ஸ்ரீ அன்னையும் மலர்களும்

அன்னையின் மலர் வழிபாடு

ஸ்ரீ அன்னை

அன்னை வலியுறுத்திய வழிபாடுகளில் மிக முக்கியமானது மலர் வழிபாடு. அன்னைக்கு மலர்களின் மீது அளவற்ற விருப்பம் உண்டு. அதன் தூய்மை, புத்துணர்ச்சி, அழகு, சுயநலமின்மை ஆகியவற்றைப் பற்றி அவர் புகழ்ந்துரைத்திருக்கிறார். ஆசிரமத்தில் தானே ஒரு தோட்டத்தை உருவாக்கி அதில் அழகான பல மலர்களை நட்டு தம் இறுதிக்காலம் வரை பராமரித்து வந்திருக்கிறார். ‘மலர்கள் இயற்கை அன்னையின் எழில் மிகு வடிவங்கள்’ என்பது ஸ்ரீ அன்னையின் கருத்தாகும்.

ஸ்ரீ அன்னை, சுமார் எண்ணூறிற்கும் மேற்பட்ட மலர்களைப் பற்றி, அவற்றை வைத்து இறைவனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் பற்றி சாதகர்களிடம் தெரிவித்திருக்கிறார். அவற்றைப் பற்றி நாமும் தெரிந்து கொண்டு பயனடைவோம்.

____________________________________________________________________________________________
மலர்                              பலன்
____________________________________________________________________________________________

ரோஜா                 குறைகள் விலகும். தடைகள் அகலும். வெற்றி தரும்

மல்லிகை          சோதனைகள் நீங்கும்,  இன்பம் பெருகும்

துளசி                     மனத்தூய்மை பெருகும். பக்தி சிறக்கும்

சாமந்தி               வலிமை, புது சக்தி உண்டாகும். பகைகள் விலகும்

செம்பரத்தை      தெய்வீக அன்பு கிடைக்கும்

நித்திய கல்யாணி          முன்னேற்றம் தரும்.

எருக்கம்பூ              வல்லமை, தைரியம், மன உறுதி தரும்

செந்தாமரை          தெம்பு, வலிமை, புத்துணர்ச்சி, உயர்வு தரும்

வெண்தாமரை        தெய்வீக உணர்வு மேம்படும். மன மாசுக்கள் அகலும்

காகிதப்பூ              பாதுகாப்பு உணர்வு மிகும்.

வாடாமல்லி    நோயற்ற தன்மை, ஆயுள் விருத்தி, ஆபத்துக்கள் விலகும்

செவ்வரளி        தவறுகள் விலகி, ஒழுங்குகள் ஏற்படும்

மரிக்கொழுந்து       வெற்றியைத் தரும்

பவழ மல்லி             நியாயமான ஆசைகள் நிறைவேறும்

நந்தியாவட்டை     புத்துணர்ச்சி தரும். மனத்தூய்மை உண்டாகும்

ஸ்ரீ அன்னையைப் பணிவோம். ஆனந்தம் பெறுவோம்.

பகுத்தறிவும் ஆன்மீகமும்

அன்பார்ந்த கோபி,

 நேற்றைய ஞான சத்குரு சேஷாத்ரி சுவாமிகள்  பதிவில் மறுமொழியாக வந்த உங்கள் கேள்வி இது….

அன்பார்ந்த ஐயா,

வணக்கம். அப்போ பூதம், தேவதைகள் எல்லாம் இருக்குன்னு நீங்க சொல்றீங்க இல்ல. சரி, மகான் கண்ணுக்குத் தெரியுற அவுங்க ஏன் சாதாரண மனுஷங்க கண்ணுக்கு தெரிய மாட்டேங்குறாங்க.. அப்படி என்ன அதுல பெரிய ரகசியம் இருக்கு. எனக்கு இதை நம்ப முடியலை.

இந்தப் பௌதிக உலகில் எந்த ஒன்றுமே ஏதேனும் ஒரு புலன்கள் வழியாக உணரப்பட்டே நம்மை அடைகின்றன. கண்,காது, வாய், மூக்கு, தோல் என்று இவற்றால் உணரவப்படுவது மட்டுமே நம்மால் அறிய முடிவது. இவற்றுக்கு அப்பாற்பட்டு ஏதாவது இருப்பதாகச் சொன்னால் அவற்றை மெய்ப்பிக்க விஞ்ஞான பூர்வ ஆதாரம் வேண்டும். இல்லாவிட்டால் அதனை உண்மை என்று ஏற்க முடியாது.

காற்றை நாம் கண்ணால் காண முடியாவிட்டாலும் இலைகள் அசைவின் மூலம் உணருகிறோம். மின்சாரத்தை நாம் நேரடியாகக் காண முடியாவிட்டாலும் விளக்கின் ஒளி, மின்விசிறி, கணிணி, குளிர்சாதனப் பெட்டி என்று பல விதங்களில் அதன் பயன்பாடுகளை உணருகிறோம்.

நீங்கள் குறிப்பிடும் பேய், பிசாசு, பூதங்கள், தேவதைகளை எப்படி உணர்வது?, அவை எங்கே இருக்கின்றன?, அவையும் நம்மைப் போலச் சாப்பிடுமா? தூங்குமா? குளிக்குமா? காதல், காமம் செய்யுமா? – அடப் போங்கண்ணே நிலவுல தண்ணீர் இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணிச் சொல்லியிருக்காங்க.. நீங்க என்னடான்னா சந்திர லோகம், ஆவிகள் உலகம், பிதிரு உலகம்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. நினைக்க நினைக்க எனக்கு ரொம்பச் சிரிப்புச் சிரிப்பா வருது. ஹி… ஹி…

என் பதில்….

பொதுவாக எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலோருக்கு “தான்” என்கின்ற எண்ணமே முன் வந்து நிற்கிறது. “எதுவாக இருந்தாலும் நாங்கள் உணர்ந்தால் தான் நம்புவோம், நாங்கள் கண் கூடாகப் பார்த்தால் தான் நம்புவோம். நாங்கள் பகுத்தறிவுவாதிகள். பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட எதையுமே ஏற்க இயலாது” – இதுதான் பலரது உரத்த குரலாக இருக்கிறது.

சரி. எது பகுத்தறிவு? மனிதன் மட்டுமே பகுத்தறிவு படைத்தவன் என்று எந்த உறுதிப்பாட்டில் கூற முடியும்? மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை என்று நிச்சயமாகக் கூற முடியுமா?

ஒளி வட்டம்

ஒளி வட்டம்

மனிதன் மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்குமே ‘பகுத்தறிவு’ உள்ளது என்பதுதான் உண்மை. அந்தந்த உயிரினங்களின் பரிமாண வளர்ச்சிக்கு ஏற்றவாறு அந்த அறிவு அமைந்துள்ளது. ஒரு நாயைப் பார்த்து கல்லை விட்டு எறிந்தால் அது ஏன் ஓடுகிறது? நாம் அடிக்கப் போகிறோம் என்று தெரிந்து கொள்வதினால் தானே! அந்த உணர்வுக்குப் பெயர் என்ன? ‘அனிச்சைச் செயல்’ என்றா சொல்ல முடியும்? அதே போல் ஒரு காகத்தை விரட்டினாலும், குருவியை அதட்டினாலும் அவை பறந்து சென்று விடுகின்றனவே ஏன்? இவன் நம்மை விரட்டுகிறான், தாக்க வருகிறான் என்று அவற்றால் உணர முடிவதால் தானே, அந்த உணர்விற்குப் பெயர் என்ன? – பகுத்தறிவாகத் தானே இருக்க முடியும்? அவை வாழும் உணர்வு உலகத்திற்கேற்ப அந்தப் பகுத்தறிவானது செயல்படுகிறது. அவ்வளவுதான். அதே சமயம் அவற்றின் பகுத்தறிவை மனிதனின் பகுத்தறிவோடு ஒப்பிடுவது மதியீனம். ஏனென்றால் மனிதன் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பவன். அவன் அறிவை, அவனை விடக் குறைவான பரிணாம வளர்ச்சி கொண்ட உயிரினங்களுடன் ஒப்பிட இயலாது. எப்படிக் குறைவான பரிணாம வளர்ச்சி கொண்ட குழந்தையின் அறிவுடன், நன்கு வளர்ந்த இளைஞனின் அறிவை ஒப்பிட முடியாதோ அப்படித்தான் இதுவும்.

உண்மையைப் பார்க்கப் போனால் ஐம்புலன்களுக்குத் தான் ஐந்தறிவு. புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவான ஆறாம் அறிவைக் கொண்டவன்தான் மனிதன். ஆனால் அவற்றை உணராமல், அதைப் பயன்படுத்தத் தெரியாமல் ஐந்தறிவு படைத்த மிருகங்களைப் போலவே அவன் நடந்து கொள்கிறான். வாழ்கிறான்.

ஆவி

ஆவி

அறிய அறிய விரிவது தான் அறிவு. அறிந்து கொண்ட உண்மைகளை முன் தரவாக வைத்து, அவற்றை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து, அதன் முடிவுகளைப் பற்றிப் பேசுவது தான் அறிவியல். அறியாத அல்லது அறிய இயலாத உண்மைகளைப் பற்றி அதனால் எப்போதும் முடிவு கூற இயலாது. அதனால் தான் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் அடிக்கடி சச்சரவு ஏற்படுகிறது. ஆனால் ஒரு உண்மையை நாம் முற்றிலும் மறந்து விடுகின்றோம். புத்தம் புதியதாக, இல்லாத ஒன்றை நாம் உருவாக்கி விடவில்லை. ஏற்கனவே வேறு ஒரு ரூபத்தில் இருந்ததை தற்போழுது வெளிக் கொணருகின்றோம், அவ்வளவுதான். We are not the Creators or Inventors. We are only the Discoverers.

“இயற்கைக்கு மாறாக எதுவுமே இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது  நிச்சயம் பொய். யாராவது நிரூபித்தால் நான் ஒரு இலட்சம் ரூபாய் தருகின்றேன்.” அறைகூவல் விடுத்தார் திரு. ஆபிரகாம். டி. கோவூர். ஆனால் அவரது அறைகூவலை யாரும் ஏற்கவில்லை. அவரும் நிறைய ஆராய்ச்சிகள் செய்து, பேய், பிசாசுகள் ஆவிகள் இல்லை, எல்லாம் மனநோயின் பல்வேறு வடிவங்களே என்று சிலவற்றை நிரூபிக்கவும் செய்தார். கடவுள் என்ற ஒன்று இருக்கவே முடியாது. ஆத்மா என்ற ஒன்றெல்லாம் கிடையவே கிடையாது என்பது அவர் வாதம். ஆனால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நம்முடைய அளவிடும் திறன் என்ன? கடவுளைக் கண்ணால் காண முடியவில்லை. ‘ஆத்மா’ என்பதை உணர முடிவதில்லை. உடனே ‘எதுவுமே இல்லை’ என்று கூறிவிடுகின்றோம். நாம் பார்க்க முடியாததெல்லாம் உலகில் இல்லாத பொருள்களா என்ன?

மகான்கள் கண்ணுக்குத் தெரிகின்ற பூதம், பேய், தேவதைகள் எல்லாம் ஏன் ஒரு சாதாரண மானுடன் கண்ணிற்கு தெரிய மாட்டேன் என்கிறார்கள்.. அப்படி என்ன அதுல பெரிய ரகசியம் இருக்கு..? இது ஒருவரது கேள்வி.

சரி, ஒரு நாயின் கண்களுக்கு, ஒரு மாட்டின் கண்களுக்குத் தெரிவதை உங்களால் காண இயலுமா?( ஓ, மிருகங்களோடு ஒப்பிடக் கூடாது இல்லையா? மன்னியுங்கள். ஆனால் இங்கே வேறு வழியில்லை. அப்படிப் போய்த் தான் உண்மையை ஆராய வேண்டியுள்ளது.) சில வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட சுனாமியின் போது பல இடங்களில் பறவைகளும், ஆடு, மாடுகளும் அதை முன்னரே உணர்ந்து கொண்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தம்மைக் காப்பாறிக் கொண்டன என்ற செய்தி நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. பறவைகளும், விலங்குகளும் அதை எப்படி முன்னரே உணர்ந்து கொண்டன? அந்த உணர்விற்குப் பெயர் என்ன? மிருகங்களை விட மிக உயர்ந்த “பகுத்தறிவு” படைத்த மனிதனால் ஏன் அதை முன்னரே உணர முடியவில்லை? உணர்ந்து ஏன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை?

சில சமயம் நாய் போன்றவைகள், காதினை விடைத்துக் கொண்டு அங்கும் இங்கும் குரைத்துக் கொண்டு ஓடுவதைப் பார்க்கலாம். அவை ஏன் அப்படிச் செய்கின்றன, நமக்குத் தெரியாது. ஆனால் நம் கண்ணுக்கு எதுவும் தெரிவதில்லை. அது போன்றே மாடுகளும் சில சமயம் மிரளும். ஆனால் நம்மால் அதன் சரியான காரணத்தினை உணர இயலாது. அது ஏன்? இவ்வாறு சில மிருகங்களின் கண்ணுக்குத் தெரிவது, அவை கேட்பது, அவை உணருவது, மற்றும் சில பறவைகளின் கண்களுக்குத் தெரிவது, நம் கண்களுக்குத் தெரிவதில்லை. கேட்பதில்லை. நம்மால் உணர முடிவதில்லை. அது ஏன்? ஆராய்ச்சி செய்திருக்கிறோமா, இல்லை.

நாம் உயர்ந்த பகுத்தறிவு கொண்டவர்களாக இருந்தால் மிருகங்களை விட உயர்ந்த அறிவு நிலையில் இருப்பவர்கள் என்பது உண்மையானால் நம்மால் சுனாமி போன்ற பேரழிவுகளில் இருந்து ஏன் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விட்டது? மிருகங்களை விட நாம் மட்டமா? அல்லது நமது அறிவுத்திறனில் ஏதாவது குறைபாடு உள்ளதா?

ஆம். அதுதான் உண்மை. சில விஷயங்களில் நாம் ஐந்தறிவு உயிரினங்களை விட மிக மிக மேம்பட்ட நிலையில் இருந்தாலும், சில விஷயங்களில் அவற்றை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். அதற்கு காரணமும் உள்ளது. முக்கிய காரணம் ஒருகாலத்தில் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டிருந்த நாம், காலச் சூழல் காரணமாக அதற்கு மாறான வாழ்க்கையை நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருப்பது தான்.

நம்முடைய கேட்கும் திறன் 20-20000 டெசிபல் தான். அதற்கு மேற்பட்ட ஒலியையோ, கீழான ஒலியையோ நம்மால் கேட்க இயலாது. [இப்போதுதான் EVP (Electronic Voice Phenomenon)  முறையில் இது போன்ற ஒலிகளைப் பதிவு செய்யும் முறையில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று வருகிறார்கள்]. நுண்ணோக்கி இல்லாமல் சிலவற்றைப் பார்க்க முடியவில்லை. உடல் உறுப்புக்களைப் பார்க்க எக்ஸ்ரேயை, ஸ்கேனைப் பயன்படுத்துகின்றோம். இன்னும் தொலைநோக்கி, லேசர் என்று பல வகைகளைப் பயன்படுத்தித் தான் சிலவற்றைப் பார்த்து இன்னதென்று அடையாளம் கண்டுபிடிக்கின்றோம்.

இப்படி பார்வைத்திறனிலே குறைபாடு, கேட்கும் திறனிலே குறைபாடு என்று பலவற்றை நமக்குள் வைத்துக் கொண்டு, அமானுஷ்ய விஷயங்களை, கடவுள் போன்றவற்றை நாம் அளக்க முயன்றால் எப்படிச் சரியான விடை கிடைக்கும்? தவறான அளவு கோலால் அளக்கப்படுவது எதுவானாலும் தவறான முடிவினைத்தானே தரும்?.

ஒருகாலத்தில், இயற்கையோடு இயைந்த வாழ்வு மேற்கொண்டிருந்த காலத்தில் நமக்கு இத்தகைய திறமைகள் இயற்கையாகவே இருந்து, தற்போது பரிணாம வளர்ச்சியின் காரணமாக அவை நம்மை விட்டு நீங்கியிருந்தால்..?? இயற்கைக்கு மாறாக வாழ்ந்து நாம் அவற்றை இழந்திருந்தால்…. நம்மால் எதையும் சரிவர உணர முடியாது அல்லவா?

ஒரு வேளை கடவுள், ஆவிகள், தேவதைகள் போன்றவர்கள் காலம், இடம், பொருள் என்று எல்லாவற்றையும் கடந்த, வேறு பரிமாணத்தில் இருக்கின்றவர்களாக இருந்தால்! (அது தான் உண்மையும் கூட). நம் தவறான அளவுகோலால் எப்படிச் சரியான மதிப்பீடு பெற முடியும்? ஆகவே இதற்குத் தேவை நுண்ணிய ஆராய்ச்சி மட்டுமே. அதை விடுத்து அரை குறைக் கருவிகளை வைத்துக் கொண்டு அளப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது.

புருவ மத்தியில் மகான் கைவைத்தார். பக்தர் கண்களுக்கு பல உருவங்கள் தெரிந்தது. கையை எடுத்ததும் மறைந்து விட்டது. மகான் கண்களுக்கு மட்டும் சாதாரணமாகத் தெரியும் அவ்வுருவங்கள், பக்தருக்கு, அவரது புருவ மத்தியில் மகான் விரல் வைத்த பின் மட்டுமே ஏன் தெரிய வேண்டும். சாதாரணமாகவே பக்தரின் கண்களுக்கும் தெரிந்திருக்கலாமே, ஏன் தெரியவில்லை? – இது ஒரு சிந்தனையாளரின் கேள்வி.
நல்ல கேள்வி.

காட்சி நம் கண்ணால் காண முடியாத அளவிற்கு இருந்தால்…. அதாவது வேறு ஏதேனும் ஒரு கருவி      (தற்போது ஆவி உருவங்களைப் புகைப்படம் எடுக்கும் கேமராக்கள், வீடியோக்கள் வந்து விட்டன) மூலம் மட்டுமே காணக் கூடியதாய் இருந்தால்…..

உடலின் ஏழு சக்கரங்கள்

உடலின் ஏழு சக்கரங்கள்

மகான்கள் அந்தக் கருவிகள் ஏதும் இல்லாமலேயே பார்க்கும் அளவிற்கு பார்வைத் திறன் உடையவர்களாக இருந்தால்…..

இயற்கையோடு இயைந்த வாழ்வு, தியானம், யோகம், தவம் மூலம் அவர்கள அந்த ஆற்றலை (எல்லாவற்றையும் தெளிவாகக் காணும் பார்வைத் திறன் ஆற்றலை) வளர்த்துக் கொண்டிருந்தால்….

அவர்களால் அதை தெளிவாகக் காண இயலும் அல்லவா?

பரிணாம வளர்ச்சியின் காரணமாக, படிப்படியாக வால், உடலெங்கும் முடி, மிக நீண்ட கூரிய நகங்கள் போன்றவற்றை இழந்த நாம் இது போன்ற பல் வகை ஆற்றல்களையும் இழந்திருந்தால் நம்மால் எந்த விதக் கருவி, உபகரணம் ஏதும் இல்லாமல் எதையுமே தெளிவாகக் காண முடியாது அல்லவா?

சரி, மகான் புருவ மத்தியில் கை வைத்ததும் எப்படி அந்த உருவங்களைத் தெளிவாகக் காண முடிந்தது?

பொதுவாக நமது கண்களை ஊனக் கண் என்றும், மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண் திறப்பை ஞானக் கண் என்றும் யோகியர்கள் கூறுவர். புருவ மத்தியில் ’ஆக்ஞா சக்கரம்’ உள்ளது. குண்டலினி தவ யோகத்தின் மூலம் அதைத் தூண்ட முடியும். அல்லது ஆற்றல் பெற்ற மகான்கள், சித்தர்கள், யோகிகள் தம் தவ வலிமை மூலம் அவற்றைத் திறக்கவோ, மறைக்கவோ முடியும். அந்த ’ஆக்ஞா சக்கரம்’ திறக்கப்பட்டால் சாதாரண கண்களால் காண முடியாததைக் காணும் ஆற்றலும், சாதாரணமாகக் கேட்க முடியாததைக் கேட்கும் ஆற்றலும், பிறர் மனதில் நினைப்பதை அறியும் ஆற்றலும், தொலைவில் எங்கோ நிகழ்வதை அறியும் ஆற்றலும் – இது போன்று பல ஆற்றல்களும் – ஏற்படும்.

மகானும், பக்தரின் புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தைத் தூண்டி, தற்காலிமாக அதைச் செயல்பட வைத்து, இது போன்ற உருவங்களைக் காணும்படிச் செய்தார். இது ஒரு விதமான யோக சக்தி.

ஒருவன் இதைத் தானே உணர்ந்து தவ யோகத்தில் தொடர்ந்து ஈடுபட்டு இவ்வகை ஆற்றலைப் பெற முடியும். ஆனால் அதை யாரும் செய்வதில்லை.

நிலவில் நீர் இருப்பதை இன்று தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் நமது இந்திய வானியல் சாத்திரத்தில் இதையெல்லாம் முன்பே சொல்ல்யிருக்கிறார்கள்.

ஆகவே, சாதாரண மானுடர்களால் ஒரு செயல் முடியாது என்றால் அது நிகழவே நிகழ முடியாது என்பது பொருளல்ல. நம் மூளையின் ஆற்றலை நாம் வெறும் 8% சதவிகிதம் கூட சரிவரப் பயன்படுத்துவதில்லை. மீதிப் பகுதியையும் நாம் உணர்ந்து, அறிந்து, தெளிந்து பயன்படுத்த ஆரம்பித்தால் நாம் கடவுளை அடையலாம். இல்லை… கடவுளாகவே ஆகி விடலாம்.

சர்வம் பிரம்ம மயம்.

அஹம் பிரம்மாஸ்மி.

 

 

பிரும்மரிஷி மலை

மலை

மலை

யுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். பூலோக இந்திரன் என்று தேவர்களால், ரிஷிகளால் என்றும் போற்றப்படும் மகா முனிவர் ஸ்ரீ காகபுஜண்டர். அவரும் அவரைப் போன்ற மகா முனிவர்களான ,ஸ்ரீ காலாங்கி, ஸ்ரீ புலிப்பாணி, ஸ்ரீ கொங்கணர், ஸ்ரீ கோரக்கர் போன்ற பலநூறு சித்தர்கள் வாசம் செய்யும் மலை பிரும்மரிஷி மலை.

மலைப் பகுதி

மலைப் பகுதி

இம்மலை திருச்சி பெரும் புலியூர் என்ற பெரம்பலூர் அருகில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ளது. 210 மகா சித்தர்கள் இங்கு வாசம் செய்வதாக வரலாறு கூறுகின்றது. இந்த பிரும்மரிஷி மலையின் அடிவாரத்தில் காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மகத்தான சக்தி படைத்தது.

இங்குள்ள மலையின் மீது அண்ணாமலையில் ஜோதி ஏற்றப்படுவது போல மிகப் பெரிய கொப்பரையில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. மலையின் கீழ் ஒரு சிறிய கோயில் இருக்கிறது. மிகுந்த அதிர்வலைகள் உடையதாய் இம்மலையும், இவ்வாலயமும் விளங்குகிறது.

வருங்காலத்தில் ஸ்ரீ தேவி நளினி அம்மனாய் தோன்றி, ”ஸ்ரீ ரங்கா கலி கொண்டு வா!” என்று கூறி கலி முடிக்கும் போது, மகா சித்தர்  ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி, ஒரு கோடி மனித ஜீவ வித்துக்களை பாதுகாக்கும் மாமலையாக இப் பிரும்மரிஷி மலையே விளங்கப் போவதாக சித்தர் வாக்கில் கூறப்படுகிறது.

தலையாட்டிச் சித்தர்

தலையாட்டிச் சித்தர்

இங்கு ஜீவ சமாதி கொண்டுள்ள தலையாட்டிச் சித்தர் முக்காலமும் அறிந்தவர். மகா ஞானி. இன்னமும் சூட்சுமமாக தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறார். அவர் எழுதிய காலஞானம் நூலில் வருங்காலத்தில் நடக்கும் பல அதிசயமான தகவல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் சுனாமி வருவதற்கு முன்னால் அதுபற்றிய தகவல்கள் அந்நூலில் கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல் 2010க்குள் உலகில் நடக்கப் போகும் பல விஷயங்கள் பற்று அந்நூலில் கூறப்பட்டுள்ளதாம்.

முன்பு பிரபல திரைப்பட இயக்குநராக இருந்த ராஜகுமார் என்பவர், தலையாட்டி சித்தரிடம் உபதேசம் பெற்று சீடராக மாறி, தற்போது மகா சித்தர்கள் டிரஸ்ட் என்ற அப்பீடத்தின் நிறுவனர், தலைவராக இருக்கிறார். ராஜ்குமார் சுவாமிகள் அன்னதானம், மருத்துவம், மருந்து, சூரணம், சித்த வைத்தியம் போன்ற ஆன்மீகப் பணிகளையும் சேவைகளையும் செய்து வருகிறார்.

மேல் விவரங்களுக்கு — http://www.gatewaytopeace.org/

http://www.nandhi.com/

(தகவல் உதவி : சிவநெறிச் செல்வர் – சிங்கை கிருஷ்ணன்)

பார் போற்றும் பர்வதமலை அதிசயங்கள்

 
பர்வத மலை
பர்வத மலை
  திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பல திருத்தலங்களில் மிக முக்கியமான ஒரு தலம் பர்வதமலை. அன்னை பார்வதி தேவி இங்கு தவம் செய்ததால் இதற்கு ‘பர்வத மலை’ என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன என்றும் அவ்வாறு விழுந்த மலைகளின் ஒரு பகுதிதான் பர்வதமலை என்றும் கூறப்படுகின்றது.
 
 அண்ணாமலையில் அழலாகத் தோன்றுவதற்கு முன் சிவபெருமான் இங்குதான் முதன் முதலில் கால் வைத்ததாக ஒரு கதையும் நிலவுகிறது. அதற்கேற்றவாறு இங்கே மலை மீது ஒருபுறத்தில் அண்ணாமலையார் பாதமும் காணப்படுகிறது. ஏறுவதற்கு மிகவும் அரிய மலையான இது கடல் மட்டத்திலிருந்து 2500அடிக்கும் மேற்பட்ட உயரங்களை உடையது.
கடப்பாரைப் படி

கடப்பாரைப் படி

இம்மலையில் பல்வேறு விதமான அற்புத மூலிகைகள் காணக் கிடைக்கின்றன. உயிர் காக்கும் சஞ்சீவனி மூலிகை இங்குள்ளது என்றும், ரசவாதம் செய்யப் பயன்படும் சில முக்கிய மூலிகைகள் இங்கு உள்ளன என்பதும் சிலரது கருத்தாக உள்ளது.

அனுதினமும் சூட்சும ரீதியாக சித்தர்கள் வந்து வாசம் செய்யும் மலையாக இது போற்றப்படுகிறது. சமயங்களில் இரவில் சங்கொலி எழுவதாகவும், சந்தன, ஜவ்வாது வாசனை வீசுவதாகவும், ’ஓம்’ பிரணவ ஒலி கேட்பதாகவும் இங்கு இரவில் தங்கிச் சென்ற பக்தர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தண்டவாளப் படி

தண்டவாளப் படி

ஏறுவதற்கரிய இம்மலையை நடந்தும், தவழ்ந்தும், கடப்பாரைப் பாதை வழியாகவும், தண்டவாளப் பாதை வழியாகவும், அமர்ந்தும் தான் செல்ல முடியும். திருவண்ணாமலையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள இம்மலையை திருவண்ணாமலையிலிருந்து கடலாடி சென்றும், தென்பாதி மங்கலம், மகாதேவ மங்கலம் என்ற ஊர்களின் வழியாகவும் அடையலாம்.

இறங்கும் பக்தர்

இறங்கும் பக்தர்

இலக்கியங்களில் ‘நவிரமலை’ என இம்மலை குறிக்கப்பட்டுள்ளது. சஞ்சீவி மலை, சித்தர் மலை, திரிசூலமலை என்றும் இதற்கு பல்வேறு பெயர்கள் உண்டு. செங்கம் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் நன்னனின் கோட்டை இம்மலைமீது சிதிலமடைந்து காணப்படுகிறது.

 இங்குள்ள இறைவன் மல்லிகார்ஜூனர் என்றும் அன்னை பிரமராம்பிகை என்றும் போற்றப்படுகிறாள். சித்தர்கள் அனுதினமும் வந்து பூஜிக்கும் மலை இது. போகருக்கு தனி சன்னதி உள்ளது. காரியுண்டிக் கடவுளும், மரகதவல்லி அம்மனும் மிகுந்த வரப்ரசாதிகள்.

ஆலயத்தின் தோற்றம்

ஆலயத்தின் தோற்றம்

வருடம் தோறும் மார்கழி மாதம் முதல் தேதி இம்மலையை பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மொத்தம் 22 கி.மீக்கும் மேற்பட்டது இதன் கிரிவலப் பாதை. செல்லும் வழியில் உள்ள பச்சையம்மன் ஆலயம் மிகுந்த சிறப்புப் பெற்ற ஒன்றாகும். அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் மற்றும் சிவராத்திரி, பிரதோஷ காலங்களில் மலைவலம் வருவதும் மலை ஏறுவதும் இங்கு மிகச் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.

மனதுக்குச் சாந்தியும், உடலுக்கு உற்சாகமும் தரும் இம்மலைத் தலம் உண்மையில் ஒரு அற்புதமான திருத்தலம் என்றால் மிகையில்லை.

சித்தர்கள் யார்?

சித்தர்கள்

சித்தர்கள்

சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.

மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

அகத்தியர்

அகத்தியர்

சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…

 தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
 தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
 தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
 தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.

அகத்தியரும்..

  மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;

                              …………….

  மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே!

என்கிறார்.

ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.

மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்?

இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே!

munivarசித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.

அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள். 

சித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால்… கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும்.  சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும்.

“ஆத்மா என்பது தான் என்ன? மனித உடலில் அதன் இருப்பிடம் யாது? மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது? தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்? ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள  தொடர்பு என்ன? மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது?… தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்., கர்மவினையை வெல்வது எப்படி?.. “

- இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம், விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.

ஏனெனில், இந்த சித்தர்கள்… இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, ப்ரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என  பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.

சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.

உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.

எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.

அருணாசல மகிமை

“சீல முனிவோர்கள் செறியு மலை..
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..
ஞான நெறி காட்டு மலை..
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..

அஞ்ஞானக் கங்குல் அகற்று மலை – அன்பருக்கு
மெய்ஞானச் சோதி விளக்கு மலை
ஞானத் தபோதனரை வா என்று அழைக்கு மலை
அண்ணாமலை”

-என்றெல்லாம் போற்றப்படும் திருவண்ணாமலை திருத்தலம், அண்ணாமலை என்றும் அருணாசலம் என்றும் அழைக்கப்படுகின்றது.  அருணாசலம் என்பதைப் பிரித்தால் அருணம் + அசலம் என்று வரும்.  அருணம் என்றால் நெருப்பு. அசலம் என்றால் மலை. ஆகவே இது நெருப்பு மலையாக விளங்குகிறது. அதனால் தான் இதனை அக்னி பர்வதம் என்றும் அழைப்பர் பெரியோர். இந்த அக்னி பர்வதமாகிய நெருப்பு மலையே அருணாசலமாகக் காட்சியளிக்கிறது. அண்ணாமலை என்றால் அண்ண முடியாத மலை என்பது பொருளாகும். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறது என்பதே உண்மை. இது வெறும் கல் மலை எல்ல. பல்வேறு அதிர்வுகளைத் தன்னகத்தே கொண்டது என்பதே உண்மை.

மலை தோன்றிய வரலாறு:
ஒரு முறை அயனுக்கும் அரிக்கும் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இருவரும் தத்தம் தொழில்களை மறந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் இருவருக்கும் இடையே பெரும் போரும் மூண்டது. பாதிக்கப்பட்ட தேவர் முதலானோர் சிவனைச் சரணடைந்தனர். சிவன் அவர்களுக்கு அபயம் அளித்தார். போர் புரிந்து வரும் இருவருக்கும் இடையில் பெரும் அக்னி மலையாக தோன்றினார். இந்த ஒளி மலையைப் பார்த்த திருமாலும், பிரம்மனும் அளவு கடந்ததுள்ள இந்த மலையின் அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றரோ அவரே பெரியவர் என்பதாக முடிவு செய்தனர்.

 பிரம்மா அன்னப்பறவையாய் மாறி ஈசனின் திருமுடி தேடிச் சென்றார். விஷ்ணுவோ வராக அவதாரம் எடுத்து சிவனின் திருவடி தேட முற்பட்டார். அடி முடியை இருவரும் காண முடியாததால் தாம் தான் உயர்ந்தவர் என்ற எண்ணம் நீங்கி சிவனைச் சரண் அடைந்தனர். (சிவனின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு சிவனின் திருமுடியைக் கண்டதாக பிரம்மா பொய் கூறியதும் அதனால் சீற்றமுற்ற சிவன் பிரம்மாவுக்கு வழிபாடு இல்லாமல் போகக் கடவது என்றும், தாழம்பூவை இனி தன் பூஜையில் பயன்படுத்தக் கூடாது  என சபித்ததும் தனிக்கதை)

 சினம் தணிந்த சிவபெருமான் ‘நாம் இத்தலத்தில் அருள்பாலித்ததால் இன்று முதல் இத்தலத்தைச் சுற்றிலும் மூன்று யோசனை தூரம் வரைக்கும் தூய்மையான புனித பூமியாக விளங்கும். அகண்ட ஒளி வடிவாயுள்ள இம்மலை சிறிய உருவம் கொண்ட மலையாக ஆகும். இத்தலத்தை நினைப்பவர்களுக்கு பிறவி நோய் நீங்கும். இந்த மலையும், நகரமும் பிரளய காலத்திலும் அழிவின்றி நிற்கும். கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் மலையின் உச்சியில் யாம் காண்பிக்கும் பேரொளியைக் கண்டு தொழுவோர்க்கும் அவர் தம் இருபத்தொரு தலைமுறையில் உள்ளவர்களுக்கும் வீடு பேறு உண்டாகும்’ என்று கூறி ஆசிர்வதித்தார்.

மலையின் சிறப்பு:
 இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது. பௌர்ணமி தோறும் பல இலட்சம் பக்தர்கள் இங்கு மலை வலம் வருகின்றனர். இம்மலையின் பெயரினை அடிக்கடி சொல்லி வருவது திரு ஐந்தெழுத்தை (ஓம் நமசிவாய) கோடி முறை உச்சரிப்பதற்குச் சமம் என்பது புராணம் கூறும் செய்தியாகும்.

இம்மலையின் சிறப்பை,

“தர்சனாத் அப்ரஸதசி
ஜனனாத் கமலாலயே
காச்யாந்கி மரணான் முக்த்தி
ஸ்மரணாத் அருணாசலே:”

“கயிலையைக் கண்டால் முக்தி. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் மரணமடைந்தால் முக்தி. அருணாசலத்தை நினைத்தாலே முக்தி.” என்ற பொருள் தணிக்கும் மேற்கண்ட ஸ்லோகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 அண்ணாமலை வெறும் மலையல்ல; இன்னும் பற்பல யோகியர்களும்  சித்தர்களும் தவம் செய்யும் அற்புத மலை. யுகம் தோன்றித் தோன்றி அழிந்தும் மாறாத ஒரே மலை. உள்ளுக்குள் பல்வேறு அசைவுகநிளைத் தன்னகத்தே கொண்ட மலை. உலகின் பல இடங்களில் இருந்தும் பல யோகியர்களும், சித்தர்களும், மகான்களும் இன்னமும் இங்கே வந்து தவம் புரியும் பெருமை மிக்க மலை. காந்தம் இரும்பை இழுப்பது போல தன் பேரொளியால் ஞான வேட்கை உடையோர்களை தன்னகத்தே இழுக்கும் மலை.

அதனால் தான் இம்மலையின் சிறப்பை குரு நமசிவாயர் தமது ‘அண்ணாமலை வெண்பா’வில்

தொண்டர் பணியுமலை..
தந்த்ர மலை யந்த்ர மலை..
சாற்றிய பஞ்சாக்கரமாம் மந்த்ர மலை..
பிறவி நோய்க்கு மருத்து மலை..
அண்ணாமலை
என்றும்

தொண்டர் இணங்கு மலை..
வானோரும் ஏனோரும் போற்றி வணங்கு மலை..
தன் அடியார் செய்த குறை எல்லாம் மறக்கு மலை..
நாளும் குறைவிலாச் செல்வம் அளிக்கு மலை..
                                                                 என்றும்

பற்பலவாறு புகழ்ந்து பாடியிருக்கிறார்.
இம்மலையின் வேறு பெயர்கள்:
கவுரி நகர், தேகநகர்,அண்ணாமலை, அண்ணாநாடு, அண்ணாவூர், அருணாசலம், சிவலோக நகர், வாயு நகர், அறிவு நகர், தூய்மை நகர், தென்கயிலாயம், சோணமலை, அருணகிரி, முக்தி புரி, மோட்ச புரி என இம்மலைக்கு பல பெயர்கள் உண்டு. இப்பூவுலகம் என்றைக்கு உண்டாயினவோ அன்றே உண்டான மலை அண்ணாமலை. சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள் அனைவரும் இம்மலையினைச் சிவலிங்கமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்.

 கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் தான் ஆன்றோர் பலர் இன்னமும் காலணி அணியாதுதான் இப்பகுதிக்குச் செல்வர்.

ஆலயச் சிறப்பு:
திருவண்ணாமலை கோயில் 25 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. ஆறாம் பிரகாரம் என்று அழைக்கப்படும் வெளிப்பிரகாரத்தில் மிக உயர்ந்த கருங்கல்லினால் கோயில் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு உள்ளது. நான்கு திசையிலும் வானை முட்டும் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ளன. கிழக்கு கோபுரம் ராஜ கோபுரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோபுரம் 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தென்னிந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய கோபுரம் இது தான். இதன் அடிநிலை நீளம் 135 அடி. அகலம் 98 அடி.

  தெற்கு திசை கோபுரம் திருமஞ்சன கோபுரம். மேற்கு திசையிலுள்ள கோபுரம் பேய்க் கோபுரம் எனவும், வடக்கு திசையிலுள்ள கோபுரம் அம்மணி அம்மாள் கோபுரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இங்குள்ள கிளி கோபுரம் மிகவும் சிறப்பானது. இப்போதும் இங்கு பச்சைக் கிளிகள் வசிக்கின்றன. இங்குள்ள மண்டபத்தின் அருகில் தான் அருணகிரிநாதர் தம் உடலைக் கிடத்தி விட்டு பாரிஜாத மலரைக் கொணர்வதற்காகக் கூடு விட்டுக் கூடு பாய்ந்து கிளி ரூபத்தில் இந்திரலோகம் சென்றார்.

 இராஜ கோபுரத்தில் நுழைந்தவுடன் வலது புறத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது.  ஆயிரங்கால் மண்டபத்துள் ரமண ரிஷி வழிப்பட்ட பாதாள லிங்கேஸ்வரைக் காணலாம்.

 ஒரு காலத்தில் இவ்வாலயம் படைக்கலன்கள் பாதுகாக்கப்படும் கூடமாக இருந்திருக்கிறது. பல்வேறு மன்னர்கள் இக்கோயிலுக்கு திருத்தொண்டு புரிந்துள்ளனர். கோபுரத்திளையனார் சன்னதி, கம்பத்திளையனார் சன்னதி போன்றவை சிறப்புப் பெற்றவை. சம்பந்தாண்டானுடன் அருணகிரிநாதருக்கு நடந்த போட்டியில், அருணகிரிக்காக முருகன் தோன்றி காட்சி அளித்த பெருமைக்குரிய சன்னதி இது. முருகன் கம்பத்தில் காட்சி அளித்தார். அதனால் கம்பத்திளையார் என முருகனுக்கு பெயர் வந்தது.

 இதன் தென்புறமாக சிவகங்கை புண்ணிய நதி தீர்த்தம் அமைந்துள்ளது. சர்வ சித்தி விநாயகர் சன்னதியின் கீழ் புறமாக சிவகங்கைக் குளம் அமைந்துள்ளது. பெரிய நந்தியின் எதிரி வல்லாள மகாராஜன் கோபுரம் காணப்படுகிறது.

 ஆலயத்தின் உள்ளே அண்ணாமலையார் வீற்றிருக்கிறார். தனிச்சன்னதியில் உண்ணாமுலை அம்மன் காட்சி தருகிறார். அண்ணாமலை சன்னதியின் பின்புறத்தே வேணுகோலன் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறார். லட்சுமி, சரஸ்வதி, ஷண்முகநாதரும் தனிதனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணா ரமுதக் கடலே போற்றி

-என்ற பாடல் அண்ணாமலையாரின் சிறப்பை விளக்குவதாகும்.

 சுந்தரரைத் தவிர ஞானசம்பந்தர், அப்பர், வாதவூரர் ஆகிய மூவரும் இத்தலத்து இறைவனைத் தொழுதேத்திப் பாடியுள்ளனர். வள்ளலார், அருணகிரி நாதர், குரு நமசிவாயர், குகை நமசிவாயர், ஈசான்ய ஞான தேசிகர், பகவான் ரமண மகரிஷி உட்பட பலர் இத்தலத்து இறைவனையும், இம்மலையையும் பாடிப் பரவியுள்ளனர்.

 இம்மலைப்பாதைகளில் சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம், ரமணாஸ்ரமம், யோகி ராம் சுரத் குமார் (விசிறி சாமியார்) ஆஸ்ரமம், ஈசான்ய ஞான தேசிகர் மடம், அடிமுடிச் சித்தர் ஜீவ சமாதி ஆலயம் போன்ற பல ஞானியரது ஆஸ்ரமங்களும், ஜீவ சமாதிகளும், பல கோயில்களும் உள்ளன. இங்குள்ள மலைப் பாதையில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன. மலை வலத்தின் போது அவர்களையும் வணங்குதல் வேண்டும்.

கிரிவலம்:
இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ. கிரிவலத்தை எங்காவது துவங்கி, எப்படியாவது முடித்தல் கூடாது. அதன் பெயர் கிரி வலமும் அல்ல. முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர் தான் இம்மலையைக் காவல் காக்கிறார். அதன் பின் விக்னங்கள் ஏதும் இல்லாமல் சிறப்பாய் மலை வலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தல் வேண்டும். அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு மலை வலத்தை ஆரம்பிக்க வேண்டும்.

 நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். இடப்புறமாகவே நடந்து செல்ல வேண்டும். மலை சுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்கக் கூடாது. நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்து செல்லல் வேண்டும். அங்கும் ஆடிக் கொண்டும், பாடி, ஓடிக் கொண்டும் செல்லக் கூடாது. அமைதியாலவே செல்ல வேண்டும்.

 மலை வலம் வரும்போது அருணாசலேஸ்வரின் கிழக்கு கோபுரத்தில் துவக்கி முடிக்கும் போது அருணாசலேஸ்வரரை வணங்கினால் தான் மலைவலம் முடிந்ததாகப் பொருள். அருணாசலேஸ்வரரின் கிழக்கு வாயிலில் இருந்து மலை வலம் வர ஆரம்பிக்க வேண்டும். மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்க்கிக் கொள்வதற்காக வழிபட்ட அஷ்டதிக்கு பாலகர்களில், கிழக்கிற்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை முதலில் வழிபடவேண்டும். மலை சுற்றும் சாலையில் உள்ள நந்திகேசுவரர் சன்னதியை வணங்கி வழிபட்டு பின்னர் தான் மலைவலம் வர வேண்டும். தென்கிழக்கு திசைக்கு அதிபதியான அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது.  இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது.

 வழியில் உள்ள சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் மகத்தான மந்திர சக்தி வாய்ந்தது. கேட்ட வரத்தைத் தர வல்லது. இங்கு கிட்டத்தட்ட 22க்கு மேற்பட்ட மகான்கள் ஜீவ சமாதியில் உள்ளனர். வழிபடுதல் சிறப்பு. தொடர்ந்து ரமணாஸ்ரமம் ஆன்ம அமைதியைத் தர வல்லது. சற்றுத் தொலைவில் விசிறி சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. மன அமைதியைத் தர வல்லது. தியானம் செய்ய ஏற்ற இடம் அது.

  அடுத்து வழியில் தெற்கு திசைக்கு அதிபதியான எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளது.  எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னரர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்பது ஐதீகம்.

 அடுத்து தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி, சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது. இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை தரிசிக்க வேண்டும். இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம் ஆகும். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் தெரியும் நந்தியின் தலையை வணங்கிச் செல்ல வேண்டும். அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு. இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. அதனை வழிபட வேண்டும்.

 அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட வருண லிங்கம் ஆகியவை உள்ளது. அதனை வழிபட்ட பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர். இங்கு அவசியம் தரிசனம் செய்தல் வேண்டும்.

 அதற்கடுத்து வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயுலிங்கம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேர லிங்கம் காணப்படும். அடுத்து இடுக்கி பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவனின் ஐந்து திருமுகங்களை குறிக்கக்கூடியது. இதனை பஞ்ச முக தரிசனம் என்பர். அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது. இதனையும் வழிபட்டு, வழியில் உள்ள ஈசான்ய மடத்தில் ஜீவ சமாதியாக உள்ள ஈசான்ய ஞான தேசிகரையும் வணங்க வேண்டும். அதன் பிறகு அருணாசலேஸ்வரர் கோயில் சென்று தரிசித்த பிறகுதான் மலைவலம் பூரணத்துவம் அடைகிறது.

மலை வலம் வர உகந்த நாட்கள்:
எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களே! இருந்த போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும்.

 புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் தன் பரிவாரங்களூடன் மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.

 சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.

 அமாவாசை, பிறந்த நாள், திருமண நாள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற புண்ணிய தினங்களிலும் மலை வலம் வரலாம்.

 சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். சோமவாரம், சோமப் பிரதிஷணம் போன்றவற்றின் மூலம் நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால், திரு அண்ணாமலை அக்னி மலை. அக்னிக்குரிய நாள்  செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரன். ஆகவே இந்தக் கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு நடக்கின்றது. செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. சத்குரு சேஷாத்ரி சுவாமிகளும் செவ்வாயன்று மலை வலம் வருதலை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

 ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும்.

 ‘அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!’ -என்கிறது தேவாரமும்.

 மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜ சூர்ய யாகம் செய்த பலன் கிடைக்கும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும். மலையைப் பற்றியும், மலை சுற்றுவதைப் பற்றியும் நினைப்பவர்களுக்கே இந்தப் பலன் என்றால், மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன்…??? அவர்கள், கைலாசத்திற்குள் நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி, மோட்சமாகிய உயர் பதவியை அடைவார்கள் என்று அருணாசல புராணம் தெரிவிக்கின்றது.

  ஞாயிற்றுக் கிழமை சுற்றினால் சிவபதவி கிடைக்கும்
  திங்கட்கிழமை சுற்றினால் இந்திர பதவி கிடைக்கும்.
  செவ்வாய்க்கிழமை சுற்றினால் கடன்,வறுமை நீங்கும்.
  புதன்கிழமை சுற்றினால் கலைகளில் தேர்ச்சி, முக்தி கிடைக்கும்.
 வியாழக்கிழமை சுற்றினால் ஞானிகளாவார்கள்.                  

வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்.
சனிக்கிழமை சுற்றினால் நவக்கிரக தோஷம் நீங்கும். 

நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில் கணவனும், மனைவியும் நீராடி மலைவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும். கர்ம வினைகள் அனைத்தும் தொலையும். அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும். மனம் நிம்மதி அடையும். பாவங்கள் அனைத்தும் நீங்கும். பித்ரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.

ஆகவே, மலை வலம் வருவோம். மன நலம் பெறுவோம்.

அருணாசல அருணாசல அருணாசல

ஓம் நமசிவாய