இசைச் சங்கமம் – சென்னையில் திருவையாறு

திருவையாற்றில் நடைபெறும் இசைவிழாவைப் போல சென்னையிலும் வருடா வருடம் தொடர்ந்து நடைபெறும் இசைவிழா ‘சென்னையில் திருவையாறு’. கலாலயா யூ.எஸ்.ஏ. நாடக அகாடமி, ராஜ் டிவி, லஷ்மண் ஸ்ருதி மற்றும் பல அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த விழா வழக்கம் போல இந்த முறையும் மிகக் கோலாகலமாக ஆரம்பித்தது. ‘எல்லோராலும் திருவையாற்றிற்குச் சென்று இசை விழாவில் கலந்து கொள்ள முடியாது ஆகவே, இங்கிருப்பவர்களும் பயன்பெறும் வகையில் சென்னையில் இவ்விழாவை வருடா வருடம் நடத்தி வருகிறோம் என்றார் விழாவின் அமைப்பாளர் லஷ்மண்(ஸ்ருதி).

இவ்வருட இசை விழா 21-12-2007 அன்று சென்னை காமராஜர் அரங்கில் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக பி.எஸ் நாராயணசாமி தலைமையில் பாடகர்கள் பஞ்சரத்ன கிருதியைப் பாடினர். பின்னர் தொடர்ந்து ராஜேஷ் வைத்யாவின் வீணை, ஹரிசரனின் வாய்ப்பாட்டு, ஸ்ரீகலா பரத்தின் பரதநாட்டியம், நித்யஸ்ரீயின் கச்சேரி, பிரசன்னாவின் கிடார் என முதல் நாளே நிகழ்ச்சி களை கட்டியது. அரங்குகள் நிரம்பி நல்ல கூட்டமும் காணப்பட்டது என்றாலும் வழக்கம் போல இளைய தலைமுறையினர்கள் அதிகம் தென்படவில்லை என்பது ஒரு குறைதான். தொடர்ந்து கன்யாகுமரி வயலின், சைந்தவியின் வாய்ப்பாட்டு, லலிதா நந்தினியின் வாய்ப்பாட்டு, விஜய் சிவாவின் கச்சேரி என நிகழ்ச்சி மறுநாளும் (22-12-2007) களை கட்டியது. அன்றைய நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ஆராவமுதாச்சாரியாரின் ‘ஹரிகதா’ அமைந்திருந்தது. தனக்கே உரிய ஏற்ற இறக்கமான குரலாலும், அழகான விளக்கங்களாலும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டார் ஆச்சாரியார்.

Dr. kadam kaarthik 

23-01-2007 அன்று HEART BEAT ENSEMBLE கடம் கார்த்திக்கின் FUSION-னுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சைலண்ட் வயலின் எம்பார் எஸ்.கண்ணன் வெகு அற்புதமாக வாசித்தார். பக்கவாத்தியமாக யு.பி.ராஜூ மாண்டலினில் அநாயசமாக புகுந்து விளையாடினார். குறிப்பாக ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மீதான, ஆதிதாளம்- புஜங்கணி ராகத்தில் அமைந்த ஸ்ரீ குருராயா பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. தொடர்ந்து வந்த கமலாலயம் தந்த மும்மணிகள் என்னும் ஸ்ரீ ராகத்தில் அமைந்த மும்மூர்த்திகள் பேரிலான பாடல் எந்தரோ மகானுபாவுலுவை ஞாபகப்படுத்தியது. கடம் வாசிப்பது மட்டுமில்லாமல் மிக அற்புதமாக, அநாயசமாகப் பாடி ரசிகர்களின் ஏகோபித்த கரகோஷத்தைப் பெற்றார் கடம் கார்த்திக். தொடர்ந்து வந்த ‘ஓம் சரவணபவா’ என்னும் திருப்புகழ் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக விளங்கியது. கடம், வயலின், மாண்டலின், மிருதங்கம், கஞ்சிரா என மாற்றி மாற்றி தனிஆவர்த்தனம் செய்ததில் ரசிகர்கள் கிறங்கித்தான் போயினர். குறிப்பாக எம்பார் கண்ணன் மிக அற்புதமாக ஆவர்த்தனம் செய்தார். வழக்கம் போல கடத்தைத் தூக்கிப் போட்டு விளையாடவும் செய்தார் கார்த்திக். பக்கவாத்தியமாக பூங்குளம் சுப்ரமண்யத்தின் மிருதங்கமும், சுந்தர் குமாரின் கஞ்சிராவும், ஏ.எஸ்.கிருஷ்ணனின் மோர்சிங்கும் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து ராகங்களையும் மாறி மாறி வாசித்தது முத்தாய்ப்பாக இருந்தது. மொத்தத்தில் மனநிறைவான கச்சேரி.

தொடர்ந்து கே.காயத்ரி, மஹதி, உன்னிகிருஷ்ணன் என கச்சேரி தொடர்ந்தது. இறுதியில் ஷஷாங்கின் புல்லாங்குழலுடன் அன்றைய நாள் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. சில நிகழ்ச்சிகளில் அமர்வதற்கு இடமில்லாமல் பார்வையாளர்கள் நின்று கொண்டே பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

24-12-2007 அன்றைக்கான நிகழ்ச்சிகள் கர்நாடிகா பிரதர்ஸின் கச்சேரியுடன் துவங்கியது. தொடர்ந்து சத்யநாராயணாவின் கீ போர்டு மனதிற்கு நிறைவைத் தந்தது அவர் அநாயசமாக அதை வாசித்த விதம் அருமை. அடுத்து வந்த முரளிதரன் குழுவினரின் பரதநாட்டியம், ரஞ்சனி காயத்ரியின் வாய்ப்பாட்டு, குமரேஷ்-கணேஷின் வயலின் என நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிமையாக இருந்தன.

நிறைவு நாளான 25-12-2007 அன்று கத்ரிகோபால்நாத்தின் இனிமையான சாக்ஸபோனோடு நிகழ்ச்சி துவங்கியது. கன்யாகுமரி, ஹரித்வாரமங்கலம் பழனிவேல் என தனது குழுவினருடன் வழக்கம் போல அழகாக வாசித்து ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்றார் கத்ரி. தொடர்ந்து சியாட்டில் ராமனின் வாய்ப்பாட்டுக் கச்சேரி. ராமனுக்கு நல்ல குரல்வளம், சுத்தமான உச்சரிப்பு என நிறைய ப்ளஸ் பாயிண்டுகள். அத்துடன் அலட்டிக் கொள்ளாமல், அமைதியாக, அடக்கமாகப் பாடியதையும் சேர்த்துக் கொள்ளலாம். மன நிறைவைத் தந்த கச்சேரி.

 Sikkil Gurusaran

தொடர்ந்து பாட வந்தவர் சிக்கில் குருசரண். புகழ்பெற்ற சிக்கில் சகோதரிகள் லீலா-குஞ்சுமணியினரில் லீலாவின் பேரன். இன்றைய இளைய தலைமுறைப் பாடகர்களின் இவருக்குத்தான் அதிகக் கூட்டம் கூடுகிறது என்பது உண்மை. அவர் ‘நீயே கதி’ என்று பாட ஆரம்பித்த சற்று நேரத்தில் கூட்டம் அதிகமாகி நாற்காலிகள் நிரம்பின. தொடர்ந்து ஸ்ரீ மஹா கணபதே, ஓ ராமா பாடல்கள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன. தொடர்ந்து பாடிய ‘சதா மதி’ என்ற கம்பீரவாணி ராகப் பாடலும் அதற்கான பக்கவாத்தியமும் மிக அருமை. ‘ஸ்ரீ வல்லி தேவசேனாபதே’ பாடல் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக விளங்கியது. அந்தப்பாடலுக்கு கணேஷ் பிரசாத் வயலினில் தனி ராஜபாட்டையே நடத்தி விட்டார் என்று சொல்லலாம். புருஷோத்தமின் கஞ்சிராவும், நெய்வேலி நாராயணனின் மிருதங்கமும் போட்டி போட்டுக் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்தவிதம் அருமை. இறுதியாக ‘சின்னஞ்சிறு பெண் போலே’ பாடலைப் பாடி கச்சேரியை நிறைவு செய்தார் குருசரண். அந்தப்பாடலுக்கு ரசிகர்கள் கூட்டமும் அவரோடு சேர்ந்தே பாடியது குறிப்பிடத்தக்கது.

 sowmyaa

 தொடர்ந்து வந்த சௌம்யா தனது வழக்கமான டிரேட் மார்க் புன்சிரிப்புடன் ‘ஆடிக் கொண்டார்’ பாடலை அழகாக ஆலாபனை செய்தார். தொடர்ந்து தியாகராஜரின் புகழ்பெற்ற கிருதியான ‘மனவியாக லின் சரா டதே’ பாடலை உருகும் விதத்தில் பாட, ரசிகர்கள் பலர் எழுந்து நின்று கைதட்டினர். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி, அருளவேண்டும் தாயே, உன்னையல்லால்.., நின்னையே ரதியென்று.. என்று பல பாடல்களை உச்சரிப்பு சுத்தத்துடன் அழகாக ஆலாபனை செய்த விதம் அருமை. இறுதியாக அண்ணாமலை ரெட்டியாரின் ‘சென்னி குள நகர் பாலன்’ காவடிச் சிந்தை ஏனோ சற்று அவசரமாகவே பாடி நிறைவு செய்தார். ராமதாஸின் வயலினும், கிருஷ்ணமூர்த்தியின் மிருதங்கமும் நிகழ்ச்சிக்கு மிகுந்த பக்கபலமாக இருந்தது.

 Sudha Ragunathan

அடுத்து சுதா ரகுநாதன் பாட வரும்போது அரங்கு முற்றிலுமாக நிறைந்து விட்டது. நாற்காலியில் அமர இடமில்லாததால் ரசிகர்கள் பலர் முணுமுணுப்புடன் தரையில் அமர்ந்து கொண்டே நிகழ்ச்சியை ரசிக்க ஆரம்பித்தனர். அரங்கில் நிற்கவும் இடமில்லாததால் பல ரசிகர்கள் மேடையில் ஏறி, கச்சேரி செய்பவர்களுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டு விட்டனர். வழக்கமான முறையில் அற்புதமாகப் பாடி தனது கச்சேரியை நிறைவு செய்தார் சுதா ரகுநாதன். அவர் சென்றவுடனேயே அரங்கத்திலிருந்து பலரும் வெளியே செல்ல ஆரம்பித்தனர். இறுதியாக ஸ்ரீ ராம் பரசுராம்-அனுராதா ஸ்ரீராமின் ஹிந்துஸ்தானி-கர்நாடிக் ஜூகல்பந்தியுடன் கச்சேரி நிறைவுற்றது.

‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சி சென்னை ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் என்றாலும் நிகழ்ச்சி அமைப்பில் சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும், ரசிகர்கள் ஒழுங்காக அமர்வதற்கு சரியான சிட்டிங் வசதி செய்யப்படவில்லை என்பது போன்று குற்றச்சாட்டுக்களை அரங்கில் கேட்க முடிந்தது. அடுத்த ஆண்டு கச்சேரியில் இது போன்று குறைகள் நேராது என்று நம்புவோமாக.

Advertisements

4 thoughts on “இசைச் சங்கமம் – சென்னையில் திருவையாறு

  1. இத்தளத்தில் அருமையான பதிவுகளை பதிந்துள்ளீர்கள், ஆனால் இசை என்பது நமது தமிழ் இசையின் தோற்றம் மற்றும் அதன் விளக்கங்களும் அதாவது சுரம், இசை இலக்கணம், தாளம் இவைகளைப் பற்றியிருக்கும் என நினைத்து ஏமாற்றம் கொண்டேன்,

    கொஞ்சம் மாற்றம் செய்து இசை தோற்றம்,இராகம்,சுரங்கள், இசை இலக்கணம், தாளங்கள், அதனளவுகள் இப்படியான விடயங்களை தந்தால் பயனுள்ளதாக இருக்கும் எம்போன்றவர்களுக்கு,

    செய்வீர்களா?

    1. நன்றி! அந்த அளவிற்கு எனக்கு அறிவுத் திறன் இருந்தால்தான் எழுதியிருப்பேனே! இசை எனக்கு மிகவும் பிடிக்கும். அது தமிழிசையாக இருந்தாலும் சரி, கர்நாடக ஏன் நல்ல திரையிசையாக இருந்தாலும் சரி. எதிர்காலத்தில் தகவல்கள் திரட்டி பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.