ஸ்ரீபைரவர் வழிபாடு – 1

எல்லா சிவன் கோவில்களிலும் விநாயகர், முருகன் சன்னதி, அம்பாள் சன்னதி இருக்கும். அதே போன்று நவக்கிரஹ சன்னதியும் காணப்படும். இன்னொரு முக்கியமான சன்னதியாக விளங்குவது ஸ்ரீபைரவர் சன்னதியாகும். அதுவும் சற்று ஒதுக்குப்புறமாக, தனியாக உள்ளடங்கியே பெரும்பாலான கோயில்களில் காணப்படும். மேலும் சில கோயில்களின் காவல் தெய்வமாக விளங்குவதும்  ஸ்ரீபைரவர் தான்! பொதுவாக வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் பைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி என்ற வரிசையிலும் இருப்பார்கள். சில ஆலயங்களில் நவச்கிரக சன்னதிக்கு அருகிலும் பைரவர் சன்னதி இருக்கும்.

கால பைரவர்

 

ஆனால் சங்க காலத்திலோ, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களிலோ  பைரவரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை என்பது  ஆராயப்பட வேண்டிய ஒன்று. (நான் தேடிப் பார்த்தவரை கிடைக்கவில்லை)

அநேகமாக இந்த பைரவ வழிபாடு முதன் முதலில் வட இந்தியாவில் தோன்றிப் பின்னரே இங்கு பரவியிருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக ஆதிசங்கரரின் அவதாரத்திற்குப் பின்னரே இந்த பைரவ வழிபாடு ஏற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. அவர் தாம் முதன் முதலில் வழிபாட்டு முறைகளைப் பிரித்து ஷண்மத ஸ்தாபனத்தை உருவாக்கியவர். அவற்றுள் ஒன்றான சாக்த வழிபாட்டில் உள்ளடங்கி உள்ளது தான் ஸ்ரீ பைரவ வழிபாடாகும்.  பைரவர் தம் பெருமையைப் புகழ்ந்து கால பைரவாஷ்டகத்தையும் ஸ்ரீ சங்கரர் பாடியுள்ளார்.

கால பைரவர் – காசி

வட இந்தியாவில், காசியில் கால பைரவர் சன்னதி உள்ளது. இங்கு வந்து சென்று, வழிபட்டு கறுப்புக்கயிறு கட்டிக் கொண்டால் திருஷ்டி தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இவரது திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. இவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார். காசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு கள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது ஒரு நம்பிக்கையாக உள்ளது. காசியில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட சனீஸ்வரன், காசியின் காவல் தெய்வமான பைரவரை எண்ணி தவம் புரிந்து பிறகு மெய்ஞானம் பெற்றார் என்ற ஒரு கருத்தும் உண்டு. சனைச்சரனுக்கு குரு கால பைரவர் தான். இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள், சனி தோஷங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உண்டு.

பைரவர் சிவனின் ஒரு அவதாரம் என்ற கருத்தும் உள்ளது. மகன்மை முறை உடையவர் என்ற கருத்தை கிருபானந்த வாரியார் ஒரு சொற்பொழிவில் கூறியிருக்கின்றார். சிவனின் சூலத்திலிருந்து தோன்றியவர் என்றும் கூறப்படுகின்றது.  மேலும் கந்த புராணம், காசி புராணம், கடம்பவனப் புராணம் போன்ற, பிற்காலத்தில் தோன்றிய புராண நூல்களிலே தான் பைரவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. எனவே இதிலிருந்து பொதுவாக பைரவர் வழிபாடு என்பது பிற்காலத்தில் தான் தமிழ் நாட்டில் வேரூன்றியிருக்க வேண்டும் என்ற முடிவிற்கே வர வேண்டியுள்ளது. முதலில் வட நாட்டில் தோன்றிப் பரவி பின்னரே தமிழ்நாட்டில் இவ்வகை வழிபாடு பரவியிருக்கக் கூடும். ஆலயத்தில் இறுதி பூசை பைரவருக்கு நடந்தாலும் முதன்மையானவர் அவர் தான்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவர் குறித்து பல்வேறு வரலாறுகள் கூறப்படுகின்றன.

முதல் பைரவர்:

பைரவ மூர்த்தங்களில் மொத்தம் 108 வகைகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. பைரவரின் 64 அம்சங்களில் எட்டு அம்சங்கள் விசேஷமாக கருதப்படுகிறது. அவற்றில் முதன்மையானதும், மூலமானதாகவும் விளங்குவது ஆதி பைரவராகும்.

(தொடரும்)

 

Advertisements

5 thoughts on “ஸ்ரீபைரவர் வழிபாடு – 1

  1. நன்றாக உள்ளது. ஆன்மீக பயணம் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்”வாழ்க வளமுடன்”எங்கள் சித்திரைதாய்,குருநாதர் ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு உண்டு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s