ஜோதிடம் உண்மையா, பொய்யா? – பகுதி 2

ஜோதிடக் கட்டம்

 

பண்டைக் காலங்களில் ஜோதிடம்

பண்டைக் காலங்களில் மன்னர்கள் ஜோதிடத்தை தங்கள் பயன்பாட்டிற்கு உரியதாக வைத்திருந்தனர் என்பதை சேரன் செங்குட்டுவன், இளங்கோவடிகள் வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ள இயலுகிறது. புத்தர் பிறந்த பின்பு ஜோதிடம் மூலம் அவர் எதிர்காலம் கணிக்கப்பட்டுள்ளது. இயேசு பெருமான் பிறப்பதைக் கூட வானில் தோன்றிய நட்சத்திரங்களை வைத்துக் கணக்கிட்டு முன்னரே அருள் வாக்கு கூறுபவர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய அளவில் ஜோதிடத்தில் பன்னெடுங்காலம் முதலே நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. தமிழக மன்னர்கள் பலரும் ஜோதிடம், சகுனம் போன்றவற்றின் மீது நம்பிக்கை உள்ளவராகவே இருந்து வந்திருக்கின்றனர்.

மன்னர்கள், போர் முதலியனவற்றிற்குச் செல்லும் பொழுது, தங்களின் வெற்றி தோல்வி குறித்து அறிய நிமித்திகம் பார்த்துள்ளதாக பண்டை  இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது. அப்பணியைச் செய்தவர்கள் நிமித்திகர்கள் என்று அழைக்கப்பட்டனர்.  ‘நிமித்திகன்’ என்பதற்கு வருங்காரியம் சொல்வோன், சாக்கை, வள்ளுவன் எனச் சூடாமணி நிகண்டு பொருள் கூறுகின்றது. சகுனத்தை நம்புதலையும், நல் வாக்கு கேட்டலையும் ‘விரிச்சி கேட்டல்’ எனப் புறப்பொருள் வெண்பாமாலை  சுட்டுகின்றது.

மன்னரின் உடல்நலம், போர் முதலியவற்றுக்கான ஆலோசனைகள் வழங்கல், முடிசூட்டுதல் முதலியவற்றிற்கு நல்ல நாள் குறித்தல் போன்ற பணிகளில் இக்கலைஞர்கள்  ஈடுபட்டனர். இவர்கள் ‘நிமித்திகர்கள்’ எனவும் ‘வள்ளுவர்கள்’ எனவும் அழைக்கப்பட்டனர். ’வாக்குக்கு வள்ளுவன்’ என்பது இவர்கள் பெருமையை விளக்கும். இலக்கியங்களிலும் இவர்கள் ‘கணியன்’ என்று அழைக்கப்பட்டிருக்கின்றனர். கணியன் என்றால்- கணிதம் அறிந்தவன், கணித்துக் கூறுபவன் என்பது பொருள். சங்ககாலப் புகழ் பெற்ற கவிஞர் கணியன் பூங்குன்றனார் இவ்வகையினரே! வழிவழியாக மன்னர்களுக்கு மட்டுமே என்றிருந்த இக்கலைகள் பின்னர் மக்களுக்கும் உரியதாயிற்று.

ஜோதிடத்தின் வளர்ச்சியும் இன்றைய நிலையும்

தற்போது கிராமப்புறம் என்றில்லாமல், நகர்ப்புறங்களிலும் ‘ஜோதிடம்’ என்பது மக்கள் வாழ்வின் ஒரு கூறாக, சமுதாயத்தோடு தொடர்புடையதாக விளங்கி வருகின்றது. ஜோதிடத்திற்கு என்றே தமிழில் தற்பொழுது கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட வார, மாத இதழ்கள், பத்திரிகைகள் வருகின்றன என்பதே அதன் செல்வாக்கை விளக்கும்.

ஆனால் ஒருகாலத்தில் திருமணம், நோய், தொழில் முன்னேற்றம் போன்ற குறிப்பிட்ட நிகழ்வுகளுக்காகவே ஜோதிடம் பார்த்து வந்தார்கள். ஆனால் தற்போது வீட்டை விட்டு வெளியே செல்வதற்குக் கூட ஜோதிடரின் ஆலோசனை பெற்றே வெளியே செல்லும் அளவிற்கு அந்தக் கலை வளர்ந்திருக்கிறது. ’எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று மக்கள் ஜோதிடர்களின் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றனர்.

உண்மையாகவே ஜோதிடத்தில் ஈடுபாடு கொண்டும், மக்களுக்கு நல்லது சொல்ல வேண்டும் என்ற அக்கறையிலும், பரம்பரை பரம்பரையாக ஜோதிடம் பார்த்தும் வரும் ஒருசிலரைத் தவிர, தற்போது பலரும் உழைக்காமலேயே அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், குறுகிய காலத்தில் பணம், புகழ், சமூக அந்தஸ்து பெற வேண்டும் என்ற நோக்கிலும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தெருவிற்குத் தெரு காணப்படும் தேநீர்க்கடைகளைப் போல இப்பொழுது ஜோதிட நிலையங்கள் புற்றீசல் போல  நகரெங்கும் காணப்படுகின்றன. அனுபவமில்லாத பலரும், பணம் சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, ஜோதிட நிலையத்தை நடத்திவருகின்றனர். பலர் பத்திரிகைகள் வாயிலாகவும், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் மூலமும் இத்தொழிலை நடத்தி வருகின்றனர்.

பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஆசாமிகள் உட்பட போலி ஜோதிடர்கள் பலர் தற்போது பொழுதுபோக்காக ஜோதிடம் கற்றுக் கொண்டு, கோயில் அர்ச்சகர்கள், ஹோமங்கள் முதலியன செய்யும் முகவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தங்களை நாடி வரும் மக்களை பரிகாரங்கள், ஹோமங்கள், யந்திரம், மந்திரம் என்று பலவாறாகச் சொல்லி ஏமாற்றி வருகின்றனர். எங்கும், எக்காலத்திலும், எல்லாத்துறையிலும் போலிகள் நிறைந்து உள்ளனர். ஜோதிடக்கலையும் இதற்கு விதி விலக்கல்ல.  இத்துறையிலும் மிகுதியான அளவில் போலிகள் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் போலிகள் என்பது அவர்களிடம்  ஜோதிடம் பார்த்து ஏமாந்த பின்னரே தெரியவருகின்றது. இத்தகைய போலி  ஜோதிடர்களின் செயல்களால், செய்யும் தவறுகளால் ஜோதிடக் கலைக்கும் கெட்டபெயர். பரம்பரை பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் உண்மையான  ஜோதிடர்களுக்கும் அவமானம்.

மக்களோ தம்மையும் நம்பாமல், கடவுளையும் நம்பாமல் ஆட்டு மந்தைகளாக இத்தகைய போலி ஜோதிடர்களின் பின்னால் சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலை மாறுவதற்கு ஆவன செய்ய வேண்டியது உண்மையான பரம்பரை ஜோதிடர்களின் மிக முக்கியக் கடமையாகும்.

(தொடரும்)

 

Advertisements

One thought on “ஜோதிடம் உண்மையா, பொய்யா? – பகுதி 2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s