Archive | ஜனவரி 2012

மயான க்ஷேத்திரம் – காசி

காசியின் மறுகரையில்...

”புயலார் பொழிற்காசிப் பூங்கோயின் மேய

கயலார் தடங்கணாள் காந்தன் – செயலாவி

உய்யத் துதியா ருதிப்பார் துதிப்பாரேல்

வையத் துதியார் மறுத்து”

என்கிறார் குமரகுருபரர், தனது காசிக்கலம்பகத்தில். அந்த அளவுக்கு பெருமை மிக்க தலம் காசி.

“தர்ஸனாத் அப்ரஸதசி

ஜனனாத் கமலாலயே

காச்யாந்கி மரணான் முக்த்தி

ஸ்மரணாத் அருணாசலே:”

- என்பது ஸ்லோகம். “கயிலையைக் கண்டால் முக்தி. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் மரணமடைந்தால் முக்தி. அருணாசலத்தை நினைத்தாலே முக்தி.” என்பது இதன் பொருள். காசி தலத்தில் மரணமடைந்தவர்களை அன்னை விசாலாட்சி தன் மடியில் தாங்கிக் கொள்ள, ஈஸ்வரன் அம்மரணமுற்றவர்களின் காதுகளில் ராம நாமத்தை ஓதி, முக்தி அளிப்பதாக ஐதீகம். இங்குள்ள இறைவன் மணிகர்னேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். இறப்போரின் காதுகளில் ஈசன் குனிந்து ராம நாமத்தை ஓதும் போது அவர் காதுகளில் அணிந்துள்ள குண்டங்கள் தரையில் படுவதால் இங்கு இறைவனுக்கு இப்பெயர். (மணி – குண்டலம்; கர்ணிகா – காது). இங்கு வந்து மரணமடைய வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்து தமது இறுதி நாட்களைக் கழிப்பவர்கள் பலர்.

மணிகர்ணிகா காட், காசி

ஒவ்வொரு இந்துவும், குறிப்பாக தமிழர்கள் ஒவ்வொருவரும் காசி யாத்திரை மேற்கொள்ள வேண்டுவது அவசியம். காரணம், மனிதன் வாழ்வின் பூரணத்துவத்தை எய்துவது காசி திருத்தலத்தைக் கண்ட பிறகுதான். புனிதம் என்று நினைத்த பலவற்றிற்கு அர்த்தமில்லாமல் போவதும், ’தீட்டு’ என்று கருதி விலக்கப்பட்டவற்றிற்கு பொருள் இல்லாமல் போவதும் காசியில்தான். காசி ஒரு மயான க்ஷேத்திரம். ”ராம், ராம்” என்று உச்சரிப்போடு பிணங்கள் தூக்கிவரப்படுவதும், அவை வரிசையில் வைக்கப்பட்டு எரிக்கப்படுவதும், கங்கையில் வீசியெறியப்படுவதும் காசியில் தான். இதற்காகவே காசியில் அமைந்துள்ள இடம்தான் மணிகர்ணிகா காட். இந்த இடத்தில் முன்னோர்களுக்கு நீத்தார் கடன்கள் செய்வது மிக மிக விசேஷமானது. பொய்யாமையை தன் வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்த்து அனைவருக்கும் உதாரணமான மன்னன் ஹரிச்சந்திரன் மயானக் காவலனாக பணி செய்த இடம் ஹரிச்சந்திரா காட். இங்கும் இறந்தவர்களை எரிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

எரியும் உடலம், ஹரிச்சந்திரா காட்

“காசியில் இறப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர் பிராம்மணனாயினும் சரி, வேசியாயினும் சரி  பரமசிவனாக ஆகிறார்கள்.” என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். ”காசி தெய்விக உணர்வுமயமான இடம். இங்கு உயிர் விடுபவர் யாரானாலும் பக்தன், பக்தன் அல்லாதவன், வேற்று மதத்தினன், புழு, பூச்சி யாராக இருந்தாலும் அவர்களுக்கு முக்தி நிச்சயம் கிடைக்கும்.” என்று கூறியிருக்கிறார் அன்னை ஸ்ரீ சாரதாதேவி. இதிலிருந்தே காசியில் மகத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

 

மணிகர்ணிகையில் ஒரு அகோரி…

 

எரியும் உடல், மணிகர்ணிகா

”கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி தீர்த்தே சந்நிதம் குரு” என்பது புனித கங்கைக்கான துதி. காசியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பல உண்டு. துண்டி கணபதி ஆலயம், துர்கா ஆலயம், சங்கட் விமோசன் ஆலயம், காசி அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனராஸ் விஸ்வநாதர் ஆலயம், சாரநாத் போன்றவை அவசியம் காண வேண்டியவையாகும்.

அவர் ஆத்திகரோ, நாத்திகரோ காசி நகரம்,  ஒவ்வொரு மனிதரும் தம் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய இடம் என்பதில் ஐயமில்லை.

***************

பொன்மொழிகள்


பகவான் ரமணர்

தேகத்தையே ஆத்மா என்று மயங்கும் புத்தியே த்வைதம்; அந்த நிலை இல்லாமல் போவதே அத்வைதம்.                                               

                                                                                                                                                                                                                                         - ஸ்ரீரமணர்

தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.                                                                                                                                                                                                                  

                                                                                                                                                                                                                                         - ஸ்ரீரமணர்

ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.

                                                                                                                                                                                                                                         - ஸ்ரீரமணர்

இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும். There is no any Short Routes to Reach the Feet of God. 

                                                                                                                                                                                                                                         - ஸ்ரீரமணர்

முன் பின் தெரியாதவனை உபசரித்தால் கடவுளுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.                                                                

                                                                                                                                                                                                                                           -பைபிள்

 புலன்கள் உனக்குக் கட்டுப்பட்டு அடங்குமானால் உன் உள்ளத்தின் ஆழத்தில் உள்ள இறைவனைக் காண்பது உறுதி.                      

                                                                                                                                                                                                                                   - ஆதி சங்கரர்

 தினம்தோறும் குருவைத் தியானித்தலும், இறைவனை வழிபடுதலும் மனிதனை உயர்த்தும்.                          

                                                                                                                                                                                         - சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்

                     மனிதன் கடவுளை முழுமையாகச் சரணடைந்தால் தன்னில் முழுமையாக இறைவனைக் காண்கிறான்.                                      

                                                                                                                                                                                                                                -ஸ்ரீஅன்னை

 தன் குறைகளையும் தவறான செயல்களையும் ஒப்புக் கொண்டு அவற்றினிலிருந்து விலகுவதும், அவற்றை விலக்குவதுமே முக்திக்கு வழியாகும்.     

                                                                                                                                                                                                                              -ஸ்ரீஅரவிந்தர்

கருணையும், மன்னிக்கும் தன்மையும் சாந்தியும் நிறைந்தவர்களின் இதயமே கடவுள்

- ராமதாசர்

ஏழைகள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்பவன், பகலெல்லாம் நோன்பு நோற்று இரவு முழுவதும் இறைவனைத் தொழுபவனை விட உயர்ந்தவன்                                                

-  நபிகள் நாயகம்

 உண்மை, பற்றின்மை, அன்பு ஆகிய குணங்களைக் கொண்டவனே நல்ல மனிதன்.    

-கபீர்

 தன் உயிரைக் காக்கவேண்டி வந்தாலும் அதற்காக தர்மத்தைக் கைவிடக் கூடாது.

-மகாபாரதம்

எளியவர்களுக்கு ஒரே புகலான இறைவனை, சரணடைவதன் மூலம் மட்டுமே, நாம் அவன் அருளைப் பெற முடியும்.                     

- சுவாமி விவேகாநந்தர்

 சொர்க்கம் வேண்டும் என்பதற்காக இறைவனைத் தொழுபவன் ஒரு வியாபாரி; நரகத்தில் இருந்து விடுபட இறைவனை வேண்டுபவன் ஒரு கோழை; இறைவனுக்காக மட்டுமே இறைவனை வழிபடுபவனே உண்மையான பக்தன்.

                                                                           - இமாம் கஸ்ஸாலி.

ஒவ்வொருவரும் தங்களுக்கு வாழ்க்கையில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளைச் சரிவர செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம்.            

-பகவத்கீதை

 அறியாமை என்னும் மாயத்திரைகள் நம்மை விட்டு விலகினால் அருபெருஞ்சோதியான ஆண்டவரை நாம் தரிசிக்கலாம்.              

- வள்ளலார்

**************