உண்மையைத் தேடி – 100 – சில சிந்தனைகள்

உண்மையைத் தேடி – 100 – சில சிந்தனைகள்

இது இந்த வலைப்பூவின் நூறாவது பதிவு. கிட்டத்தட்ட 1 லட்சம் ஹிட்ஸ்களையும், 600க்கும் மேற்பட்ட மறுமொழிகளையும் கடந்து இன்று 100வது பதிவை நோக்கி இது நகர்ந்திருக்கிறது. தொடர்ந்து தினம்தோறும் இந்த வலைப்பூவிற்கு வருகை தந்தும், பின்னூட்டமிட்டும், கருத்துக்களைப் பகிர்ந்தும் ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றிகள். குறிப்பாக கார்த்திக், அருட்சிவம், பத்மஹரி, வினோ, தோழி ஜெகதீஸ்வரன், சகோதரன் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.

நண்பர் ஆர். வெங்கடேஷ் (கல்கி ஆசிரியர்) அவர்களுடைய வோர்ட்பிரஸ் வலைப்பூவைப் பார்த்து, அதனால் உந்தப்பட்டு பிப்ரவரி 2008ல் இந்த வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பதிவு ஏதும் போடவில்லை. அப்போது அதற்கு விருப்பமும் இல்லை. நடுவில் கடவுச் சொல்லும் மறந்து போய் விட்டதால் அப்படியே கிடப்பில் இருந்தது. பின்னர் பழைய மின்னஞ்சல்களை ஒரு முறை பார்த்துக் கொண்டிருந்தபோது வலைப்பூவின் கடவுச் சொல் கிடைக்க, ஆகஸ்ட் 2009 முதல் மீண்டும் பதிவுகள் தொடர்ந்தன.

ஆனாலும் தொடர்ந்து பதிவிட ஆர்வமில்லை. நண்பர் மதுரபாரதி மற்றும் வெற்றிக் கதிரவன் ஆகியோர் அவ்வப்போது தூண்டியதால் தான் 100 பதிவு வரை போட முடிந்தது. இப்போதும் கூட தொடர்ந்து பதிவுகள் போட வேண்டும் என்ற தன் முனைப்போ, ஆர்வமோ, செயல் ஊக்கமோ இல்லை. ஆனாலும் பதிவுகள் தொடர்கின்றன. அதேசமயம் தொடர்ந்து பதிவுகள் வரும் என்றும் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஆனால் இதில் பதிவிட்ட விஷயங்களை விட சொல்லாத விஷயங்கள், தகவல்கள், முக்கியச் செய்திகள் நிறைய உள்ளன என்பதும் உண்மை. இந்த வலைப்பூக்கள் எல்லாம் வருவதற்கு முன்னால் மின்னஞ்சற் குழுமங்களிலும், ஜியோசிடிஸ், யாஹூ பேஜஸிலும் எழுதியவை மிக அதிகம். ஆனால் அவற்றை எல்லாம் மீண்டும் சொல்வதாலோ, பதிவிடுவதாலோ இந்தச் சமூகத்திற்கு ஏதாவது பயன் விளையும் என்று நான் நம்பவில்லை.

இது அவசர உலகம். அவரவர்கள் தேவைகள் அவருக்கு. யாருக்கும் நின்று யோசிக்க, நிதானிக்க நேரமில்லை. இதில் வாழ்க்கையின் உண்மையான உண்மையைத் தேடுவதில் என்ன பயன் நேரப் போகிறது?. இந்த வலைப்பூ, வலைத்தாளம் இதெல்லாம் சுத்த வேஸ்ட். நேர விரயம் தான் என்பது பலரது கருத்து. சிலரது சிந்தனை. அது ஒருவிதத்தில் சரியும் கூட. எதற்கு உண்மை, அது இது என்று தேடி அலைய வேண்டும்? வாழ்க்கையை வாழ்ந்துதானே பார்க்க வேண்டும்?

உண்மைதான்.

நாம் ஏன் பிறந்தோம்?

ஏன் இறக்கிறோம்?

இறப்பின் பின் என்ன ஆகிறோம்?

பல ஜென்மங்கள் நமக்கு உண்டு என்றால் இன்றைய நமது உறவுகள் நேற்றைய உறவுகளாகவோ எதிரிகளாகவோ இருப்பதும் கூடச் சாத்தியம் தானே! இன்றைய மகன் நேற்றைய தந்தையாகவோ, நாளைய வேறு உறவாக மாறுவதும் சாத்தியம் தானே!

இவை எல்லாம், எங்கு, யாரால், எப்போது, ஏன், எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

இல்லை இவையெல்லாம் வெறும் கற்பனைதானா? ஆதாரமற்ற உளறல்கள் தானா?

அப்படியென்றால் இவற்றைப் பற்றியெல்லாம் விளக்கிச் சொன்ன மகான்கள், ஞானிகள், யோகிகள், சித்தர்கள் எல்லாரும் மூடர்களா? அவர்களை விட பகுத்தறிந்து பகுத்தறிந்து நாம் அறிவில் மேன்மை மிக்கவர்கள் ஆகி விட்டோமா? நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள்தானா?

ஏன் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து, களவு, ஊழல் என்று எங்கும் வியாபித்து இருக்கிறது? எத்தனை ஞானிகள், மகான்கள், யோகிகள், அவதார புருடர்கள் தோன்றியிருக்கின்றனர். எத்தனை நற் கருத்துக்களை போதித்திருக்கின்றனர். வாழ்ந்து காட்டியிருக்கின்றனர். அப்படியிருந்தும் மானுடம் மேன்மையுறாதது ஏன்?

பிறக்கும் போது வெறும் கையோடு வந்தவன், இறக்கும் போது வெறும் கையோடே போகப் போகிறான் எனும் போது எதற்கு இத்தனை செல்வம், பணம், பதவி, பேராசை எல்லாம்…

வாரிசுகள் பிற்காலத்தில் நலமோடு வாழ என்றால்… அதற்கு என்ன நிச்சயம்? அல்லது அப்படி வாழ்வார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன? ஒருவேளை வாரிசுகள் அச்சொத்துக்களை அழித்து விட்டால்…, யாரேனும் அவர்களை ஏமாற்றி அபகரித்து விட்டால்…, அச் சொத்துக்காகவே அவர்களை யாராவது அழித்தொழித்து விட்டால்…. அதற்கெல்லாம் மூல காரணமாக, அவர்கள் அழிவுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இவன் சேர்த்து வைக்கும் சொத்து அல்லவா இருக்கும்….?

மன்னாதி மன்னர்கள் ஆண்டார்களே, கோடி கோடியாக கஜானாவில் சேர்த்தார்களே…. அவையெல்லாம் எங்கே….

மன்னர்கள் கட்டிய ஆலயங்கள் இருக்கின்றன, சாசனங்கள் இருக்கின்றன.. கல்வெட்டுக்கள் இருக்கின்றன…. ஆனால் அந்த மாமன்னர்கள் ஆடம்பரமாக வாழ்ந்த மாளிகைகள், அரண்மனைகள், கூட கோபுரங்கள் எங்கே… அவர்கள் சேர்த்து வைத்த சொத்து எங்கே, செல்வம் எங்கே…. பொன் எங்கே…. பொருள் எங்கே…. பணம் எங்கே….. எங்கே…?

நிலையில்லாத உலகில் எல்லாம் நிலைத்திருக்கும் என நினைக்கும் மானுடர்களை கடையான புல்லர்கள் என்கிறார் வள்ளுவர். ’புல்லறிவாண்மை’ என்கிறார் அதை.

”காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே….” இது பட்டினத்தார்க்கு இறை உணர்த்திய வாசகம்.

’கல்லாதது உலகளவு’ என்கிறார் ஔவை. ஆனால் இன்றோ தான் என்ற அகம்பாவமும், தான் பெரியவன், தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்பான்மையும் அதிகம் உள்ளது. ஈகோ மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது. ஆனால் அவர்கள் எதற்காக அந்த ஈகோவைக் கை கொள்கிறார்களோ அவற்றில் பல ’நிலையில்லாதது’ என்பதைப் பலரும் உணரவில்லை.

எத்தனை கலைஞர்கள், எழுத்தாளர்கள், வித்தகர்கள் நமக்கு முந்தைய நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர்! ஆனால் அவர்களில் இன்றைய தலைமுறையினருக்கு எத்தனை பேரைத் தெரியும்? தவமணி தேவி. இந்தக் காலத்தின் நமீதாவை விட அவரது புகழ் அந்தக் காலத்தில் அதிகம். ஆனால் இன்று…. ’சுந்தர வாத்தியார்’ என்று ஒரு அற்புதமான திரைக் கலைஞர் அன்று இருந்தார். இன்று அவரை யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா?

அது போல ஒரு படத்திற்கு வசனம் எழுதி விட்டாலோ அல்லது ஏதேனும் கதை, சிறுகதை, புத்தகம் வெளியாகி விட்டாலோ தங்களைப் பெரிய திரைக்கதை விற்பன்னர்களாக, பிரபல எழுத்தாளர்களாகக் கருதிக் கொள்கிறார்கள் சிலர். தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்கிறார்கள். அந்தக் காலத்தில் இளங்கோவன் இருந்தார். அப்புறம் கோவிந்தன், மாரா, சுப்பு, கி.ரா என்று எத்தனையோ பேர்…. ஆருர்தாஸ் எத்தனை எத்தனையோ (ஆயிரக்கணக்கான) படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். ஆனாலும் இன்றும் எவ்வளவு அடக்கமாயிருக்கிறார்… ஆனால் இன்று சிலர் செய்யும் பம்மாத்துக்கள்…

கொத்தமங்கலம் சுப்புவின் மீது கொண்ட ஈர்ப்பால் தான் தான் கவிஞராக ஆனதாகச் சொல்கிறார் கண்ணதாசன். கண்ணதாசனால் கண்டெடுக்கப்பட்டவர் என்று பூவை செங்குட்டுவனைச் சொல்லலாம். பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கும் அவர் இன்றும் அவ்வளவு அடக்கமாயிருக்கிறார்… ஆனால் ’கும்தலக்கடி கும்மா’ என்றும், பூனை, நாய், பல்லி, கள்ளி என்றும் அரிச்சுவடிப் பாடலை எழுதும் சில கவிஞர்கள் காட்டும் பந்தா இருக்கிறதே…

இந்தப் பிரபஞ்சத்தில் மானுடன் ஒரு துரும்புக்குச் சமமானவன். ஆனால் அவனோ தன்னை ’யானை’ அளவுக்கு பலம் மிகுந்தவனாக, பெரும் புகழ் படைத்தவனாக, மாபெரும் வீரனாக, அறிவாளியாகக் கற்பனை செய்து வாழ்கிறான். ஆனால் மிருகங்களுக்கு, பறவைகளுக்கு இருக்கும் விழிப்புணர்வு கூட, ’சுனாமி’ போன்றவை வரும்போது தன்னைக் காத்துக் கொள்ளும் எச்சரிக்கைத் தற்காப்பு உணர்வு கூட அவனுக்கு இல்லை. ஆனால் தன்னை மிகப் பெரிய பகுத்தறிவுவாதியாக அவன் நினைத்துக் கொள்கிறான். அப்படியே நம்புகிறான். கடைசியில் எல்லாம் மாயைதான் என்பதை உணரும் போது ஏதாவது கலர் துண்டையோ, கலர் மோதிரத்தையோ அணிந்து தற்காத்துக் கொள்ள நினைக்கிறான். சாமியார்களின் காலடியைத் தஞ்சமடைகிறான். வெளியே ’இல்லை’ என்றும் உள்ளே ’இருக்கு’ என்றும் சொல்கிறான். வேஷம் போடுகிறான். போலி ஆன்மீகவாதியாக, போலி நாத்திகவாதியாக நடிக்கிறான்.

’இல்லை’ என்று சொல்லவில்லை; ’இருந்தால் நன்றாக இருக்கும்’ என்றுதான் சொன்னேன் என்று பசப்புகிறான். கடவுளை எனக்குப் பிடிக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல; கடவுளுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா என்பதுதான் முக்கியம் என்று வார்த்தை ஜாலம் செய்கிறான். “நானாத்திகன்” என்று சிலேடை மொழிகிறான்.

’வேண்டுதல் வேண்டாமை இலானிடம் போய் பிடித்திருக்கிறது; இல்லை என்றெல்லாம் வாதிட முடியுமா என்ன? கடந்து நிற்பதனால் தானே அவன் கடவுள். அவனை அறிய உள்ளே அல்லவா கடக்க வேண்டும். வெளியே தேடினால் என்ன கிடைக்கும்? அது தெரியாமல் பிதற்றி என்ன பயன்?

என்னத்தைச் சொல்வது? இவையெல்லாம் ஏதோ சுய புலம்பல்கள் அல்ல. இப்படி மனிதன் அகத்தைப் பார்க்காமல் புறத்தை மட்டுமே பார்த்து, அதையே உண்மை என்று நம்பி, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதைக் கண்ட ஆதங்கத்தால் எழுந்தது.

ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.

தெருக்கூத்து பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டானாம் ஒருவன். எனவே தன்னுடைய பாயையும் கையோடு எடுத்துக் கொண்டு கூத்து நடக்கும் இடத்திற்குச் சென்றான். அங்கே கூத்து இன்னமும் ஆரம்பிக்கவில்லை என்பதை அறிந்து, தன் பாயை விரித்து அங்கே படுத்துக் கொண்டான். அப்படியே தூங்கியும் விட்டான். அவன் கண் விழித்துப் பார்க்கும் பொழுது கூத்து முடிந்து விட்டிருந்தது. அதனால் வேறு ஒன்றும் செய்யத் தோன்றாமல், தன் பாயையும் சுருட்டி தன் கையோடு எடுத்துக் கொண்டு போய் விட்டான்.

பல மனிதர்களின் உலகியல் வாழ்வும் இப்படித்தான், அனுபவம் பெறுவதற்காக பிறப்பெடுக்கும் அவர்கள், எந்தவித அனுபவமும் பெறாமல் மீண்டும் மறு பிறப்பெடுக்கச் சென்று விடுகின்றனர். அவர்களை கையோடு கொண்டு வந்து விட்டு, கையோடு கொண்டு செல்லும் பாய் தான் கர்மா!”

கர்மாவைத் தொலைக்க வந்த மனிதன் அந்தக் கர்மாவை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே தான் இருக்கிறான். அதிலும் பல தவறான வழிகளில் சென்று… அவ்வளவு எளிதில் தொலைக்க இயலாத கர்மாவை, தவறு என்று தெரிந்தும், மனசாட்சி எச்சரித்தும், அதனை மீறி மூட்டை மூட்டையாக சேர்த்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?

ஒன்றும் சொல்ல முடியாது. யாராலும் யாரையும் மாற்ற முடியாது. எழுத்தாலோ, கதையாலோ, கட்டுரையாலோ, பேச்சினாலோ மட்டும் ஒருவனை உயர்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது. ரமணர் சொல்வது போல் There is no any short route. அவனுக்கானதை அவனே முயன்றுதான் அடைய வேண்டும். அதற்குத் தான் இந்த மானுடப்பிறவி. அதற்கு முதலில் அவனுள் அவனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். அதுவே முக்கியம்.

எல்லாம் அவன் செயல். அந்த ’அவன்’, இவனே! இதை இவன் உணர்ந்தால் இவனும் அவனாகலாம். அவனே இவனாக இருக்கும் உண்மையையும் உணர்ந்து சீவன் சிவனாகலாம்.

 

பொறுமையாகப் படித்த அனைவருக்கும் மிக்க நன்றி!

Advertisements

19 thoughts on “உண்மையைத் தேடி – 100 – சில சிந்தனைகள்

 1. vankkam ramanan sir,
  sorry.. konja naal feed back panna mudiyala…
  first 100 vathu edition ku valthukkal..
  appadiyae.. antha geocities,yahoo link kodutha nalla erukkum..

  ** Neenga solrathu unmai thaan yaaralaiyum yaaraiyum maatha
  mudiyathu.. ramanar,ramakrishnar,vivekanandar,athi sankarar,etc.. vallviyal arthankalai sonnaarkal.. anaal ellorum avarkalai pinpatra villaiyae..
  nam karuthukkal sariyanathu ena purinthu konda sariyaana naparkallai (mika kuraivaayunum) paarpathi mika kaninam.. intha valai avarkalai orunkinaikirathu.. orae alaivarisai konda naparkalal mattumae thodarnthu vasaikapadukirathu…
  ithu thodarapadavaendum…
  ayunum ungal sontha pala aluvalkalukku mathiyul itharkaka time spend pannuvatharku..
  mikka nandrikal…
  satru virivaka meendum varukiraen…
  nandri..

 2. மனிதனுக்கு தன்அடக்கம் வேண்டும் – இதை ஒப்புக்கொள்கிறேன்,

  நாம் ஏன் பிறந்தோம்?

  ஏன் இறக்கிறோம்?

  இறப்பின் பின் என்ன ஆகிறோம்? – இந்த கடைசி கேள்விக்கு நீங்கள் பதில் கூறவே இல்லை , மனிதன் தன் கர்ம வினைகளை
  ஒழிக்கவே பிறக்கிறான் , இதையும் ஒப்புக்கொள்கிறேன் , நம் கடமை முடிந்ததும் இறக்கிறோம் . இதுவும் ஓகே,

  இறப்பின் பின் என்ன ஆகிறோம் …? இந்த கேள்விக்கு உங்களால் பதில் கூற முடியுமா ? அப்படி முடியும் என்றால்…

  நீங்கள் வாழ் நாளில் இறந்து பிறந்து இருக்கவேண்டும் இது சாத்தியமா…!! சரி அதை ப்பற்றி நாம் இப்போது பேச வேண்டாம், மரணத்தின் ரகசியங்கள் எங்கோ அங்கேயே இறவன் தன்னையும் வைத்திருக்கிறான் …..!!!!
  இறைவனை நீங்கள் கண்டுகொள்ளும் போது மரணத்தின் ரகசியங்கள் தெரிய வரும், .

  இந்த பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒரு வேலை கொடுக்கப் பட்டுள்ளது, அதன் படி தான் நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் கூறிய ” ஏன் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து, களவு, ஊழல் என்று எங்கும் வியாபித்து இருக்கிறது? ” இந்த கேள்விக்கு பதில்…

  கொலை** – மனிதன் மனிதனை நேசிக்க வில்லை, மனிதன் தான் வந்த வேலையை மறந்து விட்டான்,
  அவன் தனது அருமை தெரியாமல் திரிந்து கொண்டிருக்கிறான் ,

  கொள்ளை** – பேராசை , சோம்பேறித்தனம் ,

  ( வறுமை , சமூகத்தால் சில இடங்களில் பாதிக்க படுத்தல், உண்மையில் ஒருவன் வறுமையில் இருந்தால் கொள்ளை அடிக்க மாட்டான் திருடுவான் தான் தேவைக்கு மட்டும்
  -இவைகளை வெளியே சொல்ல முடியாது , சொன்னால்
  வன்முறை செயல்களை நியப்படுத்துவதாக இருக்கும் )

  கற்பழிப்பு** – நீங்கள் மேல சொன்ன அனைத்து தீய செயல்களுக்கும் ஒரு வகையில் ஒரு பொதுவான காரணம் விழிப்புணர்வு இல்லை , (அறியாமை )
  உதரணத்துக்கு இன்றைய பள்ளிகூடங்களில் தேவை அட்ர பாடங்கள் நிறைய உள்ளன

  அவற்றை நீக்கி விட்டு , பாலியில் சம்பந்தமான கல்வியையும் கொடுக்கலாம் , ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் -னால்-தான் பிரச்னை வருகிறது இந்த இடத்தில் பெண்ணுக்கு சிறு வயதிலேயே சில வர்மா கலைகளையும் , கராத்தே , போன்ற தற்காப்பு கலைகளை 5 ஆம் வகுப்புக்குள் , சொல்லிக்கொடுத்தால்,ஆபத்து காலங்களில் பெண்கள் இதை பயன் படுத்தலாம் , இந்த பிரச்சனையை தீர்த்து விடலாம் , ஆனால் இந்த மானம் கெட்ட அரசாங்கத்திற்கு அதுதெரிய வில்லை …!!!

  உண்மை சம்பவம் : 1) ஒரு பி .ஏ – படித்த மாணவனுக்கு ஒரு படிவத்தி பூர்த்தி செய்ய தெரிய வில்லை ,

  2) திருமணம் நிச்சியக்கப் பட்ட நிலையில் ஒரு எம்.ஏ படித்த் வாலிபர் தன் நண்பர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார் , இதை கேள்வி பட்ட பெற்றோர்
  ”ஏன்டா இப்படி காசே கரியக்குற ” -ன்னு கேட்டதுக்கு
  தற்க் கொலைக்கு முற்சித்து விட்டான் , அப்படியானால் இவன் இத்தனை வருடங்களாக என்ன படித்தான் …?

  தன்னம்பிக்கை கொடுக்காத கல்வி ஒரு கல்விய…?

  விபத்து*** – இது மனிதனின் அஜக்கிரதியல் வருவது , ஓட்டுனர் உரிமம் கொடுக்கும் போதும், பயிற்சி அளிக்கும் போதும் தெளிவாக செயல் பட்டால் போதும்

  களவு*** – இதுவும் அறியாமையே, எனக்கு பிச்சைக்காரனை பிடிக்கும் காரணம் அவனால் உழைக்க முடியாது என்பதையும், தான் சோம்பேறி என்பதையும் வெளியே சொல்லித்தான் காசு கேட்கிறான், ஆனால் திருடன் heart attack -க்கு அஸ்திவாரம் போடுகிறான் , தன் பொருட்களை பரிகொடுத்தவனுக்தெரியும் அதன் வலியும் வேதனையும் ,

  ஊழல்*** – இது முழுக்க முழுக்க பேராசை,
  ”காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே….” இந்த வார்த்தையை அரசியல் வாதி & அரசு ஊழியர்களின் வலது கையில் பச்சை குத்த வேண்டும் .

  ஒரு அதிகாரி தவறு செய்கிறார் , அதை தட்டி கேட்க முடியவில்லை
  காரணம் இவனுக்கு தைரியம் இல்லை .

  அடிப்படை சட்டம் ஒவ்வொரு குடி மகனுக்கும் தெரிந்திருக்க வேண்டும் ஆனால் தெரியாது .

  தெரிந்து கொள்ளவும் விடமாட்டார்கள், உதரணத்துக்கு நமது இந்திய சட்டத்தில் ஓட்டைகள் இருப்பது
  அனைவரும் தெரிந்த ஒன்றே, எத்தனையோ சட்ட மேதைகள் இருக்கும் இந்த நாட்டில் ஏன் இந்த ஓட்டை கலை அடைக்க வில்லை, அடைக்கவும் மாட்டார்கள், காரணம் சட்டம் ஒரு அரசியல் வாதிகளின் சட்டையகவே உள்ளது
  கொஞ்சமும் மானம் இல்லாமல் பயன்படுத்தி வருகிறார்கள்.

  இன்னொரு உதாரணம் : நீங்கள் இன்று ஒரு அறிவியலை கண்டுபிடிக்கிறீர்கள். அதாவது வெறும் கடல் நீரில்
  இயங்கக் கூடிய மோட்டார் சைக்கிள், ஆனால் உங்களை வெளியிடவும் விடமாட்டார்கள், வாழ்வும் விடமாட்டார்கள், பண பலம் படைத்த ஜாம்பவான்கள், காரணம் அவர்கள் தொழில் பாதிக்குமே….!

  அது மட்டும் இல்ல பணம் படைத்தவன் சொல்லுவது தான் உலகம் முழுவதும் சட்டமாகிறது,

  உதரணத்துக்கு உலக நாணய மாற்று விகிதத்தை உற்று நோக்குங்கள்…..!!

  பணம் படைத்த நாடு இன்னொருவனை அழிக்க ஆயுதங்களை இலவசமாகவே வழங்குகிறது . என்ன கொடுமை சார்..

  ஆடம்பர வாழ்க்கையை துறக்க வேண்டாம், ஆன்மீகத்தில் அடியடுத்து வைத்து பாருங்கள், வாழ்க்கயின்
  அடிப்படையும், அத்தியாவசியமும் புரியும்.
  **********************************************************
  சில பாடல் ஆசிரியர்களை நினைவுகூர்ந்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி, உங்கள் மனதின் ஆழத்தை காட்டுகிறது …!!
  நீங்கள் எழுதுய அனைத்தும் அருமையாகவே உள்ளது .,

  ஒரே ஒரு கேள்வி மட்டும் மற்றவர்களை பார்த்து கேட்கிறேன் : பகுத்தறிவு என்றால் என்ன ….?
  ஏன் அது மற்ற ஜீவராசிகளுக்கு இல்லையா ….?

  மனிதனுக்கு 6 அறிவு என்று சொல்லுகிறார்கள் அப்படியானால் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் தேவை …!!!

  இவற்றிக்கு யாராயினும் பதில் கொடுத்தால் அடுத்து எனது கேள்வி தயாராக உள்ளது …..!!!

  இது Ramanans -க்கு அல்ல, அவர் மேலே கேட்ட கேள்விகள் போல இது என்னுடைய கேள்வி அவ்வளவுதான் ….

  தவறாக எழுதி இருப்பின் மன்னித்து நீக்கிவிடவும்
  திட்ட நினைத்தால் திட்டவும் giriedit@gmail.com

  **நன்றி **

  1. விரிவான பதிலுக்கு மிக்க நன்றி தமிழ்ச் சிங்கம். நீங்கள் கல்வி/சமூகத் துறையைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன். தங்கள் வருகைக்கும் ஆழமான கருத்திற்கும் நன் வந்தனங்கள். கேள்விகளுக்கு யாராவது நண்பர்கள் பதிலளிக்கிறார்களா என்று பார்ப்போம். (பெரம்பலூரில் நல்ல மழையா?)

   1. மன்னிக்கவும் தங்கள் கணிப்பு சற்று தவறு நான் ”கல்வி/சமூகத் துறையைச்” சார்ந்தவன் அல்ல

    சமூகத்தால் சில இடங்களில் பாதிக்கப் பட்டவன், என்னுள் அந்த தீ இன்னும் அனைய வில்லை, இதற்க்கு யார் யார் எல்லாம் இரையாக போகிறார்கள் என்று தெரியாது, இதனை வெளிய காட்டிக் கொள்வதும் இல்லை, கோழையாக நூறு ஆண்டுகள் வாழ்வதை விட வீரத் தமிழனாக, பத்து ஆண்டுகள் வாழ்ந்தால் போதும், என அவதாரம் எடுத்து விட்டேன்,

    நான் ஒரு இந்தியன் என்பதை விட தமிழன் என்று சொல்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ..,

    எனக்கு பள்ளிக்கூடம் கற்று கொடுத்த பாடம் மிகவும் குறைவு, ஆனால் இந்த சமூதாயம் சொல்லிக்கொடுத்த படம் அதிகம், இதற்கு என் நன்றியை செலுத்த வேண்டாமா……?

    ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்லிவிட்டு போகிறேன் ”தீவிர வாதிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்”
    ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை நிச்சயம் உண்டு, நீங்கள் எதை விதைக்கிரீகளோ அதை தான் அறுவடை செய்ய முடியும், பசுமையான என் மனதில், நன்கு பக்குவபடுத்தி வைத்துதிருந்த என் என் இதயத்தில் ஆலகால விஷத்தை ஊற்றி விட்டார்கள், இதற்க்கு மேல் சொல்வதற்கு இல்லை …..!!! ???

    நான் தீவிர வாதி என்று சொல்லமுடியாது, ஒரு புத்தகத்தில் படித்தேன் ”வாங்கிய கடனை சரியாக செலுத்த விட்டால்.. கடன் கொடுத்தவன் மறு பிறப்பில் மகனாய் பிறந்து மருத்துவ செலவு என்கிற வகையில் அதை தீர்த்து கொள்வானாம்,

    எனக்கு மறு பிறப்பில் நம்பிக்கை உண்டே தவிரே…

    ”எனக்கு மறுபிறப்பு இருக்கும் என்று நம்பிக்கை இல்லை”
    ( மீண்டும் நான் பிறக்கமாட்டேன்)

    அதனால் இப்பிறவியில் வாங்கிய கடனையை எல்லாம் இப்போதே திருப்பி கொடுக்க ஆவல்.

    *** எனது மறு மொழியை வெளியிட்டதற்கு மிக்க நன்றி***

    (நான் பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்தவன் அல்ல…!!
    திருவள்ளூர் மாவட்டம் )

 3. 100 பதிவுகள் பதிவேற்றியதற்கு வாழ்த்துக்கள்.அடிக்கடி வாங்க. உங்கள் கருத்துக்களை இடைவெளி இல்லாமல் எழுதுங்கள்.

 4. 100 பதிவுகள் பதிவேற்றியதற்கு வாழ்த்துக்கள்.
  இந்த பதிவு தங்களது பதிவுகளில் ஒரு வைரம் போன்றது.
  இதைப் படித்தவுடன், இந்த உலக மக்களை நினைத்து எனது கண்களில் இருந்து கண்ணீர்தான் வந்தது. இவர்களுள் பலர் செய்யும் அதர்மம்,
  தர்மம் செய்பவர்களையும் அல்லவா பாதிக்கின்றது.
  இந்த பதிவானது எனது மனநிலைக்கு ஒத்தே உள்ளது.

  மேலும், தங்களின் பதிவுக்கு எனது கருத்துகள் கீழே…

  ///..நாம் ஏன் பிறந்தோம்? ஏன் இறக்கிறோம்? இறப்பின் பின் என்ன ஆகிறோம்?………..
  பிறக்கும் போது வெறும் கையோடு வந்தவன், இறக்கும் போது வெறும் கையோடே போகப் போகிறான் எனும் போது எதற்கு இத்தனை செல்வம், பணம், பதவி, பேராசை எல்லாம்……………. மன்னாதி மன்னர்கள் ஆண்டார்களே, கோடி கோடியாக கஜானாவில் சேர்த்தார்களே…. அவையெல்லாம் எங்கே….
  மன்னர்கள் கட்டிய ஆலயங்கள் இருக்கின்றன, சாசனங்கள் இருக்கின்றன.. கல்வெட்டுக்கள் இருக்கின்றன…. ஆனால் அந்த மாமன்னர்கள் ஆடம்பரமாக வாழ்ந்த மாளிகைகள், அரண்மனைகள், கூட கோபுரங்கள் எங்கே… அவர்கள் சேர்த்து வைத்த சொத்து எங்கே, செல்வம் எங்கே…. பொன் எங்கே…. பொருள் எங்கே…. பணம் எங்கே….. எங்கே…?///

  பிறக்கும்போது வெறும் கையோடு வந்தவன், இறக்கும் போது கண்ணுக்கு தெரியாத இரண்டில் ஒன்றை எடுத்துச் செல்வான். ஒன்று பாவகர்மா. பிறிதொன்று புண்ணிய கர்மா. இந்த கர்மாக்கள் ஆத்மாவை சார்ந்தது. உடலைச் சார்ந்தது அல்ல. ஆனால் உடலால் செய்யப்படுவது. இது பிறருக்கு தெரிவதில்லை. சொன்னாலும் புரிந்து கொள்வாரில்லை. (விதிவிலக்காக சிலரும் இந்த பூமியில் உள்ளனர்).

  ///……கர்மாவைத் தொலைக்க வந்த மனிதன் அந்தக் கர்மாவை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே தான் இருக்கிறான். அதிலும் பல தவறான வழிகளில் சென்று… அவ்வளவு எளிதில் தொலைக்க இயலாத கர்மாவை, தவறு என்று தெரிந்தும், மனசாட்சி எச்சரித்தும், அதனை மீறி மூட்டை மூட்டையாக சேர்த்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது….யாராலும் யாரையும் மாற்ற முடியாது. எழுத்தாலோ, கதையாலோ, கட்டுரையாலோ, பேச்சினாலோ மட்டும் ஒருவனை உயர்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது. ரமணர் சொல்வது போல் There is no any short route. அவனுக்கானதை அவனே முயன்றுதான் அடைய வேண்டும். அதற்குத் தான் இந்த மானுடப்பிறவி. அதற்கு முதலில் அவனுள் அவனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். அதுவே முக்கியம்….எல்லாம் அவன் செயல். அந்த ’அவன்’, இவனே! இதை இவன் உணர்ந்தால் இவனும் அவனாகலாம். அவனே இவனாக இருக்கும் உண்மையையும் உணர்ந்து சீவன் சிவனாகலாம்……//

  இது சாட்டையடி வார்த்தைகள். இதனை அனைவரும் உணர வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.