கதவைத் தட்டிய பேய்
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கூறிய தகவல் இது. அவரது மகன் பாடசாலையில் படிக்கிறான். அங்கேயே உணவு, உடை, இருப்பிடம் கல்வி எல்லாம் வழங்கப்படுகிறது. இரவு நேரத்தில் ஒரு உருவம் மாணவர்களைத் தொந்தரவு செய்வதாகவும், பயமுறுத்துவதாகவும் அவன் கூறவே, இவர் நேரடியாக அந்தப் பள்ளிக்குச் சென்று மாணவர்கள் அறையில் தங்கியிருக்கிறார். ஒரு பேயும் வரவில்லை. இரண்டு நாட்கள் தங்கி இவர் புறப்பட்டுப் போக மறுநாள் காலை பையனிடமிருந்து போன். முந்தைய இரவு பேய் வந்ததாகவும், மாணவன் ஒருவன் அதைப் பார்த்து பயந்து விட்டதாகவும், உடன் பயந்து அவன் விடியற்காலையிலேயே ஊருக்குப் புறப்பட்டுப் போய் விட்டதாகவும்.
இவர் உடன் தன் நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு மீண்டும் பள்ளிக்கு சென்றிருக்கிறார். இருவரும் நான்கு நாட்கள் வரை பள்ளியில் தங்குகிறார்கள். இரவானால் மாணவர்கள் அஞ்சி நடுங்குகின்றனர். ஆனால் இவர்கள் அங்கே இருந்த நான்கு நாட்களும் ஒன்றும் நடக்கவில்லை. பேயும் வரவில்லை. பிசாசும் தட்டுப்படவில்லை. மாணவர்களுக்கு தைரியம் கூறி, பள்ளியின் சுற்றுப்புறத்தை எல்லாம் சுத்தம் செய்து, ஒழுங்கு செய்து விட்டு அவர்கள் புறப்படுகின்றனர்.
மறுநாளுக்கு மறுநாள். மாலைநேரம். சமையல் காரப் பெண்ணிடமிருந்து போன். ”உங்கள் பையனுக்கு முடியவில்லை. உடனே புறப்பட்டு வாருங்கள்” என்று. இவர் அலறி அடித்துக் கொண்டு அங்கே செல்ல, பையன் பேந்த பேந்த விழித்தவாறு படுத்திருக்கிறான். அவனால் சரியாகப் பேச இயலவில்லை. கதவைக் கதவைக் காட்டுகிறான். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. பின்னர் தந்தை அவனை அருகில் உள்ள ஆலயத்திற்கு அழைத்துச் சென்று, ஆறுதல் கூறி மெல்ல மெல்ல பேச வைத்திருக்கிறார்.
மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு மீண்டு அவன் கூறிய தகவல்…
”நான் நேற்று இரவு சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்றேன். இரவு மணி 2 இருக்கும். சிறுநீர் கழித்து விட்டு அறை உள்ளே செல்லும் போது வாசலில், மரத்தடியில் கறுப்பாக ஒரு உருவத்தைப் பார்த்தேன். அது மிகவும் உயரமாக, குண்டாக இருந்தது. கண்கள் இரண்டு மிக மிகச் சிவப்பாக இருந்தது. அது பயங்கர கோபத்தில் இருப்பது போல எனக்குத் தெரிந்தது. வேறு அடையாளங்கள் எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. என்னைப் பார்த்ததும் அது அடிக்க வருவது போல் கையை ஓங்கிக் கொண்டு வந்தது. நான் பயந்து போய் உடனே உள்ளே வேகமாக ஓடி வந்து கதவைச் சாத்திக் கொண்டு விட்டேன். அது கதவை அழுந்தத் தள்ளித் தட்டியது. பின்னர் போய் விட்டது என்று நினைக்கிறேன். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. அப்படியே படுத்து விட்டேன். இப்போது நீங்கள் வந்த பிறகுதான் கொஞ்சம் பயம் இல்லாமல் இருக்கிறேன். கதவில் அந்தப் பேயின் கை விரல் கூடப் பதிந்திருக்கிறது. நேற்று பள்ளியை. அறைகளை எல்லாம் சுத்தம் செய்த போது கதவையும் சுத்தமாகத் துடைத்து வைத்தோம். இப்போது அந்தப் பேயின் கை விரல் அடையாளம் அதில் பதிந்திருக்கிறது”
தந்தைக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, பயம். கோயிலிருந்து வந்து கதவு அருகே சென்று பார்க்கிறார். ஏதோ ஒருவித, இன்னதென்று சொல்ல இயலாத, மிக நீண்ட விரல் போன்ற அடையாளம் அதில் பதிந்திருந்திருக்கிறது. உடன் அதை தனது செல்போனில் படம் பிடித்திருக்கிறார்.
அந்தப் படங்கள் கீழே….

- பேயின் விரல்?
உடன் நண்பர் பக்கத்து ஊரில் உள்ள பூசாரியை அணுகியிருக்கிறார். விஷயங்களைச் சொல்கிறார். அவர் பூஜையில் அமர்ந்து விட்டுச் சொன்ன விஷயங்கள்….
“ சிறுவர்கள் மாலை நேரத்தில் அருகில் முனீஸ்வரன் உறையும் ஒரு மரத்தடியில் விளையாடியிருக்கின்றனர். அப்போது அவர்களில் ஒருவன் அங்கே அசுத்தம் செய்து விட்டான். ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல. தொடர்ந்து விளையாட்டாய் அதைச் செய்திருக்கிறான், அது ’சாமி மரம்’ என்று நண்பர்கள் சொன்னதையும் மீறி. அதனால் மிகவும் கோபம் கொண்ட முனீஸ்வரன் அவனை மிரட்டுவதற்காக இரவில் வந்திருக்கிறார். அந்த மரத்தைச் சுத்தமாக சாணத்தால் மெழுகி, கோலமிட்டு, சாம்பிராணி தூபம் போட்டு சாமியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விட்டால் போதும். எல்லாம் சரியாகி விடும்” என்றிருக்கிறார்.

- இது என்ன?
நண்பருக்கு அதை நம்புவதா, அல்லது நம்பாதிருப்பதா என்று தெரியவில்லை. தனது பையன் உட்பட மாணவர்களை அழைத்து விசாரித்த போது ஒரு மாணவன் அந்தக் குற்றத்தை ஒப்புக் கொண்டான். தான் தான் அந்தத் தவற்றைச் செய்ததாகவும், ஒருநாள் இரவில் அந்தப் பேய் உருவத்தைப் பார்த்து பயந்துபோய் ஊருக்குப் போய் விட்டதாகவும், அன்றுதான் திரும்பியதாகவும் தெரிவித்திருக்கிறான்.
உடன் மாணவர்களைக் கொண்டு பூசாரி சொன்னபடி அவர்கள் பூஜைகளைச் செய்ய இப்போது அங்கு எந்தப் பிரச்னைகளும் எழவில்லையாம். மாணவர்களும் நிம்மதியாகத் தூங்கி நன்கு படிக்கின்றனராம்.
பி.கு : இது செல்போனில் எடுத்த படம். எனவே கிராஃபிக்ஸ் எதுவும் செய்யப்படவில்லை என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனால் கதவில் பதிந்திருப்பது பேயின் விரல்கள்தானா அல்லது கப்ஸாவா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
(தகவல் மற்றும் படங்கள் : இராமச்சந்திரன், புதுக்கோட்டை)
Like this:
Like ஏற்றப்படுகின்றது...