ஆவிகள் உலகம்

ஆவிகள் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலோருக்கு ஒருவித அச்சம் ஏற்படும். சிலர் அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை எனக் கூறுவர். ஆனால் இறந்த தங்கள் முன்னொர்களை குல தெய்வமாக வணங்குவர். இல்லாவிட்டால் இறந்தவர்களது நினைவு நாளில் சிலைகளுக்கு மாலையிட்டு, அவர்கள் நினைவாக அன்னதானங்கள் செய்து வணங்குவர். இதுவே ‘நீத்தார் கடன்’ என தமிழில் கூறப்படுகின்றது. கடவுள் இல்லை, ஆவிகள் இல்லை என்று கூறுபவர்கள், சிலைகளுக்கு மாலையிட்டு வணங்குவதும், நினைவு நாள் கொண்டாடுவதும் உருவ வழிபாட்டை ஒத்ததே! வழிபாட்டின் அடிப்படையே நினைவைப் போற்றுதலும், நன்றி உணர்வுடன் இருத்தலுமே! இதையே பக்திமான்களும் செய்கின்றனர். நாத்திகர்களும் செய்து வருகின்றனர். ’ஆவிகள்’ என்பது பற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

ஆவிகள்
மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது. இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.

ஆவிகள் உலகம்
கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.

அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான். இந்த ஆவிகள் உலகம் கொடிய பாவம் செய்தவர்களுக்கு மிகவும் துன்பத்தைத் தரும் ஒன்றாக இருக்கும். பேராசை கொண்ட அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர். பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர். தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது. ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர். அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர். சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர். அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகிறோம்.

ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு தீய ஆவிகளின் பீடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.

நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர். இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்.

(தொடரும்)

12 மறுமொழிகள்

  1. ஆவிச்சாமி சொன்னது,

    ஆகஸ்ட்19, 2009 இல் 5:07 மாலை

    அய்யா,

    ஆவியாவது ஒன்றாவது எல்லாம் கற்பனை அய்யா, உளறல். எமக்குத் தெரிந்தது பரிசுத்த ஆவி ஒன்று தான். அதையும் யாம் கண் கொண்டு பார்த்ததில்லை. இந்தக் கட்டுரை ஒரு அபத்தம். நல்ல கட்டுரைகளின் ஊடே திருஷ்டிப் பரிகாரம் போல். உடனடியாக பதிவை நீக்கி விடுங்கள்!

  2. ரமணன் சொன்னது,

    ஆகஸ்ட்19, 2009 இல் 8:49 மாலை

    அன்பின் ஆவிச்சாமி,

    ’ஆவிகள் உலகம்’ என்பது கற்பனை என்போருக்கு கற்பனை. உண்மை என்போருக்கு உண்மை. நான் எதையும் ஆதரிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆகவே, இப் பதிவை நீக்க வேண்டிய அவசியமும் இல்லை. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

  3. imdiyas சொன்னது,

    அக்டோபர்5, 2009 இல் 1:22 மாலை

    aavigal enbathu nijam anubaviythavarke unmy purium

    • ramanans சொன்னது,

      அக்டோபர்5, 2009 இல் 2:47 மாலை

      yes. that’s true. Thnaks for your comments.

      • ramanans சொன்னது,

        நவம்பர்6, 2009 இல் 10:02 காலை

        அனுபவமே உண்மை ஆசான். தங்கள் கருத்திற்கு என் நன்றி.

  4. நம்பி சொன்னது,

    நவம்பர்5, 2009 இல் 11:00 மாலை

    ஆவிகள் பற்றி நல்லதுதான் தலைவர்கள் சிலைகளுக்கு மாலையணிவிப்பது இதோடு ஒப்பிடுவது இதெல்லாம் ஒத்துக்கொள்ளமுடியாது அது அவர்கள் இதுமாதிரி அர்த்தம் எடுத்து கொள்வீர்கள் என்று தெரிவித்தால் வேறோரு முறையை கையாள்வார்கள். அப்பொழுதும் இதுவும் அதுமாதிரிதான் என்று சொல்லிக்கொண்டே போகவேண்டியது தான். இறப்பிற்கு பிறகு தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அதை உயிருடன் இருக்கும் பொழுது தெரிந்து கொள்ளமுடியாது, அனுபவிக்கவும் முடியாது. இதைத்தான் பகுத்தறிவுவாதிகள் (நாத்திகர்கள்) குறிப்பிடுவது. நான் ஆவியானவுடன் என் உடலை நான் பார்க்கமுடியும். அதுதான் உண்மை. அதுவரை நான் அனுபவித்ததாக கூறினாலும் பொய்தான். (எல்லாவற்றிற்கும் சாட்சி தேவை உயிர் உலகத்தில்)

  5. பரசுராம் சொன்னது,

    நவம்பர்8, 2009 இல் 5:01 மாலை

    ஆவி உலகம் பற்றி தாங்கள் கூறிய கூற்றுக்கள் மிகவும் நன்றாக இருந்தது…. ஆவிகளை பற்றியும் மறு பிறவி குறித்தும் அறிவதற்கு ஏற்ற தமிழ் புத்தகங்கள் ஏதேனும் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள் …

    • ramanans சொன்னது,

      நவம்பர்9, 2009 இல் 11:27 காலை

      spiritworldresearch@yahoo.com – this is V.Ravichandran’s email. He wrote so many books in this title. He has one publishing house also in tamil. So plz contact him.

      ram

  6. palan சொன்னது,

    நவம்பர்26, 2009 இல் 5:06 காலை

    ithu unmaiya?
    aavigaludan pesa mudiyuma?

    • ramanans சொன்னது,

      நவம்பர்26, 2009 இல் 9:06 காலை

      ஆம். அப்படித்தான் சொல்கிறார்கள், அந்தத் துறையில் ஆய்வு செய்பவர்கள். ஆனால் என்னைப் பொருத்தவரையில் இதில் நம்பிக்கையில்லை என்பதை விட ஆர்வமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நம் மனம் மிகவும் வலிமை மிக்கது. அதுவே கூட ஆவிகள் கூறுவதாக சில எண்ணங்களை நமக்குள் தோன்றச் செய்யலாம்.

      நான் ஆவிகளைப் பார்த்ததில்லை. ஆனால் பார்த்ததாகக் கூறியவர்களைச் சந்தித்திருக்கிறேன். நான் சிறுவயதில் கிராமத்தில் வசித்த போது, திடீரென்று மாரடைப்பால் காலமான எதிர் வீட்டுப் பெரியவர் (55 வயது) வெகு நாட்கள் கழித்துப் பிறந்த பாசமான தன் மகனின் உடலில் (8 வயதுச் சிறுவன்) புகுந்து பேசியதைக் கேட்டு வெல வெலத்திருக்கிறேன். (அவன் மிமிக்ரி செய்யக் கொஞ்சம் கூட வாய்ப்பில்லை. அதற்கான காரணங்களும், சூழலும் இல்லவே இல்லை).

      ஆகவே, ஆவிகள் இருக்க வாய்ப்புண்டு என்றுதான் நான் நம்புகிறேன். ஆனாலும் அனுபவமே உண்மையான ஆசான்.

  7. பூத‌ம்.இன் சொன்னது,

    டிசம்பர்3, 2009 இல் 9:46 மாலை

    ச‌ரிங்க‌.. நீங்க‌ சொல்ற‌து போல‌ ஆவிக‌ள் இருந்தால், இற‌ந்த‌ உயிர்க‌ள் அனைத்தும் ஆவிக‌ள் ஆக‌ மாறும். அப்ப‌டியானால் , நாம் தின‌மும் கொல்லும் கொசு, கோழி, ஆடு, மாடு ‍ இவ‌ற்றின் ஆவிக‌ள் ஏன் வ‌ருவ‌தில்லை? ஒரும‌னித‌னுக்கு, கொசு ஆவி பிடித்து விட்ட‌து அல்ல‌து கோழி ஆவி பிடித்துவிட்ட‌து என்று யாருமே சொல்வ‌தில்லையே. ஏன்.? இந்த‌ கொசுக்க‌ள் த‌ங்க‌ள் முன்னோர்க‌ளுக்கு ஐய‌ர் கொசுவை வைத்து அஞ்ச‌லி செலுத்துகிற‌தா? க‌ம்ப்யூட்ட‌ர‌ க‌ண்டுபிடிச்ச‌வ‌ன் அதை மெஷினாதான் பாக்குறான், ஆனா ஆவிய‌ ந‌ம்முற‌வ‌ங்க‌ ,க‌ம்ப்யூட்ட‌ருக்கு பூ, பொட்டு வ‌ச்சி கும்புடுறாங்க‌.. ஆவின்னா அது இட்லி சுடும்போது வ‌ற்ற‌துதான். ம‌ற்ற‌தெல்லாம் வேஸ்ட்..

    • ramanans சொன்னது,

      டிசம்பர்3, 2009 இல் 10:27 மாலை

      தங்களின் மேலான கருத்துக்கு நன்றி பூதம். உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு இது போன்ற ஆவி விஷயங்களிலெல்லாம் எந்த ஆர்வமும் இல்லை. இப்படியெல்லாம் உலகில் நம்பிக்கை நிலவுகிறது, ஆராய்ச்சிகள் நடக்கின்றன என்பதைத் தான் நான் கூற விரும்புகிறேன். நம்புவதும், நம்பாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் மற்றும அனுபவம். நம்புவதால் யாதொரு லாபமும் இல்லை. நம்பாததால் எவ்வித நட்டமும் இல்லை. இதெல்லாம் உலகியல் நடப்புகள். அவ்வளவுதான். இதற்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து நாம் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நமக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன.

      இங்கு நான் ஆவி பற்றிய கட்டுரைகளைக் கொடுத்திருப்பதால் நான் ஆவிகள் ஆர்வலனோ, ஆவியுலக ஆராய்ச்சியாளனோ அல்லது அப்படிப்படவர்களை ஆதரிப்பவனோ நலம் விரும்புபவனோ அல்ல. நான் ஒரு கட்டுரையாளன் அவ்வளவே! நான் அறிந்த, தெரிந்த செய்திகளை, எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை, நான் சந்தித்த மனிதர்களை, விஷயங்களை இதில் பதிவு செய்கிறேன் அவ்வளவே! இது சிலருக்கு ஏற்க முடிவதாக இருக்கலாம். ஏற்க முடியாததாகவும் இருக்கலாம்.

      அதே சமயம் நான் ஒரு ஆன்மீக ஆர்வலன், என்பதையும் அந்த ஆன்மா என்பதன் உண்மையைத் தேடிக் கொண்டிருப்பவன் என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். அந்த உண்மையைத் தேடி நாம் செல்லும் பாதையில் எவ்வளவோ நம்ப முடியாத விஷயங்கள் இருக்கும். அவ்வற்றை எல்லாம் கடந்துதான் உண்மையை அடைய முடியும். அவற்றிலேயே தங்கி விவாதம் செய்து கொண்டிருந்தால் அங்கேயே தேங்கிப் போய் நின்று விட வேண்டியதுதான்.

      பரிணாமம் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்கும் உண்டு.

      புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,
      பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,
      கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
      வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,
      செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,
      எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!
      – மாணிக்க வாசகர், திருவாசகம்

      கடவுளை நம்பாதவன் நாத்திகன் அல்ல;
      தன்னையே நம்பாதவன் தான் நாத்திகன்
      - சுவாமி விவேகானந்தர்.

      நான் என்னையும் நம்புகிறேன். இயற்கையான, எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்தியையும் நம்புகிறேன்.


மறுமொழியொன்றை வழங்குக