டாக்டர் இயான் ஸ்டீவன்சனின் முற்பிறவி – மறுபிறவி ஆராய்ச்சிகள்

டாக்டர் இயான் ஸ்டீவன்சன்

டாக்டர் இயான் ஸ்டீவன்சன்

டாக்டர் இயான் ஸ்டீவன்சன், கனடாவில் பிறந்தவர். அடிப்படையில் ஒரு உளவியல் நிபுணரான இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். முற்பிறவி-மறுபிறவி பற்றிய விஷயங்களில் இவருக்கு ஆர்வம் ஏற்பட அதுபற்றி தீவிரமாக ஆராய்ந்தார். உலகெங்கும் பயணம் மேற்கொண்டார். முற்பிறவி ஞாபகங்கள் வந்ததாகக் கூறப்படுபவர்களைச் சந்தித்தார். அவர்கள் கூறும் முற்பிறவிகள் பற்றியும், அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள், மனிதர்கள் குறித்தும் ஆராய்ந்தார். பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார். முடிவில் சிலருக்கு மட்டும் முற்பிறவி நினைவுகள் ஏற்படுவது உண்மையே என்றும் அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன என்றும் கூறி அது பற்றிய பட்டியல்களையும் வெளியிட்டார்.

முற்பிறவி, மறுபிறவி பற்றி பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் ஸ்டீவன்சன் எழுதியிருக்கிறார். அதில் குறிப்பிடத் தகுந்தது, ’Twenty Cases Suggestive of Reincarnation’ என்பதாகும். அமெரிக்காவின் புகழ்பெற்ற பேராசிரியர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் டாக்டர் ஸ்டீவன்சனின் ஆய்வு முடிவுகளை ஏற்றுக் கொண்டதுடன், அவர் முறைப்படி ஆய்வு செய்து அவற்றை நீருபித்திருப்பதாகவும், இதில் ஐயப்பட ஏதுமே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் அவர் உருவாக்கிய முற்பிறவி – மறுபிறவி பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சித்துறை இன்றளவும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

பர்மாவில் டாக்டர் ஸ்டீவன்சன்

பர்மாவில் டாக்டர் ஸ்டீவன்சன்

தனது ஆராய்ச்சிக்காக அமெரிக்கா, ஜப்பான், சீனா, பர்மா, இலங்கை என உலகின் பல பகுதிகளுக்கும் சென்றவர், இந்தியாவிற்கும் வந்து இச் சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து கூறியுள்ளார். தமிழகத்திற்கும் வருகை புரிந்துள்ளார்.

டாக்டர் இயான் ஸ்டீவன்சன் ஆராய்ச்சி செய்துள்ள சம்பவங்களிலிருந்து ஒன்றைப் பார்ப்போம்.

இப்ராஹிமின் மறுபிறவி
லெபனான் நாட்டில் உள்ள கோர்னெல் என்னும் வசித்து வந்தான் இமத் இலவர் எனும் சிறுவன். அவனுக்கு இரண்டு வயதாக இருக்கும் போதே சம்பந்தமில்லாத பல பெயர்களை உச்சரிக்கத் தொடங்கினான். பெற்றோர்கள் குழந்தை ஏதோ வேடிக்கையாகப் பேசுகிறது என பேசாமல் இருந்து விட்டனர். ஆனால் அவன் வளர வளர அவனது நடவடிக்கைகள் மிக வித்தியாசமாக இருந்தன. ஜமீலா என்ற பெயரையும், மஹ்மூத் என்ற பெயரையும் அடிக்கடி உச்சரித்தான். ஒருமுறை தெருவில் ஒரு வயதான பெரியவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவர் முற்பிறவியில் தனது வீட்டிற்கு அருகாமையில் வசித்தவர் என அடையாளம் கண்டு கொண்டு அவரைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தான். பின்னர் வலுக்கட்டாயமாக அவனது குடும்பத்தாரால் வீட்டிற்குத் தூக்கி வரப்பட்டான்.

வயது ஆக ஆக தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என்றும், இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்றும் அவன் சொல்ல ஆரம்பித்தான். தனது பெயர் இப்ராஹிம் என்றும் தான் வசித்த நகரத்தின் பெயர் க்ரீபீ என்றும் கூறியவன், 1949 ஆம் ஆண்டு, டி.பி.நோயால் தான் இறந்து விட்டதாகவும், தனது மனைவி, குழந்தைகளைப் பார்க்க உடனே தன் கிராமத்துக்குப் போக வேண்டும் என்றும் அழுது அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

இந்தச் சம்பவங்கள் அவன் பெற்றோருக்கு மட்டுமல்லாது அவன் வசித்த கிராமத்துவாசிகளுக்கும் மிகுந்த வியப்பைத் தந்தது. தகவல், முற்பிறவி- மறுபிறவி பற்றி ஆய்வு செய்யும் டாக்டர் இயான் ஸ்டீவன்சன் கவனத்துக்குச் சென்றது. அவர் உடன் புறப்பட்டு கோர்னெல் வந்து சேர்ந்தார். சிறுவனுடன் பேசி அவன் கூறும் தகவல்கள் அனைத்தையும் ஒரு குறிப்பேட்டில் குறித்துக் கொண்டார்.அவர் மேலும் ஆய்வு செய்யத் தொடங்கிய போது அந்த ஊருக்கு சுமார் 25 மைல் தொலைவில் ’க்ரீபீ’ என்ற கிராமம் இருப்பதை அறிந்து கொண்டார். பின் தனது ஆய்வைத் தொடர்வதற்காக சிறுவன் மற்றும் அவன் பெற்றோருடன் ’க்ரீபீ’ கிராமத்தை நோக்கிக் காரில் புறப்பட்டார். வழியிலேயே மிக அதிகமாக முற்பிறவியின் தாக்கத்திற்கு உட்பட்ட சிறுவன் இமத், தான் வசித்த வீடுபற்றி, கெர்மில் என்ற பெயர் கொண்ட தனது மனைவி பற்றி, தன்  குழந்தைகள் பற்றி என ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகக் கூற ஆரம்பித்தான். கிராமத்தை அடைந்ததும் தன் வீட்டை சரியாக அடையாளம் காட்டியதுடன், வயதான தன் மனைவி மற்றும் குழந்தைகளையும் அடையாளம் கண்டு கொண்டான். தன்னுடைய புகைப்படத்தையும், தன்னுடைய சகோதரன் புகைப்படத்தையும் மிகத் தெளிவாக அடையாளம் காட்டினான்.

தன்னோடு முற்பிறவியில் ராணுவத்தில் பணியாற்றிய நண்பரைச் சந்தித்து பழைய அனுபவங்களைப் பற்றிப் பேசினான். அது மட்டுமல்லாமல் தன்னுடைய முற்பிறவி மாமா, நண்பன் மஹ்மூத், தனக்கு மிகவும் விருப்பமான, நெருக்கமான தொடர்பில் இருந்த விலைமாது ஜமீலா என அனைவரையும் அவனால் அடையாளம் கண்டு கொண்டு பேச முடிந்தது.

இவ்வாறு சிறுவன் இமத் தனது முற்பிறவி பற்றிக் கூறிய  57 கருத்துக்களில் 51 கருத்துக்கள் மிக மிகச் சரியாக இருந்தது என்றும், மீதி ஆறும் அவன் சிறுவன் என்பதால் அவனால் சரியாக விளக்கிச் சொல்ல முடியாமல் ஏற்பட்ட கருத்துப் பிழைகளே என்றும் கூறுகிறார் டாக்டர் இயான் ஸ்டீவன்சன். இரண்டு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் அது வரை சந்தித்ததில்லை, ஒருவரைப் பற்றி மற்றொருவர் கேள்விப்பட்டதுமில்லை. அப்படியிருக்க சிறுவன் இமத், இப்ராஹிமாகிய தனது முற்பிறவியைப் பற்றி விளக்கிக் கூறி, தெள்ளத் தெளிவாகத் தான் தான், அவனது மறுபிறவி என்பதை நிரூபித்திருக்கிறான் என்று தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர் இயான் ஸ்டீவன்சன்.

இந்தியாவில் ஸ்டீவன்சன்

இந்தியாவில் ஸ்டீவன்சன்

வெளிநாடுகளில் மட்டும் தான் என்பதல்ல; இந்தியாவிலும் பல்வேறு மறுபிறவிச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. முற்பிறவி-மறுபிறவிகள் பற்றி ஆராய்வதற்காக, இந்தியாவில், பரிதாபாத் நகரத்தில் Reincarnation Research Foundation என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. பெங்களூரில் உள்ள National Institute of Mental Health & Neurosciences (NIMHANS) அமைப்பும் முற்பிறவி-மறுபிறவி உண்மைகள் பற்றி ஆய்வு நடத்தி வருகிறது. அது பற்றி விரிவான பல ஆய்வுகளை மேற் கொண்டிருக்கிறது. டாக்டர் இயான் ஸ்டீவன்சனும் இந்தியாவிற்கு வருகை தந்து பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்து நிம்ஹான்ஸின் (NIMHANS) Clinical Psychology துறைத் தலைவர், பேராசிரியர் டாக்டர் சத்வந்த் பஸ்ரிச்சா அவர்களும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைப் பின்னர் பார்ப்போம்.

 

மகாத்மாவின் மறுபிறவி?

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். இன்றோடு அவர் பிறந்து 140 வருடங்கள் ஆகின்றன. எளிய மக்களின் வாழ்க்கை உயர்விற்காகவே தனது வாழ்க்கையைத் தியாகம் செய்த அவர், கோட்ஸேவால் சுட்டுக் கொல்லப்பட்டு 61 வருடங்கள் ஆகி விட்டது. காந்தியையும் அவரது கொள்கையையும் இன்று பலர் மறந்து விட்டாலும் இந்தியாவுடனான அவரது பிணைப்பும் உறவும் நேசிப்பும் அஹிம்சை என்னும் உறுதியும் என்றும் நினைவுகூரத் தக்கது.

இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களாக மட்டுமே காந்திஜி அறிமுகமாகியிருக்கிறார். நவநாகரிக யுக இளைஞர்களுக்கோ அவர் ஒரு பிற்போக்குவாதி, மதவாதி, புதுமைகளை ஏற்றுக் கொள்ள மறுத்த பிடிவாதக்காரர். அரசியல்வாதிகளுக்கோ, கேட்கவே வேண்டாம் காந்திஜி என்ற பெயர் ஊறுகாய் மாதிரி. அவ்வப்போது தொட்டுக் கொள்வார்கள்.

அவர் செய்த தியாகங்களும், அனுபவித்த கொடுமைகளும், பின்பற்றிய தத்துவங்களும், மேற்கொண்ட எளிமையான வாழ்க்கை முறையும் எல்லோராலும் என்றும் எண்ணிப் பார்க்கத் தக்கவை. அதனால் தான் ஒபாமாவால் கூட காந்தியைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற தலைவர் அவர் என்று ஏற்றுக் கொள்ள முடிகிறது.

டாக்டர் வால்டர்

டாக்டர் வால்டர்

மகாத்மாவின் வாழ்க்கையை, அவர் போராட்டத்தை, அவர் தத்துவத்தை, அவரது கொள்கைகளை உலகெங்கிலும் உள்ள பலர் ஆராய்ச்சி செய்துள்ளனர். இன்னமும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவர்களுள் வித்தியாசமான ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு அதிரடியான ஒரு முடிவைத் தந்திருப்பவர் வால்டர் செமிகேவ்.

அவர் சொல்வது இதைத்தான். “மகாத்மா காந்தி மீண்டும் மறுபிறவி எடுத்திருக்கிறார். அமெரிக்காவில் பிறந்திருக்கும் அவர், இப்பிறவியிலும் சமூக சேவை, மனித நலத்திலேயே ஆர்வம் காட்டி வருகிறார்”

வால்டர் செமிகேவ் ஒரு வித்தியாசமான மனிதர். தனது இளமைப் பருவத்தில் கிட்டத்தட்ட நாத்திகராக வாழ்ந்த அவருக்கு அதிசயமான வகையில் முற்பிறவி நினைவுகள் பற்றிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி மேற் கொண்ட அவர், முற்பிறவியில் தான் தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வாழ்ந்த ஜான் ஆடம்ஸ் என்பதைக் கண்டறிந்திருக்கிறார். தனது வாழ்க்கைச் சம்பவங்களும், குணாதிசயங்களும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் ஆடம்ஸூடன் பெருமளவு ஒத்துப்போவதைக் கண்ட அவர் மேலும் தீவிரமாக தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.

சென்னையில் வால்டர்

சென்னையில் வால்டர்

சிகாகோவின் புகழ்பெற்ற இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் வால்டர், தொடர்ந்து டென்வரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பணியாற்றினார். அப்போது இது போன்ற சம்பவங்கள் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். 1996ல் இருந்தே இது போன்ற முற்பிறவி-மறுபிறவி பற்றிய ஆய்வுகளில் தனித்து ஈடுபட்டு வந்த இவருக்கு, பின்னர் கெவின் ரியர்ஸன் என்ற புகழ்பெற்ற மீடியமுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் மூலம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் தலைமை மருத்துவராக வாழ்ந்த ’அதுன் ரே’ என்ற மதகுருவின் ஆவியுடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுவரை மறுபிறவி எடுக்காத அந்த ’மகா ஆவி’ யையே தனது வழிகாட்டும் ஆவியாகக் கொண்டு, பல்வேறு சிக்கல்களுக்கு விடை கண்டறிந்து வருகிறார் டாக்டர் வால்டர்.

காந்தி

காந்தி

டாக்டரின் ஆராய்ச்சி தனித்துவமானது. முதலில் முற்பிறவியில் வாழ்ந்த மனிதரைப் பற்றிய தரவுகளைத் திரட்டுவார். அவர் வாழ்க்கை முறை, குணாதிசயம், உருவ அமைப்பு, நடை, உடை, பாவனைகள், தனிப்பட்ட செய்கைகள், முக்கியமான வாழ்க்கைச் சம்பவங்கள் போன்றவற்றைக் குறித்துக் கொள்வார். பின்னர் அவரது மறுபிறவியாகக் கருதப்படும் நபரின் வாழ்க்கையையும் அதே போன்று ஆய்வுக்குள்ளாக்குவார். அவருடன் பேட்டி காண்பார். இரண்டு நபர்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட நபர்களைச் சந்திப்பார். பல தகவல்களைத் திரட்டுவார். பின்னர் இரண்டையும் ஒப்பிட்டு சோதனைக்குள்ளாக்குவார். அப்படியும் தனக்குச் சந்தேகம் தோறும் போது வழிகாட்டி ஆவியான ’அதுன் ரே’விடம் பேசி, உண்மையை உறுதிப்படுத்திக் கொண்டு ஆய்வு முடிவுகளை உலகுக்கு அறிவிப்பார். சமயங்களில் ’அதுன் ரே’வே சில பிரபலமான மனிதர்களின் மறுபிறவிகளைப் பற்றி வால்டரிடம் கூறி ஆய்வுகள் மேற் கொள்ளச் சொல்வதும் உண்டு.

வான் ஜோன்ஸ்

வான் ஜோன்ஸ்

இம்மாதிரி ஆய்வு செய்து அவர் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் நூல்களில் டாக்டர் வால்டர் செமிகேவின் நூல்களுக்கு முக்கிய இடமுண்டு.

இந்தியாவில் வாழும் பிரபல மனிதர்களின் மறுபிறவிகளைப் பற்றி ஆய்வு செய்து எழுதியிருக்கும் டாக்டர் வால்டர் மகாத்மா காந்திஜியின் மறுபிறவியாகக் குறிப்பிட்டிருப்பது அமெரிக்காவில் வாழும் சமூக ஆர்வலரான வான் ஜோன்ஸ் என்பவரை. மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலராக விளங்கும் ஜோன்ஸ் சமீபத்தில் தான் புகழ்பெற்ற டைம் பத்திரிகையால் ‘சுற்றுச்சூழல் நாயகன்’ என்ற பட்டத்தைப் பெற்றார்.

ஜோன்ஸின் நடை, உடை, பாவனை, உடல் மொழிகள், முக அமைப்பு என அனைத்தும் காந்தியை ஒத்திருப்பதாகக் கூறும் வால்டர், காந்திஜி 1930ல் தென் ஆப்பிரிக்காவில் எதுபோன்ற பணிகளை மேற்கொண்டாரோ அதே போன்ற பணிகளைத் தான் இன்று ஜோன்ஸ் செய்து வருவதாகக் கூறுகிறார். காந்திஜி 1930ல் எப்படி இதே ’டைம்’ பத்திரிகையால் அந்த ஆண்டின் ’மிக முக்கியமான மனிதர்’ என்று போற்றப்பட்டாரோ அதே போன்று இன்று ஜோன்ஸூம் போற்றப்படுகிறார் என்று கூறுகிறார்.

காந்தி-ஜோன்ஸ்

காந்தி-ஜோன்ஸ்

இது போன்ற சம்பவங்களையும், இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகளையும் தனது “Born Again”  நூலில் தெரிவித்திருக்கும் வால்டர், சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தார். அப்போது தமிழ் நாட்டிற்கும் வருகை தந்திருந்த அவர், முற்பிறவி-மறுபிறவி பற்றிய தனது புதிய நூலான “Origin of the Soul: And the Purpose of Reincarnation”-ஐ லேண்ட் மார்க் புத்தக கடையில் வெளியிட்டார்.

இந்த நூல்களில் காந்திஜியின் மறுபிறவியைப் பற்றி மட்டுமல்லாது அமிதாப்பச்சன், ரேகா, ஜெயா பச்சன், ஷாருக்கான், அப்துல்கலாம், மேனகா காந்தி, ஜவஹர்லால் நேரு, விக்ரம் சாராபாய், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என பலரது முற்பிறவிகளைப் பற்றி ஆச்சரியமூட்டும் சம்பவங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள லேண்ட மார்க் கடைகள் அனைத்திலும் இந்த நூல்கள் கிடைக்கும்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
   (கடவுள் வாழ்த்து, திருக்குறள்)

“பாலூரு மலைப்பாம்பும் பனிமதியு மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்ற னடிநினைந்து
மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே”
    (இரண்டாம் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்)

 

 

சூட்சும சக்திகள்

reincarnation‘நான்’ என்ற எண்ணமும், தன்முனைப்பான ஆர்வமுமே ஒரு மனிதனின் வாழ்வியல் கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ள வைக்கின்றது. சாதனை செய்யத் தூண்டுகின்றது. ஒவ்வொரு மனிதனும் ‘தான்’ என்ற தன் முனைப்புடன் தான் உலகில் செயல்படுகிறான். ‘தன்னுடையது,’ ‘தனக்கு’ என்பது அவன் பிறந்து வளர்ந்து இந்த உலகை உணரத் தொடங்கும் பொழுதே வளர ஆரம்பித்து விடுகிறது. இறக்கும் வரை தொடர்கின்றது. இரண்டு வயதுச் சிறு குழந்தையே ஆனாலும்,  ஒரு பொம்மையை அதனிடமிருந்து பிடுங்கினால், ‘என்து, வேணும், கொண்டா’ என்றெல்லாம் அழுகிறது.

இந்தத் ‘நான்’ என்ற தனிமனித எண்ணமே ‘அகங்காரம்’ என்றும் ‘ஆணவம்’ என்றும், அதுவே ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடை என்றும் பல சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. பிறந்த உடனேயே, மனிதனை ‘மாயை’ சூழ்ந்து கொள்வதால் தான், அவனால் அதனை மீறிச் செயல்படவும் முடிவதில்லை. அதிலிருந்து விடுபடவும் முடியவில்லை. அதற்கான சரியான வழிமுறையும் மனிதனுக்குத் தெரிவதில்லை. ஆக, இந்தத் தன்முனைப்பு என்பது  வாழ்வியலுக்கு ஆதரவாகவும், இறையை உணர்வதற்குத் தடையாக உள்ளதாகவும் கொள்ளலாம். ஆனால் ஒரு விஷயம் இங்கு சிந்திக்கவேண்டியதாகிறது. ஒவ்வொரு செயலையும் மனிதன் தன் ஈடுபாட்டோடு தான் செய்கிறானா? இல்லை. ஏதேனும் சில சக்திகள் அவனை அவ்வாறு செய்யுமாறுத் தூண்டுகிறதா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியதாகிறது.

உண்மையில் அனைத்துச் செயல்களையும் செய்வது யார்? நாம் தானா? அல்லது நம்மை ஆட்டி வைக்கும் ஏதேனும் சூட்சும சக்திகள் அவ்வாறு நம்மைத் தூண்டுகின்றனவா?. நாம் தான் என்றால் ஏன் இவ்வளவு சிக்கல்கள், குழப்பங்கள், தவறுகள், வேதனைகள்? அல்லது அந்த சூட்சும சக்திகள் தான் என்றால் ஏன் பல தோல்விகள், துயரங்கள், சோதனைகள்?. அவற்றின் சக்திகள் தான் எவ்வளவு? இதெல்லாம் நாம் சிந்திக்க வேண்டியவையாக உள்ளன.

உண்மையில் அந்தச் சூட்சும சக்திகள் என்பது எது? ஏன் அவை நம்மை ஆட்டிப் படைக்கின்றன? அவை நல்லவையா, கெட்டவையா?. அதற்கான விடைகளை நம்மால் உணர முடிவதில்லை. ஒருசிலருக்கு நன்மை தருபனவாகவும் மற்றவர்களுக்கு ஏன் தீமை செய்பவனவாகவும் அவை ஏன் நடந்து கொள்கின்றன?.  அதற்கு என்ன காரணம்?. நாம் செய்த, பாவ, புண்ணியங்களா?. இல்லை. வேறு ஏதெனும் நம்மால் அறிய இயலாத காரணங்கள் உள்ளனவா?. நமக்குத் தெரியாது. நம்மால் அவ்வளவு எளிதில் அவற்றை அறிந்து கொள்ளவும் இயலாது. ஏன் நன்மை செய்பவர்கள், நல்லது நினைப்பவர்கள் துன்பப்படுகின்றனர், தீயவர்கள் வசதியோடு, செழிப்பாக வாழுகின்றனர்?. அதற்கு ஏதேனும் சிறப்பான காரணம் உண்டா?  மனிதன் செய்த கர்மவினை தான் காரணமா?. அல்லது வேறு ஏதேனும் சூட்சுமமான செயல்பாடுகள் உள்ளனவா?. விடை அறிவது மிக மிகக் கடினம்.

MWS-50-Reincarnationஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்கிறது நமது சாத்திரம். அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன என்றும் அது கூறுகிறது. அப்படியென்றால், அந்த நவக்கிரகங்களை சாந்தி செய்து விட்டால், பரிகாரம் செய்து விட்டால் போதுமே, ஊழிலிருந்து தப்பித்து விடலாமே! இப்படி எண்ணத் தோன்றும். ஆனாலும் அவை சாத்தியமா?

ஏனெனில், நம்மை ஆட்டி வைப்பவை வெறும் நவக்கிரகங்கள் மட்டுமல்ல; அதற்கும் மேலான, இறைவனின் ஏவலைச் செய்து முடிக்கக்கூடிய சில தேவதாம்சங்களும் உள்ளன என்பது தான் உண்மை. அவை தான் நம்மை வழிநடத்துகின்றன. நம்மை சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்கின்றன. துன்பத்திலிருந்து காக்கின்றன. அதே சமயம் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற விதிப்பாடு இருக்குமானால், அவற்றை அவன் அனுபவிக்குமாறும் விட்டு விடுகின்றன. அவற்றின் மூலம் அவன் தான் செய்த தவறை உணர்ந்து, தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே இவற்றின் நோக்கம்.

இவ்வகை சூட்சுமசக்திகளே தேவதைகளாகப் போற்றப்படுகின்றன. இவை, மனிதனின், மூளையில் தங்களது எண்ண அலையைப் பிரயோகித்து, அவரவர் கர்மவினைக்கு ஏற்றவாறு, அவனை நல்ல வழியிலோ, அல்லது தீய வழியிலோ செயல்படத் தூண்டுகின்றன. பாவ, மத்திய, புண்ணிய ஆவியுலகங்களையும் கடந்த நிலையில் வாழும் இவ்வகைத் தேவதைகள், இறைவனின் ஏவலர்களாகப் பணிபுரிகின்றன. இவற்றில் நல்ல தேவதைகளும் உண்டு. தீய தேவதைகளும் உண்டு. பிரதமர், அமைச்சர் என படி நிலையில் அரசு செயல்படுவது போல, இவ்வகைத் தேவதைகளும், இறைவனின் தலைமையில் செயல்படுகின்றன.

இது போன்ற தேவதைகள் வழிபாடு, இந்து மதத்தில் மட்டுமல்லாது, முஸ்லிம், கிறித்துவ, சொராஸ்டிரிய மதங்களிலும் காணப்படுகின்றன. கிறித்துவ மதத்தில் இவை ‘ஏஞ்சல்’ என்றும், இசுலாமியர்களால், ‘ஜின்’ வானவர், தூதர் என்றும் இவை குறிப்பிடப்படுகின்றன. மேலும் தீயவற்றைச் செய்யும் சாத்தான்களும், மலக்குகளும் உண்டு.

தேவதூதர்கள் இயேசு பெருமானுக்குக் காட்சி அளித்ததாக பைபிள் கூறுகின்றது. நபி பெருமானும் தேவதூதர்களால் ஆசிர்வதிக்கப்பட்டே குரானை அருளினார். இந்து மதத்திலும் தேவதைகள் சிறப்பிடம் பெறுகின்றன. ஹோமங்கள், யாகங்கள் யாவற்றிலும் அவற்றிற்கு அவிர்ப்பாகம் அளிக்கப்படுகின்றன. மேலும், சில தீய தேவதைகளும் உண்டு. சில குறி சொல்பவர்கள், சோதிடநிபுணர்கள், யக்ஷணி போன்ற தேவதைகளை உபாசனை செய்து, தங்களை நாடி வந்திருப்பவரைப் பற்றிய உண்மையான நிலையை அறிந்து, அதை அவர்களிடம் எடுத்துக் கூறி பொருள் ஈட்டி வருகின்றனர். அவற்றிலும் பல வகைகள் உள்ளன. அவ்வவற்றின் தன்மைக்கேற்ப அவற்றை, குறி சொல்ல, அடுத்தவர் மனதில் இருப்பதைக் கண்டறிய, ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பணம் நகைகள் போன்றவற்றைக் கண்டறிய, களவு போன பொருட்கள், காணாமல் போன மனிதர்கள் பற்றி அறியப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் மிகக் கொடூரமானவைகளும் உண்டு. சற்று கொடூரம் குறைந்தவையும் உண்டு. தன்னை உபாசிப்பவர்களையே பழிவாங்கும் யக்ஷிணிகளும் உண்டு.

இவற்றில் தேவ யக்ஷணியும் உண்டு. அசுர யக்ஷனியும் உண்டு. அசுர யக்ஷணிகள் துர் தேவதைகளாகவும், நீச தேவதைகளாகவும் கருதப்படுகின்றன. யக்ஷனிகளில் கர்ண யக்ஷணி, தாம்பூல யக்ஷணி எனப் பலவகைகள் உள்ளன. மேலும் யோகினி, சாகினி, டாகினி, ஹாகினி, மோகினி எனப் பல தேவதாம்சங்களும் உண்டு.

சில மாந்த்ரீகர்கள், இது போன்றவற்றை உபாசித்து, தீய காரியங்கள் சிலவற்றிற்கு உபயோகப் படுத்துகின்றனர். இறுதியில் அவற்றாலேயே அழிந்தும் போகின்றனர்.

இந்துமதத்தைப் பொறுத்தவரை, தேவதைகள் அனைத்தும், சப்தமாதாக்களின் கட்டுப்பாட்டில் வருகின்றனர். ஸ்ரீ சக்ர மகாமேருவில் வீற்றிருந்து இவ்வுலகைப் பரிபாலிக்கும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் காவல் நாயகிகளாக இந்த சப்தமாதாக்கள் விளங்குகின்றனர். ஒவ்வொரு சிவ ஆலயத்திலும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சன்னதியின் எதிரே இவற்றிற்கு சன்னதிகள் இருக்கும். இம் மாதாக்களுக்குக் காவலாக ஸ்ரீ சாஸ்தா அல்லது அய்யனார் இருப்பார். சில சமயங்களில் சில முனிவர்களின் திரு உருவங்களும், விநாயகப் பெருமானின் சன்னதியும் கூட அடுத்து இருக்கும். இச் சப்த மாதாக்களில் வாராஹி மிகவும் சக்தி வாய்ந்தவள். கேட்ட வரம் தருபவள். இவளை வழிபட்டுத் தான் சோழச் சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் மாபெரும் வெற்றி அடைந்தான் என்பது வரலாறு. தஞ்சாவூர் அரண்மனையை ஒட்டி ஸ்ரீ வாராஹிக்கு தனி ஆலயம் உள்ளது. தஞ்சை பிரகீதீஸ்வரர் ஆலயத்திலும் தனிச் சன்னதி உள்ளது. இது போக சப்த மாதாக்களான பிராமி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி ஆகியோரை வழிபட நன்மைகள் பெருகும்.

எனவே, நம்மை நாமே அறியாமல் கட்டுப்படுத்தும் தேவதைகளின், சூட்சும சக்திகளின் பாதுகாப்பினைப் பெற சப்த மாதாக்களையும்,  ஸ்ரீ சக்ர மாதாவினையும் சரணடைவோம். வளம் பெறுவோம்.

 

டாக்டர் எடித் ஃபையரின் முற்பிறவி, மறுபிறவி ஆராய்ச்சிகள்

51F5JHT6EML__SL500_AA240_முற்பிறவி, மறுபிறவி பற்றிய ஆராய்ச்சியாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர் டாக்டர் எடித் ஃபையர். உளவியல் துறையில் ஆய்வு செய்து மியாமி பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள இவர் ஒரு மனநல சிகிச்சையாளர் மட்டுமல்ல; ஹிப்னோஸிஸ் மூலம் பாதிக்கப்பட்டவரை உறக்கத்தில் ஆழ்த்தி அவர்தம் முற்பிறவி நினைவுகளைக் கண்டறிந்து கூறுவதில் வல்லவர். தற்போது அமெரிக்காவின் ப்ளோரிடாவில் வசித்து வரும் இவர் இத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். பல நூல்களையும் எழுதியுள்ளார்.  அதிலிருந்து சில சம்பவங்கள்….

ஒரு பெண்ணுக்கு எப்போதுமே தண்ணீரைக் கண்டால் பயம். மழையில் வெளியே செல்ல மாட்டாள்நண்பர்களுடன் நீர்நிலைக்குச் செல்லக் கூட அஞ்சுவாள். இந்த நிலை சிறுவயது முதல் அவள் வயதான பின்பும் பல ஆண்டுகாலமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. தன் நிலைக்கான காரணம் அறிய அவர் டாக்டர் எடித் ஃபையரைத் தொடர்பு கொண்டார். ஃபையர் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி, முற்பிறவி பற்றிய ஆய்வினைத் தொடர்ந்தார். அவர் இரண்டிற்கு மேற்பட்ட தனது முற்பிறவிகளில் தண்ணீராலேயே மரணமடைந்தார் என்பதும், ஒரு பிறவியில் அவர் ஆணாகப் பிறந்திருந்த போது சிறுவயதில், தந்தையுடன் படகில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு, படகு கவிழ்ந்து மரணமடைந்தார் என்பதும், மற்றொரு பிறவியில் மீனவராகப் பிறந்து கடலுக்குள் செல்லும் போது மரணமடைந்தார் என்பதும், இன்னொரு பிறவியில் அவர் மாலுமியாகப் பிறந்து கடலில் செல்லும் போது, அப்போது வீசிய பெரும் புயலில் சிக்கி மரணமடைந்தார் என்பதும் தெரிய வந்தது.

அந்த அச்ச உணர்வே அவரது ஆன்மாவில் படிந்து, அவர் மறுபிறவி எடுத்த போதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்த ஃபையர் அவருக்கு தகுந்த மனோ சிகிச்சை அளித்து அவரது முற்பிறவித் தொடர்பான தண்ணீர் பயத்தைப் போக்கினார்.

**********

டாக்டர் எடித் ஃபையர்

டாக்டர் எடித் ஃபையர்

உயரமான இடங்களைக் கண்டால் பயம், அந்தப் பகுதிகளுக்குச் செல்வதென்றால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்று கூறி எடித் ஃபையரை அணுகினார் ஒரு தொழிலதிபர். அது ஒரு வகையான ஃபோபியா என்று மருத்துவர்களால் கூறப்பட்டு வந்தாலும், அதற்கும் முற்பிறவிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என ஆராய நினைத்தார் ஃபையர். சம்பந்தப்பட்ட தொழிலதிபரை ஹிப்னாடிச உறக்கத்திற்கு ஆழ்த்தினார். அப்போதுதான் அவருக்கு அந்த உண்மை தெரிய வந்தது.

இந்தப் பிறவியில் பெரிய தொழிலதிபராக இருக்கும் அந்த மனிதர் முற்பிறவியில் ஒரு பணியாளாக இருந்திருக்கிறார். ஒருமுறை மாதா கோயிலின் ஓடுகளைச் செப்பனிட்டுப் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஓடுகள் உடைந்து கீழே விழுந்து அவர் இறந்து விட்டார். அந்த அதிர்ச்சி அவரது ஆன்மாவில் நிரந்தரமாகப் பதிந்து மறுபிறவியிலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதை அறிந்த டாக்டர் ஃபையர் அந்த மனிதருக்குத் தகுந்த மனோசிகிச்சை அளித்து அவரது எண்ணங்களில் பதிவாகி இருந்த தேவையற்ற பயத்தைப் போக்கினார்.

**********

பாம்புகள் தன்னைக் கடிக்க வருவது போன்றும், துரத்துவது போன்றும் கனவுகள் வருவதாகவும், எப்போதும் பாம்புகளைப் பற்றிய நினைவே தனக்கு அதிகம் இருப்பதாகவும், அந்த அச்சத்தைப் போக்க வேண்டுமென்றும் கூறி ஒரு பெண்மணி எடித் ஃபையரைத் தொடர்பு கொண்டார். எடித் ஃபையர் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி, முற்பிறவிகளுக்குச் செல்லுமாறு ஆணையிட்டார்.

முற்பிறவியில் அந்தப் பெண் அரசரின் அவையில் ஒரு நடனக் காரியாக இருந்த விஷயமும், அப்போது ஒரு சமயம் விஷப் பாம்புகளை உடலில் சுற்றிக் கொண்டு ஆடும்போது அந்தப் பாம்பு கடித்து மரணமடைந்த விஷயமும் தெரிய வந்தது.

முற்பிறவியில் மூளையில் பதிந்த அந்த எண்ண அலைகளே மறுபிறவி எடுத்த போதும் விடாமல் தொடர்கிறது என்பதைம் அதனாலேயே இந்தப் பெண்ணிற்கு அது பற்றிய அச்சமும், குழப்பமும் ஏற்படுகிறது என்பதையும் உணர்ந்து கொண்ட ஃபையர் தகுந்த சிகிச்சை அளித்து அந்தப் பெண்ணை குணப்படுத்தினார்.

அடுத்து அமெரிக்காவின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர், புகழ்பெற்ற விர்ஜீனியா பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் இயான் ஸ்டீவன்ஸன் ஆராய்ந்து கூறியுள்ள முற்பிறவி-மறுபிறவிச் சம்பவங்களைப் பார்ப்போம்.

(தொடரும்)

முற்பிறவி, மறுபிறவி ஆராய்ச்சிகள்

முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் மறைமலை அடிகள். அவர் பல துறைகளில் ஆய்வு செய்து தொலைவில் உணர்தல், மரணத்தின் பின் மனிதர் நிலை போன்ற பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ’சென்ற பிறவியின் நினைவுகள்’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளில் பல சுவாரஸ்யமான முற்பிறவி, மறுபிறவிச் சம்பவங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து  சிலவற்றைப் பார்ப்போம்.

“ஒரு பெரிய மிருகத்தின் கால்களிடையே குடைந்து செய்யப்பட்ட ஒரு கோயிலையும் அக்கோயிலில் நடைபெறும் கிரியைகளையும், அதனைச் சூழ்ந்த நிலத்தோற்றத்தையும் ஒருவர் தெளிவாக நினைவு கூர்ந்தார்; அவர் இப்பிறவியில் அத்தகைய கோயிலையும் அதனோடு சேர்ந்த பிறவற்றையும் எங்கும் கண்டவர் அல்லர். நூல்களில் படித்தாயினும் பிறர் மூலம் கேட்டாயினும் உணர்ந்தவருமல்லர். கனவிலும் நனவிலும் இவர் அடிக்கடி நினைவு கூர்ந்து வந்த அவ்வமைவுகள் எங்குள்ளன என்று ஆராயப் புகுந்த துரை மகன் ஒருவர், அவற்றைப் பழைய எகிப்து நாட்டினில் இருப்பனவாக அறிந்து வியப்புற்றார்.

முன்னொரு பிறவியில் அவ்வெகிப்து நாட்டில் பிறந்திருந்தமையால், இவர் அப்போது அங்கு கண்ட அமைவுகளை இப்பிறவியில் தெளிவாக நினைவு கூர்ந்து வந்தார். இவர் இங்ஙனம் நினைவு கூர்ந்த அவ்வமைவுகளை ( EGYPTIAN SPHINX)  இப்போதும் எகிப்து நாட்டுக்குச் செல்பவர் கண்டு உணரலாம்.

காசிக்குச் சென்றவர் காஞ்சி மாநகரை இல்லாத பொய்ப் பொருள் என்று மறுத்தலும், காஞ்சிக்கு மீண்ட பின் அவர் காசி மாநகரை இல் பொருளென்று கூறுதலும் சிறிதேனும் பொருத்தம் இல்லாத பித்த உரை ஆதல் போல, ஒரு நிலையில் உள்ளோர் பிறிதொரு நிலையின் உண்மை உணராமல் அதனைப் பொய்யென்றுரைத்தல் பெரியதோர் அறியாமையும், மயக்க உணர்ச்சியுமாகும். கனவில் தோன்றும் உணர்வு நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை முற்பிறவியின் அனுபவங்களாகும்.”

முற்பிறவி – மறுபிறவி பற்றி மதுரை ஆதினகர்த்தரின் ஆய்வு

மதுரை ஆதீனகர்த்தராக விளங்கியவர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். அவர் ஆவிகள் உலகம் பற்றி ஆராய்ந்து ‘இறந்தவர்கள் வாழும் நிலையும் பேசும் முறையும்’ என்ற விரிவான ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார்.

ஆதினகர்த்தர் ஒருசமயம் மதுரையில் உள்ள அம்மையநல்லூர் எனும் பகுதியில் தங்கியிருந்தார். அப்போது, அந்த ஊருக்கு அடுத்துள்ள நிலக்கோட்டையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராகப் பதவி வகித்து வந்த ஒருவர், பதினாறு வருடங்களுக்கு முன், தன் பதிமூன்றாம் வயதில் மரணமடைந்த தனது மகனுடன் பேச வேண்டும் என்று சொல்லி ஆதினகர்த்தரைத் தொடர்பு கொண்டார்.

ஆதினகர்த்தர், தமது வழிகாட்டும் ஆவியான தனது தந்தையின் ஆவியைத் தொடர்பு கொண்டு அந்தச் சிறுவனின் ஆவியை வரவழைக்க முயற்சி செய்தார். பெரிதும் முயன்றும் அச் சிறுவனின் ஆவியுடன் அவரால் தொர்பு கொள்ள முடியவில்லை. பிறகு தந்தையின் ஆவி, அச்சிறுவனின் ஆவியை ஆவியுலகத்தின் பல அடுக்குகளிலும் தேடி, இறுதியாக அவன் ஐந்து வருடங்களுக்கு முன் தனக்கு விதிக்கப்பட்ட காலகெடு முடிந்து மறுபிறவி எடுத்துவிட்டதை அறிந்து அவர்களிடம் அறிவித்தது. அதுமட்டுமல்ல, அச்சிறுவன் தனது மறுபிறவியில் நிலக்கோட்டை அருகிலுள்ள ஐயம்பாளையம் என்னும் கிராமத்தில்,  பொடிக்கடை நடத்தும்,  சுப்பையாப் பிள்ளை என்பவருக்கு மகளாகப் பிறந்துள்ளதாகவும், அவளுடைய பெயர் ‘லட்சுமி என்றும்  தெரிவித்தது.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உடனடியாகச் சென்று அதைச் சரிபார்த்த்தில் அங்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் சில மறுபிறவிச் சம்பவங்கள்

சாக்‌ஷி தனது முற்பிறவி மகனுடன் (தந்தை)

சாக்‌ஷி தனது முற்பிறவி மகனுடன் (இப்பிறவி தந்தை)

01-12-1985 தேதியிட்ட இல்லஸ்ட்ரேடட் வீக்லி வார இதழில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் புது தில்லியைச் சார்ந்த கீர்த்திநகர் என்னும் பகுதியில் வசித்து வரும் சாக்ஷி எனும் சிறுமி, ஷ்யாம் மித்ரா என்னும் பெரியவரை தனது முற்பிறவி மைந்தன் என்று அறிவித்துள்ள செய்தி இடம் பெற்றுள்ளது. தனது கூற்றை மெய்ப்பிக்க அச்சிறுமி  தமது முற்பிறவிப் பெயர் ’போலி பாய்’ என்றும், ஷ்யாம் மித்ரா அப்பிறவியில் தன் மகன் என்றும், தான் தற்போது மறுபிறவி எடுத்து வந்திருப்பதாகவும் கூறியதோடல்லாமல், முற்பிறவியில் தம்மோடு இருந்தவர்களுடன் தான் பேசிய முக்கியமான, அந்தரங்கமான, குடும்பத் தொடர்புடையவர் மட்டுமே அறிந்த  செய்திகளையும் கூறி அனைவரையும் நம்ப வைத்துள்ளாள். மேலும் அதற்கு முந்தைய பிறவியைப் பற்றியும் அவள் கூறியிருக்கிறாள். அப்பிறவியில் தான் சிறு குழந்தையாக இருந்ததாகவும், தண்ணீர் தொட்டியில் வழுக்கி விழுந்து தாம் மரணமடைந்து விட்டதாகவும் கூறியிருக்கிறாள், பின் போலி பாயாகத் தாம் மறுபிறவி எடுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறாள். போலி பாயாகத் தான் வாழ்ந்த காலத்தில் தன் கணவர் முரளிதருடன் ஹரித்வார் சென்றிருந்ததாகவும், அப்போது ஒரு குரங்கு தன்னைக் காதருகே கடித்து விட்டதாகவும் கூறும் சாக்ஷி, தற்போது மறுபிறவியிலும் அத்தழும்பு இருப்பதாகவும் கூறுகிறாள்.

இனி ஆய்வாளர்கள் கூறும் சில மறுபிறவிச் சம்பவங்களைப் பார்ப்போம்.

(தொடரும்)

 

முற்பிறவி – மறுபிறவிகள் உண்மையா?

Life Before Life

Life Before Life

முற்பிறவி – மறுபிறவிகள் உண்மைதானா? – இது நீண்ட நெடுங்காலமாகவே மக்களிடம் இருக்கும் கேள்வி. வெகு காலமாகவே விவாதிக்கப்பட்டு வரும் விஷயமும் கூட. உண்மைதான் என்பது ஒரு சிலரது கருத்து. அதெல்லாம் பொய். அப்படி உண்மை என்றால் எனக்கு ஏன் முற்பிறவி ஞாபகங்கள் வருவதில்லை, ஒரு சிலருக்கு மட்டும் வருவது ஏன்? ஆகவே, அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது சிலரது கருத்து.

சிலம்பு, மணிமேகலை போன்ற இலக்கியங்களிலும், திருக்குறளிலும் முற்பிறவி, மறுபிறவி பற்றிய கருத்துக்கள் காணக்கிடைக்கின்றன. பல்வேறு புராண வரலாறுகளும் அதுபற்றிக் கூறுகின்றன. இன்றளவும் உலகளாவிய அளவில் அதுபற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

மனிதன் இறக்கிறான். இறந்த பின் ஆவி நிலை அடைகின்றான். அவன் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்ப சொர்க்கத்தையோ, நரகத்தையோ அடைகிறான். அவற்றில் சிலகாலம் வசித்த பின் எஞ்சிய தனது கர்மாவைக் கழிக்க மீண்டும் பிறப்பெடுக்கிறான் என்கிறது கருடபுராணம்.

கர்மாக்கள் சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என்ற மூன்று வகையாக இருக்கின்றன என்றும் அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க ஏதுமில்லை என்ற நிலையை அடைபவர்களுக்கு பூமியில் மறுபிறவி வாய்ப்பதில்லை என்கிறது கடோபநிஷத்.

உன்னையே நீ அறிவாய் என்ற தத்துவத்தை வலியுறுத்திய சாக்ரடீஸ் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டிருந்தார்.

மரணத்திற்குப் பின் ஆன்மா ஹேடஸ் என்ற சூட்சும உலகிற்குச் சென்று பல நதிகளைக் கடக்கும். பின் பல்வேறு அனுபவங்களைப் பெற்று மறுபிறவி எடுக்கும் என்கிறார் அவர். இந்நதி இந்து மதத்தில் கருட புராணம் கூறும் வைதஸ்வரணி நதிக்கரையை ஒத்துள்ளது.

ஒருவர் மரணமடையும்போது அவர் பருஉடல் மட்டுமே மரணமடைகின்றது. அவர் நுண்ணுடல் அல்லது ஆவி மரணமடைவது இல்லை. அது குறிபிட்ட கால இடைவெளியில் மீண்டும் பிறக்கிறது. இடைபட்ட காலத்தில் அதன் நிலைப்பாடு என்ன? அதன் உணர்வுகள் என்ன? அது எங்கே, என்னவாக இருந்தது என்பதுபற்றியெல்லாம் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். குறிப்பாக CONVERSATIONS WITH A SPIRIT என்னும் நூலில் ஆய்வாளர் DOLORES CANNON இறந்து போன ஆவிகளுடன் பேசி பல அதிசய சம்பவங்களைத் தெரிவித்துள்ளார்.

முற்பிறவிச் செயல்களும் வாசனைகளும் எண்ணங்களாக நமது மூளையில் பதிவு பெற்று,  அந்த வாசனை உணர்வுகளோடுதான் நாம் பிறக்கிறோம். அந்த வாசனைகளை நம்மையும் அறியாமல் சிந்தனைகளாக, செயல்களாக உருப்பெற்று நல்ல வினைகளையோ அல்லது தீய வினைகளையோ உருவாக்குகின்றன. அந்தாவது மனிதரின் மனம் கட்டுப்படுத்தப்பட்டு, சில நேரங்களில் அவனது உண்மையான விருப்பமின்றியே சிந்தனைகளாலும் உணர்வுகளாலும் இயங்குகிறது. மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளும், சமூக நம்பிக்கைகளும் இத்தகைய செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கின்றது. அவற்றிற்கேற்பவே அவன் வினையாற்றுகிறான். அந்த வினைகளினாலேயே அவனுக்கு ’கர்மா’ ஏற்படுகிறது – இது முற்பிறவி பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்கள் கூறும் தகவலாக உள்ளது.

குறிப்பாக டாக்டர் இயான் ஸ்டீவன்ஸன் இதுபற்றி மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார். அமெரிக்காவின் மிகப் பெரிய ஆராய்ச்சியாளரான அவர், பல நாடுகளுக்கும் சென்று முற்பிறவி, மறுபிறவி பற்றி ஆராய்ந்திருக்கிறார். தனது ஆய்வு முடிவுகளை நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். அவரது நூலான        ”Twenty Cases Suggestive of Reincarnation” என்ற நூல் மறுபிறவி ஆய்வாளர்களால் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஸ்டீவன்சன் மட்டுமல்ல; பிரபல ஆராய்ச்சியாளர்களான ஜிம்டக்கர், கரோல் பௌமன், எடித் ஃபையர், எட்கர் கெய்ஸி, டாக்டர் லியான்ஸ், டாக்டர் கார்லிஸ் லூயிஸ், டாக்டர் ஹெரால்ட்ஸ்ன், டாக்டர் ஹெலன் வாம்பாச், பேராசிரியர் எச்.என்.பேனர்ஜி, டாக்டர் ஷிகா, டாக்டர் திரிவேதி போன்றோரும் பல நூல்களையும், ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியிருக்கின்றனர்.

இந்தியாவிலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸைச் (NIMHANS) சேர்ந்த [National Institute of Mental Health & Neurosciences], Clinical Psychology துறைத் தலைவர், பேராசிரியர் டாக்டர் சத்வந்த் பஸ்ரிச்சா பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, முற்பிறவி, மறுபிறவி பற்றிய சம்பவங்களை விளக்கியுள்ளார். பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் இந்தியாவிற்கு வருகை தந்து முற்பிறவி-மறுபிறவிச் சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து கூறியுள்ளனர். அவற்றில் சிலவற்றை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

(தொடரும்)

பேய், பிசாசு, பூதம்

வானத்தில் தோன்றிய பேய்

வானத்தில் தோன்றிய பேய்

பேய், பிசாசு, பூதம் இவையெல்லாம் இருக்கிறதா, இல்லை வெறும் கற்பனையா? அவற்றை நேரில் பார்த்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா, அப்படியென்றால் அவை எப்படி, எந்தத் தோற்றத்தில் இருக்கும்? இல்லை, அனைத்துமே ஏமாற்று வேலையா, மூடநம்பிக்கைகள் தானா?- இவையெல்லாம் பரவலாக எல்லோர் மனதிலும் எழும் கேள்விகள். இருக்கிறது என்று ஒரு சிலரும், இல்லவே இல்லை என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர். சென்னையில் இது பற்றியெல்லாம் ஆராய்வதற்காக விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் தலைமையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ‘ஆவியுலக ஆராய்ச்சி மையம்’ செயல்பட்டு வருகிறது. Ghost Lives, Conversations with a Spirit என்று பல தலைப்பினால ஆங்கிலப் புத்தகங்கள் ஹிக்கின்பாதம்ஸிலும், லேண்ட்மார்க்கிலும் குவிந்து கிடக்கின்றன. தமிழிலோ கேட்கவே வேண்டாம், ஆவிகள் பேசுகின்றன, ஆவிகளுடன் நாங்கள், ஆவி உலக அனுபவங்கள் என்றெல்லாம் பல புத்தகங்கள் காணக் கிடைக்கின்றன. உண்மையில் ஆவிகள் இருப்பது உண்மைதானா? இல்லை மனித மனத்தின் கற்பனையா? இந்தக் கேள்விக்கு விடை தேடும் முன் நமது இலக்கியங்களில், புராணங்களில் அவை பற்றி ஏதேனும் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கலாம்.

சிலப்பதிகாரத்தில் பேயும், பூதமும்

உண்மையாக நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே சிலப்பதிகாரத்தை இளங்கோ இயற்றினர் என்பர். அச்சிலப்பதிகாரத்தில் இயற்கைப் பிறழ்ந்த நிகழ்வுகளாக மோகினி, இடாகினிப் பேய், சதுக்க பூதம் என்றெல்லாம் பல நிகழ்வுகள் சுட்டப்படுகின்றன.

“கழல்கண் கூளி”, எனவும்  ‘இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய்’  எனவும் பேயைப் பற்றிக் கூறுகிறது சிலம்பு. வனசாரினி என்ற வன தேவதையைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. மேலும் ஊர் கோட்டம், வேற் கோட்டம், வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம் எனக் காவல் தெய்வக் கோவில்கள் பற்றியும் சிலம்பு கூறுகின்றது. ஐயை கோட்டம் என கொற்றவை வழிபாடு பற்றியும், சாமியாடுதல் பற்றியும் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தெய்வம் ஏறப்பெற்ற சாலினி கண்ணகியைப் புகழ்ந்து கூறுவதாக வரும் காட்சி மிகச் சிறப்பானது. கொல்லிப் பாவை பற்றியும் மிக விரிவாக சிலம்பு சுட்டுகின்றது. பாய்கலைப் பாவை மந்திரத்தை உச்சரித்து வனசாரிணியிடமிருந்து கோவலன் தன்னைக் காத்துக் கொள்கிறான் என்கிறது சிலம்பு. யார் இந்த வனசாரிணி, யார் இந்த பாய் கலப் பாவை? வனசாரிணி என்பது மோகினிப்பேய் அல்லது வன தேவதை. பாய்கலப்பாவை என்பது கொற்றவை தான் என பதில் கூறுகிறது சிலம்பு. சிங்கம் மட்டுமல்ல; மானும் கூட அவளுக்கு ஒரு வாகனமாம்.

நரபலி கொண்ட பூதம் பற்றியும், தவறு செய்பவரை அடித்துக் கொன்று தின்னும் சதுக்கபூதம் பற்றியும் சிலம்பில் காட்சிகள் உள்ளன. அரசபூதம், வணிக பூதம், வேளாண்பூதம் மற்றும் நால்வகைப் பூதங்கள் பற்றியும் சிலம்பு பேசுகிறது.

சிலம்பில் ஆவி வழிபாடு

மறுபிறவி பற்றியும், முன் வினை, அதன் விளைவுகள் பற்றியும் கூட சிலம்பு குறிப்பிட்டுள்ளது. மேலும் இறந்த தேவந்தி, மாதரி, கோவலன் மற்றும் கண்ணகியின் தாய் போன்றோரின் ஆவிகள் மூன்று சிறுமிகளின் மீது ஆக்கிரமித்தலையும், சேரன் செங்குட்டுவன் அவற்றை வழிபட்டதையும் சிலம்பு காட்டுகின்றது. அதுமட்டுமல்ல; கண்ணகியே இளங்கோவடிகளுக்கு ஆவியுருவில் காட்சி தந்தாள் என்றும் ஆசி கூறி வாழ்த்தினாள் என்றும் இளங்கோவடிகளே நூலின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார்.

பாசாண்ட சாத்தன் என்னும் தெய்வம் பற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றது. “தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” என்று இந்திரனின் ஏவலால் பூதம் வந்து நகரைக் காத்ததை சிலம்பு சுட்டுகிறது. மேலும் வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் அது குறிப்பிடுகிறது. இன்றைய சிறு தெய்வ வழிபாட்டிற்கு அடிப்படையாக அது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இது போன்று பல தகவல்கள் சிலம்பு மட்டுமல்லாது, மணிமேகலை, முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப் பரணி போன்ற பல நூல்களில் காணக்கிடைக்கின்றன. இலக்கியங்களில் காணப்படும் எல்லாமே உயர்வு நவிற்சியால் புனைந்துரைக்கப்பட்ட கற்பனைகள்தான் என்றால் கண்ணகி வரலாறும் கற்பனை தானா?

ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்

ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர். இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் ஆங்கிலத்தில் After the death என்ற ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஆவிகள் பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களைத் தெரிவித்திருக்கிறார்.

கிருஷ்ணய்யரின் மனைவி பெயர் சாரதா. அவர் இருதயக் கோளாறால் இறந்து விட்டார். இது கிருஷ்ண அய்யருக்கு மிகுந்த சோகத்தைத் தந்தது. 33 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இணை தன்னை விட்டுப் பிரிந்ததைப் பற்றி மிகவும் கவலை கொண்டார். மரணம் என்றால் என்ன, அதன் பின் மனிதர்களின் நிலை என்னவாகிறது என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்தார். ஆவிகளுடன் பேசும் முறைகள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். உலகெங்கும் பயணம் செய்து பல புகழ்பெற்ற மீடியம்களை சந்தித்தார். பல அதிசய அனுபவங்களை, தகவல்களைப் பெற்றார் என்றாலும் நேரடியாக அவரால் அவரது மனைவியின் ஆவியுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருந்தது.

அவர் மனைவி சாரதாவின் ஆவி பிறர் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அவர்களோடு பேசியது. பல எதிர்கால தகவல்களைக் கூறி எச்சரிக்கை செய்தது. ஆனால் கிருஷ்ணய்யருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை சாரதாவின் ஆவியிடம் ஒரு நண்பர் வினவிய போது, ‘அவர் என் பிரிவால் அடைந்திருக்கும் சோகமும், அதனால் ஏற்படும் துயரமுமே மிகப் பெரிய திரையாகச் சூழ்ந்து அவரை என்னோடு தொடர்பு கொள்ள இயலாமல் செய்திருக்கிறது. அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக வாழ முயல வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.

இதனை அறிந்த கிருஷ்ணய்யர் மிகவும் துயரம் கொண்டார். ஒருநாள் கிருஷ்ணய்யரின் இல்லத்திற்கு ஒரு சாது வந்தார். அவர் புராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். மட்டுமல்ல’ ஆவிகளுடன் பேசுவதிலும் பயிற்சி பெற்றவர். அவர் கிருஷ்ணய்யருக்கு ஆவிகளுடன் பேசுவதற்காக சில பயிற்சி முறைகளை சொல்லித் தந்தார். ஆனால் அய்யர் அப்போது உச்ச நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்ததால் மிகுந்த வேலைப்பளு இருந்தது. அதனால் அந்தப் பயிற்சிகளைச் செய்ய இயலவில்லை. இனி கிருஷ்ணய்யர் கூற்றாகவே வருவதைக் காண்போம்.

அந்தச் சாது என்னோடு சிலநாட்கள் தங்கினார். என்னை தனது சிஷ்யப் பொறுப்பிலிருந்து விடுவித்தார். ஒருநாள்… பௌர்ணமி… இரவு… அன்று அவர் தியானத்தில் அமர்ந்தார். பின் தான் தற்போது சாரதாவின் ஆவியுடன் தொடர்பு கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். நானும் அதற்குச் சம்மதித்தேன்.

மறுநாள் காலை எழுந்ததும் அந்தச் சாது என்னைச் சந்தித்தார். தனது தியானத்தில் என் மனைவியைக் கண்டதாகவும் (அவர் முன்னமேயே என் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்திருந்தார்), அவர் பத்மா, காந்தா என்னும் இரண்டு பெயர்களை மட்டும் கூறி விட்டு உடனடியாக மறைந்து விட்டதாகவும் சொன்னார். நான் அதிர்ச்சியுற்றேன். காரணம், இந்த முன்பின் தெரியாத சாதுவால் அந்தப் பெயர்களை கற்பனை செய்து கூடச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பத்மா என்பது மனைவியின் சகோதரி பெயர். காந்தா என்பது என் மனைவியின் சகோதரர் பெயர் (காந்தா என்றுதான் அவரை அனைவரும் அழைப்பார்கள்). ஆக, இவர் என் மனைவியைக் கண்டதாகச் சொல்வது உண்மைதான் என உணர்ந்தேன்.

சில நாட்கள் போயிற்று. மீண்டும் அவர் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்தார். மறுநாள் அவர் தியானத்தில் கண்டவற்றை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். ”என் தியானத்தில் உன் மனைவியைக் கண்டேன். ’ நான் என் கணவரது வருகைக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் ஒருவேளை நான் மறுபிறவி எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். அப்படி நான் மறுபிறவி எடுத்தால், சென்னையிலுள்ள டாக்டர் சந்தானம் – ஜெயா சந்தானம் தம்பதிகளுக்குக் குழந்தையாகப் பிறப்பேன்’ என்றாள் அவள்” என்றார் சாது.

நான் திகைத்துப் போய் நின்று விட்டேன், காரணம், சந்தானம் என்பது என் மனைவி சாரதாவின் இளைய சகோதரர் பெயர். அவர் சென்னயில் டாக்டராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜெயா. இதை அந்தச் சாது கற்பனை கூடப் பண்ணிச் சொல்லியிருக்க முடியாது. இந்த விஷயங்களை அவரிடம் சொல்வதற்கான ஆட்களும் அப்போது என் வீட்டில் இல்லை. இது உண்மைதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணய்யர்.

இதுமட்டுமல்ல; முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் போன்றவர்களும் ஆவி உலக ஆய்வில் நம்பிக்கை கொண்டதாகவும் அவர் அந்நூலில் தெரிவித்திருக்கிறார்.

அனுபவமே உண்மை ஆசான்!

ஆவி உலக ஆராய்ச்சிகள்

ஆவி உலகம் பற்றி உலகெங்கிலும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. சில சமயம் ஆய்வாளர்களது கருத்துக்கள் சில ஒன்றுக்கொன்று மாறுபட்டும் உள்ளன. உதாரணமாக ஆவி உலகம் பற்றி ஆராய்ந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஆவி கூறியதாகச் சொல்லப்படும் தகவல்கள்:

”ஆவியுலகத்தில் (A, B, C, D) என நான்கு பகுதிகள் உள்ளன. ஏ, பி பகுதியில் இருப்பவர்கள் எல்லா உலகத்தையும் பார்க்கமுடியும். நினைத்த நேரத்தில் எங்கும் செல்ல முடியும். இவர்கள் புண்ணியம் செய்தவர்கள். பி-பகுதியியிலிருந்து ஏ-பகுதிக்குச் செல்ல முடியும். பி பகுதியில் வாழ்பவர்கள் தங்களது நல்ல எண்ணங்கள் மூலம் ஏ நிலைக்கு உயர முடியும். இருள் பகுதியில் இருப்பவர்கள் பேய்கள், தீய ஆவிகள் என அழைக்கப்படுகின்றனர். எதிர்காலத்தைப் பற்றி சரியாக கணித்துச் சொல்கிற சக்தி ஏ, பி பகுதியில் உள்ளவர்களுக்கு உண்டு. மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் சொல்வது சரியாக இருக்காது. சமயங்களில் சில தீய ஆவிகள் வந்தும் உண்மை போல் பேசிக் குழப்பிவிடுவதும் உண்டு. ஆவி உலகிலும் சட்ட திட்டங்கள் உள்ளன. அங்கு பிறர், ஒருவருக்கு கெடுதல் செய்தால் தண்டனை உண்டு. கடவுளின் ஆணைப்படி, பரிசுத்த ஆன்மாக்கள் ஆவி உலகைப் பொறுப்பேற்று நடத்துகின்றன. ஆவி உலகில் உள்ள ஆவிக்கு வளர்ச்சி உண்டு. குழந்தையாக இருக்கும் ஆவி, வெகு காலத்திற்குக் குழந்தை மனநிலையிலேயே இருப்பதில்லை. தனது அனுபவம், ஆர்வத்திற்கேற்ப அவை வளர்ச்ச்சி அடையும். ஆவிகளுக்கு நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்திற்கு அதிவேகமாகச் செல்லக்கூடிய சக்தி உண்டு. பிராணிகளுக்கு என தனி உலகம் உண்டு. தனி சட்ட திட்டங்களும் உண்டு. காலையும் மாலையும் 5-7 வரை பூஜை நேரம் பின்பற்றப்படுகிறது.”

இவையே ஆய்வாளருக்கு ஆவி கூறிய தகவல்கள்.

ஆவிகள் பற்றியும், தேவதைகள் பற்றியும் கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். “வாழ்வாங்கு வாழ்ந்த பலர், தேவதைகளாகக் கருதப்பட்டனர். முத்தன், முனியப்பன், காடன், மதுரை வீரன் என்பன போன்ற ஆண் தெய்வங்களும்; ஆலையம்மன், எல்லையம்மன், படவேட்டம்மன் போன்ற பெண் தேவதைகளும், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்து மடிந்தவர்களாக இருக்க வேண்டும்.“ என்கிறார் அவர்.

மேலும், ‘அதுபோல் ஆண் தெய்வங்களிலும் கோபத் தெய்வங்களாகக் காட்சியளிப்போர், ஒருகாலத்தில் வீரர்களாக வாழ்ந்திருக்க வேண்டும். ஒருவேளை, பயங்கரமான குணம் படைத்தவர்களாகவும் வாழ்ந்திருக்கலாம். அவர்களது ஆவியை அமைதிப்படுத்துவதற்கே பலி கொடுக்கும் பழக்கமும் வந்திருக்கலாம். பெண் தேவதைகளிலம் சில ருத்ர தேவதைகள் பயங்கரமான குணம் படைத்தவர்களாக இருந்து வாழ்ந்து, சாந்தி இல்லாமல் இறந்து போனவர்களாக இருக்கலாம். அவர்களையும் அமைதிப்படுத்தவே பலி கொடுக்கும் பழக்கம் வந்திருக்கலாம். அவரவர்களுடைய சுற்றத்தினர், தங்கள் குலத்தில் வாழ்ந்த ஒருவனுக்கோ ஒருத்திக்கோ எழுப்பிய இந்தச் சிறு ஆலயங்கள், நாளடைவில் ஊராரின் நம்பிக்கைக்கு உரியனவாகி, தெய்வங்களாகி இருக்க வேண்டும்’ என்று அவர் தெரிவிப்பது, தமிழர்களின் தொன்மையான சிறு தெய்வ வழிபாட்டிற்கும், ஆவி வழிபாட்டிற்கும் வலு சேர்ப்பதாய் அமைந்துள்ளது.
கண்ணதாசன் கூறும் ஆவிகள் உலக அனுபவமும் வியக்கத்தக்கது.

அவர், ”இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகுந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு. எனக்கே இதில் அனுபவம் உண்டு. 1941-ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு. அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு. ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக்கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும். அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்! சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும். மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும். மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும். இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன”  என்று அவர் கூறியிருப்பது நம்மை வியலாப்பிலாழ்த்துகிறது.
 
பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆவியுலக ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அது பற்றி அவர் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருந்ததாகவும், அதன் மூலம் ஆவிகளின் உதவிகளைப் பெற்று பல்வேறு கண்டுபிடிப்புகளை அவர் உலகிற்கு வழங்கியதாகவும் ஒரு கருத்துண்டு. Electronic voice phenomenon என்ற கருவி மூலம் ஆவிகளின் குரல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். சிலர் புதிய பல கருவிகள் மூலம் ஆவிகளை புகைப்படமெடுத்தும் உள்ளனர்.

மாத்யூ மானிங் என்ற ஆய்வாளர் ஹிட்லரின் ஆவியுடன் பேச முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார். அதுபோன்று ராவ்டிவ் என்ற ஆய்வாளரின் நண்பரான ரேமாண்ட் கேஸ் என்பவரும் ஆவி உலக ஆய்வில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். ஒருநாள் அவர் ஆவிகளின் குரலைப் பதிவு செய்ய முனைந்திருந்தார். அவர் காதுகளுக்கு ஒன்றுமே கேட்கவில்லை. பின் பிளேயரில் போட்டுக் கேட்ட போது அதில் ஆவிகளின் குரல் பதிவாகியிருப்பதை உணர்ந்தார். திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டவர், அதிர்ச்சியடைந்தார். காரணம், ‘அதில் ராவ்டிவ் தன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்ன்’ என்ற ஒலி பதிவாகி இருந்தது. அப்போது ராவ்டிவ் நல்ல உடல்நிலையில் இருந்தார். மரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் ரேமாண்ட் அதைப் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அனைவரும் அதிர்ச்சியடையும் படி திடீரென ஒருநாள் ராவ்டிவ் திடீரென மரணமடைந்தார். அது ஆவியின் குரல் தான் என்றும், அது முன்னெச்சரிக்கை செய்யவே வந்ததும் என்றும் பின்னர் அவர் உணர்ந்து கொண்டார். இது ஆய்வாளர்களால் ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது போன்று பல அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளன. ஆனாலும் ஆவியுலக மர்மங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆவிகள் உலகம்

ஆவிகள் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலோருக்கு ஒருவித அச்சம் ஏற்படும். சிலர் அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை எனக் கூறுவர். ஆனால் இறந்த தங்கள் முன்னொர்களை குல தெய்வமாக வணங்குவர். இல்லாவிட்டால் இறந்தவர்களது நினைவு நாளில் சிலைகளுக்கு மாலையிட்டு, அவர்கள் நினைவாக அன்னதானங்கள் செய்து வணங்குவர். இதுவே ‘நீத்தார் கடன்’ என தமிழில் கூறப்படுகின்றது. கடவுள் இல்லை, ஆவிகள் இல்லை என்று கூறுபவர்கள், சிலைகளுக்கு மாலையிட்டு வணங்குவதும், நினைவு நாள் கொண்டாடுவதும் உருவ வழிபாட்டை ஒத்ததே! வழிபாட்டின் அடிப்படையே நினைவைப் போற்றுதலும், நன்றி உணர்வுடன் இருத்தலுமே! இதையே பக்திமான்களும் செய்கின்றனர். நாத்திகர்களும் செய்து வருகின்றனர். ’ஆவிகள்’ என்பது பற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

ஆவிகள்
மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது. இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.

ஆவிகள் உலகம்
கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.

அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான். இந்த ஆவிகள் உலகம் கொடிய பாவம் செய்தவர்களுக்கு மிகவும் துன்பத்தைத் தரும் ஒன்றாக இருக்கும். பேராசை கொண்ட அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர். பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர். தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது. ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர். அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர். சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர். அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகிறோம்.

ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு தீய ஆவிகளின் பீடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.

நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர். இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்.

(தொடரும்)

« பழைய வரவுகள்