அனுதினமும் வாழ்க்கையில் நாம் பலரை பல கால கட்டங்களில் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவற்றில் பல சந்திப்புகள் நம்மால் மறக்க முடியாத ஒன்றாக ஆகி விடக் கூடும். அப்படிப் பட்ட சந்திப்புகளுள் ஒன்றுதான் இது.
ஒரு மாலை நேரத்தில் அவருக்கு போன் செய்தேன். அவர் மனைவி எடுத்தார். ”ஆங். இதோ இருக்குறாருங்க, கொடுக்கிறேன்” என்றார்.
“சொல்லுங்க” என்றவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஆசிரியர் அறிவுறுத்தியிருந்தபடி சந்திப்பிற்கான நேரம் கேட்டேன்.
”எப்ப வேணா வாங்க சார். நான் இங்க பக்கத்துலதான இருக்கேன். எதுக்கும் வர்றதுக்கு முன்னாடி ஒரு தடவை போன் செஞ்சு ஞாபகப்படுத்திடுங்க” என்றார்.
மறுவாரத்தில் ஒருநாள் போன் செய்து விட்டு வருவதாகச் சொல்லி போனை வைத்தேன்.
அதேபோல் மறுவாரத்தில் குறிப்பிட்ட அந்த நாள் காலை அவருக்கு தொலைபேசினேன். “ நாளைக் காலை ஒரு 11.00 மணியைப் போலச் சந்திப்போமா” என்றார்.
”சரி” என்றேன்.
காலை 10.30 மணிக்கு அவர் வசித்த ஊருக்கு வந்தேன். ஆட்டோக்காரரிடம் முகவரி விசாரித்தேன். அவருக்கு சரியாகத் தெரியவில்லை. ஒருவிதத்தில் பார்த்தால் அவர் மிகப் பிரபலமான மனிதர். ஆனால் ஏனோ அந்த ஆட்டோக்காரர் அவரை அறிந்திருக்கவில்லை.
”சரி” என்று அவர் கொடுத்திருந்த முகவரிக்கு ஆட்டோவை போகச் சொன்னேன். அங்கும் இங்குமாகச் சுற்றி கடைசியில் ”கன்னா பின்னா” என்று தோட்டப்பட்டிருந்த அந்தத் தெருவின் முனையில் இறங்கிக் கொண்டேன். அதற்கு மேல் ஆட்டோ செல்லாது என்பதால் அங்கிருந்து நடந்து சென்று அவரது வீட்டை அடைந்தேன். அழைப்பு மணியை அழுத்தினேன்.
அவரது மனைவி வந்து கதவைத் திறந்தார். “ஐயா, கடைவீதி வரைக்கும் போயிருக்கிறாரு. நீங்க வருவீங்கன்னு சொன்னாரு. மேலே இருங்க. வந்திடுவாரு” என்றார்.
நான் படியேறி மேலே சென்றேன். அது ஒரு சிறு அறை. விவேகானந்தரின் போட்டோ ஒன்று சுவரில் மாட்டப்பட்டிருந்தது. மேலே உள்ள லாஃப்டில் அவர் வாங்கிய விருதுகள், கேடயங்கள், பட்டயங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதற்குக் கீழே வரிசை வரிசையாகப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிட்டிருந்தன. அதன் அருகே ஒரு சின்ன பெஞ்சு. அதில் ”நிலமெல்லாம் ரத்தம்” தனியாக இருந்தது. எதிரே இருந்த ஷெல்ஃபில் நிறைய ஆன்மீகப் புத்தகங்கள் கண்ணில் பட்டன.
கீழே ஒரு சிறிய மெத்தை. ஒரு சின்ன பீரோ. மற்றும் இரண்டு நாற்காலிகள். அவ்வளவுதான்.
மற்றபடி எந்த வனப்பும் ஆடம்பரமுமின்றி மிக எளிமையாக இருந்தது அந்த அறை, அவரைப் போலவே.
நான் அவருக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன்.
சற்று நேரத்தில் “வாங்க. வணக்கம்” என்று சொன்னவாறே அவர் மேலே வந்தார்.
நானும் பதில் வணக்கம் தெரிவித்தேன்.
”போஸ்ட் ஆஃபிஸ் வரைக்கும் போயிருந்தேன். கொரியர்ல அனுப்புறதை விட போஸ்டல்லதான் நான் பெரும்பாலும் அனுப்புவேன். ஏன்னா கொரியர் ஆஃபிஸ் இந்தப் பக்கம் இல்லை. அதுக்கு இன்னும் 2.கி.மீ நான் நடக்கணும்” என்றார்
“அப்படியே போயிட்டு தபாலைச் சேர்த்திட்டு சில பத்திரிகைகள் வாங்கிட்டு வந்தேன். உங்க எடிட்டரை எனக்குத் தெரியும். மயிலாப்பூர்ல ஒரு தடவை நடந்த பாரதி விழாவுல சந்திச்சுப் பேசியிருக்கோம். அப்பவே அவர் என் கிட்ட சொன்னார், இண்டர்வியூ வேணும்னு. இண்டர்வியூலாம் கொடுக்கறதுக்கு நான் என்ன ரொம்பப் பெரிய ஆளா சொல்லுங்க. அதான் பேசாம இருந்திட்டேன். நீங்க விடாம பேசி வந்துட்டீங்க” என்றார்.
”சார், நீங்க லட்சக்கணக்கான மக்களோட மனம் கவர்ந்த ஆள் இல்லையா. அப்படின்னா பெரிய ஆள்னு தானே அர்த்தம்” என்று புன்சிரித்து விட்டு நேர்காணலுக்கான சாதனங்களை வெளியே எடுத்தேன்.
”சரி. நீங்க கேள்விகளைக் கொடுங்க. நான் பதில எழுதி வச்சிர்றேன். அப்புறமா வந்து வாங்கிக்குங்க” என்றார்.
நான் பதறி, “இல்லை சார். நான் கேள்வி கேட்கறேன். நீங்க பதில் சொல்லுங்க. அதை ரெகார்ட் பண்ணிருவேன். அப்புறமா அதைக் கேட்டு கேட்டு நாங்க எழுதி எடிட் பண்ணிப் போடுவோம்” என்றேன்.
“இல்லீங்க. உங்களுக்கு எதுக்குச் சிரமம். நீங்க கொடுத்துட்டுப் போங்க. நான் இன்னிக்கு ராத்திரியே உட்கார்ந்து எழுதி வச்சிர்றேன். நீங்க நாளைக்கு வந்து வாங்கிக்கலாம்” என்றார்.
”இல்லை சார், சிரமம்லாம் எதுவுமில்லை. இதுதானே என் வேலை. ஆரம்பிக்கலாமா” என்றேன்.
“சரி, கேளுங்க” என்றார்.
நான் ஆரம்பித்தேன்.
(தொடரும்)
இதை எழுதியவர் : அரவிந்த்