம், சுவடியியல் நிறுவனம் போன்றவற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதுகாறும் பதிப்பிக்கப் பெறவில்லை. இனி இவற்றையெல்லாம் பதிப்பிக்க வேண்டிய அவசியங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. இதைப் பகிர்ந்து கொள்வதன் நோக்கம், இப்படியெல்லாம் இருந்திருக்கின்றது, நம் முன்னோர்கள் இவற்றையெல்லாம் கடந்து  வந்திருக்கின்றனர் என்பதைத் தெரிவிக்கவேயன்றி மூட நம்பிக்கைகளை வளர்ப்பதற்கு அல்ல.

இவையெல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் நம் முன்னவர்களில் ஒரு சிலரால் இவையெல்லாம் பயன்பாட்டில் இருந்துள்ளவை என்னும் போது ஆச்சர்யமே எழுகின்றது.

அடிக்கடி கிராமப்புறங்களில் நாம் கேள்விப்படும் செய்தி. திடீர் திடீரெனக் குடிசைகள் தீப்பிடித்து எரிகின்றன. கற்கள் மேலிருந்து விழுகின்றன. ஆடைகள் எல்லாம் திடீர் திடீரெனத் தீப்பிடிக்கின்றன என்பது. சமீபத்தில் விழுப்புரம் அருகே கூட இதே போன்ற ஓர் பிரச்சனை ஏற்பட்டு அது நாளிதழ்களிலும், பத்திரிகை, தொலைக்காட்சிகளிலும் வெளியானது. இதற்குக் காரணம் சாமியாரின் சாபமா? தெய்வத்தின் கோபமா? ஏவலா? செய்வினையா?. இல்லை, விபரீதப் புத்தி படைத்தவர்களின் சதியா? என ஒன்றுமே புரியாமல் மக்களும் அதிகாரிகளும், காவலர்களும் குழம்பி நின்றனர்.

என்ன காரணமாக இருக்கும்? விஞ்ஞானப்படி சாத்தியமில்லாததை எப்படி நிரூபிப்பது?. யாரேனும் வெண் பாஸ்பரஸைக் கொண்டு புத்திசாலித்தனமாக சதி செய்கின்றார்களா?. இல்லை இயற்கைக்கு மாறான சக்தி ஏதேனும் இவ்வாறு ஆட்டி வைக்கின்றதா? இவற்றிற்கெல்லாம் அவ்வளவு எளிதில் விடை காண முடிவதில்லை. இதுவரை இவ்வாறு நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் சரியான காரண காரியங்கள் கண்டறியப்படவில்லை என்பதுதான் உண்மை.

கிராமத்து மக்களோ “ஒரு சாமியார் வந்தார். யாரும் அவரை மதிக்கலை. திட்டித் துரத்திட்டாங்க. அதான் அவரு சாபம் இட்டுட்டாரு” என நம்ப முடியாத பல மாறுபட்ட தகவல்களைக் கூறுகின்றனர்.

இதுபற்றி ஒரு கதை கூட உண்டு. ஒரு சாமியார் பசிக்காக ஒரு ஊருக்கு வந்திருக்கின்றார். ஊர் மக்களில் சிலர் பிச்சை போடாதது மட்டுமல்லாமல், அவரைப் பலவாறாகக் கிண்டல் செய்தும் விரட்டி அடித்து உள்ளனர். அவர் போகும் பொழுது, இன்னும் பத்து நாள்ல, என் வயிறு எரிய மாதிரி இந்த ஊர் பத்தி எரியும்டா, அப்பத் தெரியும் நான் யாருன்னு என சாபம் விட்டுச் சென்றுள்ளார். அதே போன்று பத்து நாட்கள் கழித்து, ஊரில், வீடுகளில், ஆங்காங்கே தீ. யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் எங்கெங்கோ சுற்றிச் சாமியாரைக் கண்டு பிடித்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டு, அவருக்கு அந்த ஊரில் காய்த்த இளநீர் குடிக்கக் குடித்த பிறகு தான் தீ எரிவது நின்றதாம்.

இதெல்லாம் சாத்தியமா?… எப்படி இந்த நிகழ்வுகள் ஏற்படுகின்றன.. எப்படி இதனை விளக்குவது?… அது ஏன் ஏழைகள் வசிக்கும் குடிசை போன்றவை மட்டுமே எரிகின்றன. மாடி, ஓட்டு வீடுகள், பணக்காரர்கள் வசிக்கும் இல்லங்கள் எரிவதில்லையே ஏன்? கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

இவையெல்லாம் சாத்தியம் தானா என்றால் மாந்த்ரீக முறைப்படி இவையெல்லாம் சாத்தியம் தான் என்கிறது ஒரு சுவடி. அதன் பெயரே குடிசை திவால். இன்னமும் பதிப்பிக்கப் படாத அந்த ஏட்டுக்கட்டில் இது போன்ற பல இரகசியங்கள் புதைந்து கிடைக்கின்றன. அவற்றை நாமும் தெரிந்து கொள்வது, இப்படியெல்லாம் கூட உள்ளதா என வியப்புறவோ அல்லது வெறுப்புறவோ அன்றி, வேறெதற்கும் அல்ல.

அச்சுவடியிலிருந்து ஒரு சிறு பகுதி

“ஒரு மூஞ்சூரைப் பிடித்து, அதன் வயிற்றைக் கிழித்து, மசானச் சாம்பலை அதிலே திணித்து, அதற்கு மேலே——— பெண்ணிண் சீலையைத் தூக்கிச் சுத்தி, மயானத்திலே,—– பிணம் வேகுற போது அதிலே வைத்து, வெந்து நீரான அந்தச் சாம்பலை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, தனக்கு வேண்டாதவர்கள் வீட்டுப் பிரப்பிலே —— செய்தால் அந்த வீடு திவால்.”

“அந்த நீரில கொஞ்சம் போல ஊதிப் போட்டு, “சாம்பவி, உமா தேவி, —-, —-, —-, வாமா, தூமா ஓடிவா திவால் என 108 தரம் ஜெபித்து ——– செய்ய அந்த வீடு திவால்”

படிக்கும் போதே சிரிப்பாகவும், வெறுப்பாகவும் இருக்கிறதல்லவா! என்ன செய்ய? அந்தக் காலத்தில் எதிரிகளை அழிக்க இதுபோல பல வழிகளை வைத்திருந்திருக்கின்றனர். ஆனால் தற்காலத்தில் இவை எல்லாம் தேவையில்லை. இதைவிடப் பிரமாதமாக வைரஸ், சிக்கன் குன்யா, பேர்ட் ஃப்ளூ என்று பல நோய்க் கிருமிகளை உருவாக்கியும், இரசாயன, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியும் அப்பாவிகளை, எதிரிகளை அழிக்கும் அளவிற்கு நாம் தாம் முன்னேறி விட்டோமே!.

 

வாழ்க விஞ்ஞானம், வளர்க விண் ஞானம்.

 

************

 

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s