இசைச் சங்கமம் – சென்னையில் திருவையாறு

திருவையாற்றில் நடைபெறும் இசைவிழாவைப் போல சென்னையிலும் வருடா வருடம் தொடர்ந்து நடைபெறும் இசைவிழா ‘சென்னையில் திருவையாறு’. கலாலயா யூ.எஸ்.ஏ. நாடக அகாடமி, ராஜ் டிவி, லஷ்மண் ஸ்ருதி மற்றும் பல அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த விழா வழக்கம் போல இந்த முறையும் மிகக் கோலாகலமாக ஆரம்பித்தது. ‘எல்லோராலும் திருவையாற்றிற்குச் சென்று இசை விழாவில் கலந்து கொள்ள முடியாது ஆகவே, இங்கிருப்பவர்களும் பயன்பெறும் வகையில் சென்னையில் இவ்விழாவை வருடா வருடம் நடத்தி வருகிறோம் என்றார் விழாவின் அமைப்பாளர் லஷ்மண்(ஸ்ருதி).

இவ்வருட இசை விழா 21-12-2007 அன்று சென்னை காமராஜர் அரங்கில் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக பி.எஸ் நாராயணசாமி தலைமையில் பாடகர்கள் பஞ்சரத்ன கிருதியைப் பாடினர். பின்னர் தொடர்ந்து ராஜேஷ் வைத்யாவின் வீணை, ஹரிசரனின் வாய்ப்பாட்டு, ஸ்ரீகலா பரத்தின் பரதநாட்டியம், நித்யஸ்ரீயின் கச்சேரி, பிரசன்னாவின் கிடார் என முதல் நாளே நிகழ்ச்சி களை கட்டியது. அரங்குகள் நிரம்பி நல்ல கூட்டமும் காணப்பட்டது என்றாலும் வழக்கம் போல இளைய தலைமுறையினர்கள் அதிகம் தென்படவில்லை என்பது ஒரு குறைதான். தொடர்ந்து கன்யாகுமரி வயலின், சைந்தவியின் வாய்ப்பாட்டு, லலிதா நந்தினியின் வாய்ப்பாட்டு, விஜய் சிவாவின் கச்சேரி என நிகழ்ச்சி மறுநாளும் (22-12-2007) களை கட்டியது. அன்றைய நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ஆராவமுதாச்சாரியாரின் ‘ஹரிகதா’ அமைந்திருந்தது. தனக்கே உரிய ஏற்ற இறக்கமான குரலாலும், அழகான விளக்கங்களாலும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டார் ஆச்சாரியார்.

Dr. kadam kaarthik 

23-01-2007 அன்று HEART BEAT ENSEMBLE கடம் கார்த்திக்கின் FUSION-னுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சைலண்ட் வயலின் எம்பார் எஸ்.கண்ணன் வெகு அற்புதமாக வாசித்தார். பக்கவாத்தியமாக யு.பி.ராஜூ மாண்டலினில் அநாயசமாக புகுந்து விளையாடினார். குறிப்பாக ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் மீதான, ஆதிதாளம்- புஜங்கணி ராகத்தில் அமைந்த ஸ்ரீ குருராயா பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. தொடர்ந்து வந்த கமலாலயம் தந்த மும்மணிகள் என்னும் ஸ்ரீ ராகத்தில் அமைந்த மும்மூர்த்திகள் பேரிலான பாடல் எந்தரோ மகானுபாவுலுவை ஞாபகப்படுத்தியது. கடம் வாசிப்பது மட்டுமில்லாமல் மிக அற்புதமாக, அநாயசமாகப் பாடி ரசிகர்களின் ஏகோபித்த கரகோஷத்தைப் பெற்றார் கடம் கார்த்திக். தொடர்ந்து வந்த ‘ஓம் சரவணபவா’ என்னும் திருப்புகழ் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக விளங்கியது. கடம், வயலின், மாண்டலின், மிருதங்கம், கஞ்சிரா என மாற்றி மாற்றி தனிஆவர்த்தனம் செய்ததில் ரசிகர்கள் கிறங்கித்தான் போயினர். குறிப்பாக எம்பார் கண்ணன் மிக அற்புதமாக ஆவர்த்தனம் செய்தார். வழக்கம் போல கடத்தைத் தூக்கிப் போட்டு விளையாடவும் செய்தார் கார்த்திக். பக்கவாத்தியமாக பூங்குளம் சுப்ரமண்யத்தின் மிருதங்கமும், சுந்தர் குமாரின் கஞ்சிராவும், ஏ.எஸ்.கிருஷ்ணனின் மோர்சிங்கும் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து ராகங்களையும் மாறி மாறி வாசித்தது முத்தாய்ப்பாக இருந்தது. மொத்தத்தில் மனநிறைவான கச்சேரி.

தொடர்ந்து கே.காயத்ரி, மஹதி, உன்னிகிருஷ்ணன் என கச்சேரி தொடர்ந்தது. இறுதியில் ஷஷாங்கின் புல்லாங்குழலுடன் அன்றைய நாள் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. சில நிகழ்ச்சிகளில் அமர்வதற்கு இடமில்லாமல் பார்வையாளர்கள் நின்று கொண்டே பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

24-12-2007 அன்றைக்கான நிகழ்ச்சிகள் கர்நாடிகா பிரதர்ஸின் கச்சேரியுடன் துவங்கியது. தொடர்ந்து சத்யநாராயணாவின் கீ போர்டு மனதிற்கு நிறைவைத் தந்தது அவர் அநாயசமாக அதை வாசித்த விதம் அருமை. அடுத்து வந்த முரளிதரன் குழுவினரின் பரதநாட்டியம், ரஞ்சனி காயத்ரியின் வாய்ப்பாட்டு, குமரேஷ்-கணேஷின் வயலின் என நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிமையாக இருந்தன.

நிறைவு நாளான 25-12-2007 அன்று கத்ரிகோபால்நாத்தின் இனிமையான சாக்ஸபோனோடு நிகழ்ச்சி துவங்கியது. கன்யாகுமரி, ஹரித்வாரமங்கலம் பழனிவேல் என தனது குழுவினருடன் வழக்கம் போல அழகாக வாசித்து ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்றார் கத்ரி. தொடர்ந்து சியாட்டில் ராமனின் வாய்ப்பாட்டுக் கச்சேரி. ராமனுக்கு நல்ல குரல்வளம், சுத்தமான உச்சரிப்பு என நிறைய ப்ளஸ் பாயிண்டுகள். அத்துடன் அலட்டிக் கொள்ளாமல், அமைதியாக, அடக்கமாகப் பாடியதையும் சேர்த்துக் கொள்ளலாம். மன நிறைவைத் தந்த கச்சேரி.

 Sikkil Gurusaran

தொடர்ந்து பாட வந்தவர் சிக்கில் குருசரண். புகழ்பெற்ற சிக்கில் சகோதரிகள் லீலா-குஞ்சுமணியினரில் லீலாவின் பேரன். இன்றைய இளைய தலைமுறைப் பாடகர்களின் இவருக்குத்தான் அதிகக் கூட்டம் கூடுகிறது என்பது உண்மை. அவர் ‘நீயே கதி’ என்று பாட ஆரம்பித்த சற்று நேரத்தில் கூட்டம் அதிகமாகி நாற்காலிகள் நிரம்பின. தொடர்ந்து ஸ்ரீ மஹா கணபதே, ஓ ராமா பாடல்கள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன. தொடர்ந்து பாடிய ‘சதா மதி’ என்ற கம்பீரவாணி ராகப் பாடலும் அதற்கான பக்கவாத்தியமும் மிக அருமை. ‘ஸ்ரீ வல்லி தேவசேனாபதே’ பாடல் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக விளங்கியது. அந்தப்பாடலுக்கு கணேஷ் பிரசாத் வயலினில் தனி ராஜபாட்டையே நடத்தி விட்டார் என்று சொல்லலாம். புருஷோத்தமின் கஞ்சிராவும், நெய்வேலி நாராயணனின் மிருதங்கமும் போட்டி போட்டுக் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்தவிதம் அருமை. இறுதியாக ‘சின்னஞ்சிறு பெண் போலே’ பாடலைப் பாடி கச்சேரியை நிறைவு செய்தார் குருசரண். அந்தப்பாடலுக்கு ரசிகர்கள் கூட்டமும் அவரோடு சேர்ந்தே பாடியது குறிப்பிடத்தக்கது.

 sowmyaa

 தொடர்ந்து வந்த சௌம்யா தனது வழக்கமான டிரேட் மார்க் புன்சிரிப்புடன் ‘ஆடிக் கொண்டார்’ பாடலை அழகாக ஆலாபனை செய்தார். தொடர்ந்து தியாகராஜரின் புகழ்பெற்ற கிருதியான ‘மனவியாக லின் சரா டதே’ பாடலை உருகும் விதத்தில் பாட, ரசிகர்கள் பலர் எழுந்து நின்று கைதட்டினர். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி, அருளவேண்டும் தாயே, உன்னையல்லால்.., நின்னையே ரதியென்று.. என்று பல பாடல்களை உச்சரிப்பு சுத்தத்துடன் அழகாக ஆலாபனை செய்த விதம் அருமை. இறுதியாக அண்ணாமலை ரெட்டியாரின் ‘சென்னி குள நகர் பாலன்’ காவடிச் சிந்தை ஏனோ சற்று அவசரமாகவே பாடி நிறைவு செய்தார். ராமதாஸின் வயலினும், கிருஷ்ணமூர்த்தியின் மிருதங்கமும் நிகழ்ச்சிக்கு மிகுந்த பக்கபலமாக இருந்தது.

 Sudha Ragunathan

அடுத்து சுதா ரகுநாதன் பாட வரும்போது அரங்கு முற்றிலுமாக நிறைந்து விட்டது. நாற்காலியில் அமர இடமில்லாததால் ரசிகர்கள் பலர் முணுமுணுப்புடன் தரையில் அமர்ந்து கொண்டே நிகழ்ச்சியை ரசிக்க ஆரம்பித்தனர். அரங்கில் நிற்கவும் இடமில்லாததால் பல ரசிகர்கள் மேடையில் ஏறி, கச்சேரி செய்பவர்களுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டு விட்டனர். வழக்கமான முறையில் அற்புதமாகப் பாடி தனது கச்சேரியை நிறைவு செய்தார் சுதா ரகுநாதன். அவர் சென்றவுடனேயே அரங்கத்திலிருந்து பலரும் வெளியே செல்ல ஆரம்பித்தனர். இறுதியாக ஸ்ரீ ராம் பரசுராம்-அனுராதா ஸ்ரீராமின் ஹிந்துஸ்தானி-கர்நாடிக் ஜூகல்பந்தியுடன் கச்சேரி நிறைவுற்றது.

‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சி சென்னை ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் என்றாலும் நிகழ்ச்சி அமைப்பில் சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும், ரசிகர்கள் ஒழுங்காக அமர்வதற்கு சரியான சிட்டிங் வசதி செய்யப்படவில்லை என்பது போன்று குற்றச்சாட்டுக்களை அரங்கில் கேட்க முடிந்தது. அடுத்த ஆண்டு கச்சேரியில் இது போன்று குறைகள் நேராது என்று நம்புவோமாக.

தேடல்

விசில்
ஊதிக் கொண்டே செல்லும்
கூர்க்கா அறிந்திருப்பானா..
தன் குடும்பத்தினரின்
உறக்கத்தை..

நிவேதனம் செய்யும்
பூசாரிக்குத் தெரியுமா..
தன் மனையாளின் பசி…

காத்திருக்கும்
கொக்கு
அறிந்திருக்குமா..
மாட்டப்போவது
மீன் தானா என்று..

பாலியல் பெண்
அறிந்திருப்பாளா..
அடுத்து வருபவன்
இளைஞனா
கிழவனா
என்று..

விளைவு அறியாத விழைவுடன்
விரைந்து செல்லும்
ஆம்புலன்சைப் போல..
விடை தெரியாத
கேள்விகள் ஊடே
தினமும் நகர்கிறது
வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்.

வேதனை

அங்கும் இங்குமாய்
சிதறிக் கிடக்கும்
ரொட்டித் துண்டுகளைப் போல
அறை முழுவதும்
சிதறிக் கிடக்கின்றன
உன் வார்த்தைகள்!

பேப்பர் வெயிட்டையும் மீறி
காற்றில் படபடக்கும்
காகிதத்தைப் போல
என் மனது!

உத்தரவின்றி
உள்ளே வந்துவிட்டு
வெளியேறத் தவிக்கும்
தட்டாம் பூச்சியாய்
வார்த்தைகளின்றி
அலைந்து கொண்டிருக்கிறது
உள்ளுக்குள்ளேயே
ஒரு குரல்!

கனத்த மௌனத்தில்
நினைவின் நிசப்தத்தையும் மீறி
எங்கோ தூரத்தே ஒலிக்கிறது
ஒரு கூட்ஸ் ரயிலின் சப்தம்!

அறை முழுவதும்
சிதறிக் கிடக்கின்றன
உன் வார்த்தைகள்
கேட்பாரற்று!

மோகம்

ஓயாத முத்தங்களாய்
ஒளியப் பார்க்கும் சப்தங்களாய்

வெப்பப் பெருமூச்சொடு
வியர்வைக் கசகசப்பாய்

விடுதலை மேனியொடு
சிறை புகுந்து மீண்டு

சிலிர்த்துக் கிடைக்கையிலே
சிந்தனையில் இடறுது..

டைப்பிஸ்ட் மல்லிகா
நாளை
அணிந்து
வரப்போவது
சுடிதாரா
புடைவையா..
என்பது

வலி

ஒரு கவிதை
எழுத வேண்டுமென்று
நினைத்தேன்

அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும்
புது மணப்பெண்ணின்
மோகாவஸ்தைகளாய்
நீண்டு கொண்டே
போனது என்
வார்த்தைகள்

ஒரு நல்ல கவிதை
எழுத வேண்டுமென்று
நினைத்தேன்

தலைப்பிரசவப் பெண்ணின்
இடுப்பு வலி போல
கொஞ்சம் கொஞ்சமாய்
ரம்பித்து
முடிவில்
வெளிபோந்தது
என் கவிதை
குருதி தோய்ந்த
தொப்புள் கொடியோடு
உயிரின்றி..
உணர்வின்றி…

காதல் கவிதை

உத்தரவின்றி
உள்ளே வந்து விட்டு
உரிமையோடு
அலையும்
பூனைக்குட்டியைப் போல

அறைக்குள்
உலாவிக் கொண்டிருக்கிறது
அவளின் மூச்சு!

உறுப்புகளின் உரசல்களுக்கு
ஏங்கித் தவிக்கும்
பருவமாய்

ஏதேதோ நினைவுகள்
ஏங்கவைக்கும் கனவுகள்

கடமை!
கண்ணியம்!
கட்டுப்பாடு!

எங்கோ
எதற்கோ
யாரோ
கூவுகிறார்கள்!

உணர்ச்சிகளில்லாப்
புணர்ச்சிகள் போல்
நுகர்வோர்
இல்லாமல்
அலைந்து கொண்டிருக்கிறது
அவள் விட்டுச் சென்ற
மூச்சு!

கவிதை

உடல் வருடும்
தென்றல்!

மணம் வீசும்
காட்டுப்பூ!

சலசலக்கும்
நீரோடை!

செவி வருடும்
பறவை ஒலி!

வேகும் பிணத்துடன்
வெட்டியான்!

வாழ்க்கை

ஒரு கவிதை
எங்கு வேண்டுமானாலும்
பிறக்கலாம்

அது
சிறு கவிதையோ
பெருங்கவிதையோ
எப்பொழுது வேண்டுமானாலும்
உருவாகலாம்

சாலையைக் கடக்கும் பொழுதோ..
சோலையில் சுகிக்கும் பொழுதோ..

கடலலையின் சத்தத்திலோ..
காதலியின் முத்தத்திலோ..

சண்டையின் உச்சத்திலோ..
சாக்கடையின் பக்கத்திலோ..

மொட்டைமாடிப் புணர்ச்சியிலோ..
தொட்டணைத்த நெகிழ்ச்சியிலோ..

ஒரு கவிதை
எங்கு வேண்டுமானாலும்
பிறக்கலாம்

கட்டிலின் சத்தமும்
கவிதை தான்
தொட்டிலின் சிணுங்கலும்
கவிதை தான்
குமரியின் சிரிப்பும்
கவிதை தான்
குழந்தையின் அழுகையும்
கவிதை தான்

ஒரு கவிதை
எப்பொழுது வேண்டுமானாலும்
உருவாகலாம்

நண்பனின் மரணமும்
கவிதை தான்
நடிகையின் துயரமும்
கவிதை தான்

நெருங்கியவர்களின் பிரிவும்
கவிதை தான்
பிரிந்தவர்களின் நெருக்கமும்
கவிதை தான்

ஒரு கவிதை
எப்படி வேண்டுமானாலும்
உருவாகலாம்

நேசிப்பின் இழப்புகள்
கவிதையாவது
வாழ்வின்
அர்த்தமா?
அனர்த்தமா?

வீரத்துறவி

 ஜனவரி 12. 1863-ம் ண்டில் பிறந்த விவேகானந்தர் இளமையிலேயே பகுத்தறிவும், ஆராய்ச்சி மனப்பான்மையும் கொண்டவராக விளங்கினார். கடவுளைக் காண வேண்டும் என்ற தேடல் இறுதியில் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராக அவரை ஆக்கியது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் படும் துயரங்களை நேரில் கண்ட விவேகானந்தர், அவர்களது துயர் தீர்ப்பதையே தமது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். அதற்காகவே உழைத்தார். தமது வாழ்க்கை முழுவதையும் தேச நலனுக்காகவே அர்ப்பணித்தார். அமெரிக்க நாட்டுக்குப் பயணம் செய்து சர்வ சமய மகாநாட்டில் கலந்து கொண்டார். தனது பேச்சால் அங்குள்ளவர்களைக் கவர்ந்தார். அதன் பின் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து, இந்தியாவின் புகழைப் பரப்பினார். ராமகிருஷ்ண மடத்தை நிறுவி அதன் மூலம் மக்கள் தொண்டாற்றினார். 1902 ம் வருடம், ஜூலை மாதம் நான்காம் தேதி விவேகானந்தர் மகா சமாதி ஆனார் என்றாலும் அவர் விட்டுச் சென்ற சிந்தனைகள் என்றும் நினைவு கூரத் தக்கவை.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் (ஜனவரி 12) அவரது சிந்தனைகள் சிலவற்றைப் பார்ப்போமா?

 ஏழைகளும் வறியவர்களும் படும் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ, யாருக்கு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக ஏற்படுகிறதோ அவர்களே உண்மையான தேச பக்தர்கள். தேச சேவை செய்வதற்குத் தகுதியானவர்கள். அவர்களே மகாத்மாக்கள்.

 கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். இதைத் தவிட தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. மக்களுக்கு ஒருவன் செய்யும் சேவை அந்த மகேசனுக்கே செய்யும் சேவையாகும். இதுவே உண்மை.

  யார் ஒருவர் எதைப் பெறுவதற்கு தகுதியாக இருக்கிறாரோ அதை அடையவிடாமல் தடுப்பதற்கு, பிரபஞ்சத்தில்   உள்ள எந்த சக்தியாலும் முடியாது.

 உண்மை, தூய்மை, சுயநலமின்மை இது மூன்றும் யாரிடமெல்லாம் இருக்கிறதோ அவர்களை நசுக்கக் கூடிய சக்தி விண்ணுலகு, மண்ணுலகு என எந்த உலகிலும் இல்லை. ஏன் பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் கூட அவர்களை வெல்ல முடியாது.

 உங்கள் வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மை உள்ளதாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் வாழும் சமுதாயம் தூய்மை உடையதாக இருக்கும். கவே முதலில் உங்களை நீங்கள் எண்ணத்தாலும் செயலாலும் தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியம்.

 சிந்தித்து செயலாற்றத் தெரிந்தவன் அதன் வழிச் செல்கிறான். மற்றவன் விதியைக் குறை சொல்கிறான். நம் விதியை நாமே தான் வகுத்துக் கொள்கிறோம். கவே அதற்குப் பிறரைத் தூற்றுவதில் பயனில்லை.  

 நீ கடவுள் நம்பிக்கை உடையவனோ, அல்லது இறைப்பற்று இல்லாத நாத்திகனோ, எதுவாக இருந்தாலும் சரி, உன் சுக துக்கங்களையும் சுயநலத்தையும் மறந்து உன் கடமைகளை நீ சரிவரச் செய்து வந்தால் போதும். அதுவே மிகப் பெரிய தேச சேவையாகும்.

 இல்லறமோ துறவறமோ எதை வேண்டுமானாலும் நீ தேர்ந்தெடு. னால் இல்லறத்தில் இருக்கும் போது பிறருக்காக வாழ். துறவியாகிவிட்டால் பணம், பந்தம், புகழ், பதவி என அனைத்திலிருந்தும் விலகி இரு.

  துன்பங்களைக் கண்டு அஞ்சாதே. பெரிய மரத்தின் மீது புயல் காற்று மோதத் தான் செய்யும். கிளறி விடுவதால் நெருப்பு நன்கு எறியத் தான் செய்யும். தலையில் அடிபட்ட பாம்பு முன்னிலும் வேகமாக படமெடுக்கத் தான் செய்யும். கவே துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், உறுதியாய் எதிர்த்து நில். உன்னால் எதுவும் முடியும்.   

 எப்பொழுதும் விரிந்து மலர்ந்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை. மாறாக சுருங்கி, மடங்கிக் கொண்டிருப்பதே மரணமாகும். தன்னுடைய சுயநலத்தை மட்டும் கவனித்துக் கொண்டு, சுக போகத்துடன் வாழும் ஒருவனுக்கு நரகத்திலும் இடம் கிடைக்காது. 

 மற்றவர்களுக்கு நன்மை செய்வதே தர்மம். தீமை செய்வதே பாவம். வலிமையும் ண்மையுமே வீரம். பலவீனமும் கோழைத்தனமுமே மரணம். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதே புண்ணியம். பிறரை வெறுத்து ஒதுக்குவதே பாவம்.

********

மனித நேய மாண்பாளர் வள்ளலார்

                                    
     “அருட்பெருஞ் ஜோதி; அருட்பெருஞ் ஜோதி 
      தனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் ஜோதி”

உலகமெல்லாம் உய்ய இந்த மகத்தான மா மந்திரத்தை அருளிய மகான் வள்ளாலார் இராமலிங்க அடிகள். சித்தர், முனிவர், யோகி, மகான், துறவி என்று எந்த நிலைகளுக்குள்ளும் அகப்படாத, அதே சமயம் இப்படி எல்லா நிலைகளையும் கடந்து நிற்கின்ற அவதாரபுருடர் தான் அடிகளார்! எளிமையான வாழ்க்கையையே அவர் வாழ்ந்தார்! அன்பர்களும், அடியார்களும் படும்  துன்பங்கள் கண்டும் துயரங்கள் கண்டும் பலவாறு மனம் வருந்திய வள்ளலார். அது கண்டு உள்ளம் இரங்கிப் பாடியிருக்கிறார்!

  ”வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
  வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
  நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
  ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”

என்று மனம் உருகுகிறார். அது மட்டுமா! வெறும் இரக்கப்படுவதோடு நின்று விடவில்லை அவர்.

 “வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
   மரபினில்யான்ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
   ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
   இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
   மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
   மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
   கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
   கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே!

-என்று இறைவனிடம் அவர்களின் துயர் தீர்ப்பதற்கு தமக்கு அருள் ஒளியை ற்றலைத் தருமாறும் இறைஞ்சுகிறார்! தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அந்த வள்ளலின் வாழ்வே ஒரு தவம் தான் என்றால் அதில் மிகையில்லை அல்லவா?.

பிற உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் கருணை உள்ளம் கொண்டவராக வள்ளலார் விளங்கினார்.
     
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ!

-என்று பிறர் உயிர்களையும் தம் உயிர் போல் போற்றி வாழும் மனிதர்களின் அடிமை ஏவல் புரிந்திடவும் தனக்குச் சம்மதம் என்று கூறுகிறார்.

வள்ளலார் வெறும் ன்மிகவாதியோ, அருளாளரோ மட்டுமல்ல; மிகச் சிறந்த சமூகச் சீர்த்திருத்தவாதியாகவும், சிந்தனைப்புரட்சியாளராகவும் விளங்கினார். “கலையுரைத்த கற்பனையே கலையெனக் கொண்டாடும் கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக” என்று அவர் அறச்சீற்றத்தோடு உரைத்திருப்பதிலிருந்தே அவரது உளப்பாங்கை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. உலக நீதிப் பாடலான “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்; ஒருவரையும் பொல்லாங்குச் சொல்ல வேண்டாம்” என்ற ‘வேண்டாம்’ என்று எதிர்மறையாகக் குறிப்பிட்ட பாடலைக் கேட்கச் சகியாது,
   
“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர் தம் உறவு வேண்டும்
   உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்”

- என்று, ‘வேண்டும், வேண்டும்’ என்று இறைவனைத் தொழும் பாடலாகப் பாடியதிலிருந்து அவரது நேர்மறைச் சிந்தனை பற்றி நாம் அறிந்து கொள்ள இயலுகிறது.

 சைவ சமயம் சமூகத்தின் மூடப்பழக்கங்களால் தொய்வுற்றிருந்த காலத்தில் தோன்றியவர் வள்ளலார். காலம் காலமாகப் புரையோடிப் போயிருந்த சமூக மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து அவர் குரல் எழுப்பினார். தமது பாடல்கள், உரைநடைகள், சொற்பொழிவுகள் மூலமும் அவற்றை மிகக் கடுமையாகச் சாடினார். திருவள்ளுவருக்குப் பின் வந்த காலத்தில் சித்தர்கள் தங்கள் பாடல் மூலம் சமூகப் புரட்சி செய்தனர். சிவவாக்கியர், பட்டினத்தார் போன்றோர் தங்கள் பாடல்கள் மூலம் சமூக மூட நம்பிக்கைகளை, சடங்குகளைச் சாடினர். அவர்களுக்குப் பின் வந்த மரபில் பொதுவுடைமை பேசும் முதல் குரலாக ஒலித்தது வள்ளலாரின் குரலே! பிற்காலத்தில் சமூகச் சீர்திருத்தத்திற்காகப் பாடுபட்ட பாரதி, பாரதிதாசன், பெரியார் போன்றோருக்கும் காந்தியடிகளுக்கும் முன்னோடியாக விளங்கியது இராமலிங்க அடிகளார் தான் என்றால் அது மிகையில்லை.

    ”சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
    சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
    தியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
    அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே!”

- என்று சாதி சமய வேறுபாடுகளை மிகத் தீவிரமாகக் கண்டித்து அறிவுறுத்தி இருக்கிறார்.

    ”இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
    இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
    மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
    வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு..

என்று போலிச் சமயங்களையும் தத்துவக் குப்பைகளையும் சாடும் வள்ளலார், போலி கமங்களையும், சாத்திரங்களையும் மிகக் கடுமையாக

    ”வேதாக மங்களென்று வீண்வாதம் டுகின்றீர்
    வேதாக மத்தின் விளைவறியீர் – சூதாகச்
    சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
    என்ன பயனோ இவை?”

என்று எதிர்த்துரைத்திருக்கிறார்.

சமத்துவம் சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய வள்ளலார், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என ஜாதி வேறுபாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்தார். “ண்டவன் முன் அனைவரும் சமமே, உயர்வு தாழ்விலாது அனைவரும் இறைவனை வணங்கலாம்” என்ற ன்ம நேய ஒருமைப்பாடே அவர் தம் கொள்கையாகும்.

எப்பொழுதும் இறைவனைப் பற்றிய நினைவோடு தனித்திருக்க வேண்டும். அவனை அடைய வேண்டுமென்ற மெய்ஞானப் பசியோடு இருக்க வேண்டும். எப்பொழுதும் புலன்களின் இச்சைகளுக்குப் பலியாகாமல் விழித்திருக்க வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக ‘தனித்திரு! விழித்திரு! பசித்திரு!’ என்ற அற்புதமான தத்துவத்தில் விளக்கியுள்ளார்!

“ஒருவர் பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கி அதனைப் போக்க முற்பட வேண்டும். உரத்துப் பேசுதல், கையை வீசி வேகமாக நடத்தல், கடுஞ் சொல் கூறுதல், சண்டையிடுதல், பொய் வழக்குப் போடுதல் இவை கூடவே கூடாது. பூமி அதிர நடக்கக் கூடாது.” – என்றெல்லாம் அவர் கூறிய அறிவுரைகள் என்றும் எண்ணி மகிழத் தக்கவை.

“மனம், வாக்கு, காயம் என மூன்றினாலும் ஒருவன் தூயவனாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் நலத்திற்காக மட்டுமே பிரார்த்தனை செய்தல் கூடாது. மாறாக அனைத்து உலக உயிர்களுக்ககவும், அவற்றின் நலத்திற்காகவும் பிரார்த்தனை செய்தல் வேண்டும். அந்தப் பொதுப் பிரார்த்தனையிலேயே அனைத்து நன்மைகளும் அடங்கி இருக்கின்றது என்பதை உணர வேண்டும்.” – என்று அவர் கூறியுள்ள அறிவுரைகள் என்றும் நாம் பின்பற்றத் தக்கவையாகும். அவரது தத்துவங்களையும், அறிவுரைகளையும் சரியாகப் பின்பற்றுவது நம் ன்ம உயர்விற்கும், வாழ்க்கை வளத்திற்கும் வழிவகுக்கும் என்பதே உண்மை.

************

« பழைய வரவுகள்