மகான் பூஜ்ய ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்

சித்தர்கள், யோகிகள், ஞானிகள் போன்றோர் வாழ்ந்த பெருமை மிக்க  இந்து ஞான மரபில் சதா பிரம்ம நிலையிலேயே இருந்து, அந்த இறைநிலையோடு ஒன்றி வாழ்க்கை நடத்தியவர்கள் பிரம்ம ஞானிகள் என அழைக்கப்பட்டனர். சுகப் பிரம்ம மகரிஷி, ஜனக மகரிஷி போன்ற அந்த அவதூத ஞானிகளின் வரிசையில் குறிப்பிடத் தகுந்தவர் ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்.

சுவாமிகள் ஒரு மாபெரும் அவதார புருடர். ஆனால் ஒன்றுமே அறியாத பித்தர் போன்று காசி நகரத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருப்பார். அவரது முதுகில் மூன்று லிங்க வடிவிலான குழிகள் காணப்பட்டதால் பக்தர்கள் அவரை த்ரைலிங்க சுவாமிகள் என அழைத்தனர். குள்ளமான உருவம். நீண்ட கைகள். உருண்டையான முகம். பெரிய வயிறு என்று சுவாமிகளின் தோற்றம் மிக வித்தியாசமானதாக இருக்கும். சுவாமிகள் யாருடனும் எதுவும் பேச மாட்டார். உணவு உண்பது என்பது எப்போதாவது ஒருமுறைதான். பல நாட்கள் பட்டினியாக இருப்பார். சமயங்களில் அன்பர்கள் கொண்டு வரும் தயிர்ப்பானைகளை சளைக்காமல் குடம் குடமாகக் குடிப்பார். மணிகர்ணிகா படித்துறையில் உச்சி வெயிலில் சுடும் பாறை மீது அமர்ந்திருப்பார். அவதூதர் என்பதால் உடலில் ஒட்டுத் துணி இருக்காது. அதைப் பற்றி எந்த வித அக்கறையுமின்றி கடும் வெயிலில் அமர்ந்திருப்பார். தான், தனது, தன்னுடைய உடல்  என்ற உணர்வுகள் அற்றவராக அவர் இருந்தார். சமயங்களில் கடும் குளிரில் தண்ணீருக்குள் இறங்குவார். உள்ளேயே மூச்சடக்கி அமர்ந்திருப்பார். இல்லாவிட்டால் தண்ணீரின் மீது சப்பணமிட்டு அமர்ந்து கொண்டோ அல்லது தண்ணீரில் படுத்த வாக்கில் மிதந்து கொண்டோ இருப்பார். சில சமயம் உச்சி வெயிலில் அவதூதராய் காசி மாநகரத்துத் தெருக்களைச் சுற்றி வந்து கொண்டிருப்பார். காலத்தை, இயற்கை விதிகளை வென்ற மகாபுருடராக இம்மகான் விளங்கி வந்தார்.

இறையனுபூதி பெற்ற இம்மகானை பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தரிசனம் செய்திருக்கிறார். காசி, பிருந்தாவனம் போன்ற பல புண்ணிய தலங்களுக்கு யாத்திரையை மேற்கொண்ட ராமகிருஷ்ணர், காசியில் ஒரு மடத்தில் தங்கியிருந்த த்ரைலிங்க சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். காசியில் ராமகிருஷ்ணர் தரிசித்த ஞானிகளில் மகான் த்ரைலிங்க சுவாமிகள் ஒருவரே பிரம்ம ஞானியாக விளங்கியவர். இதனை சுவாமி விவேகானந்தரிடம், ’ஒரு மிகப் பெரிய மகானைச் சந்தித்தேன்’ என்று சொல்லி விளக்கிக் கூறியிருக்கிறார் பரமஹம்சர். பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தரும் மகான் த்ரைலிங்க சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். மஹா அவதார் பாபாஜியின் நேர் சீடரான மகான் ஸ்ரீ ஸ்ரீ லாஹரி மஹா சாயர், த்ரைலிங்க சுவாமிகளின் உற்ற நண்பராகத் திகழ்ந்தவராவார்.

லாஹரி மஹா சாயர் (1828-1895), ராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886), விவேகானந்தர் (1863-1902) என பல காலகட்டத்தைச் சேர்ந்தவர்களும் சுவாமிகளை தரிசித்துச் சென்றிருக்கின்றனர். பரமஹம்ச யோகானந்தர் தனது ’ஒரு யோகியின் சுயசரிதம்’ நூலில் த்ரைலிங்க சுவாமிகள் கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று  குறிப்பிட்டிருக்கிறார்.

மிகச் சிறந்த தவயோகியாகத் திகழ்ந்த இம்மகான் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்.

அவதூதர் என்பதால் எப்போதும் சுவாமிகள் நிர்வாணமாகவே இருப்பார். ஆனால் சுவாமிகள் இவ்வாறு நிர்வாணமாகச் சுற்றி வருவது காவல்துறையினருக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் அவர்கள் சுவாமிகளைப் பிடித்து சிறையில் அடைத்துப் பூட்டி விட்டனர். ஆனால் சற்று நேரத்தில் சுவாமிகள் வழக்கம் போல் வெளியே சுற்றிக் கொண்டிருந்தார்.

பூட்டிய கதவு பூட்டியபடி இருக்க, சுவாமிகள் எவ்வாறு வெளியேறினார் என்பது தெரியாமல் காவலர்கள் திகைத்தனர். அதனால் சீற்றமுற்ற அவர்கள், மீண்டும் சுவாமிகளைப் பிடித்து வந்து கதவை பலமாகப் பூட்டி, காவலுக்கு என்று தனி ஆளையும் நியமித்தனர். ஆனால் சுவாமிகளோ சற்று நேரத்தில் சிறையிலிருந்து மாயமாய் மறைந்து, அதன் மாடிப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தார். இதனால் சலிப்புற்ற காவலர்கள் சுவாமிகளைச் சிறையில் அடைப்பதை நிறுத்தினர். சுவாமிகளும் காசி மாநகரத்தின் தெருக்களில் வழக்கம் போலச் சுற்றி வர ஆரம்பித்தார்.

******

காசியில் பிராம்லி என்ற வெள்ளைக்காரர் அப்போது சப்கலெக்டராக இருந்தார். ஆடையின்றி அவதூத கோலத்தில் காசி நகரத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த சுவாமிகளைப் பார்த்ததும் அவருக்குக் கோபம் பொங்கியது. தன்னிடமிருந்த சவுக்கால் சுவாமிகளை அடித்தார். ஆனால் அந்த அடி சுவாமிகளின் மேல் விழவில்லை. மாறாக அவர் மனைவி மீது விழுந்து அவர் வலி தாளாமல் அலறினார். அதனால் சுவாமிகளை ஒரு மாயாவி என்று நினைத்த பிராம்லி, தன் வீட்டிற்கு அவரை இழுத்துச் செல்லுமாறு தன் சேவகர்களுக்கு உத்தரவிட்டார். கலெக்டரின் வீட்டிலும் உறவினர்கள் அனைவரது உடலில் இருந்தும் சாட்டையடி பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அது கண்டு மிகவும் சீற்றமுற்ற பிராம்லி துரை ‘இந்த மாயாவியை இருட்டறையில் அடையுங்கள்’ என்று தனது சேவகர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு, அந்த அறையைப் பூட்டிச் சாவியைத் தானே வைத்துக் கொண்டார். பணி நிமித்தமாக மீண்டும் வெளியே புறப்பட்டுச் சென்றார்.

சற்று நேரத்தில் அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. சுவாமிகள் வழக்கம் போல் அவதூதராய் அவர் முன்னால் சாவதானமாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஆச்சரியம் மேலிட அருகிலுள்ளோரிடம் சுவாமிகளைப் பற்றி விசாரித்தார் கலெக்டர். அப்போது தான் மகானின் மகிமை பற்றி அவருக்குத் தெரிய வந்தது. சுவாமிகளைப் பணிந்து வணங்கிய பிராம்லி, தான் செய்த அவச்செயலுக்காக தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். சுவாமிகளும் அவரை மன்னித்தார். தனது அஞ்ஞானம் நீங்கிய அன்றைய தினத்தன்று வருடம் தோறும் சுவாமிகளுக்கு ஆராதனை நடத்திக் கொண்டாட ஒரு கட்டளையையும் பிராம்லி ஏற்படுத்தினார். அது ‘பிராம்லி கட்டளை’ என்ற பெயரில் இன்றறளவும் காசியில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

வெகுகாலம் வாழ்ந்து காசியில் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய இம்மகான் பின் நேபாளத்தில் பசுபதிநாத் அருகில் ஜீவசமாதி அடைந்தார்.

மகான்களின் பெருமை பேசவும் இனிதே!

வள்ளலாரின் வாழ்வில்…

vallalaarஇன்று வள்ளலாரின் அவதார தினம்.
                                   
     “அருட்பெருஞ் ஜோதி; அருட்பெருஞ் ஜோதி
      தனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் ஜோதி”

என்ற மகா மந்திரத்தை உலகம் உய்ய அருளிய மாண்பாளரின் மகா அவதார தினம். கருவிலே திருவுடையவராய்த் தோன்றிய இந்த மகாபுருஷர் துறவி, சித்தர், யோகி, ஞானி என எல்லா நிலைகளையும் கடந்து தன்னுடலையே ஒளியுடம்பாக ஆக்கிக் கொண்டு இறைவனோடு இரண்டறக் கலந்தவர்.

சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் இராமையாப் பிள்ளை – சின்னம்மை தம்பதியினருக்கு 5-10-1823ல் மகவாகத் தோன்றியவர் ஸ்ரீ ராமலிங்க அடிகள். தந்தை இளம் வயதில் இறந்ததால் சகோதரர் சபாபதிப் பிள்ளையின் ஆதரவில் சென்னையில் வந்து வசித்தார். இளமையிலேயே கருவிலே திருவுடையவராக விளங்கிய குழந்தை வளர வளர தெய்வக் குழந்தையாக பரிணமித்தது. தெய்வத்தின் அருள் பெற்றதாக வளர்ந்தது. பள்ளி செல்லும் வருவத்திலேயே அவருக்கு ஞானம் முகிழ்த்தது. ஓதாது அனைத்தையும் உணர்ந்து கொண்ட மெய்ஞ் ஞானக் குழந்தையாய் வளர்ந்தது.

வள்ளலார்

வள்ளலார்

இளம் வயதில் ஆசிரியர் ’ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்; ஒருவரையும் பொல்லாங்குச் செல்ல வேண்டாம்’ என உலக நீதிப் பாடலைப் பாட, அதைக் கேட்ட சிறுவன் இராமலிங்கம், அங்ஙனம் எதிர்மறையாக எண்ணங்களை பிஞ்சு எண்ணங்களில் பதியச் செய்வது தவறு என்று கூறிப் பாடிய பாடல் அவர் ஒரு ஞானக் குழந்தை என்பதை உலகுக்கு அறிவித்தது.

 

  ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
   உத்தமர் தம் உறவு வேண்டும்
  உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
   உறவு கலவாமை வேண்டும்
  பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
   பொய்மை பேசாது இருக்க வேண்டும்
  பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
   மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
  மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
   உனை மறவாதிருக்க வேண்டும்
  மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
   நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
  தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
   தலமோங்கு கந்த வேளே
  தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
   சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!

என்ற பாடலை ஆசிரியர் மெச்சினாலும், ராமலிங்கர் படிப்பில் ஆர்வம் இல்லாது இருப்பதும், அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருப்பதையும் கண்டு அண்ணன் சபாபதிப் பிள்ளையிடம் முறையிட்டார். அண்ணன் தம்பியைக் கண்டித்தார். வீட்டில் இருந்தே படிக்க ஏற்பாடு செய்தார். மாடியறையில் தனியிடம் ஒதுக்கிக் கொடுத்தார்.

அவ்வறையில் தினம்தோறும் படிப்பதற்குப் பதிலாக தியானம் எய்து கொண்டிருந்த ராமலிங்கருக்கு ஒருநாள் முருகனின் அருட்காட்சி கிடைத்தது.

“சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே!” என்று அந் நிகழ்வைப் பாடினார்.

அண்ணன் தம்பியை ஒரு சாதாரணக் குழந்தையாகவே எண்ணியிருந்தார். ஆனால் ஒரு சொற்பொழிவுக்கு தமக்குப் பதிலாக அவர் செல்ல நேர்ந்ததையும், அது கேட்டு மக்கள் புகழ்வதையும் எண்ணி தம்பியின் திறம் கண்டு மகிழ்ந்தார். ஒருநாள் ராமலிங்கரின் சொற்பொழிவையும் அவர் கேட்க நேர்ந்தது. அவர் தெய்வக் குழந்தை என்பதையும், ஒரு அவதார புருடர் என்பதையும் உணர்ந்து கொண்டார். வள்ளலை வாயாரப் போற்றினார்.

வள்ளலாரின் வாழ்க்கையில் இறையருளால் பல்வேறு அற்புதங்கள் நிகழ ஆரம்பித்தன. ஒருநாள் பசித்திருந்த போழ்து அன்னை வடிவாம்பிகையே அவருக்கு அக்காள் உருவத்தில் வந்து அமுதூட்டினார்.

சத்ய ஞான சபை

சத்ய ஞான சபை

சென்னையின் பொய்மை வாழ்க்கை கண்டு அஞ்சிய வள்ளலார் சில வருடங்களில் சென்னையை விட்டு நீங்கி மருதூர், கடலூர், வடலூர் போன்ற இடங்களுக்குச் சென்று தங்க ஆரம்பித்தார். இறைவனின் மீது ’திருவருட்பா’ என்னும் தெய்வீகப் பாமாலைகளைப் புனைந்தார். வடலூரில் சமரச சன்மார்க்கச் சங்கத்தையும், சத்தியத் தருமச் சாலையையும் நிறுவினார்.

”வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
 மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
 இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ?”

என்றெல்லாம் ஏழைகளின் நிலை கண்டு இரங்கினார். எல்லா மக்களையும் சமரச சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து உய்யுமாறு அழைத்தார்.

சித்தி வளாக மாளிகை

சித்தி வளாக மாளிகை

தாம் உருவாக்கிய சித்தி வளாகத் திருமாளிகையில் பல்வேறு அற்புதங்களைப் புரிந்தார்.

ஒரு நாள்…  மறுநாள் சமைப்பதற்கான அரிசி முதலிய பொருட்கள் இல்லாமல் போய் விட்டன. வரும் அதிதிகளுக்கு எங்ஙனம் பசியாற்றுவது என பணியாளர்கள் அஞ்சினர். பின்னர் தயக்கத்துடன்  அடிகளாரிடம் தகவல் தெரிவித்தனர். அதனைக் கேட்ட  அடிகளார் தனியறைக்குச் சென்று தியானத்தில் ஆழ்ந்தார். பின் சிறிது நேரம் சென்று திரும்பி வந்தவர், பணியாளர்களை நோக்கி “கவலை வேண்டாம். தேவையான பொருட்கள் அனைத்தும் நாளையே வந்து சேரும்” என்று கூறினார்.

பணியாளர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. “எப்படி வரும், எங்கிருந்து வரும், யார் மூலம் வரும்?” என்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

வள்ளலார் மறைந்த அறை

வள்ளலார் மறைந்த அறை

 மறு நாள் பொழுது புலர்ந்து, பணியாளர்கள் வெளியே சென்று பார்த்த பொழுது  மூன்று வண்டிகள் நின்று கொண்டிருந்தன. அதில் முழுவதும் மூட்டை மூட்டையாய் அரிசிகள், இன்ன பிற உணவுச் சாமான்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

பணியாளர்கள் ஆச்சர்யத்துடன் அதனைக் கொண்டு வந்தவரிடம் கேட்ட பொழுது, அவர், தான் பக்கத்தில் உள்ள திருத்துறையூரில் இருந்து வருதாகவும்,  முந்தைய நாள், அடிகளார் தன் கனவில் வந்து அரிசி முதலிய உணவுப் பொருட்கள் வேண்டுமென்று கேட்டதாகவும், அவ்வாறே அவர் கனவில் இட்ட கட்டளைப்படியே தான் அங்கு அந்தப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பதாகவும் பணிவுடன் தெரிவித்தார்.

அடிகளாரின் அற்புத ஆற்றலை எண்ணி ஆச்சரியப்பட்டனர் பணியாளர்கள்.

ஜோதி தரிசனம்

ஜோதி தரிசனம்

ஒருமுறை சில பக்தர்கள் ஒரு  புகைப்படக்காரரை சென்னையிலிருந்து  அழைத்துவந்தனர். அவர்களின் நோக்கம் எப்படியாவது வள்ளலாரைப் புகைப்படம் பிடித்து, அதனைத் தாங்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதே. வள்ளலார் இதற்கு உடன்படாத பொழுதும் அவர்கள் தங்கள் முயற்சியில் தளராது,  அவரைப் பல முறை படம் பிடித்தனர். ஆனால் அந்தப் புகைப்படத்தில் வள்ளலாரின் வெண்மையான ஆடை மட்டுமே விழுந்திருந்தது. வள்ளலாரின் உருவம் விழவில்லை. பல முறை முயற்சி செய்தும் இதே நிலை தான். இறுதியில் அன்பர்கள் வள்ளலாரைப் புகைப்படம் எடுக்கும் முயற்சியைக் கைவிட்டனர்.  அந்த அளவிற்கு ஒளியுடல் பெற்றவராக வள்ளலார் திகழ்ந்தார்.

இவ்வாறு உலக உயிர்களுக்காக இரங்கி, வாடிய பயிர்களுக்காக வாடி தன்னலம் கருதாது தொண்டு புரிந்து வந்தார் அடிகளார். ஆனால் மக்கள் யாரும் இவர் தம் பெருமையை முழுமையாக உணரவில்லை. அவர் தம் கொள்கைகளையும் சரியாகப் பின்பற்றவில்லை. அது கண்டு வள்ளலார் வருந்தினார். ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை. கட்டி விட்டோம்’ என்று அந்த வருத்தம் வாக்காக வெளிப்பட்டது.

ஸ்ரீ முக ஆண்டு. (1874) தை மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக் கிழமை. ஜனவரி மாதம் முப்பதாம் தேதி. இரவு மணி பனிரெண்டு. வள்ளலார் அன்பர்களை அழைத்தார்.  “நான் உள்ளே பத்து பதினைந்து தினங்கள் இருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருக்கால் பார்க்க நேர்ந்து பார்த்தால், யாருக்கும் தோன்றாது வெறும் வீடாகத் தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்” என்று  அறிவித்தார். பின்…
” பிச்சுலக மெச்சப் பிதற்றுகின்ற பேதையனேன்
இச்சையெலாம் எய்த விசைத்தருளிச் செய்தனையே
அச்சமெலாந் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
நிச்சலும் பேரானந்த நித்திரை செய்கின்றேனே!”

- என்று பாடிக்கொண்டே, சித்தி வளாகத் திருமாளிகைக்குள் நுழைந்தார். கதவைச் சாத்திக் கொண்டார். அதன் பின் அன்பர்கள் அனைவரும் அடிகளாரின் உத்தரவுப்படி அறைக் கதவைச் சில நாட்கள் திறக்காமலே இருந்தனர்.  பின் அரசாங்கத்தின் உத்தரவுப்படி  மாவட்ட ஆட்சியாளர், தாசில்தார், காவல் துறைத் தலைவர் ஆகியோர் பூட்டியிருந்த கதவைத் திறக்க ஏற்பாடு செய்தனர். உள்ளே வெறும் வெற்றிடம் மட்டுமே இருந்தது. வள்ளலாரைக் காணவில்லை. பூட்டிய கதவு பூட்டிய படி இருக்க வள்ளலார் மாயமாக மறைந்து விட்டார்.

வள்ளலார் தமது உடலை ‘ஞான தேகம்’ ஆக்கிக் கொண்டு காற்றோடு காற்றாய், இயற்கையோடு இயற்கையாய்க் கலந்து விட்டார். தன் உடலை ஒளியுடல் ஆக்கிக் கொண்டு, எல்லாம் வல்ல பேரருள் ஒளியொடு, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரோடு, ஒன்றோடு, ஒன்றாகக் கலந்து விட்டார்.

வள்ளலார் மறைந்திருக்கலாம். ஆனால் அவரது சமரச சன்மார்க்க, சமத்துவ, சமுதாயக் கொள்கைகள் மறைந்துவிடவில்லை. அவை இன்னமும் தனது கருத்தினை, சீர்திருத்தக் கொள்கைகளை இந்த உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.

எளியோரை வாழ்விக்க வந்த வள்ளலின் பாதம் பணிவோம். வளம் பல பெறுவோம்.

 

மகான்களும் விஜயதசமியும்- 2

மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல; புதிரானதும் கூட. அத்தகைய மகான்களுள் நான்கு இடங்களில் ஜீவசமாதியானதாகக் குறிப்பிடப்படுபவர் மகான் ராஜபூஜித ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள். கிட்டத்தட்ட 250 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படும் இம்மகானின் வாழ்க்கை வரலாறு பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது. இம்மகானும் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவைப் போலவே விஜயதசமி நன்னாளைத் தான் தனது சமாதி காலத்திற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது மற்றொரு விந்தையான சிறப்பாகும்.
ஸ்ரீ குழந்தையானந்தர்
ஸ்ரீ குழந்தையானந்தர்

மதுரையை அடுத்த சமயநல்லூரில் வாழ்ந்தவர்கள் ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி தம்பதியினர். ஸ்ரீவித்யா உபாசகர்கள். தினம்தோறும் மதுரைக்கு வந்து மீனாட்சியைத் தொழுவது இருவருக்கும் முதற்கடமை. ஆனால் எல்லா செல்வங்களும் இருந்தும் அதனை அனுபவிக்க புத்திர பாக்கியம் வாய்க்கவில்லையே என்ற மனக்குறை அவர்களை பெரிதும் வாட்டி வந்தது. ஆண்டுகள் பல கடந்தும் பலனில்லாததால் அவர்களுடைய மனக்கவலை அதிகரித்தது. அதனால் தங்களுக்குக் குழந்தை பிறந்தால் அதை மீனாட்சிக்கே அர்ப்பணித்து விடுவதாக வேண்டிக் கொணடனர். அவர்கள் பிரார்த்தனை பலித்தது. திரிபுரசுந்தரி அம்மாள் கருத்தரித்தார். இரண்டு குழந்தைகளை ஈன்றார். ராமன், லட்சுமணன் என அக்குழந்தைகளுக்குப் பெயரிட்டனர். அதில் மூத்த குழந்தை ராமன் ஒளி பொருந்திய கண்களுடனும், காலில் சங்கு, சக்கரத்துடனும் மிக அழகாக இருந்தது. ஆனால் அழவில்லை. தாய்ப்பால் குடிக்கவில்லை.

மாதங்கள் கடந்தன. ஆயினும் அக்குழந்தையின் நிலையில் மாற்றமில்லை. தெய்வக் குற்றமோ என பெற்றோர் அஞ்சினர். ஆலய அர்ச்சகரிடம் ஆலோசனை கேட்டனர். பின்னர் தான் இருவருக்கும் குழந்தை பிறந்தால் அதை அம்பிகைக்கு அர்ப்பணிப்பதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. ஆனால் இரண்டு குழந்தைகளில் எந்தக் குழந்தையை அர்ப்பணிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது அர்ச்சகருக்கு அருள் வந்து, காலில் சங்கு சக்கரம் உள்ள குழந்தையை விட்டுச் செல்லுமாறு ஆணை வந்தது. அதன்படி குழந்தை ’ராமன்’ ஆலயத்தில் தனித்து விடப்பட்டான். அன்னை மீனாட்சியின் அருளாலும், அர்ச்சகர்களின் ஆதரவாலும் குழந்தை வளர்ந்தது. தகுந்த வயது வந்ததும் உபநயனமும் செய்விக்கப்பட்டது. ராஜகோபாலன் என்ற தீட்சா நாமமும் சூட்டப்பட்டது.

ஜீவ சமாதி

ஜீவ சமாதி

ஒருநாள், அன்னை மீனாட்சியை தரிசிப்பதற்காக காசியிலிருந்து கணபதி பாபா என்ற மகான் வந்திருந்தார். ஒரு நல்ல சீடனை தேடிக் கொண்டிருந்த அவருக்கு ராஜகோபாலனைக் கண்டதும் அவனே அதற்குத் தகுதியானவன் என்ற எண்ணம் தோன்றியது. ஆலயத்தினரின் அனுமதி பெற்று ராஜகோபாலனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். காசியில் ஸ்ரீகணபதி பாபாவிடமிருந்து சகல சாஸ்திரங்களையும் பயின்றார் ராஜகோபாலன். புனிதத் தலங்களை தரிசிப்பதற்காக தல யாத்திரைகளை மேற்கொண்டார். பல மன்னர்களால் போற்றப்பட்டார். ராஜபூஜித ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் என்று அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். சில வருடங்களில் கணபதி பாபா மகா சமாதி அடைந்தார். அவர் சமாதிக்குப் பின் தனியறையில் பல ஆண்டுகாலம் நிஷ்டையில் இருந்த சுவாமிகள், பின் தாமும் ஒரு சமாதிக் குழியை ஏற்படுத்தி அதில் இறங்கி ஜீவ சமாதி ஆனார்.

பின் இரண்டாவது அவதாரமாக மீண்டும் காசியில் தோன்றி த்ரைலிங்க சுவாமிகள் என்ற பெயரில் வாழ்ந்து நேபாளத்தில் ஜீவசமாதி ஆனார். பின் தென்காசியில் குழந்தை வேலப்பராகத் தோன்றி வாழ்ந்து பல்வேறு அற்புதங்களைச் செய்து அங்கேயே ஜீவ சமாதி ஆனார். பின்னர் நான்காவது அவதாரமாக மதுரையில் தோன்றினார். குள்ளமான உருவம். பருத்த தொந்தி. வட்டமான முகம். சாளவாய் ஒழுகிக் கொண்டிருக்கும் வாய். மழலைப் பேச்சு என்று சுவாமிகளின் தோற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. குழந்தையைப் போன்ற தோற்றம். சிரித்த, ஆனால் மரியாதையைத் தோற்றுவிக்கும் முகம் என்பதாக சுவாமிகளின் உருவ அமைப்பு அமைந்திருந்தது. ‘கண்ணுரெண்டும் எச்சி, கறந்த பாலும் எச்சி ‘ என்று அடிக்கடிச் சொல்லுவார். குழந்தை போல குழறிக் குழறிப் பேசுவார் என்பதாலேயே அவருக்கு ‘குழந்தையானந்தர்’ என்ற பெயர் நிலைத்து விட்டது.

சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று இன்னமும் அவரது பக்தர்களால் நினைவு கூரப்படுவது.

புனித மரம்
புனித மரம்

ஒருநாள் மதுரை ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்ல இருந்த ரயில் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார் குழந்தையானந்தர். அது வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு ரிசர்வ் செய்யப்பட்டிருந்த முதல் வகுப்புப் பெட்டி. தனக்கென ரிசர்வ் செய்த அந்த இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் அந்த அதிகாரி கடும் கோபம் கொண்டார். உடனடியாக அந்த இடத்தை விட்டு எழுந்து கொள்ளுமாறு சுவாமிகளை அதிகாரம் செய்தார். ஆனால் சுவாமிகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மௌனமாக அமர்ந்திருந்தார். அதிகாரி, ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்தார். அப்போது கல்யாணராம அய்யர் என்பவர் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். அவர் சுவாமிகளைப் பரிசோதித்து டிக்கட் இல்லை என்பதால் கீழே இறக்கி விட்டார். 

சுவாமிகள் பிளாட்பாரத்தில் அமர்ந்து விட்டார். ரயில் கிளம்ப பச்சைக்கொடி காட்டப்பட்டது. டிரைவர் எஞ்சினை இயக்கினார். ரயில் கிளம்பவில்லை. பலமுறை முயன்றும் பலனில்லை. அப்போது அங்கு வந்த சுவாமிகளின் மகிமை அறிந்த சிலர், ஸ்டேஷன் மாஸ்டரிடம் சுவாமிகளின் பெருமை பற்றிச் சொல்லி, அவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லினர். கல்யாணராம அய்யரும் பணிவுடன் சுவாமிகளிடம் மன்னிப்பு வேண்டினார். சுவாமிகளை முதலில் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமர்த்தினார். வெள்ளைக்கார அதிகாரிக்கு மாற்று ஏற்பாடு செய்தார்.

சமாதி ஆலயம்

சமாதி ஆலயம்

உடனே சுவாமிகள் சந்தோஷம் பொங்க ‘ டேய், ரயில் இனிமேல் போகும்டா’ என்றார். டிரைவர் உடனே எஞ்சினை இயக்க, ரயில் கிளம்பியது.

ஒருமுறை பக்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார் குழந்தையானந்த சுவாமிகள். அந்த வீட்டில் சுவாமிகளின் திருவுருவப் படத்தோடு அவர் முந்தைய உருவமான த்ரையலிங்க சுவாமிகளின் படத்தையும் வைத்து வழிபட்டு வந்தனர். அதைப் பார்த்த சுவாமிகள், ‘அடேய், எனது இந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? பேஷ், பேஷ்’ என்றார் புன்னகையுடன். இதன் மூலம் குழந்தையானந்தரின் பூர்வ ஜென்மமே ஸ்ரீ த்ரையலிங்க சுவாமிகள் என்ற உண்மையை அறிந்து கொள்ள இயலுகிறது.

இவ்வாறு மூன்று முறை ஜீவசமாதியிலிருந்து வெளித்தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்த இம்மகான், 1932ம் வருடம் விஜயதசமி அன்று, மதுரை லட்சுமி நாராயணபுரத்தில் சமாதி அடைந்தார். மதுரை அரசரடியில் அமைந்திருக்கும் இவரது ஜீவ சமாதியிலிருந்து சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் ஸ்ரீ குழந்தையானந்தர் உதவி வருகிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. விஜயதசமி அன்று மகானை உளப்பூர்வமாக வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மையும் பெருகும்.

 

மகான்களும் விஜயதசமியும் -1

விஜயதசமி
அன்னை ஸ்ரீ துர்கா
அன்னை ஸ்ரீ துர்கா

தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருள்கள் உண்டு. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று மூன்று சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , சண்ட முண்டனை வதம் செய்த நன்னாள் விஜயதசமி. இன்று ஸ்ரீ அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.

ஸ்ரீ துர்கா தேவி
ஸ்ரீ துர்கா தேவி

விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று ஸ்ரீ அன்னை விஜயம் செய்யும் நாளே ’விஜயதசமி’ என்றும் கூறப்படுகிறது. அன்று ஸ்ரீ அன்னையே நம் இல்லம் தேடி வருகிறாள் என்பதே இந்நாளின் மிகப் பெரிய சிறப்பு.

அன்றுதான் ராவணாசுரனை ஸ்ரீ ராமன் வதம் செய்தான். பாண்டவர்கள் தங்களது போரின் வெற்றிக்கு நன்றி கூறும் விதமாக அன்னை எனும் மகாசக்திக்கு, தாங்கள் போரிட்ட ஆயுதங்களை முன் வைத்து வழிபாடு செய்த நன்னாளும் இதுவே!

 இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய இந் நன்னாள் மற்றொரு விதத்திலும் மிகுந்த சிறப்புப் பெற்றதாகிறது. ஆம், இந் நன்னாளில் தான் மகா அவதார புருடர் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா மகா சமாதி அடைந்தார். அது மட்டுமல்ல ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் ஜீவ சமாதி கொண்ட தினமும் இதுவே!

ஸ்ரீ ஷிர்டி பாபாவின் வரலாறு
ஸ்ரீ சாயிபாபா

ஸ்ரீ சாயிபாபா

எங்கு, எப்போது தோன்றினார் என்பதை வரையறுக்க இயலாமல் சுயம்பு மூர்த்தமாய் அவதாரம் செய்தவர் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா. இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட முதல் அவதார புருடர். பல்வேறு லீலைகள் செய்தவர். பல மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்த்தவர். இன்றும் ஷிர்டி தலத்திற்கு தம்மை நாடி வருவோரின் பிரச்சனைகளை சுட்சுமமாக இருந்து தீர்த்துக் கொண்டிருப்பவர்.

 இந்து-இஸ்லாம் என இரு மதத்திற்கும் பாலமாய்த் தோன்றிய இம்மகான் வசித்தது ஒரு மசூதியில். கொண்டாடியது ராம நவமி உட்பட பல இந்துப் பண்டிகைகளை. ’சந்தனக் கூடு’ என்று தமிழகப் பகுதிகளில் அழைக்கப்படும் ’உரூஸ்’ ஊர்வலத்தையும்  அவர் நடத்தி வந்தார். அவர் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்ததோ ‘அல்லா மாலிக்’ என்ற அல்லாஹின் திரு நாமத்தை. இந்துக்களும் அவரது பக்தர்களாக இருந்தார்கள். இஸ்லாமியர்களும் அவர் பக்தர்களாக இருந்தார்கள். அவர் நடத்திய விழாக்களில் கலந்து கொண்டார்கள். எல்லோருக்கும் அவர் ’பாபா’. பாபா என்ற சொல்லுக்கு தந்தை என்பது பொருள்.
பாபா சமாதி (ஷிர்டி)
பாபா சமாதி (ஷிர்டி)

ஷீர்டியில் சாயி பாபா முதன்முதலில் பதினாறு வயது இளைஞனாகக் காட்சி கொடுத்த இடம், புனிதமான ஒரு வேப்பமரத்தடி ஆகும். அதுதான் குருஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மரத்தடிக்கு அருகில், பூமிக்கு அடியில் அமைந்துள்ள ஓர் அறையில்தான், தன் குரு வாழ்ந்து வந்ததாக பாபா கூறியுள்ளார். அங்கு எப்போதும் அணையா விளக்கு எரிய வேண்டும் என்பது அவரது ஆக்ஞை.

தான் தங்கியிருந்த மசூதியிலிருந்து, தான் உருவாக்கிய தோட்டத்துக்குச் செல்லும்போது குருஸ்தானத்தில் சிறிது நேரம் நின்று, தன் குருவை வணங்கி விட்டுச் செல்வது அவரது வழக்கம். குருஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ள சலவைக் கற்களால் ஆன இரு பாதங்களும், பாபாவின் படமும் அவரது வாழ்நாளிலேயே அவரது ஆசியுடன் வைத்து பூஜிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேகா என்ற ஷீர்டி பக்தருக்கு பாபா வழங்கிய சிவலிங்கம்தான் குருஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா
ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா

துவாரகாமாயீயில் பாபாவால் ஏற்றி வைக்கப்பட்ட அக்கினி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.  அதில் விறகுக் கட்டைகளைப் போட்டு எரித்துக் கொண்டிருப்பார் பாபா. அதன் முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம். தன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து ’உதி’ என்று அழைக்கப்படும் விபூதியை எடுத்துத் தருவார். இந்த ’உதி’ மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லாவித ஊழ் வினைகளையும், வியாதிகளையும், சகல பாவங்களையும் போக்கவல்லது.

எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன்.

என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன்.

எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ அவன் பாரத்தை நான் சுமக்கின்றேன்.

எவன் தன் உடல், மனம், தனம், செய்கைகள் என அனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னை தியானம் செய்கின்றானோ, எவன் தன் துன்பங்களை என்னிடம் ஒப்புவிக்கின்றானோ, எவன் சாயி நாமத்தை தினமும் ஜெபிக்கின்றானோ, அவன் பேத, பாவங்களில் இருந்து விடுபட்டு என்னையே அடைகின்றான். அவன் வேறு நான் வேறு அல்லாமல் அவனை உயர்த்துவேன்.

கலங்காதே! நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்.

இந்த ஷிர்டி மண்ணை எவன் ஒருவன் பக்தியுடன் மிதிக்கின்றானோ அவனது பாவங்கள் அனைத்தும் அவனை விட்டு நீங்கி விடும்

இவை பகவான் பாபாவின் புனித வாக்குகளாகும்.

ஷிர்டி குருஸ்தான்
ஷிர்டி பாபா குருஸ்தான்

பாபா 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி அன்று பகல் 2.30க்கு மகா சமாதி அடைந்தார். அன்று விஜயதசமி நன்னாள். பகவான் பாபா தனது மகாசமாதிக்கு விஜயதசமி புனித நாளைத் தேர்ந்தெடுத்தலிருந்தே அந்நாளின் புனிதத்தையும், பெருமையையும் நாம் அறிந்து கொள்ளலாம். வருடந்தோறும் அங்கு அப்புனித நன்னாளில் மிகச் சிறப்பாக குரு பூர்ணிமா விழா கொண்டாடப்படுகிறது.

பகவானின் ஆரத்தி உட்பட ஷிர்டி ஆலய வழிபாட்டு நிகழ்ச்சிகளை நேரடியாகக் (live) காண…

http://www.shrisaibabasansthan.org/shirdilivedarshan1.htm

பகவானின் முழுமையான வரலாறைத் தமிழில் அறிந்து கொள்ள…

http://www.shrisaibabasansthan.org/allsaicharitra(digitalisation)/Main_Tamil/t/index.htm

பகவானின் பாதம் பணிவோம். பாவங்களைக் களைவோம்.

(நாளை ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகளின் வரலாறும், அற்புதங்களும்)

 

ஞான சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

 

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வரதராஜ ஜோசியர்-மரகதம் தம்பதியனருக்கு மகவாகத் தோன்றியவர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். அவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது ஒரு கிருஷ்ணர் பொம்மையை அவர் கையால் தொட்டு வாங்க, அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தக் கூடையில் இருந்த நூற்றுக்கணக்கான பொம்மைகளும் விற்றுத் தீர்ந்து விட்டது. அதனால், ‘தங்கக் கை’ சேஷாத்ரி என்று இவர் அழைக்கப்பட்டார்.

வேதம், பாஷ்யம், ஸ்லோகம் என அனைத்தையும் சிறுவயதிலேயே நன்கு கற்றுணர்ந்த இவர், இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். சிற்றப்பாவால் அன்புடன் வளர்க்கப்பட்டார். ஆனாலும் அவரது கவனம் உலகியலில் செல்லவில்லை. ஆன்மீகத்தையே மனம் விரும்பியது. வடநாட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வந்திருந்த  பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீட்சை பெற்றார். அதன் பின் மிகக் கடுமையான யோக, தவப் பயிற்சிகளை மேற்கொண்டார். உண்ணாமல், உறங்காமல் மயானத்தில் அமர்ந்து தவம் புரிந்தார். இளம் பருவத்திலேயே ஞான வைராக்ய நிலையை அடைந்தார். அஷ்டமா சித்திகள் உட்பட பல்வேறு ஆற்றல்களும் கைவரப்பெற்றார். தாயின் மறைவுக்குப் பின் அவரது அறிவுரையின் படி திருவண்ணாமலை திருத்தலத்தை வந்தடைந்தார். ஞானியரை ஈர்க்கும் ஞான மலை தன்னுள் இவரை ஈர்த்துக் கொண்டது.

அண்ணாமலை

அண்ணாமலை

சுவாமிகள் அங்கு வாழ்ந்த காலத்தில் தம்மை நாடி வந்தவருக்கு அருளாற்றலை வாரி வழங்கினார். அவரது கை பட்டால் தொட்டது துலங்கியது. அவர் ஒரு கடைக்குள் நுழைந்து பொருட்களை வீசி எறிந்தால் அவர்களுக்கு நல்ல லாபம் கிட்டியது. அவர் ஆசிர்வதித்தாலோ, கட்டியணைத்தாலோ அவர்களது பாவம் நீங்கியது. பித்தரைப் போலவும், மனநிலை பாதித்தவரைப் போன்றும் காட்சியளித்த சுவாமிகள் முக்காலமும் உணர்ந்தவராக இருந்தார். அதேசமயம் குறுகிய நோக்கத்துடனும், தீய எண்ணத்துடனும் தம்மை நாடி வந்தவர்களை விட்டு ஒதுங்கினார். அவர்கள் கண்களுக்குப் படாமல் தனித்திருந்தார். தான் என்ற அகந்தை மிகுந்தவர்களையும், ஆணவம் பிடித்த தீயவர்களையும் மகான் புறக்கணித்தார். உண்மையான பக்தியும், அன்பும் உள்ளவர்களின் ஆன்ம முன்னேற்றத்திற்கு உதவினார். தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு அற்புதங்கள் புரிந்து பலரது கர்மவினைகள் அகல மகான் காரணமாக இருந்தார்.

மகானின் அற்புதம்
சேஷாத்ரி சுவாமிகள் எப்போதும் திருவண்ணாமலையில் உள்ள கம்பத்தடி இளையனார் மண்டப வாசலிலேயே உட்கார்ந்திருப்பார். புதிதாக வந்திருக்கும் பலரும் அவரை யாரோ ஒரு சாதாரண பரதேசி என்றே எண்ணுவர். அவரது அருமை, பெருமை தெரிந்தவர்களோ மகானின் பார்வை எப்போதும் தம் மேல் படும், தமது கர்ம வினை அகலும் என்று காத்திருப்பர்.

ஞான சத்குரு

ஞான சத்குரு

ஒருமுறை மகான் மண்டப வாயிலில் அமர்ந்திருந்தார். அப்போது பக்தர் ஒருவர், சுவாமிகளுக்கு உணவுப் பொட்டலம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்து, உண்ணுமாறு வேண்டினார். சிறிது உண்ட சுவாமிகள் உணவை மேலும் கீழும் அள்ளி இறைத்தார்.

’உணவை உண்ணாமல் ஏன் இப்படி இறைக்கின்றீர்கள் சுவாமி’ என்று கேட்டார் பக்தர். 

’பூதங்கள் கேட்கின்றன, தேவதைகள் கேட்கின்றன’ என்று சொல்லிய சுவாமிகள், மேலும் மேலும் உணவை அள்ளிக் கீழே வீச ஆரம்பித்தார்.

தான் மெத்தப் படித்த மேதாவி என்ற எண்ணம் கொண்ட அந்த பக்தருக்கு சுவாமிகளின் செய்கை மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அதேசமயம் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றியது.

’பூதமாவது, தேவதையாவது? என் கண்ணுக்கு எதுவும் தெரியலையே சாமி’ என்றார் கிண்டலாய்.

‘அப்படியா, சரி வா காட்டுகிறேன்’ என்ற சுவாமிகள், அந்த பக்தரின் புருவ மத்தியில் தனது கட்டை விரலை வைத்து அழுத்தினார். பின் ’இப்பொழுது பார்’ என்றார்.

அங்கே கோரைப் பல்லும், தொங்கிய நாக்கும், பரட்டைத் தலையுமாக மகாக் கோர உருவங்கள் பல நின்று கொண்டிருந்தன. அவை, சுவாமிகள் அள்ளி அள்ளி எறிந்த உணவை வேக வேகமாக உண்டு கொண்டிருந்தன. கிண்டலாகப் பேசிய பக்தரை அவை மிகவும் கோபத்துடன் பார்த்தன. அதைப் பார்த்த பக்தருக்கு மிகுந்த பயமாகி விட்டது. 

“அய்யோ சுவாமி, போதும், போதும். நான் தெரியாமல் கேட்டு விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கதறினார்.

சேஷாத்ரி சுவாமிகள் சிரித்துக் கொண்டே, “இப்போ புரியுதா, இனிமே இப்படிச் சந்தேகப்பட மாட்டேல்ல…”என்று சொல்லிக் கையை எடுத்தார். உடனே அந்தக் கோர உருவங்கள் மறைந்து விட்டன. சுவாமிகளின் கால்களில் விழுந்து தம்மை மன்னிக்குமாறு வேண்டினார் அந்த பக்தர்.

அதற்கு சுவாமிகள் சிரித்துக் கொண்டே, “பட்டா தான் சில பேருக்கு புத்தி வரும் போல இருக்கு. போ போ. இந்த மலையை தினம் சுத்தி வா. உனக்கு நல்லது நடக்கும்.” என்று சொல்லி விட்டு வேகமாக வெளியே சென்று விட்டார்.

மகா சமாதி

மகா சமாதி

இவ்வாறு தம்மை அணுகிய பல்லாயிரக்கணக்கான மக்களை மலை சுற்ற வைத்த பெருமை இம் மகானுக்குண்டு. அண்ணாமலையில் கால் வைத்த நாள் முதல் தம் இறுதிக்காலம் வரை வேறு எங்கும் செல்லாது, அண்ணாமலையையே தமது இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து முக்தியடைந்த இம் மகானின் குருபூஜை மார்கழி மாதத்து ஹஸ்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. தை மாத ஹஸ்தத்தில் ஜெயந்தி விழா நடக்கிறது.

திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில், அக்னி லிங்கத்தை அடுத்து, ரமணாச்ரமத்திற்கு முன்னால் இம்மகானின் மகா சமாதி ஆலயம் அமைந்துள்ளது. அங்கு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட மகானின் சமாதிகளும் அமைந்துள்ளது.

மகான்களைத் தொழுவோம்; மனத் தெளிவு பெறுவோம்.

பிரம்ம ஞானி ஞானானந்த கிரி

ஞானானந்தர்

ஞானானந்தர்

‘தபோவனத்திற்கு என்னை நாடி வருபவர்களின் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்ளுவேன்’. ‘கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான்’. ’கலியுகத்தில் நாம சங்கீர்தத்தனமே முக்திக்கு வழி’ – இது போன்று பல்வேறு அமுத மொழிகளைத் தம்மை நாடி வந்த பக்தர்களிடையே உபதேசித்து அவர்களை நல்வழிப்படுத்திய மகான் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் வரை வாழ்ந்ததாகக் கூறப்படும் இம்மகான் கபீர்தாஸ், ஷிர்டி சாயிபாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ராமலிங்க அடிகளார், சற்குரு சுவாமிகள், விட்டோபா சுவாமிகள், ஸ்ரீ அரவிந்தர் எனப் பல மகான்களைச் சந்தித்த பெருமைக்குரியவர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்கள புரி என்னும் ஊரில் வெங்கோபா சாஸ்திரிகள்-சக்குபாய் தம்பதிகளுக்கு மகவாகத் தோன்றினார் ஸ்ரீ சுவாமிகள். இயற்பெயர் சுப்ரமண்யம். சிறுவயது முதலே ஆன்மிக நாட்டமும் இறை நம்பிக்கை உடையவராகவும் விளங்கினார். ஒருநாள் தியானத்தின் போது பேரொளியின் தரிசனம் கிட்டியது.  அவ்வொளியின் வழிகாட்டலின் பேரில் தல யாத்திரை மேற்கொண்டவர், பண்டரிபுரத்திற்குச் சென்று அங்கேயே வசிக்கலானார்.

ஒரு முறை பண்டரிபுரம் வந்திருந்த காஷ்மீர் ஜோதிர்லிங்க பீடாதிபதி ஸ்ரீ சிவரத்தின கிரி சுவாமிகள் சுப்ரமண்யத்தை தன்னுடன் அழைத்துச் சென்றார். அவரை தனது சீடனாக ஏற்றுக் கொண்டவர் வேத, வேதாந்தக் கருத்துக்களைக் கற்றுத் தந்தார். பின் தீக்ஷை அளித்து ’ஞானானந்தர்’ என்ற நாமம் சூட்டி மடாதிபதியாக நியமித்தார். அப்பீடத்தின் தலைவராக சிலகாலம் விலங்கிய ஞானானந்தர் குருவின் மறைவிற்குப் பின் வேறு ஒருவருக்குப் பட்டம் சூட்டி, மீண்டும் தல யாத்திரை மேற்கொண்டார்.

இமயமலைக்குச் சென்று பல முனிவர்களையும் ரிஷிகளையும் சந்தித்தார். அற்புத சித்துக்கள் கைவரப்பெற்றார். மூப்பையும், பிணியையும் அகற்றி நீண்ட காலம் வாழ வல்ல காய கல்ப மூலிகையை அம்முனிவர்களின் ஆசியோடு பெற்றுக் கொண்டார். பின் மீண்டும் தல யாத்திரை மேற்கொண்டவர், இலங்கை உட்பட பல இடங்களுக்கும் சென்று இறுதியில் தமிழகம் வந்தடைந்தார்.

தமிழகத்தில் சேலம், கொல்லி மலை, போளூரில் உள்ள சம்பத் கிரி மலை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தங்கி தவம் செய்தார். பின் திருக்கோவிலூர் – திருவண்ணாமலை சாலையில் அமைந்திருந்த தபோவனத்தை தமது வாழ்விடமாகக் கொண்டார்.

ஞான ஒளியுடன் ஞானானந்தர்

ஞான ஒளியுடன் ஞானானந்தர்

எப்பொழுதும் சிரித்த முகம். எளிமையான காவி உடை. சற்று பருத்த தேகம். கருணை பொங்கும் கண்கள். அனைவரையும் அரவணைக்கும் தாய் உள்ளம் – என ஸ்ரீ சுவாமிகள் அன்பின் மறு உருவாய் இருந்தார். தம்மை நாடி வருவோரின் மன இருளை நீக்கி அவர்களின் உள்ளத்தில் ஆன்ம ஜோதியை ஏற்றி வைத்தார். மேலும் வந்திருப்பவர்களின் பக்குவ நிலைக்கேற்ப அவர்களுக்கு நல்வழி காட்டினார்.

கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான் என சுவாமிகள் வலியுறுத்தினார். அகண்ட நாம பஜனை ஒருவனை ஆண்டவனிடம் கொண்டு சேர்க்கும் என்பதும், நான், எனது என்ற அபிலாஷைகளை விடுத்து ஒருவன் தன் கடமைகளைச் செய்யும் போது அதுவே யோகமும்,  தியானமும், தவமும் ஆகிறது என்பது சுவாமிகளின் அருள் வாக்காகும்.

சுவாமிகளிடம் பல்வேறு அற்புதங்கள் செய்யும் ஆற்றல் இருந்தது. ஆனால் அவற்றை அவர் அதிகம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவை ஆன்ம முன்னேற்றத்தின் படிநிலைகளில் ஒன்று என்பதே அவரது கருத்தாகும். ஆயினும் சமயங்களில் தம்மை நாடி வந்த் சிலருக்கு அவர்கள் எதிர்காலம் குறித்து, வேலை, தொழில், திருமணம், குழந்தைகள் குறித்து, பின்னால் நடப்பதை முன்னரே தனது ஞான திருஷ்டியால் கணித்து சுவாமிகள் கூறியிருக்கிறார்.

சுவாமிகள் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவருக்கு பல முறை பற்கள் முளைத்துக் கீழே விழுந்தது என்றும், ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்சி அளித்திருக்கிறார் என்றும் அவரது வரலாறு தெரிவிக்கிறது.

இவ்வாறு பல்வேறு உண்மைகளை பக்தர்களுக்கு உபதேசித்து அவர்களை ஆன்ம வழிக்குத் திருப்பிய மகான் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் 1974 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று, மகா சமாதி அடைந்தார். திருக்கோவிலூர் அருகே உள்ள தபோவனத்தில் அவரது சமாதி ஆலயம் அமைந்துள்ளது. இன்றளவும் ஆன்ம ஞானம் தேடி வருவோர்க்கு அமுதூட்டும் அருள் ஆலயமாய் அது விளங்கி வருகிறது.

சித்தயோகி சிவஸ்ரீ படே சாஹிப்

எத்தனையோ மகான்கள் இம்மண்ணில் அவதரித்து மக்களின் நலன் ஒன்றையே தமது குறிக்கோளாகக் கொண்டு உழைத்திருக்கின்றனர். தம்மை நாடி வரும் மக்களின் வல்வினைகளைப் போக்கி வாழ்வு சிறக்க வகை செய்திருக்கின்றனர். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் சிவ ஸ்ரீ படே சாகிப். பிறப்பால் இஸ்லாமியராகக் கருதப்படும் இம்மகானின் புனித வராலாறு மதம் கடந்து மனிதம் போற்றுவதாய் உள்ளது.

நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். அது போல இம்மகான் எங்கு, எப்போது தோன்றினார் என்பது குறித்து சரிவர அறிய இயலவில்லை. ஆனால் பல வெளிநாடுகளில் வசித்து பின்னர் இந்தியா நோக்கி, குறிப்பாக தமிழகத்தை நோக்கி வந்து வாழ்க்கை நடத்தியவர் என்பது தெரிகிறது. தமிழகத்தில் சில காலம் வசித்தவர் பின்னர் புதுச்சேரிக்குச் சென்று வசித்தார். கிட்டத்தட்ட நூற்றிற்கும் மேற்பட்ட சித்தர்களும், மகான்களும் புதுவையிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் ஜீவ சமாதியில் எழுந்தருளியுள்ளனர். புதுச்சேரியை அடுத்த திருக்கனூரில் சில காலம் வசித்து வந்த மகான், பின்னர் கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் பகுதியை தனது இருப்பிடமாக அமைத்துக் கொண்டார்.

நடுத்தர உயரம். சிவந்த நிறம். தலையில் ஒரு குல்லா. இடுப்பில் ஒரு அரையாடை. அருள் பொங்கும் முகம். கருணை ததும்பும் விழிகள். சதா ஏதேனும் மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வாய் என அவரது தோற்றம் மக்களுக்கு வியப்பைத் தந்தது. மகானோ மகா மௌனியாய் விளங்கினார். யாரிடமும் எதுவும் பேசமாட்டார். அவரது விழி நோக்கமே அவரை நாடி வருபவர்களுக்கு அரு மருந்தாய் விளங்கியது. தம்மை நாடி வருபவர்களின் நோய் நொடிகளைத் தீர்ப்பதில் மகான் தன்னிகரற்று விளங்கினார். விபூதி கொடுத்தே பலரது நோய்களைக் குணமாக்கினார்.

சின்னபாபு சமுத்திரத்தில் இருக்கும் மகான் அவ்வப்போது அருகில் உள்ள திருக்கனூருக்குச் செல்வார். சில சமயங்களில் மகான் எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது கூட யாருக்கும் தெரியாது. திருக்கனூரில் இருக்க மாட்டார். சின்னபாபு சமுத்திரத்திலும் இருக்க மாட்டார். சூட்சும உடலில் உலவிக் கொண்டிருப்பார். பல்வேறு சித்துக்கள் கைவரப் பெற்ற இவர், ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் காட்சி அளித்துள்ளார்.

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அருகில் ஒரு மண் கலயமும், சிறு பானை மற்றும் கொட்டாங்குச்சிகளும் இருக்கும். அதில் சில பச்சிலைகளும், புனித நீரும் இருக்கும். தம்மை நாடி வருபவரின் குறைகளை செவிமடுத்துக் கேட்பார். சிலரை அருகே உள்ள மகிழ மரத்தை அப்பிரத்ட்சணமாகச் சுற்றி வரும் படி சாடையாகக் கூறுவார். அவ்வாறு அவர்கள் சுற்றி வந்ததும் அவர்களின் கண்களையே உற்றுப் பார்ப்பார். சிலர் அந்த கருணை விழிகளின் தீட்சண்யம் தாங்காது மயங்கி விழுவர். சிறிது நேரத்தில் விழித்து எழுந்ததும் தமது நோய் முற்றிலுமாக நீங்கி இருப்பதை அறிந்து மகானை வணங்கி மகிழ்வர். சிலர் மகானை வணங்கி விபூதிப் பிரசாதம் பெற்று அணிந்ததுமே தமது நோய் நீங்கியதை அறிந்து மகானைத் தொழுவர். மற்றும் சிலருக்கு மகான் தன் கையால் ஒரு சிறு கொட்டாங்குச்சியில் நீரை அளிப்பார். அதை அருந்தியதுமே அவர்களைப் பீடித்திருந்த நோய்கள் விலகி விடும். குறைகள் அகன்று விடும். சிலருக்கு தமது கைகளால் தீண்டி ஆசிர்வதிப்பார். சிலருக்கு தாம் இமயமலைக் காடுகளில் சுற்றித் திரிந்த போது கண்டறிந்த பச்சிலைகளை அளித்து நோய் தீர்ப்பார். இவ்வாறு பலதரப்பட்ட மக்களின் நோயினை நீக்கும் ஒரு மகாபுருஷராக மகான் சிவஸ்ரீ படே சாகிப் விளங்கி வந்தார்.

’சாஹிப்’ என்றால் உயர்ந்தவர் என்பது பொருள். ’படே’ என்றால் பெரிய என்பது பொருள். தன் பெயருக்கேற்றவாறி மிகப் பெரிய சித்தயோகியாக, தவ புருஷராக விளங்கி வந்தார் சிவ ஸ்ரீ படே சாஹிப். சிவ ஸ்ரீ என்னும் அடைமொழிக்கேற்ப, இமயமலையில் தாம் தவம் செய்து கொண்டிருந்த காலத்தில் பல ஆண்டுகளாக, பல அடிகள் ஆழத்தில் புதைந்திருந்த உளி படாத “நிஷ்டதார்யம்” என்னும் கல்லை தனது ஆழ்நிலை தியானத்தின் மூலம் கண்டறிந்து, அதனை இறையருளால் வெளிக் கொணர்ந்து அழகிய லிங்கமாக உருவாக்கி, தம்மை நாடி வரும் மக்கள் வழிபடுவதற்காக, தாம் வசித்த இடத்திற்கு அருகிலேயே அருணாசலேஸ்வரர் ஆலயமாகப் பிரதிஷ்டை செய்தார்.

மகானின் அற்புதங்கள்
ஒருமுறை கட்டிலோடு ஒரு சிறுவனை நான்கு அன்பர்கள் வேகவேகமாக தூக்கிக் கொண்டு வந்தனர். மகானின் அருகே வந்ததும் கட்டிலை இறக்க முற்பட்டனர். அவ்வளவுதான் மகான் மிகுந்த சீற்றத்துடன் அருகில் உள்ள ஒரு கம்பினை எடுத்து வந்தவர்களை விரட்டத் தொடங்கினார். அவர்களும் பயந்து போய் கட்டிலை அப்படியே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். கட்டிலில் படுத்திருந்த சிறுவனும் பயந்து போய் மகானிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேகமாக ஓட ஆரம்பித்தான். மகானும் வேக வேகமாக அவனைத் துரத்த, அவனும் வேக வேகமாக ஓட ஆரம்பித்தான். உடனே மகான் அமைதியாக அருகில் உள்ள மரத்தடியில் அமர்ந்து விட்டார்.

மகான் ஏன் இப்படிச் செய்தார் என்று புரியாமல் ஓடிக் கொண்டே திரும்பிப் பார்த்தவர்கள், தங்களைத் தொடர்ந்து கட்டிலில் தூக்கி வந்த சிறுவனும் ஓடி வருவது கண்டு ஆச்சர்யம் கொண்டனர். அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். காரணம், பிறந்தது முதல் இதுநாள் வரை நடக்கவே நடக்காத, கால்கள் செயலிழந்த சிறுவன் அவன். அவனைக் குணப்படுத்தவே அவர்கள் மகானிடம் அவனைத் தூக்கிக் கொண்டு வந்தனர். தங்களிடம் கோபப்படுவது போல் நடித்து சிறுவனின் குறையைப் போக்கிய மகானின் கால்களில் வீழ்ந்து அனைவரும் வணங்கினர் மகானோ ஏதும் அறியாதவர் போல் எங்கேயோ பார்த்துக் கொண்டு மரத்தடியில் அமைதியாக வீற்றிருந்தார்.

இவ்வாறு பற்பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களுக்கு பல்வேறு நன்மைகள் புரிந்த மகானின் ஜீவ சமாதி விழுப்புரம் – பாண்டிச்சேரி சாலையில் சின்னபாபு சமுத்திரம் அருகே அமைந்துள்ளது. வியாழக்கிழமை தோறும் இந்து, இஸ்லாமிய மக்கள் இங்கே திரளாக வந்து வழிபடுகின்றனர். மனநோய், செய்வினை, ஏவல் கோளாறுகள் போன்றவை நீங்கும் தலம் என ஆலய அறிவிப்பு தெரிவிக்கின்றறது. இது இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சமாதி ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மகான்களைத் தொழுவோம்; மன வளம் பெறுவோம்.

தேசிகரின் வாழ்வில்….

ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

“அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்பது மாணிக்கவாசகரின் வாக்கு. அதற்கேற்ப அந்த இறைவனின் அருளோடும் ஆசியோடும் பிரம்ம ஞானியாக உயர்ந்தவர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர். திருவண்ணாமலையை நாடி வந்த முதல் ஞானி என்ற பெருமையையுடைய இம்மகான், 1750 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள ராயவேளூர் என்ற ஊரில் தோன்றியவர். இயற்பெயர் கந்தப்பன்.

 சிறு பருவத்திலேயே சகல சாஸ்திரங்களையும், புராண இதிகாசங்களையும் கற்றுத் தேர்ந்த இம்மகான் பருவ வயதை அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளாது, பெற்றோரின் உத்தரவு பெற்று துறவறம் பூண்டார். பல தலங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார். பல சாதுக்களின் மடங்களுக்கும், ஜீவ சமாதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். பின் சிதம்பரம் தலத்தை அடைந்தவர் அங்கு வாழ்ந்த பிரம்ம யோகி ஸ்ரீ மௌனகுரு சுவாமிகளிடம் தீட்சை பெற்றார். குருவின் பாதங்களைப் பணிந்து, அவரிடமே பல ஆண்டுகாலம் இருந்து வேத, வேதாந்த உண்மைகள், ப்ரம்ம தத்துவங்கள், உலக வாழ்க்கை ரகசியங்கள் என சகலத்தையும் கற்றுத் தேர்ந்தார். பல்வேறு சித்துக்களும் கைவரப் பெற்ற இவர் மிகச் சிறந்த அனுபூதிச் செல்வரானார். தன் குருவின் ஜீவ சமாதிக்குப் பின் மீண்டும் தனது தல யாத்திரையைத் துவக்கினார்.

“ஜனனாத் கமலாலயே” என்று சிறப்பிக்கப்படும் முக்தி தரும் தலங்களில், பிறக்க முக்தியைத் தரும் தலமான திருவாரூருக்குச் சென்றார். அங்கே சிறந்த தவயோகியும், சித்த புருஷர்களில் ஒருவரும், இறைவனின் காட்சியையும், அம்பிகையின் அருளையும் நேரே பெற்றவருமான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். பின் நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் என்ற ஊரை அடைந்து அங்கு உறையும் சிங்கார வேலனைத் தரிசனம் செய்தார். பின் அங்கே எப்பொழுதும் பிரம்ம நிஷ்டையிலேயே இருப்பவரான ‘உகண்ட லிங்க ஞான தேசிகர்’ என்னும் மகா குருவின் ஆசியையும் பெற்றார். பின் தனது பயணத்தைத் தொடங்கிய ஸ்ரீ தேசிகர், திருவண்ணாமலைக்கு அருகே உள்ள, வேட்ட வலம் என்ற ஊரை அடைந்தார். அங்கு சில காலம் தவம் செய்தார். பின்னர் திருவண்ணாமலை தலத்தை அடைந்து நீண்ட காலம் தவம் செய்து வந்தார்.

ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

விஷமிகளாலும், போலி பக்தர்களாலும் இவரது தவத்திற்கு ஊறு நேராமல் காப்பதற்காக ஸ்ரீ அண்ணாமலையாரும் ஸ்ரீ உண்ணா முலையம்மனும் புலி உருவில் வந்து இவரைக் காவல் காத்தனர் என்பது வரலாறு. விஷமிகள் எவரேனும் அப்பகுதிக்கு வந்தால் புலிகள் உரத்த குரலில் உறுமி அவர்களை பயமுறுத்தி விடும். அதனால் அவர்கள் அப்பக்கம் வரத் தயங்குவர். நல்ல எண்ணம் கொண்ட பக்தர்கள் வந்தால் அப்புலிகள் தாமாகவே அவ்விடம் விட்டு நீங்கி விடும். சில சமயம் ஸ்ரீ தேசிகரும் அப்புலிகளை அன்புடன் தடவிக் கொடுத்து, அவ்விடத்திலிருந்து போகச் சொல்வார். இதனால் தேசிகரின் பெருமை பல இடங்களிலும் பரவியது. இவரது பெருமையைக் கேள்வியுற்று பலரும் அவரை நாடி வந்தனர். மகானும் தனது தவ ஆற்றலால் தம்மை நாடி வந்தவர்களது நோய், நோடிகளை  நீக்கினார். வல்வினைகளைப் போக்கினார். பலருக்கு ஞானகுருவாக இருந்து அவர்கள் தம் ஆன்ம வளர்ச்சி உயர வழி வகுத்தார்.

ஸ்ரீ தேசிகரது தலையாய சீடர்களுள் ஒருவராக விளங்கியவர் ஐடன் துரை. இவர் பிறப்பால் ஆங்கிலேயரானாலும் மனத்தால் இந்தியராக வாழ்ந்தவர். தன்னிடம் உள்ள நிலங்களையும், பெரும் சொத்துக்களையும் ஸ்ரீ அருணாசலேசுவரர் ஆலயத்திற்கு அளித்ததுடன் பல உற்சவங்களையும் முன்னின்று  நடத்தினார். அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்காக தம் சொந்தச் செலவில் பல்வேறு திருப்பணிகளை மேற் கொண்டார். வருடம் தவறாமல் அண்ணாமலையாரின்  தீபத் திருவிழாவில் கலந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்த ஐடன் துரை, அண்ணாமலையாரின் தேர்த் திருவிழாவினையும் மிக விமர்சையாக நடத்தி வந்தார்.

ஒருநாள்.. அண்ணாமலை தீபத்தைக் காண மிக ஆவலோடு தனது குதிரையில் வந்து கொண்டிருந்தார் துரை. ஆனால் அப்போது  பலத்த மழை பெய்திருந்ததால், அவர் வரும் வழியில் ஆற்றில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றைக் கடந்து தான் அண்ணாமலைக்குச் வர வேண்டும். ஆனால் பெருகிய வெள்ளத்தினால் ஆற்றைக் கடக்க இயலவில்லை. சற்று நேரம் யோசித்த  துரை, ‘சத்குரு நாதா, என் ஞானகுருவே நீயே உற்ற துணை!’ என்று கூறிக்கொண்டே குதிரையுடன் ஆற்றில்  இறங்கிவிட்டார். அவருடன் வந்தவர்களோ பயந்து போய் பின்வாங்கி விட்டனர்.

அதே சமயம், தியானத்தில் ஆழ்ந்திருந்த ஈசான்ய ஞான தேசிகர் திடுக்கிட்டு தியானம் கலைந்து, தனது கையைச் சிறிது தென்புறமாகத் தாழ்த்திப் பின் உயர்த்தினார். அது கண்ட பக்தர்களில் சிலர் ஆச்சர்யத்துடன் அவரிடம் காரணத்தை வினவினர். ஸ்ரீ தேசிகரோ அதற்கு, ‘நம் அடியவர் ஆற்றில் விழுந்தால் நாமே காப்பாற்ற வேண்டுமாம்!’ என்று  கூறி விட்டு, மீண்டும் நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்.

சில மணி நேரம் சென்றது. ஆற்றில் இறங்கிய குதிரையும், ஐடன் துரையும் எந்த விதச் சேதமும் இல்லாமல் கரையேறினர். ஐடன் துரை, குருநாதரை தரிசித்து, அவர்தம் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். நடந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற பக்தர்கள் ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகரின் அளப்பரிய ஆற்றலையும், ஐடன் துரையின் குரு பக்தியையும் கண்டு வியந்தனர்.

ஸ்ரீ ஞான தேசிகர், அண்ணாமலையை விட்டு வேறு எங்கும் செல்லாது அங்கேயே தொடர்ந்து தவம் செய்து வந்தார். அந்த இடம் மலையின் வடகிழக்குப் பகுதியில் இருந்ததாலும், அது ஈசான்ய திசையைக் குறிக்கும் இடமாக இருந்ததாலும், அப்பகுதி நாளடைவில் ‘ஈசான்ய மடம்’ என்று அழைக்கப்படுவதாயிற்று. ஸ்ரீ தேசிகரும் ’ஈசான்ய ஞான தேசிகர்’ என்று அழைக்கப்பட்டார். இவ்வாறு பல ஆண்டுகாலம் தவம் செய்த இம்மகான் 1829 ஆம் ஆண்டு, மார்கழி மாதம் 26 ஆம் தேதி மகா சமாதி அடைந்தார். அவரது உடல், அவர் எப்போதும் தவம் செய்து வந்த வில்வ மரத்தின் அடியிலேயே சமாதி செய்விக்கப் பெற்றது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையின் இறுதியில், ஈசான்ய லிங்கத்திற்கு எதிரில், ஸ்ரீ அம்மணி அம்மாள் சமாதி ஆலயத்தை அடுத்துள்ள ஈசான்யக் குளக்கரையில் அமைந்துள்ளது இச்சமாதி ஆலயம். ரமணர் உட்படப் பல மகான்களால் புகழப் பெற்ற இந்த ஸ்ரீ ஈசான ஞான தேசிகர் மடம், அளவற்ற ஆன்ம அமைதியையும், அற்புத ஆற்றல்களை தரக் கூடியது. பல மகான்களின் ஜீவ சமாதிக்களையும், ஆன்ம அருளையும் தன்னகத்தே கொண்டது.

மகான்களின் பெருமை எண்ணவும் இனிதே!

ரமணரின் வாழ்வில்…

பகவான் ரமண மகரிஷி
பகவான் ரமண மகரிஷி

‘ஒருவன் தன்னைத் தான் அறிந்து கொள்ளுதலே, இறைவனை அறிந்து கொள்வதற்கு முதற்படியாகும்’ என்ற ஞான உபதேசத்தை அருளியவர் பகவான் ரமணர். பாலப் பருவத்திலேயே திருவண்ணாமலையைத் தேடி வந்து தஞ்சம் புகுந்தவர். தனது இறுதிக் காலம் வரை அண்ணாமலையை விட்டு நீங்காதவர்.

ரமணர் விருபாஷிக் குகையில் தங்கி இருந்த காலம். ஒரு நாள் மாலை வேலையில் திரளாக பக்தர்கள் கூட்டம் வந்திருந்தது. வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக ஸ்ரீ பகவானை தரிசித்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் திடீரென மழை பொழியத் துவங்கியது. மெதுவாக ஆரம்பித்த மழை பேய் மழையாகக் கொட்டித் தீர்த்தது. தரிசிக்க வந்தவர்கள் யாரும் கீழே இறங்கிச் செல்ல முடியாத நிலை. மாலை கடந்து இரவும் வந்து விட்டிருந்தது. இரவு எட்டு மணியைக் கடந்து விட்டதால் ஒவ்வொருவருக்கும் நல்ல பசி ஏற்பட்டது. ஆனால் அத்தனை பேருக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை. பகவானின் அடியவரான பழனிசாமிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பகவானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பகவானும், ‘சரி, சரி மழை விடுவதாகத் தெரியவில்லை. இவர்களோ பாவம் பசிக்களைப்பில் இருக்கிறார்கள். அதனால் இருக்கும் உணவை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடு’ என்றார்.

உடனே பழனிசாமி உணவை  சிறு சிறு உருண்டையாக உருட்டி வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கத் தொடங்கினார். அவர்களும் அந்தச் சிறு கவளங்களை ரமணப் பிரசாதமாக நினைத்து வாங்கி உண்டனர். மூன்று பேருக்கு மட்டுமே வைத்திருந்த அந்த உணவு கிட்டத்தட்ட முப்பது பேர்களுக்கு சிறு சிறு உருண்டைகளாக்கிப் பகிர்ந்தளிக்கப்பட்டது. சற்று நேரத்தில் அனைவருக்கும் வயிறு நிறைந்து விட்டதுடன் அறுசுவை உணவு உண்ட திருப்தியும்  ஏற்பட்டது. தண்ணீர் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு வயிறு நிறைந்திருப்பதைக் கண்டு ‘எல்லாம் ரமணரருள்’ என்று எண்ணித் தொழுதனர் பக்தர்கள்.

எல்லாவற்றிற்கும் காரண சூத்ரதாரியான ரமணரோ ஒன்றும் பேசாமல் எங்கோ மௌனமாய் நோக்கிக் கொண்டிருந்தார். எதிலும் பற்றற்று இருப்பது தானே ஞானிகளின் இயல்பு.

*******************

 சதா ஞான நிலையிலேயே பகவான் இருந்து வந்த போதிலும் ஆசிரம வாழ்வில் அவருடைய நகைச்சுவை உணர்விற்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை.

ஒருநாள்…  விடியற்காலை மூன்றுமணி இருக்கும். மகரிஷியை பார்க்கச் சிலர் ஆசிரமத்திற்கு வந்தனர்.  ஆசிரமத்தில் யாரையும் காணாததால், அவர்கள் நேரே சமையல் நடக்கும் இடத்திற்குச் சென்றனர். அங்கே ஆசிரம சமையல் பாத்திரங்களை ஒருவர் மெதுவாகக் கழுவிக்கொண்டிருந்தார். அவரிடம்,  ‘ஐயா இங்கே பகவான் ரமணர் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டனர்.

அதற்கு அந்த மனிதரும், ’ஓ, ரமணரா, இதோ இருக்கிறாரே, இதுதான் ரமணர்’ என்று சொல்லி, தான் கழுவிக் கொண்டிருந்த அண்டாவை அவர்களிடம் காண்பித்தார். வந்தவர்களோ அவருக்குக் காது கேட்காதோ என நினைத்துக் கொண்டு, மீண்டும் அதையே கேட்டனர்.

அதற்கு அந்த மனிதர் மீண்டும் தன் கையில் இருந்த அண்டாவைக் காட்டி,  ‘பாருங்கள்,  இதுதான் ரமணர். ரமண மகரிஷி என்று பேர் கூடப் பொறித்திருக்கிறார்களே, உங்களுக்குத் தெரியவில்லையா?’ என்றார்.

வந்தவர்கள்,  இவர் யாரோ சித்த சுவாதீனமில்லாத மனிதர் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டு தரிசன ஹாலுக்குச் சென்று அமர்ந்து கொண்டனர்.

பொழுது விடிந்தது. சற்று நேரத்தில் ‘பகவான் வருகிறார், பகவான் வருகிறார்’ என்ற குரல் கேட்டது.

அனைவரும்  மரியாதையுடன் எழுந்து நின்று பார்த்தனர், அங்கே பாத்திரம் தேய்த்த அந்த மனிதர் வந்துகொண்டிருந்தார்.

அவர் தான் பகவான் ரமணர் என்று அறிந்து கொண்டதும் அவர்களுக்கு வியப்பு தாளவில்லை. அதே சமயம், பகவான் ஏன் தங்களிடம் அப்படி நடந்து கொண்டார் என்று அறிய விரும்பினர்.  அவரை அணுகிக் காரணம் கேட்டனர்.

அதற்கு பகவான்,  ‘நான்தான் பகவான்னு நெற்றியில எழுதி ஒட்டிக் கொண்டா இருக்க முடியும்.?’ என்று கேட்டார், புன் சிரிப்புடன். பின், ‘நான் என்பது இந்த உடலல்ல; இதைத் தான் நான் இத்தனை வருடங்களாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன். அப்படிச் சொல்லியும் என்ன பயன், எல்லோரும் அதை  உணராமல் இருக்கிறீர்களே!’ என்றார் வருத்ததுடன்.

தங்களுக்காக வாழாமல் பிறர்காகவே வாழ்ந்ததால்தான் அவர்கள் மகான்கள் என்று போற்றப்படுகின்றனர்.

மகான்களின் பெருமை பேசவும் இனிதே!

*******************

ரமணரின் உபதேசங்கள்:

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.

கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட  கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.

தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.

குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.

ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ள அதுவே மிகவும் முக்கியம்.

*******************

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

*******************

 

 

ஸ்ரீ அன்னை அருள்

 ஸ்ரீ அன்னையிடம் சில கேள்விகள்

ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னை

 

 குழந்தைகள் திடீரென்று தொடர்ந்து அழுவது ஏன்?

 நம் பார்வைக்குப் புலனாகாத பல விஷயங்கள் குழந்தைகளின் பார்வைக்குப் புலனாகின்றன. அவற்றைப் பார்த்ததும் அவை திகிலடைவதாலும், அவற்றைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லும் அறிவு குழந்தைகளுக்கு இல்லாததாலும், அவை அச்சத்தால் தொடர்ந்து அழுகின்றன.

ஸ்ரீ அன்னையும் ஸ்ரீ துர்க்கையும்:

  தன் முன் பிரசன்னமான ஸ்ரீ துர்க்கையிடம் ஸ்ரீ அன்னை: “மக்களின் வழிபாட்டுக்குள்ளாவதற்குப் பதிலாக நீ ஏன் பரம்பொருளை வழிபடக் கூடாது?”

 ஸ்ரீ துர்க்கை: “அப்படியே”

 ”நான் உங்கள் செயற்கருவியாக இயங்க இசைவளியுங்கள் பரம்பொருளே” என பரம்பொருளிடம் ஸ்ரீ துர்க்கை வேண்டினாள்.

பால் பிரண்டனும் ஸ்ரீ அன்னையும்:

 எப்பொழுதாவது, யாராவது ஒருவருடன் அமர்ந்து தியானம் செய்யும் நிலை ஏற்பட்டால், அவருக்கு உறுதுணையாக உள்ள சக்திகளைப் பற்றியும், தேவதைகள் பற்றியும்  கண்டுணர்வது ஸ்ரீ அன்னையின் வழக்கம்.

அது போன்று திரு. பால்பிரண்டன்  அவர்களுடன் தியானம் செய்யும் பொழுதும் ஏற்பட்டது. ஒரு சக்தி அவரைக் காத்து வருவதை ஸ்ரீ அன்னை உணர்ந்தார்.

ஸ்ரீ அன்னை அவரிடம் ‘எவ்வளவு காலமாக அச்சக்தி உடனிருக்கிறது’ என வினவினார். அதற்கு பிரண்டன் “பத்து வருடங்கள்” என பதிலளித்தார்.

ஸ்ரீ சாயிபாபாவும் ஸ்ரீ அன்னையும்

மேல் நாட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் ஸ்ரீ சத்ய சாயிபாபாவைத் தரிசித்து விட்டு ஸ்ரீ அன்னையின் ஆசி பெற வந்திருந்தார். பாபாவால் தனக்கு அளிக்கப்பட்ட ஒரு மணிமாலையை அன்னையிடம் காட்டி  அதன் தன்மை பற்றி விளக்கக் கோரினார். அன்னை அதனை தன் உள்ளங்கையில் வைத்திருந்து விட்டுப் பின்னர் கூறினார் ” இது மறைவியல் வித்தை மூலம் தருவிக்கப்பட்டது”. மேலும் அந்தப் பேராசிரியர் சாயிபாபாவைப் பற்றி அன்னையின் கருத்தைக் கேட்டதற்கு ஸ்ரீ அன்னை சொன்னார், ” ஒரு குரு மற்றொரு குருவை விமர்சிப்பதில்லை”

காவ்ய கண்ட கணபதி முனிவரும் ஸ்ரீ அன்னையும்

ஸ்ரீ ரமணரின் தலையாய சீடரான காவ்ய கண்ட கணபதி முனிவருடன் தியானம் செய்யும் பொழுது, அறையுள் இருந்த தீய சக்திகள் விலகி ஔடுவதையும், ஒரு சக்தி அவரைக் காத்து வருவதையும் ஸ்ரீ அன்னை உணர்ந்தார். தான் வேறு எவருடன் தியானம் செய்த பொழுதும் இவ்வளவு ஆழ்ந்த நிலைகளை எட்டியதில்லை என ஸ்ரீ அன்னை பின்னர் கூறினார்.

மற்றொரு முறை ஒரு சாதகருடன் தியானம் செய்யும் பொழுது அவர் தலையைச் சுற்றி ஐந்து தலை நாகம் படமெடுத்து நிற்பதை ஸ்ரீ அன்னை கண்டார். பின்னர் அவர் ஒரு கிருஷ்ண பக்தர் என்றும், தியானத்தில் உயர் நிலையை அடைந்தவர் என்பதையும் அன்னை கண்டறிந்தார்.

« பழைய வரவுகள்