அவன் வீரமும் ஆற்றலும் உடைய ஒரு சிறுவன். அவனுக்கு சிறுவயது முதலே தியானத்தில் ஆழ்ந்து விடும் பழக்கம் இருந்தது. தினந்தோறும் அவன் உறங்கச் செல்லும் போது, அவனது புருவ மத்தியில் ஒரு ஒளி தோன்றும். அது மெல்ல மெல்லப் பெரிதாக அவனை முழுவதுமாக வியாபிக்கும். அவனும் அப்படியே அதில் ஒன்றிப் போய் விடுவான். பின் அந்தப் பரவச உணர்விலியே முற்றிலுமாக ஆழ்ந்து விடுவான். அது தான் அவனைப் பொறுத்தவரை உறக்கம் என்பதாக இருந்தது. எல்லோருக்கும் இதே வித அனுபவங்கள் தான் ஏற்படும் என்றே அவன் வெகுநாட்கள் வரை நினைத்திருந்தான். பின் நண்பர்களோடு இணைந்து தியானப் பயிற்சி மேற்கொள்ளும் காலத்தில், நண்பன் ஒருவனிடம் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்தபொழுது தான், இது தனக்கு மட்டுமே ஏற்படும் ஒருவித உணர்வு நிலை என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அந்த அளவிற்கு சிறுவயதிலிருந்தே ஆன்ம அனுபூதி பெற்றவனாக அவன் விளங்கி வந்தான்.
ஒரு முறை அவனது பயிற்சி ஆசிரியர், அவனுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்தச் சிறுவன் மெள்ளக் கண்களை மூடினான். பின் அப்படியே கண்ணயர்ந்து விட்டான். ஆசிரியருக்கு கோபம் அதிகமாகி விட்டது. தான் அக்கறையுடன் பாடம் நடத்திக் கொண்டிருக்க, இவன் தூங்குகிறானே என்று நினைத்து, சிறுவனது தொடையில், தனது கைப்பிரம்பால் ஓங்கி ஒரு அடி கொடுத்தார். கண் விழித்தான் சிறுவன். தூங்காமல் பாடத்தை ஒழுங்காகப் படிக்கும்படி கட்டளையிட்டார் ஆசிரியர். அவனோ, தான் தூங்கவில்லை என்றும், அவர் நடத்தியவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருந்ததாகவும் கூறி, அதுவரை அவர் நடத்தியவற்றையெல்லாம் அப்படியே வரி மாறாமல் ஒப்பித்தான். அசந்து போனார் ஆசிரியர். அவனது நினைவாற்றலையும், கவனிப்புத் திறனையும் கண்டு மிகவும் வியந்து மன மகிழ்ந்து பாராட்டினார்.
இப்படிச் சிறுவயதிலேயே அளவற்ற ஆற்றல் கொண்டிருந்த அந்தச் சிறுவன் யார் தெரியுமா?
பாரத தேசத்திற்கு மறுமலர்ச்சியூட்டிய சுவாமி விவேகானந்தர்தான்.
***
