மனிதனா இல்லை மாடா?

swami-vivekananda

சுவாமி விவேகானந்தர் கல்கத்தாவில் இருந்த சமயம். பசுவதை தடுப்புச் சங்கத்தின் சார்பாக ஒருவர் வந்து சுவாமிகளுடன் உரையாடினார். தாங்கள் செய்து வரும் பணி பற்றி மிகப் பெருமையாகக் கூறிக் கொண்டார். உடனே சுவாமிகள், ” நீங்கள் பசுக்களைக் காப்பது இருக்கட்டும். பஞ்சத்தாலும் பட்டினியாலும் சக மனிதர்கள் மடிந்து கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்” என்று கேட்டார்.

உடனே அந்த மனிதர், ” அது அம்மனிதர்களின் கர்மவினை. நாம் என்ன செய்ய முடியும்? அவர்கள் அதனை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும்” என்றார் ஒரு சிறிதும் இரக்கமில்லாமல்.

அதைக்கேட்ட சுவாமிகளுக்கு அளவற்ற சினம் ஏற்பட்டது. “அதே நியதி உங்களுடைய பசுக்களுக்கும் பொருந்தும் தானே, அவைகளுக்கும் கசாப்புகடைக்காரனால் தலை வெட்டப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்குமானால் யார் என்ன செய்ய முடியும், அவற்றின் தலைவிதியை அவை அனுபவிக்கட்டும் என்று விட்டுவிட வேண்டியது தானே!, அவற்றை எதற்காகக் காப்பாற்ற வேண்டும்?” என்றார்.

உடனே அம்மனிதர் அதற்கு, ” பசு கோமாதா அல்லவா, அது நம் தாயைப் போன்றதாயிற்றே!. அதனைக் காப்பது நம் கடமை அல்லவா?” என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.

உடனே விவேகானந்தர் சிரித்துக் கொண்டே, ” ஆம்! உண்மைதான்! ஒரு விலங்கு தான் நம்மைப் போன்றவர்களுக்குத் தாயாக இருக்க முடியும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்றார் உட்பொருளுடன்.

சுவாமிகள் என்ன சொல்லுகிறார் என்பதனை உணர்ந்து கொண்ட அம்மனிதர், வெட்கத்துடன் வேறு எதுவும் பேச முடியாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

சுவாமிகள் சொன்னதன் உட்பொருள் என்ன? பசுவை அப்படியே கொல்ல விட்டு விடு என்பதல்ல. பசுவுக்குக் காட்டும் கருணையை பசியாலும், பட்டினியாலும், பஞ்சத்தாலும் இறக்கும்  சக மனிதர்கள் மீதும் காட்டுங்கள் என்பதுதான்.

ஸர்வே ஜனா ஸூகினோ பவந்து


******