தேசிகரின் வாழ்வில்….

ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

“அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்பது மாணிக்கவாசகரின் வாக்கு. அதற்கேற்ப அந்த இறைவனின் அருளோடும் ஆசியோடும் பிரம்ம ஞானியாக உயர்ந்தவர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர். திருவண்ணாமலையை நாடி வந்த முதல் ஞானி என்ற பெருமையையுடைய இம்மகான், 1750 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள ராயவேளூர் என்ற ஊரில் தோன்றியவர். இயற்பெயர் கந்தப்பன்.

 சிறு பருவத்திலேயே சகல சாஸ்திரங்களையும், புராண இதிகாசங்களையும் கற்றுத் தேர்ந்த இம்மகான் பருவ வயதை அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளாது, பெற்றோரின் உத்தரவு பெற்று துறவறம் பூண்டார். பல தலங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார். பல சாதுக்களின் மடங்களுக்கும், ஜீவ சமாதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். பின் சிதம்பரம் தலத்தை அடைந்தவர் அங்கு வாழ்ந்த பிரம்ம யோகி ஸ்ரீ மௌனகுரு சுவாமிகளிடம் தீட்சை பெற்றார். குருவின் பாதங்களைப் பணிந்து, அவரிடமே பல ஆண்டுகாலம் இருந்து வேத, வேதாந்த உண்மைகள், ப்ரம்ம தத்துவங்கள், உலக வாழ்க்கை ரகசியங்கள் என சகலத்தையும் கற்றுத் தேர்ந்தார். பல்வேறு சித்துக்களும் கைவரப் பெற்ற இவர் மிகச் சிறந்த அனுபூதிச் செல்வரானார். தன் குருவின் ஜீவ சமாதிக்குப் பின் மீண்டும் தனது தல யாத்திரையைத் துவக்கினார்.

“ஜனனாத் கமலாலயே” என்று சிறப்பிக்கப்படும் முக்தி தரும் தலங்களில், பிறக்க முக்தியைத் தரும் தலமான திருவாரூருக்குச் சென்றார். அங்கே சிறந்த தவயோகியும், சித்த புருஷர்களில் ஒருவரும், இறைவனின் காட்சியையும், அம்பிகையின் அருளையும் நேரே பெற்றவருமான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். பின் நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் என்ற ஊரை அடைந்து அங்கு உறையும் சிங்கார வேலனைத் தரிசனம் செய்தார். பின் அங்கே எப்பொழுதும் பிரம்ம நிஷ்டையிலேயே இருப்பவரான ‘உகண்ட லிங்க ஞான தேசிகர்’ என்னும் மகா குருவின் ஆசியையும் பெற்றார். பின் தனது பயணத்தைத் தொடங்கிய ஸ்ரீ தேசிகர், திருவண்ணாமலைக்கு அருகே உள்ள, வேட்ட வலம் என்ற ஊரை அடைந்தார். அங்கு சில காலம் தவம் செய்தார். பின்னர் திருவண்ணாமலை தலத்தை அடைந்து நீண்ட காலம் தவம் செய்து வந்தார்.

ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

விஷமிகளாலும், போலி பக்தர்களாலும் இவரது தவத்திற்கு ஊறு நேராமல் காப்பதற்காக ஸ்ரீ அண்ணாமலையாரும் ஸ்ரீ உண்ணா முலையம்மனும் புலி உருவில் வந்து இவரைக் காவல் காத்தனர் என்பது வரலாறு. விஷமிகள் எவரேனும் அப்பகுதிக்கு வந்தால் புலிகள் உரத்த குரலில் உறுமி அவர்களை பயமுறுத்தி விடும். அதனால் அவர்கள் அப்பக்கம் வரத் தயங்குவர். நல்ல எண்ணம் கொண்ட பக்தர்கள் வந்தால் அப்புலிகள் தாமாகவே அவ்விடம் விட்டு நீங்கி விடும். சில சமயம் ஸ்ரீ தேசிகரும் அப்புலிகளை அன்புடன் தடவிக் கொடுத்து, அவ்விடத்திலிருந்து போகச் சொல்வார். இதனால் தேசிகரின் பெருமை பல இடங்களிலும் பரவியது. இவரது பெருமையைக் கேள்வியுற்று பலரும் அவரை நாடி வந்தனர். மகானும் தனது தவ ஆற்றலால் தம்மை நாடி வந்தவர்களது நோய், நோடிகளை  நீக்கினார். வல்வினைகளைப் போக்கினார். பலருக்கு ஞானகுருவாக இருந்து அவர்கள் தம் ஆன்ம வளர்ச்சி உயர வழி வகுத்தார்.

ஸ்ரீ தேசிகரது தலையாய சீடர்களுள் ஒருவராக விளங்கியவர் ஐடன் துரை. இவர் பிறப்பால் ஆங்கிலேயரானாலும் மனத்தால் இந்தியராக வாழ்ந்தவர். தன்னிடம் உள்ள நிலங்களையும், பெரும் சொத்துக்களையும் ஸ்ரீ அருணாசலேசுவரர் ஆலயத்திற்கு அளித்ததுடன் பல உற்சவங்களையும் முன்னின்று  நடத்தினார். அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்காக தம் சொந்தச் செலவில் பல்வேறு திருப்பணிகளை மேற் கொண்டார். வருடம் தவறாமல் அண்ணாமலையாரின்  தீபத் திருவிழாவில் கலந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்த ஐடன் துரை, அண்ணாமலையாரின் தேர்த் திருவிழாவினையும் மிக விமர்சையாக நடத்தி வந்தார்.

ஒருநாள்.. அண்ணாமலை தீபத்தைக் காண மிக ஆவலோடு தனது குதிரையில் வந்து கொண்டிருந்தார் துரை. ஆனால் அப்போது  பலத்த மழை பெய்திருந்ததால், அவர் வரும் வழியில் ஆற்றில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றைக் கடந்து தான் அண்ணாமலைக்குச் வர வேண்டும். ஆனால் பெருகிய வெள்ளத்தினால் ஆற்றைக் கடக்க இயலவில்லை. சற்று நேரம் யோசித்த  துரை, ‘சத்குரு நாதா, என் ஞானகுருவே நீயே உற்ற துணை!’ என்று கூறிக்கொண்டே குதிரையுடன் ஆற்றில்  இறங்கிவிட்டார். அவருடன் வந்தவர்களோ பயந்து போய் பின்வாங்கி விட்டனர்.

அதே சமயம், தியானத்தில் ஆழ்ந்திருந்த ஈசான்ய ஞான தேசிகர் திடுக்கிட்டு தியானம் கலைந்து, தனது கையைச் சிறிது தென்புறமாகத் தாழ்த்திப் பின் உயர்த்தினார். அது கண்ட பக்தர்களில் சிலர் ஆச்சர்யத்துடன் அவரிடம் காரணத்தை வினவினர். ஸ்ரீ தேசிகரோ அதற்கு, ‘நம் அடியவர் ஆற்றில் விழுந்தால் நாமே காப்பாற்ற வேண்டுமாம்!’ என்று  கூறி விட்டு, மீண்டும் நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்.

சில மணி நேரம் சென்றது. ஆற்றில் இறங்கிய குதிரையும், ஐடன் துரையும் எந்த விதச் சேதமும் இல்லாமல் கரையேறினர். ஐடன் துரை, குருநாதரை தரிசித்து, அவர்தம் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். நடந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற பக்தர்கள் ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகரின் அளப்பரிய ஆற்றலையும், ஐடன் துரையின் குரு பக்தியையும் கண்டு வியந்தனர்.

ஸ்ரீ ஞான தேசிகர், அண்ணாமலையை விட்டு வேறு எங்கும் செல்லாது அங்கேயே தொடர்ந்து தவம் செய்து வந்தார். அந்த இடம் மலையின் வடகிழக்குப் பகுதியில் இருந்ததாலும், அது ஈசான்ய திசையைக் குறிக்கும் இடமாக இருந்ததாலும், அப்பகுதி நாளடைவில் ‘ஈசான்ய மடம்’ என்று அழைக்கப்படுவதாயிற்று. ஸ்ரீ தேசிகரும் ’ஈசான்ய ஞான தேசிகர்’ என்று அழைக்கப்பட்டார். இவ்வாறு பல ஆண்டுகாலம் தவம் செய்த இம்மகான் 1829 ஆம் ஆண்டு, மார்கழி மாதம் 26 ஆம் தேதி மகா சமாதி அடைந்தார். அவரது உடல், அவர் எப்போதும் தவம் செய்து வந்த வில்வ மரத்தின் அடியிலேயே சமாதி செய்விக்கப் பெற்றது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையின் இறுதியில், ஈசான்ய லிங்கத்திற்கு எதிரில், ஸ்ரீ அம்மணி அம்மாள் சமாதி ஆலயத்தை அடுத்துள்ள ஈசான்யக் குளக்கரையில் அமைந்துள்ளது இச்சமாதி ஆலயம். ரமணர் உட்படப் பல மகான்களால் புகழப் பெற்ற இந்த ஸ்ரீ ஈசான ஞான தேசிகர் மடம், அளவற்ற ஆன்ம அமைதியையும், அற்புத ஆற்றல்களை தரக் கூடியது. பல மகான்களின் ஜீவ சமாதிக்களையும், ஆன்ம அருளையும் தன்னகத்தே கொண்டது.

மகான்களின் பெருமை எண்ணவும் இனிதே!

ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்

ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர். இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் ஆங்கிலத்தில் After the death என்ற ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஆவிகள் பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களைத் தெரிவித்திருக்கிறார்.

கிருஷ்ணய்யரின் மனைவி பெயர் சாரதா. அவர் இருதயக் கோளாறால் இறந்து விட்டார். இது கிருஷ்ண அய்யருக்கு மிகுந்த சோகத்தைத் தந்தது. 33 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இணை தன்னை விட்டுப் பிரிந்ததைப் பற்றி மிகவும் கவலை கொண்டார். மரணம் என்றால் என்ன, அதன் பின் மனிதர்களின் நிலை என்னவாகிறது என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்தார். ஆவிகளுடன் பேசும் முறைகள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். உலகெங்கும் பயணம் செய்து பல புகழ்பெற்ற மீடியம்களை சந்தித்தார். பல அதிசய அனுபவங்களை, தகவல்களைப் பெற்றார் என்றாலும் நேரடியாக அவரால் அவரது மனைவியின் ஆவியுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருந்தது.

அவர் மனைவி சாரதாவின் ஆவி பிறர் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அவர்களோடு பேசியது. பல எதிர்கால தகவல்களைக் கூறி எச்சரிக்கை செய்தது. ஆனால் கிருஷ்ணய்யருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை சாரதாவின் ஆவியிடம் ஒரு நண்பர் வினவிய போது, ‘அவர் என் பிரிவால் அடைந்திருக்கும் சோகமும், அதனால் ஏற்படும் துயரமுமே மிகப் பெரிய திரையாகச் சூழ்ந்து அவரை என்னோடு தொடர்பு கொள்ள இயலாமல் செய்திருக்கிறது. அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக வாழ முயல வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.

இதனை அறிந்த கிருஷ்ணய்யர் மிகவும் துயரம் கொண்டார். ஒருநாள் கிருஷ்ணய்யரின் இல்லத்திற்கு ஒரு சாது வந்தார். அவர் புராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். மட்டுமல்ல’ ஆவிகளுடன் பேசுவதிலும் பயிற்சி பெற்றவர். அவர் கிருஷ்ணய்யருக்கு ஆவிகளுடன் பேசுவதற்காக சில பயிற்சி முறைகளை சொல்லித் தந்தார். ஆனால் அய்யர் அப்போது உச்ச நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்ததால் மிகுந்த வேலைப்பளு இருந்தது. அதனால் அந்தப் பயிற்சிகளைச் செய்ய இயலவில்லை. இனி கிருஷ்ணய்யர் கூற்றாகவே வருவதைக் காண்போம்.

அந்தச் சாது என்னோடு சிலநாட்கள் தங்கினார். என்னை தனது சிஷ்யப் பொறுப்பிலிருந்து விடுவித்தார். ஒருநாள்… பௌர்ணமி… இரவு… அன்று அவர் தியானத்தில் அமர்ந்தார். பின் தான் தற்போது சாரதாவின் ஆவியுடன் தொடர்பு கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். நானும் அதற்குச் சம்மதித்தேன்.

மறுநாள் காலை எழுந்ததும் அந்தச் சாது என்னைச் சந்தித்தார். தனது தியானத்தில் என் மனைவியைக் கண்டதாகவும் (அவர் முன்னமேயே என் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்திருந்தார்), அவர் பத்மா, காந்தா என்னும் இரண்டு பெயர்களை மட்டும் கூறி விட்டு உடனடியாக மறைந்து விட்டதாகவும் சொன்னார். நான் அதிர்ச்சியுற்றேன். காரணம், இந்த முன்பின் தெரியாத சாதுவால் அந்தப் பெயர்களை கற்பனை செய்து கூடச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பத்மா என்பது மனைவியின் சகோதரி பெயர். காந்தா என்பது என் மனைவியின் சகோதரர் பெயர் (காந்தா என்றுதான் அவரை அனைவரும் அழைப்பார்கள்). ஆக, இவர் என் மனைவியைக் கண்டதாகச் சொல்வது உண்மைதான் என உணர்ந்தேன்.

சில நாட்கள் போயிற்று. மீண்டும் அவர் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்தார். மறுநாள் அவர் தியானத்தில் கண்டவற்றை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். ”என் தியானத்தில் உன் மனைவியைக் கண்டேன். ’ நான் என் கணவரது வருகைக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் ஒருவேளை நான் மறுபிறவி எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். அப்படி நான் மறுபிறவி எடுத்தால், சென்னையிலுள்ள டாக்டர் சந்தானம் – ஜெயா சந்தானம் தம்பதிகளுக்குக் குழந்தையாகப் பிறப்பேன்’ என்றாள் அவள்” என்றார் சாது.

நான் திகைத்துப் போய் நின்று விட்டேன், காரணம், சந்தானம் என்பது என் மனைவி சாரதாவின் இளைய சகோதரர் பெயர். அவர் சென்னயில் டாக்டராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜெயா. இதை அந்தச் சாது கற்பனை கூடப் பண்ணிச் சொல்லியிருக்க முடியாது. இந்த விஷயங்களை அவரிடம் சொல்வதற்கான ஆட்களும் அப்போது என் வீட்டில் இல்லை. இது உண்மைதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணய்யர்.

இதுமட்டுமல்ல; முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் போன்றவர்களும் ஆவி உலக ஆய்வில் நம்பிக்கை கொண்டதாகவும் அவர் அந்நூலில் தெரிவித்திருக்கிறார்.

அனுபவமே உண்மை ஆசான்!

ரமணரின் வாழ்வில்…

பகவான் ரமண மகரிஷி
பகவான் ரமண மகரிஷி

‘ஒருவன் தன்னைத் தான் அறிந்து கொள்ளுதலே, இறைவனை அறிந்து கொள்வதற்கு முதற்படியாகும்’ என்ற ஞான உபதேசத்தை அருளியவர் பகவான் ரமணர். பாலப் பருவத்திலேயே திருவண்ணாமலையைத் தேடி வந்து தஞ்சம் புகுந்தவர். தனது இறுதிக் காலம் வரை அண்ணாமலையை விட்டு நீங்காதவர்.

ரமணர் விருபாஷிக் குகையில் தங்கி இருந்த காலம். ஒரு நாள் மாலை வேலையில் திரளாக பக்தர்கள் கூட்டம் வந்திருந்தது. வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக ஸ்ரீ பகவானை தரிசித்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் திடீரென மழை பொழியத் துவங்கியது. மெதுவாக ஆரம்பித்த மழை பேய் மழையாகக் கொட்டித் தீர்த்தது. தரிசிக்க வந்தவர்கள் யாரும் கீழே இறங்கிச் செல்ல முடியாத நிலை. மாலை கடந்து இரவும் வந்து விட்டிருந்தது. இரவு எட்டு மணியைக் கடந்து விட்டதால் ஒவ்வொருவருக்கும் நல்ல பசி ஏற்பட்டது. ஆனால் அத்தனை பேருக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை. பகவானின் அடியவரான பழனிசாமிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பகவானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பகவானும், ‘சரி, சரி மழை விடுவதாகத் தெரியவில்லை. இவர்களோ பாவம் பசிக்களைப்பில் இருக்கிறார்கள். அதனால் இருக்கும் உணவை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடு’ என்றார்.

உடனே பழனிசாமி உணவை  சிறு சிறு உருண்டையாக உருட்டி வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கத் தொடங்கினார். அவர்களும் அந்தச் சிறு கவளங்களை ரமணப் பிரசாதமாக நினைத்து வாங்கி உண்டனர். மூன்று பேருக்கு மட்டுமே வைத்திருந்த அந்த உணவு கிட்டத்தட்ட முப்பது பேர்களுக்கு சிறு சிறு உருண்டைகளாக்கிப் பகிர்ந்தளிக்கப்பட்டது. சற்று நேரத்தில் அனைவருக்கும் வயிறு நிறைந்து விட்டதுடன் அறுசுவை உணவு உண்ட திருப்தியும்  ஏற்பட்டது. தண்ணீர் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு வயிறு நிறைந்திருப்பதைக் கண்டு ‘எல்லாம் ரமணரருள்’ என்று எண்ணித் தொழுதனர் பக்தர்கள்.

எல்லாவற்றிற்கும் காரண சூத்ரதாரியான ரமணரோ ஒன்றும் பேசாமல் எங்கோ மௌனமாய் நோக்கிக் கொண்டிருந்தார். எதிலும் பற்றற்று இருப்பது தானே ஞானிகளின் இயல்பு.

*******************

 சதா ஞான நிலையிலேயே பகவான் இருந்து வந்த போதிலும் ஆசிரம வாழ்வில் அவருடைய நகைச்சுவை உணர்விற்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை.

ஒருநாள்…  விடியற்காலை மூன்றுமணி இருக்கும். மகரிஷியை பார்க்கச் சிலர் ஆசிரமத்திற்கு வந்தனர்.  ஆசிரமத்தில் யாரையும் காணாததால், அவர்கள் நேரே சமையல் நடக்கும் இடத்திற்குச் சென்றனர். அங்கே ஆசிரம சமையல் பாத்திரங்களை ஒருவர் மெதுவாகக் கழுவிக்கொண்டிருந்தார். அவரிடம்,  ‘ஐயா இங்கே பகவான் ரமணர் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டனர்.

அதற்கு அந்த மனிதரும், ’ஓ, ரமணரா, இதோ இருக்கிறாரே, இதுதான் ரமணர்’ என்று சொல்லி, தான் கழுவிக் கொண்டிருந்த அண்டாவை அவர்களிடம் காண்பித்தார். வந்தவர்களோ அவருக்குக் காது கேட்காதோ என நினைத்துக் கொண்டு, மீண்டும் அதையே கேட்டனர்.

அதற்கு அந்த மனிதர் மீண்டும் தன் கையில் இருந்த அண்டாவைக் காட்டி,  ‘பாருங்கள்,  இதுதான் ரமணர். ரமண மகரிஷி என்று பேர் கூடப் பொறித்திருக்கிறார்களே, உங்களுக்குத் தெரியவில்லையா?’ என்றார்.

வந்தவர்கள்,  இவர் யாரோ சித்த சுவாதீனமில்லாத மனிதர் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டு தரிசன ஹாலுக்குச் சென்று அமர்ந்து கொண்டனர்.

பொழுது விடிந்தது. சற்று நேரத்தில் ‘பகவான் வருகிறார், பகவான் வருகிறார்’ என்ற குரல் கேட்டது.

அனைவரும்  மரியாதையுடன் எழுந்து நின்று பார்த்தனர், அங்கே பாத்திரம் தேய்த்த அந்த மனிதர் வந்துகொண்டிருந்தார்.

அவர் தான் பகவான் ரமணர் என்று அறிந்து கொண்டதும் அவர்களுக்கு வியப்பு தாளவில்லை. அதே சமயம், பகவான் ஏன் தங்களிடம் அப்படி நடந்து கொண்டார் என்று அறிய விரும்பினர்.  அவரை அணுகிக் காரணம் கேட்டனர்.

அதற்கு பகவான்,  ‘நான்தான் பகவான்னு நெற்றியில எழுதி ஒட்டிக் கொண்டா இருக்க முடியும்.?’ என்று கேட்டார், புன் சிரிப்புடன். பின், ‘நான் என்பது இந்த உடலல்ல; இதைத் தான் நான் இத்தனை வருடங்களாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன். அப்படிச் சொல்லியும் என்ன பயன், எல்லோரும் அதை  உணராமல் இருக்கிறீர்களே!’ என்றார் வருத்ததுடன்.

தங்களுக்காக வாழாமல் பிறர்காகவே வாழ்ந்ததால்தான் அவர்கள் மகான்கள் என்று போற்றப்படுகின்றனர்.

மகான்களின் பெருமை பேசவும் இனிதே!

*******************

ரமணரின் உபதேசங்கள்:

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.

கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட  கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.

தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.

குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.

ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ள அதுவே மிகவும் முக்கியம்.

*******************

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

*******************

 

 

ஸ்ரீ அன்னை அருள்

 ஸ்ரீ அன்னையிடம் சில கேள்விகள்

ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னை

 

 குழந்தைகள் திடீரென்று தொடர்ந்து அழுவது ஏன்?

 நம் பார்வைக்குப் புலனாகாத பல விஷயங்கள் குழந்தைகளின் பார்வைக்குப் புலனாகின்றன. அவற்றைப் பார்த்ததும் அவை திகிலடைவதாலும், அவற்றைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லும் அறிவு குழந்தைகளுக்கு இல்லாததாலும், அவை அச்சத்தால் தொடர்ந்து அழுகின்றன.

ஸ்ரீ அன்னையும் ஸ்ரீ துர்க்கையும்:

  தன் முன் பிரசன்னமான ஸ்ரீ துர்க்கையிடம் ஸ்ரீ அன்னை: “மக்களின் வழிபாட்டுக்குள்ளாவதற்குப் பதிலாக நீ ஏன் பரம்பொருளை வழிபடக் கூடாது?”

 ஸ்ரீ துர்க்கை: “அப்படியே”

 ”நான் உங்கள் செயற்கருவியாக இயங்க இசைவளியுங்கள் பரம்பொருளே” என பரம்பொருளிடம் ஸ்ரீ துர்க்கை வேண்டினாள்.

பால் பிரண்டனும் ஸ்ரீ அன்னையும்:

 எப்பொழுதாவது, யாராவது ஒருவருடன் அமர்ந்து தியானம் செய்யும் நிலை ஏற்பட்டால், அவருக்கு உறுதுணையாக உள்ள சக்திகளைப் பற்றியும், தேவதைகள் பற்றியும்  கண்டுணர்வது ஸ்ரீ அன்னையின் வழக்கம்.

அது போன்று திரு. பால்பிரண்டன்  அவர்களுடன் தியானம் செய்யும் பொழுதும் ஏற்பட்டது. ஒரு சக்தி அவரைக் காத்து வருவதை ஸ்ரீ அன்னை உணர்ந்தார்.

ஸ்ரீ அன்னை அவரிடம் ‘எவ்வளவு காலமாக அச்சக்தி உடனிருக்கிறது’ என வினவினார். அதற்கு பிரண்டன் “பத்து வருடங்கள்” என பதிலளித்தார்.

ஸ்ரீ சாயிபாபாவும் ஸ்ரீ அன்னையும்

மேல் நாட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் ஸ்ரீ சத்ய சாயிபாபாவைத் தரிசித்து விட்டு ஸ்ரீ அன்னையின் ஆசி பெற வந்திருந்தார். பாபாவால் தனக்கு அளிக்கப்பட்ட ஒரு மணிமாலையை அன்னையிடம் காட்டி  அதன் தன்மை பற்றி விளக்கக் கோரினார். அன்னை அதனை தன் உள்ளங்கையில் வைத்திருந்து விட்டுப் பின்னர் கூறினார் ” இது மறைவியல் வித்தை மூலம் தருவிக்கப்பட்டது”. மேலும் அந்தப் பேராசிரியர் சாயிபாபாவைப் பற்றி அன்னையின் கருத்தைக் கேட்டதற்கு ஸ்ரீ அன்னை சொன்னார், ” ஒரு குரு மற்றொரு குருவை விமர்சிப்பதில்லை”

காவ்ய கண்ட கணபதி முனிவரும் ஸ்ரீ அன்னையும்

ஸ்ரீ ரமணரின் தலையாய சீடரான காவ்ய கண்ட கணபதி முனிவருடன் தியானம் செய்யும் பொழுது, அறையுள் இருந்த தீய சக்திகள் விலகி ஔடுவதையும், ஒரு சக்தி அவரைக் காத்து வருவதையும் ஸ்ரீ அன்னை உணர்ந்தார். தான் வேறு எவருடன் தியானம் செய்த பொழுதும் இவ்வளவு ஆழ்ந்த நிலைகளை எட்டியதில்லை என ஸ்ரீ அன்னை பின்னர் கூறினார்.

மற்றொரு முறை ஒரு சாதகருடன் தியானம் செய்யும் பொழுது அவர் தலையைச் சுற்றி ஐந்து தலை நாகம் படமெடுத்து நிற்பதை ஸ்ரீ அன்னை கண்டார். பின்னர் அவர் ஒரு கிருஷ்ண பக்தர் என்றும், தியானத்தில் உயர் நிலையை அடைந்தவர் என்பதையும் அன்னை கண்டறிந்தார்.

மகான்களும் ஆவிகளும்

ஆவிகளும் ஸ்ரீ அரவிந்தரும்
 
ஸ்ரீ அரவிந்தர்

ஸ்ரீ அரவிந்தர்

ஸ்ரீ அரவிந்தர் புதுச்சேரியில் தங்கியிருந்த சமயம். அடிக்கடி வ.ரா, பாரதியார், அரங்கசுவாமி அய்யங்கார் ஆகியோர் ஸ்ரீ அரவிந்தரை மாலையில் சந்தித்துப் பேசுவர். அப் பேச்சுக்கள் வெறும் அரசியல் மட்டும் இல்லாமல் ஆன்ம சாதனை, தெய்வ உபாசனை, வழிபாடு, தரிசனம், சூட்சும வாசிகளின் தன்மை எனப் பலதரப் பட்டதாய் இருக்கும். சில சமயம் ஆவிகள் பற்றியும் அவர்கள் வசிக்கும் உலகம் பற்றியும் பேச்சு திரும்பும். அரவிந்தருக்கு அதில் பெரிதாய் ஆர்வம் இல்லாவிட்டாலும் நண்பர்களுக்காக அவ்வப்போது அவ்வாய்வில் ஈடுபடுவார்.

ஸ்ரீ அரவிந்தர் பரோடாவில் இருக்கும் பொழுதே ஆட்டோ மேட்டிக் ரைட்டிங் முறையில் ஆவிகளுடன் பேசுவதில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். ஒருமுறை சகோதரர் பரீன் உதவியுடன் அவ்வாய்வில் ஈடுபட்டபோது, ஸ்ரீ அரவிந்தரின் தந்தையின் ஆவி அங்கே தோன்றியது. தான் முன்பு பரீனுக்குக் கொடுத்திருந்த தங்கக் கைக் கடிகாரத்தை அடையாளம் காட்டியதுடன், சுவற்றில் சுண்ணாம்புப் பூச்சிற்குள் மறைந்திருந்த ஒருவரின் படத்தையும் அடையாளம் காட்டியது. அதன் மூலம் வந்திருப்பது தங்கள் தந்தையின் ஆவிதான் என்பதை அரவிந்தர் உணர்ந்து கொண்டார். மற்றுமொருமுறை ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஆவி வரவழைக்கப்பட்டது. அது கேள்விகளுக்கு பதில் எதுவும் கூறாமல் “கோவில் கட்டுங்கள்”, “கோவில் கட்டுங்கள்” என்று கூறி விட்டு மறைந்து விட்டது.

ஸ்ரீ அரவிந்தர், ஆவிகளின் வழிகாட்டுதல்மூலம் ‘ஆட்டோமேடிக்ரைட்டிங்’ முறையில் ‘யோக சாதனை’ என்ற நூலை எழுதினார். பின்னர் அந்த நூலை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார். இது போன்ற ஆய்வுகள் மூலம் சாதகர்களுக்கு எந்தப் பயனும் விளையாது என்று கருதிய அவர், இவற்றை ஊக்குவிக்கவில்லை.

மேலும் ஸ்ரீ அரவிந்தர் அலிப்பூர் சதி வழக்கில் கைதாகிச் சிறையில் வசித்த போது அவர் முன் விவேகானந்தரின் ஆவி தோன்றி, அவரது பணி நாட்டு விடுதலையை விட ஆன்ம விடுதலையே என்று வலியுறுத்தியதாக அவரது வரலாறுகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

ஸ்ரீ அன்னையும் ஆவிகளும்

ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னை

பக்தர்களால் அன்புடன் ’மதர்’ என்றும் ‘அன்னை’ என்றும் அழைக்கப்படுபவர் ஸ்ரீ அன்னை. பிரான்ஸில் பிறந்த இவர், இந்தியாவையே தனது வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பக்தர்களின் ஆன்ம முன்னேற்றத்துக்க உழைத்தவர். அன்னை தனது இளவயதில் ஆவிகளுடன் பல அனுபவங்களைப் பெற்றுள்ளார்.

ஒரு முறை அன்னை ஜப்பானில் தங்கியிருந்த சமயம். திடீரென கொடிய நோயால் பாதிக்கப்பெற்றார் அவர். மிகக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுவிட்டது. மருத்துவர் வந்தார். பல மருந்து, மாத்திரைகளைத் தந்தார். பலனில்லை. நோய் குணமாகவில்லை. அன்று இரவு அவருக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. ஒரு கரிய உருவம் ஒன்று, தலையில்லாத முண்டமாய் அன்னை அருகே வந்தது. அவர் மேல் அமர்ந்து அவரை மூச்சு விட முடியாமல் அமுக்கியது. அன்னை கொஞ்சமும் அஞ்சாமல் தனது ஆன்ம சக்திகளை ஒன்று திரட்டினார். அந்த தீய சக்தியுடன் போராடி அதனை விரட்டி அடித்தார்.

மற்றொருமுறை அன்னை தனது இல்லத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது புகை மூட்டம் போன்ற உருவம் அவர் வீட்டை நோக்கி வந்தது. அது தன்னைத் தாக்கவும், தனது வீட்டைத் தீயிட்டு அழிக்கவுமே வருகிறது என்பதை உணர்ந்து கொண்ட அன்னை, தனது அதீத சக்தியைப் பயன்படுத்தி, அது தன்னைத் தாக்காமல் இருக்குமாறும், வீட்டைத் தீயிட்டு அழிக்காமல் இருக்குமாறும் செய்து தடுத்தார். அதனால் சீற்றம் கொண்ட அந்த ஆவி, சற்று தொலைவில் வசித்த மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதுடன், அவர்கள் வீடுகளைத் தீப்பற்றச் செய்யவும் செய்து விட்டு மறைந்து விட்டது.

இதனால் அன்னை மிகவும் மனம் வருந்தினார். இது போன்ற துன்பங்கள் நிகழ்வதற்கான காரணத்தை ஆராய்ந்தார். அப்போதுதான் அவருக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. முதல் உலகப் போரினால், எதிர்பாராமல் மரணமடைந்தவர்கள், தலை முதலியன வெட்டப்பட்டு உயிரிழந்த பல அப்பாவி இளைஞர்களின் ஆவியே இவற்றிற்கெல்லாம் காரணம் என்றும், அமைதியடையாமல், தாங்கள் இறந்து விட்டோம் என்பது கூடத் தெரியாமல் அலைந்து திரிந்த அந்த ஆவிகளே பலரது உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்தன என்பதையும் அன்னை கண்டறிந்தார். தனது ஆன்ம பலத்தின் மூலம் அன்னை அந்த ஆன்மாக்களுக்கு சாந்தி ஏற்படுத்தினார். அதன் பின் அந்த நோய் வேறு யாரையும் தாக்கவில்லை. ஜப்பானை விட்டு மறைந்தது.

மற்றொரு முறை அன்னை கப்பலில் பிரான்ஸூக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது படு பயங்கரமான சூறைக்காற்று அன்னையின் கப்பலைத் தாக்கியது. பயணிகள் மிகவும் அச்சப்பட்டனர். கப்பல் கவிழ்ந்து விடும் நிலைமை ஏற்பட்டது. அன்னையின் ஆசானான தியோன் என்பவர் சூறைக்காற்றை அடக்கி, பயணிகளுக்கு உதவுமாறு அன்னையிடம் வேண்டிக் கொண்டார்.

உடனே அன்னை அன்னை தனது தூல உடலைக் கீழே கிடத்தி விட்டு, சூட்சும உடலில் வெளியே வந்தார். அங்கே சில உருவமற்ற ஆவிகள் அங்கும் இங்குமாய் கப்பலைச் சுற்றி ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். அவை தாங்க இயலாத வெறியுடனும் மிகுந்த ஆக்ரோஷத்துடனும் எப்படியும் கப்பலைக் கவிழ்த்து விடுவது என்ற உறுதியில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அந்த உருவங்களுக்கு ஆதரவாய் மேலும் பல கரிய உருவ ஆவிகள் உதவிக்கு வந்த வண்ணம் இருந்தன. அன்னை மெல்ல அந்த அருவங்கள் அருகே சென்றார். “இதோ பாருங்கள்! இந்தப் பயணிகள் மிகவும் அப்பாவிகள். இவர்களை நீங்கள் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள், இவர்கள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்?. இந்தக் கப்பலை அழித்தொழிக்க உங்களுக்கு அனுமதி அளித்தது யார்?, இந்தக் காரியத்திற்காக நீங்கள் இறைவனின் கருணைக்குப் பதிலாக சாபத்தைத் தான் பெறப் போகிறீர்கள். உடனே இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள், கப்பல் செல்ல வழி விடுங்கள். இல்லாவிட்டால்….” என்று சீறினார்.

அன்னையின் உறுதியான குரலைக் கண்டு அஞ்சிய அந்த ஆவிகள், உடனடியாக அவ்விடம் விட்டுச் சென்றன.

சுவாமி திரிகுணாதீதானந்தரின் ஆவி உலக அனுபவம்

சாரதா பிரசன்னர் என்ற இயற்பெயர் கொண்டவர் சுவாமி திரிகுணாதீதானந்தர். ராமகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர். சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவர். நல்ல பல நூல்களையும், பகவான் ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதா தேவி, சுவாமி விவேகான்ந்தர் ஆகியோர் மீது பல துதிகளையும், நூல்களையும் எழுதியவர். இவர் இறைநம்பிக்கை கொண்டவர் என்றாலும் பேய், பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதிருந்தார். ஆகவே அதுபற்றிய ஆய்வுகளில் சில காலம் ஈடுபட்டார்.

பேய் ஒன்றிருக்குமானால் அதை நேரில் காணவேண்டும் என்ற உறுதியுடன், பேய் இருப்பதாகச் சொல்லப்பட்ட வீடுகளுக்கெல்லாம் சென்று தேடினார். இரவில் தங்கினார். இவரது கண்களுக்கு எந்தப் பேயும் தட்டுப்படவில்லை.

ஒருநாள் கல்கத்தாவில் உள்ள வராகநகர் மடத்துக்கு அருகில், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டில் பேய் இருப்பதாகவும் இரவு அங்கே சென்று தங்கினால் பேயைக் காணலாம் என்றும் சிலர் கூறினர். சுவாமிகளும் மிகுந்த ஆர்வத்துடன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இரவில் அந்த வீட்டிற்குச் சென்று தங்கினார். நள்ளிரவு நெருங்கியது. சுவாமி பேயை எதிர் நோக்கிக் காத்திருந்தார். சற்று நேரம் சென்றது. அப்போது அவர் அமர்ந்திருந்த அதே அறையின் மூலையில் மங்கலான வெளிச்சம் ஒன்று தோன்றியது. பின் அது கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசம் அடைந்தது. அந்த வெளிச்சத்தின் மத்தியில் கண்கள் இரண்டு தோன்றின. அது மிகுந்த கோபத்துடன் சுவாமிகளை நோக்கி மெல்ல நகர்ந்து வந்தது.

சுவாமிகளின் இரத்தம் அச்சத்தால் உறைந்தது. உடல் வியர்த்து ஒழுக ஆரம்பித்தது. நாக்கு உலர்ந்தது. அச்சத்துடன் சுவாமிகள், தனது குருதேவரான ஸ்ரீ ராமகிருஷ்ண மரமஹம்சரை மனதார வேண்டிக் கொண்டார்.

உடனே குருதேவரின் உருவம் திரிகுணாதீதானந்தரின் முன் தோன்றியது. அவரது கரங்களைப் பாதுகாப்பாகப் பற்றிக்கொண்டு, ”மகனே! ஏன் இவ்வாறெல்லாம் உயிருக்கு ஆபத்தான விஷயங்களைத் தேடி ஓடுகிறாய்? எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டிரு. அதுபோதும்’ என்று கூறிவிட்டு உடனே மறைந்துவிட்டது. அந்த மாயக்கண்களும் உடனே மறைந்து விட்டன.

இவையெல்லாம் மகான்களின் வாழ்க்கை வரலாற்றில் உள்ள சம்பவங்கள். ஆகவே ஆவி, பேய் போன்ற விஷயங்களில் அவரவரது அனுபவம் தான் உண்மை.

 

ஆவி உலக ஆராய்ச்சிகள்

ஆவி உலகம் பற்றி உலகெங்கிலும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. சில சமயம் ஆய்வாளர்களது கருத்துக்கள் சில ஒன்றுக்கொன்று மாறுபட்டும் உள்ளன. உதாரணமாக ஆவி உலகம் பற்றி ஆராய்ந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஆவி கூறியதாகச் சொல்லப்படும் தகவல்கள்:

”ஆவியுலகத்தில் (A, B, C, D) என நான்கு பகுதிகள் உள்ளன. ஏ, பி பகுதியில் இருப்பவர்கள் எல்லா உலகத்தையும் பார்க்கமுடியும். நினைத்த நேரத்தில் எங்கும் செல்ல முடியும். இவர்கள் புண்ணியம் செய்தவர்கள். பி-பகுதியியிலிருந்து ஏ-பகுதிக்குச் செல்ல முடியும். பி பகுதியில் வாழ்பவர்கள் தங்களது நல்ல எண்ணங்கள் மூலம் ஏ நிலைக்கு உயர முடியும். இருள் பகுதியில் இருப்பவர்கள் பேய்கள், தீய ஆவிகள் என அழைக்கப்படுகின்றனர். எதிர்காலத்தைப் பற்றி சரியாக கணித்துச் சொல்கிற சக்தி ஏ, பி பகுதியில் உள்ளவர்களுக்கு உண்டு. மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் சொல்வது சரியாக இருக்காது. சமயங்களில் சில தீய ஆவிகள் வந்தும் உண்மை போல் பேசிக் குழப்பிவிடுவதும் உண்டு. ஆவி உலகிலும் சட்ட திட்டங்கள் உள்ளன. அங்கு பிறர், ஒருவருக்கு கெடுதல் செய்தால் தண்டனை உண்டு. கடவுளின் ஆணைப்படி, பரிசுத்த ஆன்மாக்கள் ஆவி உலகைப் பொறுப்பேற்று நடத்துகின்றன. ஆவி உலகில் உள்ள ஆவிக்கு வளர்ச்சி உண்டு. குழந்தையாக இருக்கும் ஆவி, வெகு காலத்திற்குக் குழந்தை மனநிலையிலேயே இருப்பதில்லை. தனது அனுபவம், ஆர்வத்திற்கேற்ப அவை வளர்ச்ச்சி அடையும். ஆவிகளுக்கு நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்திற்கு அதிவேகமாகச் செல்லக்கூடிய சக்தி உண்டு. பிராணிகளுக்கு என தனி உலகம் உண்டு. தனி சட்ட திட்டங்களும் உண்டு. காலையும் மாலையும் 5-7 வரை பூஜை நேரம் பின்பற்றப்படுகிறது.”

இவையே ஆய்வாளருக்கு ஆவி கூறிய தகவல்கள்.

ஆவிகள் பற்றியும், தேவதைகள் பற்றியும் கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். “வாழ்வாங்கு வாழ்ந்த பலர், தேவதைகளாகக் கருதப்பட்டனர். முத்தன், முனியப்பன், காடன், மதுரை வீரன் என்பன போன்ற ஆண் தெய்வங்களும்; ஆலையம்மன், எல்லையம்மன், படவேட்டம்மன் போன்ற பெண் தேவதைகளும், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்து மடிந்தவர்களாக இருக்க வேண்டும்.“ என்கிறார் அவர்.

மேலும், ‘அதுபோல் ஆண் தெய்வங்களிலும் கோபத் தெய்வங்களாகக் காட்சியளிப்போர், ஒருகாலத்தில் வீரர்களாக வாழ்ந்திருக்க வேண்டும். ஒருவேளை, பயங்கரமான குணம் படைத்தவர்களாகவும் வாழ்ந்திருக்கலாம். அவர்களது ஆவியை அமைதிப்படுத்துவதற்கே பலி கொடுக்கும் பழக்கமும் வந்திருக்கலாம். பெண் தேவதைகளிலம் சில ருத்ர தேவதைகள் பயங்கரமான குணம் படைத்தவர்களாக இருந்து வாழ்ந்து, சாந்தி இல்லாமல் இறந்து போனவர்களாக இருக்கலாம். அவர்களையும் அமைதிப்படுத்தவே பலி கொடுக்கும் பழக்கம் வந்திருக்கலாம். அவரவர்களுடைய சுற்றத்தினர், தங்கள் குலத்தில் வாழ்ந்த ஒருவனுக்கோ ஒருத்திக்கோ எழுப்பிய இந்தச் சிறு ஆலயங்கள், நாளடைவில் ஊராரின் நம்பிக்கைக்கு உரியனவாகி, தெய்வங்களாகி இருக்க வேண்டும்’ என்று அவர் தெரிவிப்பது, தமிழர்களின் தொன்மையான சிறு தெய்வ வழிபாட்டிற்கும், ஆவி வழிபாட்டிற்கும் வலு சேர்ப்பதாய் அமைந்துள்ளது.
கண்ணதாசன் கூறும் ஆவிகள் உலக அனுபவமும் வியக்கத்தக்கது.

அவர், ”இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகுந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு. எனக்கே இதில் அனுபவம் உண்டு. 1941-ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு. அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு. ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக்கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும். அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்! சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும். மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும். மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும். இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன”  என்று அவர் கூறியிருப்பது நம்மை வியலாப்பிலாழ்த்துகிறது.
 
பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆவியுலக ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அது பற்றி அவர் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருந்ததாகவும், அதன் மூலம் ஆவிகளின் உதவிகளைப் பெற்று பல்வேறு கண்டுபிடிப்புகளை அவர் உலகிற்கு வழங்கியதாகவும் ஒரு கருத்துண்டு. Electronic voice phenomenon என்ற கருவி மூலம் ஆவிகளின் குரல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். சிலர் புதிய பல கருவிகள் மூலம் ஆவிகளை புகைப்படமெடுத்தும் உள்ளனர்.

மாத்யூ மானிங் என்ற ஆய்வாளர் ஹிட்லரின் ஆவியுடன் பேச முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார். அதுபோன்று ராவ்டிவ் என்ற ஆய்வாளரின் நண்பரான ரேமாண்ட் கேஸ் என்பவரும் ஆவி உலக ஆய்வில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். ஒருநாள் அவர் ஆவிகளின் குரலைப் பதிவு செய்ய முனைந்திருந்தார். அவர் காதுகளுக்கு ஒன்றுமே கேட்கவில்லை. பின் பிளேயரில் போட்டுக் கேட்ட போது அதில் ஆவிகளின் குரல் பதிவாகியிருப்பதை உணர்ந்தார். திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டவர், அதிர்ச்சியடைந்தார். காரணம், ‘அதில் ராவ்டிவ் தன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்ன்’ என்ற ஒலி பதிவாகி இருந்தது. அப்போது ராவ்டிவ் நல்ல உடல்நிலையில் இருந்தார். மரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் ரேமாண்ட் அதைப் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அனைவரும் அதிர்ச்சியடையும் படி திடீரென ஒருநாள் ராவ்டிவ் திடீரென மரணமடைந்தார். அது ஆவியின் குரல் தான் என்றும், அது முன்னெச்சரிக்கை செய்யவே வந்ததும் என்றும் பின்னர் அவர் உணர்ந்து கொண்டார். இது ஆய்வாளர்களால் ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது போன்று பல அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளன. ஆனாலும் ஆவியுலக மர்மங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆவிகள் உலகம்

ஆவிகள் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலோருக்கு ஒருவித அச்சம் ஏற்படும். சிலர் அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை எனக் கூறுவர். ஆனால் இறந்த தங்கள் முன்னொர்களை குல தெய்வமாக வணங்குவர். இல்லாவிட்டால் இறந்தவர்களது நினைவு நாளில் சிலைகளுக்கு மாலையிட்டு, அவர்கள் நினைவாக அன்னதானங்கள் செய்து வணங்குவர். இதுவே ‘நீத்தார் கடன்’ என தமிழில் கூறப்படுகின்றது. கடவுள் இல்லை, ஆவிகள் இல்லை என்று கூறுபவர்கள், சிலைகளுக்கு மாலையிட்டு வணங்குவதும், நினைவு நாள் கொண்டாடுவதும் உருவ வழிபாட்டை ஒத்ததே! வழிபாட்டின் அடிப்படையே நினைவைப் போற்றுதலும், நன்றி உணர்வுடன் இருத்தலுமே! இதையே பக்திமான்களும் செய்கின்றனர். நாத்திகர்களும் செய்து வருகின்றனர். ’ஆவிகள்’ என்பது பற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

ஆவிகள்
மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது. இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.

ஆவிகள் உலகம்
கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.

அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான். இந்த ஆவிகள் உலகம் கொடிய பாவம் செய்தவர்களுக்கு மிகவும் துன்பத்தைத் தரும் ஒன்றாக இருக்கும். பேராசை கொண்ட அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர். பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர். தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது. ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர். அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர். சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர். அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகிறோம்.

ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு தீய ஆவிகளின் பீடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.

நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர். இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்.

(தொடரும்)

இசை கேட்டு எழுந்தோடி…

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவன் இறைவன். அந்த செந்தமிழ்ப் பாடல்களில் பல நம் மனத்திற்கும் நினைவிற்கும் என்றும் இனிமையைத் தரக்கூடியவை. அன்று முதல் இன்று வரை எத்தனையோ இசையமைப்பாளர்கள், எவ்வளவோ இனிமையான பல பாடல்களைத் தந்துள்ளனர். பல்வேறு புதுமைகளைச் செய்துள்ளனர். நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத அவற்றிலிருந்து சில நினைவுகள்.

ஜி.ராமநாதன்
இவர் தன் இசையமைப்பில் பல்வேறு புதுமைகளைச் செய்தவர். பல பிரபலமான பாடகர்களை இசையுலகிற்கு அறிமுகம் செய்தவர். பல்வேறு இசைக் கோர்வைகளை இணைத்து புதிய பல ராகங்களைப் படைத்தவர். அவர் இசையமத்த படங்களுள் ஒன்றுதான் மந்திரிகுமாரி. திருச்சி லோகநாதனும் ஜிக்கியும் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடல் வெளிவந்த காலத்தில் மிகவும் சூப்பர் ஹிட்.

பாடல் ….. உலவும் தென்றல் காற்றினிலே
படம் …… மந்திரிகுமாரி
பாடியவர்கள் ……. திருச்சி லோகநாதன் – ஜிக்கி
இசைமயைத்தவர் ….. ஜி. ராமநாதன்.

இது என்றும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் பாடல்களில் ஒன்றல்லவா?

சி.ஆர். சுப்பராமன்
பழங்கால இசையமைப்பாளர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பெற்றிருந்தவர் இசை மேதை சி.ஆர். சுப்பராமன். மிகவும் எளிமையான இவர், அனைவரிடமும் அன்போடு பழகக் கூடியவர். அவர் இசையமைத்த தேவதாஸ் பாடல்கள் அப்போது மிகவும் பிரபலம். கதைக்காக மட்டுமல்லாமல் பாடலுக்காகவும் ஓடிய படம் என்று தேவதாஸைச் சொல்லலாம். அதுவும் இந்தப் பாடலை நாம் என்றுமே மறக்க முடியாது.

பாடல் — துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே…
படம் — தேவதாஸ்
பாடியவர் — கண்டசாலா
இசையமைப்பு — சி.ஆர்.சுப்பராமன்

மடப்பள்ளி ராமராவ்
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் ஆந்திராவில் இருந்து வந்தும் பல இசையமைப்பாளர்கள் இங்கு கொடிகட்டிப் பறந்தார்கள். தங்களது இனிய இசையமைப்பாலும், தேர்ந்தெடுத்த குரல்களாலும் அவர்கள் உருவாக்கிய பாடல்கள் காலத்தால் அழியாது நிற்கின்றன. அப்படிப்பட்ட பாடல்களில் இதோ ஒன்று. இதற்கு இசையமைத்தவர் மடப்பள்ளி ராமராவ்.

பாடல் — கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்
படம் — தாய் உள்ளம்
பாடியவர் — எம். எல்.வசந்தகுமாரி
இசையமைப்பு — மடப்பள்ளி ராமராவ்.

ராஜேஸ்வரராவ்
பல இசையமைப்பாளர்கள் தெலுங்கிலும் சரி, தமிழிலும் சரி அருமையான பாடல்களை வழங்கியிருக்கிறார்கள். பாடலாசிரியர்களும், தங்கள் பாங்கிற்கு சிறப்பாக பாடல்களை இயற்றித் தர, பல அற்புதமான இசைப் பொக்கிஷங்களை இவர்களால் உருவாக்க முடிந்தது. முக்கியமாக ராஜேஸ்வரராவ் பல இனிமையான பாடல்களுக்குச் சொந்தக்காரர். அவர் இசையமைத்த பல பாடல்கள் அழகான கர்நாடக ராகத்தின் சாயலில் அமைந்தும், கேட்பவர்களைப் பரவசப்படுத்தும்படியாகவும் இருக்கும். இதோ அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று…

பாடல்… மாயமே நானறியேன்
படம் ….. மிஸ்ஸியம்மா
பாடியவர் ….. பி.லீலா
இசை …. ராஜேஸ்வர ராவ்

எஸ்.வி.வெங்கட்ராமன்
எஸ்.வி.வெங்கட்ராமன். கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் பாடல்கள் அமைக்கப்பெறும் பொழுது, அதில் உள்ள சங்கதிகள் எனப்படும் ஒலிக்கோர்வைகள் மிக முக்கியமானவை. ஸ்வரம் தவறாமல் பாடுவதும், அதற்கேற்ப இசையமைத்தும் மிக மிக முக்கியம். அதில் மிகவும் கவனம் செலுத்தி, பல ஜாம்பவான்களை தனது இசையில் பாட வைத்த பெருமைக்குரியவர் எஸ்.வி.வெங்கட்ராமன். அதிலும் சகுந்தலை படத்தில் பிரபல கர்நாடக இசைப் பாடகர்களான ஜி. என்.பி – எம். எஸ். சுப்புலட்சுமி குரல்களில் ஒலித்த இந்தப் பாடல், அந்தக் காலத்தின் சிறந்த டூயட் பாடல்களில் ஒன்று.

பாடல் — பிரேமையில்…
படம் — சகுந்தலை
பாடிவர் — ஜி. என்.பி – எம். எஸ். சுப்புலட்சுமி
இசை — எஸ்.வி.வெங்கட்ராமன்

கண்டசாலா.
கண்டசாலா, சிறந்த பின்னணிப் பாடகர் மட்டுமல்ல; மிகச் சிறந்த இசையமைப்பாளரும் கூட. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல சிறந்த பாடல்களை இவர் அளித்திருக்கிறார். கள்வனின் காதலி படத்திற்கு இவர் M.R. கோவிந்தராஜுலு நாயுடுவுடன் இணைந்து இசை அமைத்த பாடல்கள் அக்காலத்தில் சூப்பர் ஹிட். இது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடல்… வெயில்கேற்ற நிழல் உண்டு..
படம் … கள்வனின் காதலி
பாடியவர் …. கண்டசாலா-பானுமதி
இசை ….. கண்டசாலா – M.R. கோவிந்தராஜுலு நாயுடு

விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இசையமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்வதர்களுள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணை மிகவும் குறிப்பிடத்தகுந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டி என்றும் ஒலித்து கேட்பவர்களை பரவசத்துக்குள்ளாக்கியது. அதுவும் மாலையிட்ட மங்கை படத்துக்கு அவர்கள் இசை அமைத்த பாடல்கள், நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசச் செய்தது. எத்தனையோ பாடல்கள், எத்தனையோ சாதனைகள்…

பாடல்… செந்தமிழ் தேன் மொழியாள்..
படம் – மாலையிட்ட மங்கை
பாடியவர்.. டி.ஆர்.மகாலிங்கம்
இசை… விஸ்வநாதன்-ராமமூர்த்தி

டி. ஆர். பாப்பா
டி. ஆர். பாப்பா. பெயரில் தான் இவர் பாப்பா. ஆனால் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் நெஞ்சில் என்றும் நீங்காத நினைவலைகளைத் தோற்றுவிப்பதாய் இருந்தன. அதுவும் டவுன்பஸ் படத்திற்காக கவி காமுஷெரீப்பின் பாடலிற்கு அவர் இசை அமைத்திருந்த விதம் மிகவும் சிறப்புற அமைந்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்தப் பாடல் கேட்பவரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளச் செய்வதாய் இருக்கிறதல்லவா?

பாடல் — பொன்னான வாழ்வே
படம் — டவுன்பஸ்
பாடியவர்கள் — திருச்சி லோகநாதன், M.S. ராஜேஸ்வரி.
இசை — டி.ஆர். பாப்பா

கே.வி.மகாதேவன்
கே.வி.மகாதேவன். திரை இசைத் திலகம் என்று போற்றப்பட்டவர். இசைக்கும், ராகத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பாடல்களை அமைத்தவர். பாடல்களில் பழைமையையும் புதுமையையும் சரிவிகத்தில் கலந்து புதியதொரு பாணிக்கு அடித்தளமிட்டவர். அதுவும் பக்திப் பாடல்களுக்கு அவர் இசை அமைத்த பாடல்கள் சாகாவரம் பெற்றவை. அவர் இசையமைத்த பாடல்களுள் இந்தப் பாடல் என்றும் இசை ரசிகர்களின் காதில் மறக்காமல் ஒலித்துக் கொண்டே இருக்கும். காரணம் பாடலைப் பாடியவர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று முப்பெரும் மேதைகளும் இணைந்து பணியாற்றியது தான். அந்தப் பாடல்….

பாடல்.. அமுதும் தேனும் எதற்கு…
படம் — தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர் — சீர்காழி கோவிந்தராஜன்
இசை — கே.வி.மகாதேவன்.

ஏ. எம். ராஜா
கல்யாண பரிசு. அந்தக் காலத்தில் வெளி வந்து வெள்ளி விழாக் கண்ட படம். இயக்குநர் ஸ்ரீதருக்கு மிகுந்த பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்த படம். ஜெமினி கணேசனின் மறக்க முடியாத நடிப்பும், சரோஜாதேவி வெளிப்படுத்திய முக பாவங்களும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவை. பாடல்களைப் பாடியதோடு மட்டுமல்லாமல், இசையும் அமைத்து தான் ஒரு தேர்ந்த இசை அமைப்பாளர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார் , ஏ. எம். ராஜா அவர்கள். அதுவும் இந்தப் பாடல் காதலில் தோல்வியுற்றவர்களின் உள்ளத்தை உருக்கச் செய்யும் சோக ரசப்பாடல்.

பாடல் — காதலிலே தோல்வியுற்றான்…
படம் — கல்யாண பரிசு
பாடியவர் — ஏ. எம். ராஜாஇசை — ஏ. எம். ராஜா

ஆதி நாராயண ராவ்
ஆதி நாராயண ராவ். குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளரான இவர், தனது பாடல்களில் ‘மெலோடி’க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். இரைச்சலூட்டும் அதிக வாத்தியக்கருவிகளைப் பயன்படுத்தாமல், மென்மையான பாடல்களை அமைதியான நல்ல இசையின் மூலம் தந்தவர். இதோ இந்தப் பாடல் அவர் நினைவை என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறதே!

பாடல் — அழைக்காதே…
படம் —- மணாளனே மங்கையின் பாக்கியம்
பாடியவர் — சுசீலா குழுவினர்
இசை — ஆதி நாராயண ராவ்.

S.M. சுப்பையா நாயுடு
S.M. சுப்பையா நாயுடு. தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களுள் குறிப்பிடத் தகுந்தவர். பல அற்புதமான பாடல்களை வெள்ளித் திரைக்குத் தந்தவர். அதுவும் மலைக்கள்ளன் படத்திற்கு அவர் அமைத்திருந்த இசை, அந்தப் படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், எம்.ஜி.ஆர்., S.M. சுப்பையா நாயுடு என்ற வெற்றிக் கூட்டணி மீண்டும் நாடோடி மன்னன் படத்தில் இணைந்தது. வெற்றிப் பாடல்களைத் தந்தது. அந்தப் பாடல்…

பாடல் — எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்…
படம் — மலைக்கள்ளன்
பாடியவர் — பானுமதி – டி.எம். எஸ்
இசை — S.M. சுப்பையா நாயுடு

தக்ஷிணாமூர்த்தி
தக்ஷிணாமூர்த்தி. தமிழ் திரைப்படத்தின் குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளர்களுள் இவரும் ஒருவர். சதா இசை பற்றிய சிந்தனையிலே இருந்த இவர், தமிழில் பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவை காலத்தால் மறக்க முடியாதவை. இதோ அவற்றிலிருந்து ஒன்று…
பாடல் — மாசிலா உண்மைக் காதலே….
படம் — அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
பாடியவர் — ஏ. எம். ராஜா
இசை — தக்ஷிணாமூர்த்தி.

இதுவரை பெரிய தேன் குடத்திலிருந்து சில துளிகள் மட்டும் பருகினோம். தொடர்ந்து மீண்டும் சுவைப்போம்.

ஸ்ரீ அரவிந்தர்

ஸ்ரீ அரவிந்தர்

ஸ்ரீ அரவிந்தர்

மகான் ஸ்ரீ அரவிந்தர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். தவிர அவர்  ஓர் இலக்கியவாதி. மெத்தப்படித்தவர். எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கட்டுரை ஆசிரியர், இதழாளர், கல்லூரிப் பேராசிரியர் என பல பதவிகள் வகித்தவர். பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர். அவரது பிறந்த நாளில் தான் பாரத நாடு விடுதலை அடைந்தது. பாரதத்தின் தவப் புதல்வராக விளங்கிய அவரது வாழ்க்கை வரலாற்றை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.

1872 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி, கிருஷ்ண தன கோஷ்-சுவர்ண லதா தேவி தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாய் அரவிந்தர் அவதரித்தார். அவருக்கு அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்று பெயர் சூட்டப்ப்பட்டது. சிறுவனாக இருக்கும் போதே அவருக்கு ஆங்கிலமும், ஹிந்துஸ்தானியும் கற்றுத் தரப்பட்டது. அயர்லாந்த்து கன்னித்துறவியர்களால் நடத்தி வரப்பட்ட, டார்ஜிலிங்கில் உள்ள லோரட்டோ கான்வென்ட்டில் அவரது பள்ளிப் படிப்பு கழிந்தது. பின்னர் தனது கல்வியை அவர் இங்கிலாந்தில் தொடர்ந்தார். லத்தீன், பிரெஞ்சு உட்படப் பல மொழிகளைக் கற்றுக் கொண்யார். உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்தும் கற்றுத் தேர்ந்தார்.

1884 ஆம் ஆண்டில், தனது பனிரெண்டாவது வயதில் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். ஜெர்மன், ஸ்பானிஷ் எனப் பல மொழிகளைக் கற்றுக் கொண்டார். கீட்ஸ், வோர்ட்ஸ் வொர்த், ஷேக்ஸ்பியர் என பலரது இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார். பின் உலகப் புகழ்பெற்ற  கேம்ப்ரிட்ஜ் கல்விக் கூடத்தில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

அதே சமயம் பாரதம் வறுமையில் வாடுவது, அந்நியரின் பிடியில் சிக்கித் தவிப்பதும் அவர் கவனத்துக்கு வந்தது. அதற்காக மிகவும் மனம் வருந்தியவர், அந்நிலை மாறுவதற்கு உழைக்க உறுதி பூண்டார். கேம்பிரிட்ஜிலுள்ள ‘இந்தியன் மஜ்லிஸ்’ என்னும் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். ‘சுதந்திரம் பெறுவதற்கு மிதவாதம் உதவாது’ என்பது இந்த அமைப்பினரின் கருத்து. இதனை அரவிந்தரும் ஏற்றுக் கொண்டார். எப்படியாவது பாரதத்திற்கு விடுதலை வாங்கித் தருவது என உறுதி பூண்டார். அதற்காக பல இரகசியச் சங்களில் சேர்ந்து உழைக்கலானார்.

 இந்தச் சமயத்தில் பரோடாவின் சமஸ்தான மன்னர் தனது அலுவல் விஷயமாக லண்டன் வந்திருந்தார். அவரை தனது நண்பர் மூலம் சந்திக்கும் வாய்ப்பு அரவிந்தருக்குக் கிட்டியது. அரவிந்தரின் முகப் பொலிவு, அறிவுத் திறமை இதையெல்லாம் பார்த்த அரசர், தனது சமஸ்தானத்திற்கு வந்து, பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தினார். அரவிந்தரும் அதற்கு இணங்கினார். இந்தியா புறப்பட்டுச் சென்றார். மன்னருக்கு உதவியாகப் பணியாற்றினார். பின் வருவாய்த்துறையிலும், முத்திரைத்தாள் துறையிலும் பணி புரிந்தார். பின்னர் தலைமைச் செயலகத்திலும் பணியாற்றினார். ஏழு ஆண்டுகள் இவ்வாறு பல வித அரசாங்க அலுவல்களைப் பார்த்த அரவிந்தர், பின்னர் பரோடா கல்லூரிக்கு ஆங்கிலப் பேராசிரியராக மாற்றப்பட்டார். தனது நேரத்தை தியானத்திலும், எழுத்துப் பணியிலும், புதிய நூல்கள் படிப்பதிலும் செலவிட்டார்.

1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் நாள், கல்கத்தாவில், அரவிந்த கோஷூக்கும் பூபால் சந்திர போசின் மகளான குமாரி மிருணாளினிக்கும் திருமணம் நடந்தது. அப்பொழுது மிருணாளினியின் வயது 14. அரவிந்த கோஷின் வயது 29. திருமணம் முடிந்ததும் அவர் மீண்டும் பரோடாவிற்கு வந்து பணியாற்றினார். ஆனால் சமஸ்தான வேலையில் இருந்ததால் அவரால் நேரடி அரசியலில் ஈடுபட முடியவில்லை. அதனால் மறைமுகமாக அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். புரட்சி உள்ளம் கொண்ட வீரர்களைத் தயார்படுத்தினார். அரவிந்தரின் இளைய சகோதரரான பரீந்தர நாத் எனப்படும் பரீன் இதற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் கர்சன் பிரபுவின் சூழ்ச்சியால் வங்கப் பிரிவினை ஏற்பட்டது. அதைக் கண்டு கொதித்தார் அரவிந்தர். அது இந்து-முஸ்லிம் பிரிவினைக்கே வழிவகுக்கும் என நினைத்த அவர் அதனை தீவிரமாக எதிர்த்தார். நாட்டிற்காகப் போராட முடிவு செய்து, தமது பரோடா சமஸ்தானப் பணியை உதறிவிட்டு, நேரடி அரசியலில் குதித்தார். அரவிந்தரின் முக்கிய நோக்கம் தேச விடுதலையே. எனவே அதற்கான சிந்தனையே அவர் மனம் முழுவதும் வியாபித்திருந்தது. பிபின்பால் அரவிந்தரின் உற்ற தோழராக விளங்கினார். இருவரும் இணைந்து பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டனர். நாடெங்கிலும் ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டிருந்த  ‘வந்தே மாதரம்’ கோஷம் எழும்பியது. ‘வந்தே மாதரம்’  என்ற இதழையும் பிபின் சந்திரபால் ஆரம்பித்தார். அதில் அரவிந்தர் பல் வேறு கட்டுரைகளை எழுதி வந்தார்.

அப்போது புரட்சிக்காரர்க்ளுக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. அத்தகைய கொடுஞ் செயல்களுக்கு கல்கத்தாவின் அப்போதைய நீதிபதிகளில் ஒருவரான கிங்ஸ் போர்டே காரணமாக இருந்தார். எனவே அவர் மீது புரட்சிக்காரர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்ள எண்ணினர். போராளிகளான குதிராம் போஸ் என்பவரும் அவர் நண்பரான பிரபுல்ல சக்கியும் கிங்ஸ்போர்டை எப்படியாயினும் ஒழித்து விடுவது என உறுதி எடுத்துக் கொண்டனர். ஆனால் அவர்களது முயற்சி குறி தவறி இரு அப்பாவி ஐரோப்பியப் பெண்கள் கொல்லப்பட்டனர். இது நாடெங்கும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது புரட்சிக் கருத்துக்கள் மூலம் ஏற்கெனவே ஆங்கில அரசுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அரவிந்தரை, இதில் சிக்க வைக்க அரசாங்கத்தினர் திட்டமிட்டனர். அரவிந்தரே இவர்களுக்கெல்லாம் தலைவர், அவர்தான் இவை அனைத்திற்கும் காரணம் என்று குற்றம் சுமத்தி அவரைக் கைது செய்தனர். அவரை அலிப்பூர் சிறைச் சாலைக்குக் கொண்டு போயினர். அரவிந்தரை மட்டுமல்லாமல் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் ஹேமச் சந்திர சென், நளினி காந்த் குப்தா, தீன தயாள் போஸ், பரீன், எனப் பலரும் கைது செய்யப்பட்டனர்.

சிறைவாசம் அரவிந்தருக்கு முதலில் அளவிலாத துன்பத்தைத் தந்தது. ஆனால் நாளடைவில் அவருக்கு நல்ல மனப்பக்குவத்தையும் அது  தர ஆரம்பித்தது. நடக்கும் அனைத்தும் இறைவனின் சித்தம் என்பதையும், அவனாலே தான் அனைத்தும் நடத்தப்படுகிறது என்பதையும், எல்லா தீமையிலும் ஓர் நன்மை உண்டு என்பதையும் அலிப்பூர் சிறைவாசம் அரவிந்தருக்கு மிகத் தெளிவாக உணர்த்தியது.

சிறையில் பல துன்பங்களை அவர் அனுபவிக்க நேர்ந்தது. அவற்றையெல்லாம் மிகுந்த மன உறுதியுடன் எதிர் கொண்டார். சகிப்புத் தன்மையுடன் வாழப் பழகிக் கொண்டார். தனக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் கீதை, வேதங்கள், உபநிஷத்துகள் எனப் பல நூல்களைப் படித்தார். யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளவும் அவருக்கு நேரம் கிடைத்தது. ஒரு வகையில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும், வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும், மேடு, பள்ளங்களையும் தான் நன்கு அறிந்து கொள்ளவும் இறைவன் செய்த ஏற்பாடே இந்த சிறைவாசம் என்பதை அரவிந்தர் நன்கு உணர்ந்து கொண்டார்.

சிறையில் நாள் தோறும் அவருக்குப் பலவித ஆன்மிக அனுபவங்கள் ஏற்படலாயின. காணும் அனைத்தும் அந்தக் கண்ணனின் உருவே என்பதை அவர் உணர ஆரம்பித்தார். விவேகானந்தரின் ஆவி தன் அறைக்குள் வருவதையும், தனக்கு போதனை செய்ய விரும்புவதையும் அவர் உணர்ந்து கொண்டார். இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார். தமக்குள் சில குரல்கள் ஒலிப்பதையும், அவை தம்மை வழி நடத்துவதையும்  உணர்ந்தார். இந்தியாவின் விடுதலை நிகழ்ந்தே தீரும் என்றும் அதற்கேற்ற வழிவகைகள் உருவாக்கப்பட்டு விட்டன என்றும் எனவே இனி நீ மனித குல விடுதலைக்குத் தான் நீ உழைக்க வேண்டும் என்றும் அந்தக் குரல் அறிவுறுத்தியதாக அவர் உணர்ந்தார்.

இந்தியாவில் தொடரப்பட்ட புரட்சியாளர்கள் மீதான முதல் சதி வழக்கு அலிப்பூர் சதி வழக்கு தான் என்பதால் அதன் தீர்ப்பை நாடே எதிர்பார்த்தது. சித்தரஞ்சன் தாஸின் மிகிச் சிறப்பான வாதத்தின் மூலம் அரவிந்தர் உட்படப் பலர் விடுதலை செய்யப்பட்டனர். 1908, மே 5-ல் கைது செய்யப்பட்ட அரவிந்தர் 1906 மே, 6-ல் விடுதலை செய்யப்பட்டார்.

அதன் பின்னரும் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார். நேரடியாக போராட்டத்தை தாமே முன்னின்று நடத்த உறுதி கொண்டார். கல்கத்தாவில் வாரம் தோறும் தொடர்ந்து பல கூட்டங்கள் போட்டார். தலைமை உரை ஆற்றினார். மக்களிடையே சுதந்திர வேட்கையைத் தூண்ட கர்மயோகி’ என்ற ஆங்கிலப் பத்திரிகையையும், ‘தர்மா’ என்ற வங்காள மொழிப் பத்திரிகையையும் தொடங்கினார். அவற்றில் வழக்கம் போல தனது அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதி மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். பாரிசால் மாநாட்டில் அவர் கலந்து கொண்டு அவர் ஆற்றிய எழுச்சி உரை மிக முக்கியமானதாய் அமைந்தது. அரசாங்கம் கொண்டு வந்த பல் வேறு சீர்த்திருத்தங்களை துணிவுடன் எதிர்த்தார். இதனால் எப்படியாயினும் அரவிந்தரை ஒழித்துக்கட்ட நினைத்த ஆங்கில அரசாங்கம் அவரை  நாடு கடத்தத்  திட்டமிட்டது. இதனை சகோதரி நிவேதிதா மூலம் அறிந்து கொண்ட அரவிந்தர், யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் புறப்பட்டு, பிரெஞ்சு அரசாங்கத்தின் நேரடிப் பாதுகாப்பில் உள்ள சந்திர நாகூரை அடைந்தார். அது முதல் சந்திர நாகூரிலிருந்து அவரின் அரசியல் மற்றும் ஆன்மிக சாதனைகள் இரகசியமாகத் தொடரலாயிற்று.

பின்னர் ஒருநாள் தமக்குள் ஒலித்த இறைவனின் குரலுக்குக் கீழ்ப்படிந்து புதுச்சேரியை நோக்கிப் பயணப்பட்டார் அரவிந்தர்.

(தொடரும்)

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா! 

ஸ்ரீ காக புஜண்டர்

யுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். இதோ..  அவரை வழிபடும் சில ஸ்லோகங்கள். இவற்றை உள்ளன்போடு பூசியுங்கள். தினம்தோறும் காக்கைக்கு உங்கள் கையால் உணவிட்டு வாருங்கள். பாவங்கள் தொலையும். நன்மைகள் விளையும்.

நற்பவி! நற்பவி! நற்பவி!

ஓம் ஸ்ரீ காகபுஜண்டீசுவர சுவாமிநே நம:

ஸ்ரீ காகபுஜண்ட தியானம்

   த்விபுஜம் சத்வி நேத்ரம் ச
   ஜடாமகுட தாரிணம்
   காகதுண்ட முகம் சாந்தம்
   பஸ்ம ருத்ராஷ தாரிணம்
   முத்ரோ ருத்வய ஹஸ்தம்ச
   சிவசிந்தன மானஸம்
   பக்தா பீஷ்ட்ட ப்ரதம் தேவம்
   பாவயே முனி புங்கவம்.

   ஸ்ரீ காகபுஜண்டர் காயத்ரி

  1. ஓம் புஜண்ட தேவாய ச வித்மஹே
   த்யான ஸ்தீதாய தீமஹி;
   தந்நோ பகவான் ப்ரசோதயாத்.

  2. ஓம் காக ரூபாய வித்மஹே
   தண்ட ஹஸ்தாய தீமஹி;
   தந்நோ புஜண்ட ப்ரசோதயாத்.

  3.  ஓம் காக துண்டாய வித்மஹே
   சிவசிந்தாய தீமஹி;
   தந்நோ யோகி: ப்ரசோதயாத்.

   ஓம் ஸ்ரீ பஹூளாதேவி சமேத
   ஸ்ரீ காக புஜண்ட தேவாய நம:

ஸ்ரீ காக புஜண்டரின் அருளால் இதனை உள்ளன்போடும் பக்தியோடும் படிப்பவர்கள் அனைவருக்கும் எல்லா நன்மையும் விளையட்டும்!

 

நற்பவி! நற்பவி! நற்பவி!

« பழைய வரவுகள்