ஜோதிடம் உண்மையா, பொய்யா? பகுதி – 4

ஜோதிடம் உண்மைதானா?
வானவியல் சாஸ்திரப்படியும், ஜோதிடவியல்படியும், கணிதம் மற்றும் புள்ளியியல் முறைப்படியும் ஜோதிட சாஸ்திரத்தை ஓர் உண்மையான கலையாகக்  கருதலாம். ஆனால்  அறிவியல் முறைப்படி அதனை உண்மை என்று நிரூபிக்க இயலாத நிலையே தற்போது உள்ளது.

ஜோதிடர்களில் போலி  ஜோதிடர்கள் பலர் உள்ளனர். உண்மையானவர்களை விட  இவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இவர்களால் தான் ஜோதிடம் மீதான நம்பகத் தன்மை குறைகின்றது. ஜோதிடர்களுக்கும் கெட்ட பெயர் உண்டாகின்றது. இந்த போலி ஜோதிடர்களால் கைது, கோர்ட், வழக்கு என்று மக்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படுகின்றது. ஆனாலும் அவர்களைக் கண்டறிவதோ,  ஒதுக்கிப் புறந்தள்ளுவதோ இன்றுவரையில் இயலாத ஒன்றாகவே உள்ளது. ஏனெனில் யார் உண்மையானவர், யார் போலியானவர் என்பதைக் கண்டறிவது மிகக் கடினமாக உள்ளது. அந்த அளவிற்கு போலிகள் ஜோதிடக் கலையில் ஊடுருவி உள்ளனர்.

ஜோதிடம் தேவைதானா?
அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கைக்கும் இக்கால மக்கள் வாழ்க்கைக்கும் நிறையவே வேறுபாடு உள்ளது. இன்று உலகம் உள்ளங்கைக்குள் அல்ல, விரல் நுனிக்குள் சுருங்கி இருக்கிறது.தன்னம்பிக்கையுடன் பலரும் பலவித சாதனைகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜோதிடம் போன்றவை தேவைதானா என்ற கேள்விகளும் எழத்தான் செய்கிறது. மேலும் ஜோதிட சாஸ்திரங்கள் என்பவை மிக நுட்பமானவை. அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டு பலன்கூறும் ஆற்றல் மிக்கவர்கள் தற்போது உள்ளனரா என்பது கேள்விக் குறி.

ஜோதிடர்களில் பலர் உளவியலறிவில் (Psychology) தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகின்றனர். வந்திருப்பவர்களின் தேவை என்னவென்பதறிந்து பலன் கூறுவதில் சமர்த்தர்களாக விளங்குகின்றனர். ஆனால் மக்களின் எதிர்கால நிகழ்வுகளைச் சரியாகக் கணித்துப் பலன் கூற பெரும்பாலோர்களால் முடிவதில்லை. அடிப்படை ஜோதிட நூல்களைப் படித்தும், தத்தம் அனுபவ அறிவாலும்தான் தற்போது பல ஜோதிடர்கள் பலன் கூறி வருகின்றனர். சூர்ய சித்தாந்தம், பூர்வ பாராசர்யம், சாராவளி, பிருஹத் சம்ஹிதை, உத்ரகாலாம்ருதம், சோதிட ரத்னாகரம், சோதிட பாஸ்கரம் போன்ற வட மொழி நூல்களையோ, சந்திர சேகரம், சோதிட அலங்காரம், சோதிட மாலை போன்ற பல தமிழ் நூல்களையோ பயின்றவர்கள் வெகு அரிது. மேலும் காலமாற்றத்திற்கேற்ப ஜோதிட சாஸ்திரங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதும் சிலரது கருத்தாக உள்ளது. சிலருக்கு அது ஏற்பில்லை.

தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு புறக்காரணிகள் ஏதும், எப்போதும் தேவையில்லை. ஆனால் தன்னம்பிக்கை குறையும் போது, அல்லது தமது நம்பிக்கையில் ஏமாற்றம் வரும் போது, அல்லது சரியான வழிகாட்டுதல்கள் பிறரிடமிருந்து நமக்குத் தேவை என்னும் நிலை இருக்கும் போது ஜோதிடம் அங்கே பயன்பாட்டுக்கு வருகிறது. ஆன்மீகமும் அங்கே பயன்பாட்டுக்கு உதவுகிறது என்றாலும் எல்லோராலும் நீண்ட கால அளவில் மட்டுமே பலன் தரக்கூடிய அந்த உயர் அனுபூதி நிலையை அனுசரிக்க முடிவதில்லை. அவர்களுக்கு நம்பிக்கையூட்ட, எல்லாம் சிறிது காலத்தில் சரியாகிவிடும் என்ற மனோவலிமையை ஏற்படுத்த, இதைச் செய்தால் இன்ன பலன் ஏற்படும் என்பதன் மூலம் மனோ தைரியத்தை அதிகரிக்க ’ஜோதிடம்’ பயன்படுகிறது. அந்த நிலையில் உள்ளவர்களுக்கு ஜோதிடம் என்பது தேவைதான். ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால் பெரும்பாலானோர்கள் அந்நிலையில் தான் இருக்கின்றனர் என்பதும், அவர்களில் பலர் போலிகளை நம்பி ஏமாறுகின்றனர் என்பதும் நாம் மனம் வருந்தத் தக்கது.

மக்கள் அனைவரும் அறவழியில் வாழவேண்டும். பாவங்களையும், குற்றங்களையும் செய்தால் பல சிக்கல்கள் ஏற்பட்டு வாழ்வில் துன்பப்பட நேரிடும் என்பதை உணர்ந்து நல்ல முறையில் தங்கள் வாழ்நாளைக் கழிக்க வேண்டும், என்ற நோக்கத்தில் தான் ஜோதிட சாஸ்திரத்தைச் சான்றோர்கள் உருவாக்கியுள்ளனர். ஒரு தனிமனிதன் தன் எதிர்காலம் பற்றி அறிந்து அதன் வழி நடக்க, எதிர்ப்புகள் போன்றவற்றிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, சிறந்த ஒன்றை இலக்காகக் கொண்டு தனது வாழ்க்கையை நடத்த, ஜோதிடமானது ஓர் தக்க வழிகாட்டியாகவும், நண்பன் போன்றும் செயல்படுவதால் அது மனிதர்களில் ஒரு சிலருக்கு  தேவைப்படுகின்ற ஒரு கலை என்று கூறலாம். ஆனால் இதை மையமாக வைத்து ஆதாயம் தேடும் கும்பல்களால் மக்களுக்கு வாழ்வில் பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படுகிறது. இக்கலையின் பெயரால் மக்களை ஏமாற்றுபவர்கள், அவர்களின் வாழ்வை திசை திருப்புபவர்கள், ஏமாற்றிப் பணம் பறிப்பவர்கள் போன்றோர் மிக மிக கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

முடிவுரை
மானிட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிகள் பற்றியும், அறம் என்பது மானிட வாழ்க்கைக்கு அடிப்படையாவதையும் ஜோதிடக்கலை விளக்குவதுடன், மனிதவாழ்வு செம்மையுறவும், தவறு செய்பவர்கள் அதற்கான தண்டனையையும், காரணத்தையும் அறிந்து திருந்தி வாழவும் அது மறைமுகமாக எச்சரிக்கின்றது.  ஆனால் அதை எவ்வளவு தூரம் புரிந்து கொண்டு ஜோதிடர்களும், ஜோதிடம் பார்ப்பவர்களும் பின்பற்றுகின்றனர் என்பது கேள்விக்குரியது.

(முற்றும்)

[விரைவில்…. நாடி ஜோதிடம் உண்மைதானா? – குறுந்தொடர்]

 

Advertisements

2 thoughts on “ஜோதிடம் உண்மையா, பொய்யா? பகுதி – 4

 1. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், ஜோதிடம் என்பது உண்மைதான் என்றா? அப்படியானால் கீழ்கண்ட எனது கேள்விகளுக்கு பதில் கூற இயலுமா?

  1. ஜோதிடம் உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?

  2. ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன ஆகிவிடும்?

  3. ஜோதிடம் பார்த்தும் பலருக்கு அதன்படி பலன்கள் நடக்கவில்லையே அது ஏன்?

  4. ஒரே ஜாதகத்திற்கு ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமாகப் பலன் கூறுகிறார்களே அது எப்படி?

  5. ராகு, கேது பாம்புகள், கிரஹணத்தின் போது சந்திரனை, சூரியனை விழுங்கும் என்பதெல்லாம் பொய் என்று விஞ்ஞானம் நிருப்பித்திருக்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

  6. சூரியக் குடும்பத்தில் புதிதாக ஏதேனும் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அப்போது ஜோதிடர்கள் என்ன செய்வீர்கள்?

  7. அதது இயற்கையாக நடந்து கொண்டிருக்கும் போது, ஜாதகம் போன்றவற்றை நம்புவது பகுத்தறிவிற்கு முரணாக உள்ளதை அறிவீர்களா?

  8. ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்தும் விவாகரத்துகள் நடக்கின்றன, சிலர் இறந்து போகிறார்கள், மனைவியைக் கொலை செய்கிறார்கள். இதெல்லாம் எப்படி? எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கூறுவதுதான் ஜோதிடம் என்றால் எப்படி உங்களால் இவற்றைக் கணிக்க முடியவில்லை.

  9. பரிகாரம் என்ற பெயரிலும் யாகம் என்ற பெயரிலும் ஜோதிடர்களும் புரோகிதர்களும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்களே, இது நியாயமா?

  10. விதிப்படி தான் அனைத்தும் நடக்கும் என்பது இந்து தர்ம சாஸ்திரம். அப்புறம் ஏன் ஜோதிடம்?

  11. விஷ்ணு ஆலயங்களில் ஏன் நவக்கிரகங்கள் காணப்படுவதில்லை?

  12.பட்சி சாஸ்திரம், சகுனம், ராகு காலம், எம கண்டம் இவையெல்லாம் பைத்தியக்காரத்தனமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?

  13. செவ்வாய் தோஷம், மூலம் என்றெல்ல்லாம் பெண்களை ஜோதிடம் கொடுமைப்படுத்துகிறதே, இது நியாயம் தானா?

  14. கிழக்கே சூலம், மேற்கே சூலம் என்றால் என்ன?

  15. பிறக்கும் நேரத்தைத் தவறாகச் சொல்லி ஜாதகம் கணித்தால் என்ன ஆகும்? பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் கூறுவீர்கள்?

  – இன்னும் நிறையக் கேள்விகள் உள்ளன. முதலில் இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் முழுமையாக/உண்மையாக பதிலளியுங்கள் பார்ப்போம்.

  – ரஞ்சன்,
  பிரிட்டானியா

  1. அன்பு நண்பரே

   என்னை ஒரு ஜோதிடராக நினைத்து இத்தனை கேள்விகள் அடுக்கியுள்ளீர்கள் போலத் தெரிகிறது. முதற்கண் தெரிந்து கொள்ளுங்கள் நான் ஜோதிடன் அல்ல. உண்மைகளைத் தேடும் ஒரு ஆராய்ச்சியாளன், அவ்வளவே! அந்தத் தேடுதலில் ஜோதிடமும் ஒரு அங்கம். அவ்வளவுதான். நம்மைச் சுற்றி இருக்கும் எளிதாகப் புரியாத அல்லது புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களை அவதானித்து நான் கட்டுரைகளாகத் தருகிறேன். அதை வைத்துக் கொண்டு என்னை ஜோதிடர் என்றோ அல்லது ஆவிகளுடன் பேசுபவன் என்றோ நினைத்தால் அது அறிவீனம். நான் ஒரு ஆய்வாளன் அவ்வளவே. ஆனாலும் நீங்கள் கேட்ட கேள்விகள் மிக சுவாரஸ்யமானவை. அவற்றிற்கு நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பதலிளிப்பேன். அதுவரை தயவு செய்து காத்திருங்கள்.

   அன்புடன்
   ரமணன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s