ஓலைச்சுவடிகள்

 

கீழ்த்திசைச் சுவடிகள் ஆய்வு மையம், சுவடியியல் நிறுவனம் போன்ற பல நிறுவனங்களில் இதுகாறும் பதிக்கப்படாத பல ஓலைச் சுவடிகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஜோதிடம், மாந்த்ரீகம், மருத்துவம் பற்றிய சுவடிகள் அதிகம் உள்ளன. சான்றாக கேரள மணிகண்ட சாத்திரம், குரு நாடி சாத்திரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஜோதிடம் பற்றிய சுவடிகள் இவை.

கேரள மணிகண்ட சாத்திரத்தில் அரிஷ்ட காண்டம், சகோதர காண்டம், பித்ரு காண்டம், அற்பாயுசு காண்டம், யோக காண்டம், மாதுரு காண்டம் என மொத்தம் 20 காண்டங்கள் உள்ளன. இவையெல்லாம் தனிப்பட்ட மனிதருக்கான நாடிச் சுவடிகள் போல் அல்லாது பொதுவான தகவல்களாகக் காணப்படுகின்றன.

 

சுவடிகள்

அரை அடி நீள அளவில் இந்த ஓலைச் சுவடிகள் காணப்படுகின்றன. உள்ளங்கை அளவு அகலம் இருக்கும், நீளமான ஓலைச் சுவடிகளையும் காண நேர்ந்தது. சிலவற்றில் படங்கள், விளக்கக்குறிப்புகள் எனத் தற்பொழுது காணப்படும் நூல்களைப் போன்று பல்வேறு தகவல்களும் காணப்படுகின்றன. சிலவற்றில் இரு புறமும் எழுத்துகள் காணப்படுகின்றன. சிலவற்றில் ஒரு புறம் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.

இந்த ஓலைச்சுவடிகளை அந்தக் காலத்தில், எப்படித் தயாரித்தார்கள், எப்படி எழுதினார்கள், எப்படிப் பாதுகாத்தார்கள் என்பது ஒரு ஆச்சர்யமான நிகழ்வே!

சோதிடம், ஞானம், மருத்துவம், மாந்த்ரீகம், தத்துவம் பற்றி நிறைய ஓலைச் சுவடிகள் காணப்படுகின்றன. (ஆரூடக்கையேடு, கிரகச் சக்கர ஏடு, ஆதித்தன் பலன், அகத்தியர் ருண வாகடம், ஞானம்-32, அகத்தியர் செந்தூரம், சாலத்திரட்டு, சித்தராரூடம், சௌமிய சாகரம், குறி சொல்ல எழுதிக் கட்ட மந்திரம், குறளி வித்தை, குறளிச் சக்கரம் குரல் கட்ட மந்திரம் – இவையெல்லாம் சுவடிகளின் தலைப்புகள்) இலக்கியம், புராணம் பற்றியும் சில சுவடிகள் உள்ளன (சாத்தாவையன் கதை, சாத்தான் கதை போன்றன). அவையெல்லாம் இதுகாறும் பதிப்பிக்கப் பெறவில்லை. சொல்லப்போனால் நிறைய ஓலைச் சுவடிகளில் என்ன உள்ளது, அது எதைப் பற்றியது என்பது பற்றிய ஆய்வு இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பல ஓலைச் சுவடிகள் மிகவும் சிதைந்து காணப்படுகின்றது. சிலவற்றைப் படிக்க இயலவில்லை. சில படிக்க எளிதாக, பழங்காலத் தமிழ் நடையில் உள்ளது.

 

படிக்க எளிதாக சுவடிகள்

 

ஆனால் எல்லா ஓலைச்சுவடிகளும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், முனிவர்களால் தான் எழுதப்பட்டது என்பது ஏற்க முடிவதாக இல்லை. ஏனெனில் பெரும்பாலான பாடல்கள் எல்லாமே அந்தாதி யாப்பில் உள்ளன. சங்ககாலப் பாடல்களில் ஆசிரியப்பாவே ஏற்றம் பெற்றிருந்தது. சங்ககாலத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ இவை இயற்றப் பெற்றதாக இருந்திருந்தால் பாடல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாவில் தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை. எனவே முனிவர்களால் தான் எழுதப்பட்டது என்ற கருத்தை முழுமையாக ஏற்க இயலாது.

ஆனால் சங்கம் மருவிய காலத்தும் அதன் பின்னரும் வெண்பா ஏற்றம் பெற்றது. எனவே அக்காலத்திற்குப் பின் தான் இவ்வகை நூல்கள் தோன்றியிருக்கும் என்பது உறுதி.. குறிப்பாகக் கூறின், தமிழில் முதலில் தோன்றிய அந்தாதி நூலான, காரைக்காலம்மையாரின் அற்புதத்திருவந்தாதிக்குப் பின்னரே இவ்வகை நூல்கள் தோன்றியிருக்க வேண்டும் என்பது துணிபு. காரைக்காலம்மையாரின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

சான்றாக அகத்தியரால் எழுதப்பெற்றதாகக் கூறப்படும் அகத்தியர் வாகடம் என்பது உண்மையில் அகத்தியரால் எழுதப்பெற்றது தானா என்பது சந்தேகமே! ஏனெனில் அதிலும் பாடல்கள் அந்தாதி முறையில் காணப்படுகின்றன. எழுத்துகளின் அமைப்பும், வட சொற்களின் ஆதிக்கமும் அவையெல்லாம் பிற்காலத்தைச் சார்ந்ததாகவே கருத இடமளிக்கின்றது.

 

ஓலைச் சுவடி

 

உதாரணமாக ஒரு சுவடியின் இறுதியில், ஹரி ஓம் நன்றாக வாழ்க, குருவே துணை, தம்பிரான் அண்ணாமலைப் பரதேசி, அண்ணாமலை மடம் என்ற தகவல்கள் காணப்படுகின்றன. ஆக இது போன்ற சுவடிகளைப் பதிப்பிக்கும் பொழுது விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகின்றது. அப்பொழுது தான் அது வழி நூலா, மூல நூலா, சார்பு நூலா, மூலத்தின் பிரதியா என்ற உண்மையான உண்மை தெரிய வரும்.

Advertisements

12 thoughts on “ஓலைச்சுவடிகள்

  1. தமிழே தெரியாதுன்னு சொல்லிட்டு…
    இப்படி வெளுத்து வாங்கறீங்களே சார்………..!!!

    வளரட்டு தங்கள் ஆய்வுகள்……

    1. நன்றி. இந்த வலைப்பதிவில் உள்ள பல பதிவுகள் எனது தனிப்பட்ட ஆராய்ச்சியினை அடிப்படையாகக் கொண்டவையே. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s