பக்தர் : ஒருவன் செய்யும் வினை பின்வரும் பிறப்பில் அவனைப் பந்தப்படுத்தாதா?
பகவான் : நீ இப்பொழுது பிறந்திருக்கிறாயா? வேறு பிறவிகளைப் பற்றி எதற்காக நினைக்கிறாய்? உண்மையில் பிறப்புமில்லை, இறப்புமில்லை. பிறந்திருக்கிறவன் இறப்பைப் பற்றியும் அதன் நிவிருத்தியைப் பற்றியும் நினைக்கட்டும்.
பக்தர் : சிலர் செய்வதைப் போல் இறந்தவர்களை நீங்கள் எங்களுக்குக் காட்ட முடியுமா?
பக்தர் : உன் பந்துக்களை அவர்கள் பிறப்பதற்குமுன் உனக்குத் தெரியுமா? அவர்கள் இறந்த பிறகுமட்டும் அவர்களைத் தெரிந்துகொள்ள முயல்வானேன்?
பக்தர் : ஒருவன் மனத்தை ஒருமைப்படுத்த முயலும் போது, மற்ற எண்ணங்கள் வெகு வேகமாகக் கிளம்புகின்றனவே!
பகவான்: தியான சமயத்தில் நாநாவித எண்ணங்கள் கிளம்புகின்றன. அது நல்லதே; ஏன்? உள்ளே மறைந்து கிடப்பது வெளியாகின்றது. வெளியானாலொழிய அதை அழிப்பதெப்படி? எண்ணங்கள் தாமே யெழ, அவை காலக்கிரமத்தில் நசிக்க, மனம் பலமடைகிறது.
பக்தர் : பகவான் நீங்கள் ஏன் ஊரூராகச் சென்று ஜனங்களுக்கு சத்தியத்தைப் போதிப்பதில்லை?
பகவான் : நான் அதைச் செய்யவில்லையென்று உனக்கெப்படித் தெரியும்? மேடைமீதேறி ஜனங்களுக்குப் பிரசங்கிப்பதுதான் போதனையா? போதனை யென்பது அறிவைப் புகட்டுவது. அதை மௌன மொன்றாலேயே உண்மையிற் செய்ய முடியும். ஒரு மணி நேரம் பிரசங்கம் கேட்டுவிட்டு, அதனால் தன் வாழ்வை மாற்றிக் கொள்ள வேண்டு மென்னும் உறுதியுறாத ஒரு மனிதனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? ஒரு பரிசுத்த சந்நிதியிலமர்ந்து சிறிது நேரத்தில் தனது வாழ்க்கையின் நோக்கம் முழுதும் மாறப்பெற்றுப் போகும் வேறொருவனோடு அவனை ஒப்பிட்டுப் பார். இவ்விரண்டில் எது நல்லது? பயனின்றி உரக்கப் பிரசங்கம் புரிவதா? அல்லது மௌனமாயமர்ந்து ஆத்மசக்தியை எங்கும் பரப்புவதா?
பக்தர் : கடவுளைக் காண்பதெப்படி?
பகவான் : கடவுளைக் காண்பதென்பது கடவுளாயிருப்பதே. வியாபித்தற்கு அவருக்கு அன்னியமாக ‘எல்லாம்’ என்பது இல்லை. அவரே இருக்கிறார்.
(மஹர்ஷி வாய்மொழியிலிருந்து…)
****

