ரமணர் ஆயிரம் – 30

ரமணர் சொன்ன கதை 

(ரிபு முனிவர், அவருடைய சீடன் நிதாகன் இவர்களைப் பற்றிய புராணக் கதை )

ரமணர்
ரிபு முனிவர், தம் சீடனான நிதாகன் கர்ம காண்டத்திலிருந்து எவ்வளவு விடுபட்டிருக்கிறானென்று காண, தாம் வயதானவராயிருந்தும் நகரத்தில் வசித்த தம் சீடனிடம் தாமே போவார். தன் குரு தன்னைக் கவனித்து வருகிறாரென்று அறியாதபொழுது நிதாகன் எப்படி நடப்பானென்று கவனிக்க, சிற்சில சமயங்களில் ரிபு மாறுவேடம் பூண்டும் போவார். அப்படிப் பட்டிக்காட்டான் வேடம் பூண்டு ரிபு போயிருந்த ஒரு சமயத்தில் நிதாகன் ராஜ பவனியை வெகு கருத்தாகக் கவனித்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார். அவரை, நகரவாசியான நிதாகன் கண்டுகொள்ளவில்லை. 

“இதென்ன கும்பலும் கூச்சலும்” என்று பட்டிக்காட்டானாகிய ரிபு கேட்டார். 

“ராஜா பவனி போகிறார்” என்று நிதாகன் பதிலுரைத்தான்.

“அரசனா? ஊர்வலம் போகிறானா? யார் அரசன்?” 

“அதோ யானைமேல்” 

“அரசன் யானைமேல் இருக்கிறான் என்கிறாயா?”

“ஆம்.”

நான் இருவரைக் காண்கிறேன். இதில் அரசன் யார்? யானை எது?”

“என்ன! நீ இரண்டையும் பார்க்கிறாய். ஆனால் மேலிருப்பவன் அரசன் என்றும் கீழ் இருப்பது யானை என்றும் அறிய மாட்டாயா? உன்னைப் போன்ற மூட மனிதனிடம் பேசுவதாற் பயனென்ன?” 

“என்னைப் போன்ற மூடனிடம் பொறுமையை இழக்க வேண்டாம். உன்னை வேண்டிக் கொள்கிறேன். மேல், கீழ் என்கிறாயே; இதன் பொருள் என்ன?” 

நிதாகனுக்குக் கோபம் தாங்கவில்லை.

“மேலே அரசனையும் கீழே யானையையும் காண்கிறாய். அப்படி இருந்தும் மேல் கீழ் என்றால் என்னவென்று அறிய விரும்புகிறாய். கண்ட காட்சிகளும் கேட்ட வார்த்தைகளும் இவ்வளவு அறிவை விளக்கவில்லையென்றால் நடித்துத் தான் நான் உனக்குப் போதிக்க வேண்டும். குனி. எல்லாம் உனக்கே பூரணமாக விளங்கிவிடும்” என்று வார்த்தைகளைக் கொட்டினான். 

சொன்னபடி செய்தான் பட்டிக்காட்டான். 

அவர் குனிந்ததும் தோளின்மேல் ஏறிக்கொண்டான் நிதாகன்.

“இப்பொழுது புரிகிறதா, மேலே நான் அரசன் போல் இருக்கிறேன். கீழே நீ யானைபோல் இருக்கிறாய். இப்பொழுது தெளிவாகிவிட்டதா?” என்றான்.

“இல்லை, இன்னும் புரியவில்லை. நீ அரசன்போல் மேல் இருக்கிறாய் என்றும், நான் யானைபோல் கீழ் இருக்கிறேன் என்றும் சொல்லுகிறாய். சரி, அரசன், யானை, மேல், கீழ் – அதுவரையில் விளங்குகிறது. ஆனால், ”நான்”, ”நீ” என்று சொன்னாயே; எதைக் குறித்து, ”நான்”, ”நீ” என்கிறாய்? அதுதான் விளங்கவில்லை. தயவுசெய்து அதை விளக்கு” என்று வெகு நிதானமாகச் சொன்னார் பட்டிக்கட்டானான ரிபு.

இதைக் கேட்டதும் நிதாகனுக்கு ஓர் விழிப்பு உண்டாயிற்று. உடனே கீழே குதித்து, தனது குருவின் சரணங்களில் விழுந்து, “வந்தனத்துக்குரிய எனது குரு ரிபுவையன்றி, வெளித்தோற்றமாகிய இந்தப் பௌதிக வாழ்விலிருந்து உண்மைப் பொருளாகிய ஆன்ம நிச்சயத்திற்கு என் மனதைக் கவரக் கூடியவர் வேறு யார் உளர்?” என்று வேண்டி வணங்கினான் நிதாகன்.

ஆம்.

There are no Others

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!

***

- அரவிந்த்