மஹா சிவராத்திரி

 

 

சிவன்

இன்று மஹா சிவராத்திரி. எத்தனையோ இரவுகள் இருக்க ஒரு குறிப்பிட்ட இரவு மட்டும் சிவனுக்கு உகந்ததாக ஏன் ஆனது. அதுவும் மாசி மாதத்து சதுர்த்தசி இரவு மட்டும் ஏன் மஹா சிவராத்திரி ஆனது? விவரம் அறிவோமா?

சிவராத்திரி என்பதற்கு “சிவனுக்கு உகந்த இரவு” என்பது பொருள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு, மாத சிவராத்திரியாக போற்றப்படுகிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவிற்கு திடீரென்று ஓர் சந்தேகம் ஏற்பட்டது. ‘நான் தானே இந்த உலகைப் படைப்பவன், நான் இல்லாவிட்டால் இந்த உலகில் உயிர்கள் ஏது, இயக்கம் ஏது? என்று சிந்தித்தான். ஆணவம் அவன் தலைக்கேறியது. உடனே தனது தந்தையான விஷ்ணுவைக் காணச் சென்றான். விஷ்ணு அறி துயிலில் ஆழ்ந்திருந்தார். அவரை எழுப்பி, “ ஏய், நான் உனக்கு மகனாக இருந்தாலும் நானே உன்னை விட உயர்ந்தவன். உன்னைப் போல அன்றி, நான் பிறப்பு, இறப்பு அற்றவன். நான் இந்த உலகத்தைப் படைக்காவிட்டால் எங்ஙனம் நீ காத்தல் தொழிலைச் செய்ய முடியும்? எனவே, நான் உன்னை விட உயர்ந்தவன் என்பதை உணர்ந்து கொண்டு எனக்கு ஏவல் செய்வாயாக’ என்றார்.

அதுகேட்ட விஷ்ணு வெகுண்டார். ”உன்னுடைய தலைகளில் ஒன்றை ஈசன் பறித்து எறிந்த காலத்தில் எங்கே போயிற்று உனது படைப்பாற்றல்? சோமுகாசுரன் உன்னிடம் இருந்த வேதங்களைப் பறித்து எடுத்துச் சென்றபோது எங்கே போனாய் நீ?. நானல்லவோ அதை மீட்டு உலகைக் காத்தேன். ஆகவே நான் என்ற ஆணவத்தை விடுத்து என்னிடம் அடங்கி நடப்பாயாக” என்றார்.

இருவருக்குமான சொற்போர், பெரும் போராக மாறியது. அண்டசராசரம் நடுங்கியது. தேவாதி தேவர்கள், சித்த, முனி, யோகியர்கள் அஞ்சி நடுங்கி ஈசனைச் சரணடைந்தனர். ஈசனும் அபயஹஸ்தம் அருளினார்.

போர் புரிந்து கொண்டிருந்த அயன், அரிகளின் அருகே மிகப் பெரிய பேரொளி ஒன்று தோன்றியது. ”இந்த ஒளியின் அடியையும், முடியையும் எவர் கண்டறிகிறாரோ அவரே பெரியவர்” என்ற அசரீரி ஒலித்தது. உடனே, தாம் தான் பெரியவர் என மற்றவருக்கு நிரூபிக்க வேண்டிய ஆவலில் பிரம்மா அன்னப் பறவையாகி வானில் உயர்ந்தார். விஷ்ணுவோ வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைய அரம்பித்தார்.


அண்ணாமலையார்

ஆனாலும் இருவராலும் ஈசனின் அடி, முடியைக் காண முடியவில்லை. உண்மை உணர்ந்த விஷ்ணு, இது ஈசனின் திருவிளையாடலே என்பதை அறிந்து அவரைச் சரணடைந்தார். ஆனால் ஆணவம் கொண்ட பிரம்மனோ, எப்படியாவது தான் திருமுடியைக் கண்டதாகப் பொய் செல்லியாவது போரில் வெற்றி பெற நினைத்தார். அப்போது திருமுடியிலிருந்து தவறி விழுந்து கொண்டிருக்கும் தாழம்பூவைக் கண்டார். தான் திருமுடியைக் கண்டதாகவும், அதை தாழம்பூ பார்த்ததாகவும் பொய் சாட்சி கூற வலியுறுத்தினார். பிரம்மனே தன்னிடம் கெஞ்சுவதைக் கண்டு ஆனந்தப்பட்ட தாழம்பூவும் அதற்குச் சம்மதித்தது.

அதனை சாட்சியாக வைத்து, தான் திருமுடியைக் கண்டதாகவும், அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என்றும் அடி முடி காண இயலாத பேரொளியிடம் பொய் கூறினார் பிரம்மா.

பேரொளி வெடித்துச் சிதற ஈசன் அளவிலாச் சீற்றத்துடன் அதிலிருந்து வெளிப்பட்டார். ”பிரம்மனே! என் திருவடியைக் காணாமலேயே கண்டு விட்டதாகப் பொய் புகன்ற உனக்கு இனி இவ்வுலகில் திருக்கோயில்களும், வழிபாடும் இல்லாமல் போகட்டும்” என்று சாபம் இட்டார். பொய் சாட்சி கூறிய தாழம்பூவிடம், ”நீதி தவறிய உன்னை இனி என் பக்தர்கள் யாரும் பூஜைக்குப் பயன்படுத்த மாட்டார்கள்” என்று சபித்தார்.

சாபம் விடுத்தும் சீற்றம் அடங்காத சிவன் அக்கினிப் பிழம்பாய்த் தகிக்க, அஞ்சிய பிரம்மனும், விஷ்ணுவும் தங்கள் பிழை பொறுக்குமாறு வேண்டித் துதிக்க, முனிவர்கள் வேதம் ஓதி முழங்க, தேவர்கள் பாடித் துதிக்க, ஈசன் குளிர்ந்தார். அண்ணாமலையாய், அருணாசல லிங்கமாய் அமர்ந்தார்.

திருவண்ணாமலை

ஈசன் இவ்வாறு ஜோதிப் பிழம்பாய்த் தோன்றி பிரம்ம, விஷ்ணுக்களின் ஆணவம் அகற்றி மன்னுயிர்களை மாபெரும் அழிவிலிருந்து காத்த அந்த இரவுதான் மஹா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

பகவான் ரமணரும் இதனை

ஆதிஅரு ணாசலப்பேர் அற்புதலிங் கத்துருக்கொள்
ஆதிநாள் மார்கழியில் ஆதிரையச் – சோதியெழும்
ஈசனைமால் முன்அமரர் ஏத்திவழி பட்டநாள்
மாசிசிவ ராத்திரியா மற்று

என்கிறார்.

 

லிங்கேசன்

இந்த நன்னாளில் நீராடி, நீறு பூசி, ஐந்தெழுத்து மந்திரத்தை விடிய விடிய ஓதி வருதல் சிறப்பு. சிவ புராணம் படித்தலும், திருமுறைகளைப் பாராயணம் செய்தலும் நற்பலனைத் தரும். அண்ணாமலை தலத்தை கிரிவலம் வருதல் அளவற்ற புண்ணியத்தைத் தரும். அன்னை பார்வதி தேவியுடன், முப்பத்து முக்கோடி தேவர்களும், சித்தாதி யோகியர்களும், முனிவர்களும் மஹா சிவராத்திரி அன்று கிரிவலம் வருவதாக ஐதீகம்.

 

சிவ புராணத்தை இங்கே கேளுங்கள்.

 

தென்னாடுயை சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

 

ஓம் நமசிவாய! ஓம் சிவாய நமஹ!
ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ

 

***************

Advertisements

4 thoughts on “மஹா சிவராத்திரி

 1. அன்புள்ள எழுத்தருக்கு வணக்கம்,

  நல்ல நாளில் நல்ல பதிவு.

  உங்கள் பதிவை படித்த பின்பு மஹாசிவராத்திரி பற்றி அறிந்தேன்.

  பதிவிற்கு நன்றிகள் பல.

  அன்புடன்,
  இராமச்ச‌ந்திரன்

  1. நன்றி இராமச்சந்திரன் ஐயா. அதை இன்னும் விரிவாக எழுதவே எண்ணியிருந்தேன். ஆனால் நேரமின்மையால் சுருக்கியே எழுத முடிந்தது. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.